search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிக களஞ்சியம்

  அறுபடை வீடுகளின் அரிய ரகசியம்
  X

  அறுபடை வீடுகளின் அரிய ரகசியம்

  • முதலில் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.
  • நம் உடல் இயக்கம் முழுவதையும் இந்த சக்கரங்களே கட்டுப்படுத்துகின்றன.

  அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் முருகனை வழிபாடு செய்தால் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.

  சும்மா... ஏதோ கோவிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற நிலையில் இருக்கக் கூடாது.

  அறுபடை வீடுகளில் உள்ள ஆழமான சூட்சம ரகசியங்களை முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதலை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பது பலருக்கும் மலைப்பாக இருக்கலாம்.

  கவலையே படாதீர்கள். அது மிக, மிக எளிதானது. கொஞ்சம் நாம் மனதை ஒருமுகப்படுத்தினால் நிச்சயம் அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமானின் அருளை ஒவ்வொன்றாக பெறமுடியும்.

  அறுபடை வீடுகளையும், நம் உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, அந்த ரகசியம் நமக்குத் தெரிந்து விடும்.

  நம் உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி ஆக்ஞை என்று 6 சக்கரங்கள் உள்ளன. நம் முதுகுத் தண்டில் அவை அமைந்துள்ளன.

  இந்த சக்கரங்கள் நம் பிட்டத்தில் இருந்து தலை வரை உள்ளது. அவை வேறு, வேறு பகுதிகளில் இருந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை.

  நம் உடல் இயக்கம் முழுவதையும் இந்த சக்கரங்களே கட்டுப்படுத்துகின்றன. எனவே இந்த சக்கரங்களை நாம் சரியானபடி தட்டி எழுப்பினால் ஞான முதிர்ச்சியைப் பெற முடியும்.

  அது போலத்தான் அறுபடை வீடுகளை ஆறு ஆதாரங்களாகப் பிரித்து வழிபட்டால் இறுதியில் முக்தி கிடைக்கும்.

  முருகப்பெருமானின் முதல் படை வீடு-திருப்பரங்குன்றம். இந்த படை வீட்டின் நமது ஆதாரமாக மூலாதாரம் உள்ளது. இத்தலத்தில் முருகன் வடிவத்தில் நல் துணை வடிவமாகவும், சக்தியில் பராசக்தியாகவும், தன்மையில் உல்லாசமாகவும் உள்ளார்.

  நம் உடம்பில் உள்ள மூலாதாரம், நமது உயிர் இயக்கத்துக்கு எப்படி மூல காரணமாக உள்ளதோ, அது போல திருப்பரங்குன்றமும் நம் ஆன்மிக இயக்கத்துக்கு முதல் படியாக உள்ளது. இங்கு முருகனை வழிபட்டால் உடனே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

  அது மாதிரிதான் நம் உடம்பில் உள்ள மூலாதாரத்தை உசுப்பி விட்டால், அது குண்டலினியின் ஒட்டு மொத்த சக்தியையும் தட்டி உஷார்படுத்தி விடும். முக்கியமாக உயிராற்றல் அதிகரிக்கும்.

  திருப்பரங்குன்றம் தலத்தில்தான் முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்தார். ஆக இத்தலத்தில் நாம் வழிபாடு செய்யும் போது குண்டலினியின் மொத்த சக்தியும் தட்டி எழுப்பப்படுவது போல நம் ஆன்மீக பயணத்தின் மொத்த உணர்வும் இங்கு தட்டி எழுப்பப்பட்டு விழிப்பை பெறும்.

  திருப்பரங்குன்றம் தலத்தில் மூலாதாரத்தை நினைத்து வழிபட்டு பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு அந்த உல்லாசம் கிடைக்கும்.

