search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hamas"

    • ஹமாஸ் அமைப்பினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர்.
    • 100 பேர் ஏழு நாட்கள் போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டனர்.

    ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் ஆறு மாதங்கள் முடிவடைந்து ஏழாவது மாதமாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

    ஒரே ஒருமுறை மட்டும் ஏழுநாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு சுமார் 100 பிணைக்கைகள் விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையவில்லை.

    கத்தார், அமெரிக்கா போன்ற பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை இந்த நிலையில் தற்போது புதிய திட்டம் ஒன்றை ஹமாஸ் அமைப்பு முன்மொழிந்துள்ளது.

    ஆறு வாரங்கள் தாக்குதலை நிறுத்தினால் பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என புதிய முன்மொழிவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

    ஆனால் எந்த முடிவை இஸ்ரேல் ஏற்குமா? எனத் தெரியவில்லை. காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானை எதிர்கொள்வதற்கு ஆயத்தம் ஆகி வருகிறது இஸ்ரேல்.

    இதனால் தனது பார்வையை ஈரான் மீது பதித்துள்ள இஸ்ரேல், இதற்கு சம்மதம் தெரிவிக்குமா என்பது தெரியவில்லை.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்ற அவர்கள், 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் காசா முனையில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிலர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். ரஃபா மீது தங்கள் தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ்க்கு எதிரான இலக்கு நிறைவடையும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஃபா பகுதியில் 10 லட்சம்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் வசித்து வருகின்றனர். ரஃபா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    • இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து காசா முனை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.

    இந்த தாக்குதலில் காசாவில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஹமாஸ் அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும், உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மூன்று மகன்களுடன் மூன்று பேரன்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பழி வாங்கும் எண்ணத்தில் கொலை செய்ததாக இஸ்ரேல் மீது இஸ்மாயில் ஹனியே குற்றம் சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஷாதி முகாமில் இருந்தபோது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்மாயில் ஹனியே தற்போது கத்தாரில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த டிசம்பர் மாதம் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.
    • ஹமாஸ் அமைப்பின் ஏராளமான சுரங்கப்பாதைகளை வெடிவைத்து தகர்த்து அழித்தனர்.

    ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்குப் பகுதியில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் படிப்படியாக தெற்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்த தொடங்கியது.

    பாலஸ்தீன மக்கள் அதிக அளவில் வசித்து வந்த கான் யூனிஸ் நகர் மீது கடந்த டிசம்பர் மாதம் தாக்குதல் நடத்த தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தினால்தான் எங்களது நோக்கம் நிறைவேறும் எனக் கூறியது.

    சுமார் நான்குமாதம் கடுமையான வகையில் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. வான்வழியாக தாக்குதல் நடத்திய நிலையில், தெருத்தெருவாக சோதனை நடத்தி ஹமாஸ் அமைப்பினரை தேடினர். ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதைகளை தேடிப்பிடித்து அழித்தனர்.

    ஹமாஸ் அமைப்பினரின் ஆதிக்கம் அதிகமாக உள்ள இடமாக கான் யூனிஸ் கருதப்பட்டது. இங்குள்ள வீடுகள், கட்டடங்கள் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் தரைமட்டமாகின.

    தற்போது இஸ்ரேல் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் உதவிப்பொருட்கள் வழங்கிய நபர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில் சிலர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்கா தனது கண்டனத்தை வெளிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவம் பொதுமக்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் யூனிஸ் கான் நகர் மீது தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் முடிவடைந்து விட்டது. இதனால் கான் யூனிஸ் நகரில் இருந்து வெளியேறுகிறோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனால் கான் யூனிஸ் நகரில் வசித்த வந்த மக்கள் தங்களுடைய சொந்த நகருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். ஆனால் கான் யூனிஸ் நகர் தனது அடையாளத்தை இழந்துள்ளது. கட்டடங்கள் இருந்த இடம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.

    வீடுகள் இருந்த சுவடே தெரியவில்லை என நேரில் சென்று பார்த்த பாலஸ்தீனர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்துள்ளனர்.

