search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK MP"

    பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதா அரசின் அடக்கு முறையை வெளிப்படுத்துகிறது என்று அன்வர்ராஜா எம்.பி. கூறினார். #ADMKMPs #Parliament #AnwarRaja #BJP
    ராமநாதபுரம்:

    மேகதாது அணை விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படாததால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. அன்வர் ராஜா உள்பட 24 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து அன்வர் ராஜா எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மேகதாது அணை விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பேச அனுமதி மறுப்பது ஜனநாயகத்துக்கு, அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானதாகும். சபாநாயகரின் உத்தரவு ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்குவது போல் உள்ளது.


    இது பாரதிய ஜனதா அரசின் அடக்குமுறையை வெளிப்படுத்துகிறது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரை வரவிடாமல் செய்யும் கர்நாடகத்துக்கு மத்திய அரசு உதவுகிறது என்பதை இந்த சஸ்பெண்டு உத்தரவு காட்டுகிறது.

    தமிழகத்தின் உரிமையை காக்க நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #ADMKMPs #Parliament #AnwarRaja #BJP
    பா.ஜனதாவுடன் கூட்டு சேர அதிமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #BJP #ADMK #Parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை அரசியல்வாதிகளும் பொது மக்களும் எதிர் கொள்ள இன்னும் சுமார் 100 நாட்களே உள்ளன.

    இன்னும் 2 மாதத்தில் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது.

    தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை பெரும்பாலான மாநில கட்சிகள் கூட்டணியை மாற்றி உள்ளன.

    பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இந்த தடவை இடம்மாறி உள்ளன. அதுபோல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு பல புதிய கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

    இதற்கிடையே பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. உத்தரபிரதேசம், மேற்குவங்கம், தெலுங்கானா, ஒடிசா உள்பட சில மாநில கட்சிகளின் தலைவர்கள் மூன்றாவது அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்றாவது அணி உருவானால் அது பல மாநிலங்களில் காங்கிரஸ், பா.ஜ.க. அணிகளுக்கு கிடைக்கும் வாக்குகளை கணிசமாக பிரிக்கும். இதனால் வாக்குகள் சிதறும். இது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா அல்லது பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்குமா என்பது கணிக்க முடியாதபடி உள்ளது.

    இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் அமைய உள்ள கூட்டணி உடன்பாடுகள் பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுக்கும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    தமிழ்நாட்டை பொருத்த வரை பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே தனி செல்வாக்கு இல்லை. எனவே அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் உருவாகும் கூட்டணியே பிரதானமாக உள்ளது. அந்த வகையில் தி.மு.க. தலைமையில் கூட்டணி தயாராகி விட்டது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் உறுதியாக உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. அந்த கூட்டணியில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. இடம் பெறும் என்று கடந்த சில மாதங்களாக பேச்சு நிலவுகிறது.


    சமீபத்தில் அ.தி.மு.க. மந்திரிகள் தங்கமணி, வேலு மணி இருவரும் டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்த போது கூட்டணி தொடர்பாகவும் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியானது. பா.ஜ.க. 12 தொகுதிகளை கேட்டதாகவும், அதில் பெரும்பாலான எம்.பி. தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் உள்ளதால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அதிர்ச்சியிலும் தயக்கத்திலும் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க.வை சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக தற்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்களில் சுமார் 10 பேர் பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் ஒரு காரணத்தையும் கூறி வருகிறார்கள்.

    பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்தால் அது பா.ஜ.க.வை மட்டுமின்றி அ.தி.மு.க.வையும் சேர்த்து பாதித்து விடும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் சொல்கிறார்கள்.

    அ.தி.மு.க. எம்.பி.க்களின் இந்த கருத்தை சில அ.தி.மு.க. மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் ஆதரித்துள்ளனர். எனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி பற்றி பேசி முடிவு செய்யும் முன்பு தங்களுடன் கலந்து பேச வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் கூறுகையில், “பா.ஜ.க. எங்களை வாசலுக்கு வெளியில் கிடக்கும் மிதியடிபோல நடத்துகிறது. அந்த கட்சியுடன் எப்படி கூட்டணி சேர முடியும்?” என்று ஆவேசமாக கேட்டார்.

    மற்றொரு அ.தி.மு.க. எம்.பி. கூறுகையில், “ஒவ்வொரு ஓட்டுச்சாவடி பூத்களிலும் உட்காருவதற்கே பா.ஜ.க.வில் ஆள் இல்லை. அப்படிப்பட்ட கட்சியுடன் கூட்டணி வைப்பதால் அ.தி.மு.க.வுக்கு எந்த லாபமும் இல்லை” என்றார்.

    அ.தி.மு.க. எம்.பி.க்களில் 6 அல்லது 8 எம்.பி.க்கள்தான் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக தெரிகிறது. இதை கண்டு கொள்ளாத பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும் பாலானவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் கணிசமானவர்கள் பா.ஜ.க. கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் இடம் பெற செய்ய வேண்டும் என்று 99 சதவீத அ.தி.மு.க. நிர்வாகிகள் வலியுறுத்தியபடி உள்ளனர்.

    வட மாவட்டங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்தி வாய்ந்த கட்சியான பா.ம.க., நிச்சயமாக கூட்டணி சேரும் முடிவில்தான் இருக்கிறது. தி.மு.க.வில் ஏற்கனவே நிறைய கட்சிகள் சேர்ந்துவிட்டதால் பா.ம.க. அங்கு செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தே.மு.தி.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தி.மு.க.வில் த.மா.கா.வுக்கு இடம் இல்லை என்று கூறப்பட்டுவிட்டதாம். காங்கிரசின் எதிர்ப்பு காரணமாக த.மா.கா.வை தி.மு.க.வினர் கழற்றி விட்டு விட்டனர்.

    எனவே த.மா.கா.வும் அ.தி.மு.க. கூட்டணி பக்கம் வந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இடம் பெறும் என்று கருதப்படுகிறது.

    இது அ.தி.மு.க.வை மெகா கூட்டணியாக மாறச் செய்யும். ரஜினியின் ஆதரவும் இந்த கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இதனால் தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் சமபலத்துடன் மோதும் பரபரப்பான நிலை உருவாகும்.  #BJP #ADMK #Parliamentelection

    கடலூரில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவை அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள்ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். #ramasamiPadayatchiyar #ADMK #EdappadiPalaniswami

    கடலூர்:

    சுதந்திர போராட்ட வீரரும், சமூகநீதிக்காக பாடுபட்டவருமான ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் ரூ.2.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    அதன்படி கடலூர் மஞ்சக் குப்பம் மைதானத்தில் ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    அதே நேரத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் அன்புசெல்வன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், கடலூர் மாவட்ட அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), முருகுமாறன் எம்.எல்.ஏ.(காட்டுமன்னார் கோவில்) , பாண்டியன் எம்.எல்.ஏ.(சிதம்பரம்) மற்றும் எம்.பி.க்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அமைச்சர் எம்.சி.சம்பத் தங்களை மதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

     


    இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் மைதானத்தில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டதால் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், மற்றும் எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசமி ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ramasamiPadayatchiyar #ADMK #EdappadiPalaniswami

    கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #EdappadiPalaniswami
    சென்னை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு அதிமுக கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிதியாக தருவார்கள். மேலும், கேரளாவுக்கு உணவு, உடை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #EdappadiPalaniswami
    ×