  அடுத்து இரண்டாவது படை வீடாக திகழும் திருச்செந்தூர் பற்றி பார்க்கலாம். நமது உடல் ஆதாரங்களில் இத்தலத்தை சுவாதிஷ்டான சக்கரத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

  இந்த சக்கரத்துக்கு பாலியல் உணர்வு, ஈகோ குணம் ஆகியவற்றை தூண்டி விடும் சக்தி உண்டு. அது மட்டுமின்றி மற்றவர்களின் உணர்ச்சி போக்கை அறியும் சக்தி, ஐம்புலன்களை தாண்டி அறியும் சக்தியும் உண்டு.

  இதை அப்படியே திருச்செந்தூர் தலத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள், உண்மை புரியும்.

  சூரனை அழிக்க படையுடன் வந்த முருகப் பெருமான், சூரனின் உணர்ச்சிப் போக்கை அறிந்தான். பிறகு ஐம்புலன்களை தாண்டி அறிந்து சூரனை சம்ஹாரம் செய்து தன்னோடு இணைத்துக் கொண்டார்.

  இத்தலத்தில் முருகப் பெருமான், ஒளிவடிவாக உள்ளார். கடலில் நீராடி முருகனை வழிபட்டால் மனம் தெளிவு பெறும். நோய், பகை நீங்கும்.

  சக்திகளில் ஆதிசக்தியாக இங்கு முருகன் உள்ளார். அவரிடம் நம் மனதை ஒருமைப்படுத்தினால் எல்லா துன்பங்களும் தொலைந்து போகும்.

  சுவாதிஷ்டான சக்கரம் தூண்டப்படும் போது செயல், சிந்தனை, சுயகட்டுப்பாடு மேம்படும் என்பார்கள். இத்தலத்து முருகனும் அப்படித்தானே உள்ளார். எனவே திருச்செந்தூர் முருகனை வழிபடும் போது உங்களது செயல், சிந்தனை எல்லாமே மேம்படுவது உறுதி.

  முருகப்பெருமானின் மூன்றாவது படை வீடான பழனியை நம் உடம்பில் உள்ள மணிபூரகம் சக்கரத்துடன் ஒப்பிடலாம். இந்த சக்கரத்தில் இருந்துதான் உடல் முழுவதும் சக்தி வினியோகிக்கப்படுகிறது. எனவேதான் பழனி தலத்தில் உள்ள முருகன், ஞானசக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

  மணிபூரகம் தூண்டப்படும் போது கட்டுக்கடங்காத உணர்ச்சி ஏற்படும். இது அப்படியே நம் முருகப் பெருமானின் சிறு வயது இயல்புடன் ஒத்துப் போகிறது.

  உலகை சுற்றி வந்த பிறகும் மாம்பழம் தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில், கட்டுக் கடங்காத உணர்ச்சிப் பெருக்குடன் முருகன், இந்த பகுதியில் உள்ள மலைக்கு வந்து விட்டான் என்பது வரலாறு. அவனுக்கு காட்சிக் கொடுத்த அம்மையும் அப்பனும் ''பழம் நீ'' என்றதால்தானே பழனி வந்தது.

  பழம் வடிவில் உள்ள முருகப்பெருமானின் கட்டுக் கடங்காத உணர்ச்சியை, மணிபூரகம் சக்கரம் தூண்டப்பட்ட நிலையில் ஏற்படுவது போன்ற நிலை காட்டப்படுகிறது.

  மணிபூரகம் தூண்டப்பட்ட பிறகு உடல் உறுதி மேம்படும். இதனால் ஒருவர் எப்போதும் கடும் உழைப்பாளியாகவும், சுறுசுறுப்பானராகவும் இருப்பார்.

  முருகனும் இத்தலத்தில் அப்படித்தானே உள்ளார். துறவு நிலை பூண்டு ஆண்டி கோலத்தில் இருந்தாலும் அவர் சுறுசுறுப்பாக இருந்ததற்கு இடும்பனிடமும், அவ்வையிடமும் காண்பித்த திருவிளையாடல்களை உதாரணமாக சொல்லாம்.