    கான் யூனிஸ் நகரில் இருந்து வெளியேறிய முகமது அப்தெல்-கானி தற்போது கான் யூனிஸ் நகர் திரும்பியுள்ளார். அவர் "பல பகுதிகள் குறிப்பாக நகரின் மையப் பகுதிகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. என்னுடைய வீடு மற்றும் என்னுடைய வீடு அருகில் இருந்த வீடுகள் தரைமட்டமாகியுள்ளன" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    நஜ்வா அயாஷ் என் பெண் "தனனுடைய குடும்பம் வசிக்கும் 3 மாடிக்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் படிகள் அனைத்தும் இடிந்துள்ளன" எனத்தெரிவித்துள்ளார்.

    பாசல் அபு சாசர் "அவர்கள் (இஸ்ரேல் ராணுவம்) எதையும விட்டுச் செல்லவில்லை. வாழ்வதற்கான ஏதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் அதிகரித்ததால் உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தல்.
    • ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால், அமெரிக்கா வீட்டு அதிகாரித்தை பயன்படுத்தவில்லை.

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் ஐந்து மாதங்களையும் தாண்டி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் காசா முனையில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அடிப்படை உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் காசா மீதான தாக்குதல் நிறுத்த வேண்டும். உடனடி போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் இதை வலியுறுத்தியது. ஆனால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்ததால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனது.

    இந்த நிலையில்தான் தற்போது ரம்ஜான் மாதத்தையொட்டி உடனடியாக போர் நிறுத்தம் தேவை என ஐ.நா. சபையில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுவரை தன்னுடைய வீட்டோ அதிகாரம் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, இந்த முறை வாக்களிக்காமல் புறக்கணித்தது. இதனால் 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 14 உறுப்பினர்கள் நாடு உடனடி போர் நிறுத்தம் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.

    இதனால் காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது நீண்ட போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. மேலும், ஹமாஸ், மற்ற குழுக்கள் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொலை செய்தனர். மேலும், 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.

    அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவிக்கவில்லை என இஸ்ரேல் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

    இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்கா இதற்கு எதிராக இருந்து வருகிறது. இதனால் ஐ.நா. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது.

    • காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.
    • ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர். எகிப்து எல்லையில் உள்ள அந்த நகரில் சுமார் 15 லட்சம் மக்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அங்கு மக்களுடன் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ரபா நகரில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது.


    மக்கள் அடர்த்தி நிறைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடத்தினால் மேலும் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, ஐ.நா.ஆகியவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாசை அழிக்கும் நோக்கத்தில் ரபா மீதான தாக்குதல் முக்கியமானது என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் ரபா நகருக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

    இதையடுத்து ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள். மேலும் ரபா நகரில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.


    ஏற்கனவே வீடுகளை இழந்து உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை கிடைக்காமல் தவித்து வரும் காசா மக்களுக்கு ரபா மீதான தாக்குதல் திட்டம் மேலும் துன்பத்தை கொடுக்கும்.

    தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக ரபா மீது வான் வழித்தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அடி சுஹ்ரி கூறும்போது, காசாவில் இனப்படுகொலை குற்றங்களை அதிக அளவில் நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் சூழ்ச்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

    • காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்து முகாமில் தங்கியுள்ளனர்.
    • லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா. தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது.

    காசா மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்க்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தாலும், இந்த போரில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீர்குலைந்துள்ள வடக்கு காசாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

    சாலை வழியாக உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு காசாவில் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு வான்வழியாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யும்போது பாராசூட் செயல்படாமல் உணவு பொட்டலங்களுடன் மக்கள் மீது விழுந்தது. இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.

    இதற்கிடையே லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் தவித்து வருவதாக ஐ.நா. தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வந்தது. இந்த நிலையில் பிரபல சமையல் கலைஞர் ஜோஸ் அன்ட்ரேஸ் காசாவிற்கு உணவு பொருட்கள் சேகரித்து வழங்க முடிவு செய்தார். அவரது அறக்கட்டளை மூலம் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டது.

    சுமார் 200 டன் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த உணவு பொருட்கள் கப்பல் மூலம் காசா கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருந்து காசாவிற்கு கப்பல் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று உணவுப் பொருட்களுடன் சைப்ரஸ் நாட்டில் இருந்து கப்பல் புறப்பட்டுள்ளது.

    இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கப்பல் காசா சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உணவுப் பொருட்கள் மற்றும் உதவி பொருட்கள் வழங்க காசா அருகே கடல் பாலம் அமைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்த கடல் பாலம் செயல்பாட்டிற்கு வர பல வாரங்கள் ஆகலாம். இதற்கிடையே அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ராணுவ உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகம்

    ஐந்து மாத போரில் காசாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில், பெரும்பாலான மக்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து பொதுமக்களை படுகொலை செய்தனர். சுமார் 1200 பேரை கொலை செய்த நிலையில் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    சண்டைக்கிடையில் ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    • கடந்த அக்டோபர் மாதம் தன் வீட்டிற்குள் 2 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர்
    • கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபல வீரர் மெஸ்ஸியின் சொந்த ஊர்தான் எனது ஊர் எனக் கூறினேன்

    இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7-ந் தேதி முதல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் காசா நகரில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

    ஹமாஸ் படை தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் எஸ்தர் குனியோ (வயது 90) என்ற மூதாட்டி ஒருவர் சாதுர்யமாக உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து எஸ்தர் குனியோ கூறியதாவது :-

    கடந்த அக்டோபர் மாதம் தன் வீட்டிற்குள் 2 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது நான் அர்ஜென்டீனாவை சேர்ந்தவர் என கூறினேன். அதற்கு அர்ஜென்டினா என்றால் என்ன? என கேட்டனர்.

    கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபல வீரர் மெஸ்ஸியின் சொந்த ஊர்தான் எனது ஊர் எனக் கூறினேன். அதனை கேட்டதும் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் 'செல்பி' போட்டோ எடுத்தனர். மேலும் என்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டனர் என்று அவர் கூறினார்.

    • 1990களில் ஏமனில் உருவானது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு
    • எந்த வணிக கப்பலுக்கும் சேதம் ஏற்படவில்லை என அமெரிக்க அறிவித்தது

    கடந்த அக்டோபர் 7 அன்று, தெற்கு இஸ்ரேல் பகுதியில், வான்வழியாகவும், தரை வழியாகவும் நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்களை கொன்றனர்; பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இந்த பயங்கரவாத செயலுக்கு பதிலடி தரும் விதமாக பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய ராணுவப் படை (Israeli Defence Forces) வேட்டையாடி வருகிறது. மேலும், பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்களை, ராணுவம் தேடி வருகிறது.

    இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கின்றன.

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், லெபனான், கத்தார் போன்ற அரபு நாடுகள் ஆதரவளிக்கின்றன.

    இந்நிலையில், 1990களில் ஏமன் பகுதியில் உருவான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு, கடந்த நவம்பர் மாதம் முதல் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக, செங்கடல் (Red Sea) பகுதியில், இஸ்ரேலுடன் வர்த்தக போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் வணிக கப்பல்களை குறி வைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.

    ஹவுதிகளுக்கு பதிலடி தரும் விதமாகவும், வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட சுமார் 20 மேற்கத்திய நாடுகளின் கப்பல் படை, செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செங்கடல் பகுதியில், "புரொபெல் ஃபார்ச்சூன்" (Propel Fortune) எனும் கப்பலை தாக்க வந்த ஹவுதி அமைப்பினரின் 28 டிரோன்களை, அமெரிக்க கூட்டுப்படை சுட்டு வீழ்த்தியது.

    இந்த நடவடிக்கையில் வணிக கப்பல்களுக்கோ அல்லது அமெரிக்க கூட்டுப்படையின் கப்பல்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ஹவுதிக்களின் தாக்குதல்களினால், செங்கடல் பகுதி வழியாக பயணித்த பெரும்பாலான வணிக கப்பல்கள் தென் ஆப்பிரிக்கா வழியாக சுற்றிச் செல்கின்றன.

    ஹவுதிக்கள் இயங்கும் பகுதிகளை குறி வைத்து அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப்படை தாக்குதல் நடத்தி தாக்கி வருகின்றது. ஆனாலும், ஈரானின் மறைமுக உதவியுடன் ஹவுதி அமைப்பினர் செங்கடல் பகுதி வழியாக பயணிக்கும் கப்பல்களை தாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • உடல்நலம் தேறி வருவதை அடுத்து இவ்வாறு தெரிவித்தார்.
    • இஸ்ரேஸ் ஹமாஸ் போர் முடிவு குறித்து கருத்து தெரிவித்தார்.

    காசாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார். மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் தற்போது உடல்நலம் தேறி வருவதை அடுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    87 வயதான போப் பிரான்சிஸ், கடந்த புதன்கிழமை ரோம் மருத்துவமனையில் சளி தொந்தரவு காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், இஸ்ரேஸ் ஹமாஸ் போர் முடிவு குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரத்தில் தினந்தோரம் பொதுமக்கள் பாதிக்கப்படுவது, ஆயிரக்ணக்கானோர் உயிரிழப்பது, படுகாயமடைவது, அகதியாவது உள்ளிட்டவை என் மனதை வேதனையில் ஆழ்த்துகிறது."