  இங்கு ஞானப்பழமாக இருக்கும் முருகனை வழிபட்டால், ஞானம், ஆரோக்கியம் மேம்படும். சுவாதிஷ்டான சக்கர பலன்களை இங்கு பெறலாம்.

  அடுத்தது சுவாமி மலை. இது முருகப் பெருமானின் 4-வது படை வீடு. இத்தலத்தை நம் உடம்பு சக்கரங்களில் அனாகதம் என்கிறார்கள்.

  அனாகதம் சக்கரம் நம் இதயத்துக்கு நேர்பின்புறம் உள்ளது. அதனால் தானோ என்னவோ இந்த சக்கரம் அன்பு, பாசம், இரக்கம், விசுவாசம், பக்தி போன்ற நல்ல இயல்புகளை உயர்த்தும் சக்தியாக உள்ளது.

  இத்தகைய இயல்புகள் எல்லாம் சுவாமிமலையில் இருப்பதை காணலாம். இத்தலத்தில் முருகன் கிரியா சக்தியாகவும், சொல் வடிவாகவும் உள்ளார்.

  முருகப்பெருமான் தம் பெற்றோரிடம் அன்பும், பக்தியும் கொண்டிருந்ததால்தான் படைப்பாற்றல் பெற்று இத்தலத்தில் தந்தைக்கு உபதேசம் செய்ய முடிந்தது. அத்தகைய உபதேச சக்தியையும், படைப்பாற்றலையும் நாம் அனாகதம் சக்கரத்தை தூண்டும் போது நிச்சயமாக பெற முடியும்.

  அனாகதம் சக்கரம் விழிப்பு பெற்றால், அருள்நிலை ஆன்மிக வளர்ச்சி உயர் நிலைக்கு உந்தப்படும். இதை ''அக்கினி குண்டலினி'' என்று சொல்வார்கள்.

  அனாகதம் சக்கரம் துடிப்புடன் செயல்படும் போது, சாத்வீக குணங்கள் உண்டாகும். மனம் பக்குவநிலைக்கு வந்து விடும். படைப்பாற்றலின் ரகசியம் நமக்கு தெரியத் தொடங்கும்.

  இந்த நிலையை நீங்கள் சுவாமிமலை தலத்தில் பெற முடியும்.

  அறுபடை வீடுகளில் 5-வது படை வீடான திருத்தணியை நம் உடம்பில் 6 ஆதாரங்களாக திகழும் சக்கரங்களில் விசுத்தி சக்கரமாக கருதுகிறார்கள்.

  விசுத்தி சக்கரம் நம் உடம்பில் மைய கழுத்துக்கு பின்னால் இருக்கிறது. குரல் வளை சக்கரமான இதை தூண்டி விட்டால் நம் புலன்களுக்கு அப்பால் உள்ள விஷயங்களையும் அறிந்து, புரிந்து கொள்ளக் கூடிய நிலை ஏற்படும்.

  திருத்தணியில் இச்சா சக்தியாக திகழும் முருகனின் அருளை பெற்றால் நமக்கும் நம் புலன்களை அடக்கி தொலைவில் உள்ள விஷயங்களை அறியும் ஆற்றல் கிடைக்கும். இந்த ஆற்றல் அவ்வளவு எளிதில் எல்லாருக்கும் கிடைத்து விடாது. அதற்கு நாம் விசுத்தி சக்கரத்தை முழுமையாக விழிப்படைய செய்தல் வேண்டும்.

  திருத்தணியில் முருகப்பெருமான் தன் கோபம் முழுவதையும் விட்டொழித்தார். மலைகளில் விளையாடி, வள்ளியை மணந்து சல்லாப தன்மைக்கு வந்தார். எனவே திருத்தணிகை நாதனை வழிபடும் போது நமது மனதில் இருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.

  கோபம் நீங்கும் போது மனம் சரணாகதி தத்துவத்துக்கு செல்லும். இதன் மூலம் விசுத்தியான திருத்தணி நம் ஆத்ம சக்தியின் பரிமாணத்தை திறக்க செய்யம்.

  விசுத்தி தட்டி எழுப்பப்பட எழுப்பப்பட, புனிதத்துவம் வளரும். நம் உடலுக்குள் விஷத்தன்மை எந்த வடிவிலும் நுழைய முடியாத தன்மை உண்டாகும்.

  தீய உணர்வு, தீய எண்ணம் வரவே வராது. விசுத்தி மூலம் திருத்தணிநாதன் அதை நமக்குத் தருவார்.

  விசுத்தி சக்கரம் ஒருவரிடம் முழுமையாக மலர்ந்து விட்டால் அவருக்கு எதிலும் விருப்பு வெறுப்பு வராது. பற்றற்ற நிலைக்கு அடித்தளம் போடப்பட்டு விடும்.

  மனதில் அகந்தை என்பதே இருக்காது. திருத்தணி முருகனை வழிபடும் போது இந்த நிலையை பெற முடியும்.

  ஆனால் அதற்கு நாம் நமது விசுத்தி சக்கரத்தை தூண்டி விட்டு, மலரச் செய்யும் சூட்சமத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த ரகசியம் புரிந்து விட்டால் திருத்தணி முருகன் அருளால் நீங்களும் பற்றற்ற நிலைக்கு உயர்ந்து விடலாம்.

  இறுதியாக நம் உடம்பில் ஆதாரமாக இருப்பது ஆக்ஞை. இதை முருகனின் படை வீடுகளில் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலையுடன் நம் முன்னோர்கள் ஒப்பிட்டு பலன்களை கூறியுள்ளனர்.

  நமது இரு கண் புருவ மத்தியில் இருக்கும் இந்த சக்கரத்துக்கு நெற்றிக் கண் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கரம் தூண்டப்படும் போது அறிவு சங்கல்பம் உண்டாகும்.

  பழமுதிர்ச்சோலையில் மர வடிவிலும், குடிலா சக்தியுடனும் இருக்கும் முருகன் நமக்கு அறிவு சங்கல்பத்தை தருபவராக உள்ளார். இத்தலத்தில் வழிபடும் போது வருமானம் பெருகி, பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இவை லௌகீக வாழ்க்கைக்கு உதவும்.

  ஆனால் ஆக்ஞை முழுமையாக மலரும் போது, அது ஆன்மீகக் கண்ணை திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். அதோடு சமூக வாழ்க்கையில் இருந்து விலகும் நிலை வரும் என்கிறார்கள்.

  இதைத்தான் நெற்றிக் கண் திறப்பதாக நம்முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். பழமுதிர்ச்சோலை வழிபாடு இந்த ஆன்மீக கண் திறக்கும் நிலையை மேம்படுத்தும்.

  வாழ்வின் ஞானத்தை எல்லாம் தன்னகத்தே ஈர்த்து கொள்ளும் உயரிய நிலை ஆக்ஞையால் வரும். பழமுதிர்ச்சோலை இந்த ஞான முதிர்ச்சியைத் தரும்.

  இப்படி திருப்பரங்குன்றத்தில் தொடங்கி பழமுதிர்ச்சோலை தலம் வரை நாம் படிப்படியாக நம் ஆத்மா நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். அதாவது ஆன்மீக வாழ்வில் நம்நிலை படிப்படியாக உயரும்.

  இறுதியில் பிறவாமை நிலையைப் பெற முடியும். வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று விட்டு, இறுதியில் முருகன் திருவடிகளில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொள்ளும் உயர் மன நிலை பக்குவம் உண்டாகும். அறுபடை வீடுகளின் வழிபாட்டில் உள்ள அரிய ரகசியமே இதுதான்.

  Next Story
  ×