    "இப்படி செய்வதை வைத்து சிறப்பான உலகை கட்டமைக்க முடியும் என நினைக்கின்றீர்களா? உண்மையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நினைக்கின்றீர்களா? போதும்! எல்லோரும் சொல்வோம் போதும்! நிறுத்துங்கள்!" என்று தெரிவித்தார்.

    கடந்த சில மாதங்களில் போப் பிரான்சிஸ்-க்கு பலமுறை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் கலந்து கொள்வதை போப் பிரான்சிஸ் ரத்து செய்ய நேரிட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரியில் சளி தொந்தரவு காரணமாக உரையை முடிக்க முடியாத நிலை உருவானது.

    • நிவாரணப் பொருட்கள் வாங்க கூடியிருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு.
    • இந்த துப்பாக்கிச்சூட்டில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பட்டினியால் உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான் உதவிப் பொருட்கள் அங்குள்ள மக்களுக்க சென்றடையும் நிலை உள்ளது.

    இந்த நிலையில்தான் காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்றது. அப்போது லாரிகளை முற்றுகையிட்டு உணவுப் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்தனர்.

    அப்போது பாதுகாப்பிற்கான நின்றிருந்த இஸ்ரேல் ராணுவத்தை நோக்கி மக்கள் வந்ததாகவும், தங்களுக்கு எதிராக தாக்குதல் மிரட்டல் என நம்பியதாகவும் கூறி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதா இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இச்சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் காசாவில் அமெரிக்க ராணுவம வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். மேலும் என்னென்ன வழிகள் இருக்கிறது. அவைகள் அனைத்தும் ஆராயப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபடப்போவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    • இதுவரை 28,000 பேருக்கும் மேல் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தெரிவித்தது
    • ஹமாசிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர எதுவும் வரவில்லை என்றார் நேதன்யாகு

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க, இஸ்ரேல் நடத்தி வரும் போர், 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    இடையில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதலை தொடர்ந்தது.

    இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 28,000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் வசம் மீதம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதிகளை மீட்கவும், மீண்டும் போர்நிறுத்தத்தை கொண்டு வரவும், எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் தலையீட்டில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் ஹமாஸ் அமைப்பினர் நிரந்தர போர்நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

    இவற்றை ஏற்க இஸ்ரேல் மறுத்து விட்டது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினருடன் நடைபெற்ற போர்நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர வேறு எதுவும் வரவில்லை. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது.

    மேற்கொண்டு போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது.

    பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு அந்தஸ்து தொடர்பான சர்வதேச ஆணைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது.

    பாலஸ்தீனத்தை ஒருதலைபட்சமாக அங்கீகரிப்பதை எனது தலைமையிலான இஸ்ரேல் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்.

    முன்நிபந்தனைகள் இல்லாமல் இரு தரப்புக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே ஒரு பயனுள்ள ஏற்பாட்டை செய்ய முடியும்.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    • ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.
    • பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதால், போரை நிறுத்த உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. மூன்று மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் இப்போரில் குழந்தைகள், பெண்கள் என அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிறார்கள்.

    காசா முழுவதிலும் இஸ்ரேலின் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. போரில் பாலஸ்தீனியர்களை குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை இஸ்ரேல் மறுத்து வந்தது.

    இதற்கிடையே காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச கோர்ட்டில் தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது.

    காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்கவும், உடனடி போர் நிறுத்தத்தை கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை இன்று கோர்ட்டில் தொடங்குகிறது. இதில் இஸ்ரேல் ஈடுபடுவது போர் இனப்படுகொலைகள் என தென் ஆப்பிரிக்கா வாதிடவுள்ளது. மேலும் போர் நடவடிக்கைகளுக்கு கோர்ட்டு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவின் கோரிக்கை குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் வாதிட சட்டக்குழுவை இஸ்ரேல் அனுப்பி உள்ளது.

    இவ்வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள நாடுகளும் தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும்.

    இதற்கிடையே காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. காசா முழுவதும் இஸ்ரேல் ஏவுகணை, குண்டுகளை வீசிவருகிறது.

    ×