search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palestinian"

    • காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.
    • ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர். எகிப்து எல்லையில் உள்ள அந்த நகரில் சுமார் 15 லட்சம் மக்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அங்கு மக்களுடன் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ரபா நகரில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது.


    மக்கள் அடர்த்தி நிறைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடத்தினால் மேலும் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, ஐ.நா.ஆகியவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாசை அழிக்கும் நோக்கத்தில் ரபா மீதான தாக்குதல் முக்கியமானது என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் ரபா நகருக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

    இதையடுத்து ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள். மேலும் ரபா நகரில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.


    ஏற்கனவே வீடுகளை இழந்து உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை கிடைக்காமல் தவித்து வரும் காசா மக்களுக்கு ரபா மீதான தாக்குதல் திட்டம் மேலும் துன்பத்தை கொடுக்கும்.

    தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக ரபா மீது வான் வழித்தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அடி சுஹ்ரி கூறும்போது, காசாவில் இனப்படுகொலை குற்றங்களை அதிக அளவில் நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் சூழ்ச்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

    • பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.
    • பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 4 மாதங்களுக்கு மேல் நீடித்துக் கொண்டிருக்கிறது.

    இதில் காசாவில் குழந்தைகள் பெண்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். அப்போது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு-இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காசா போரில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அஜித் தோவலிடம் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார் என்று கூறியுள்ளது.

    நேதன்யாகுவுடனான சந்திப்பின்போது உடனிருந்த இஸ்ரேலின் பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்கி ஹளக்பியையும் சந்தித்து பேசினார்.

    காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. மேலும் காசா போர் தொடர்பாக பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.
    • சில காலம் எடுக்கும் ஹமாஸ் அமைப்பினர் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

    காசா:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் மூன்று மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஆட்சி செய்து வரும் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.

    முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், தற்போது மத்திய, தெற்கு காசாவிலும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறும்போது, வடக்கு பகுதியில் ஹமாசின் ராணுவ கட்டமைப்பை அழிக்கும் பணியை முடித்து விட்டோம்.

    தற்போது மத்திய மற்றும் தெற்கு காசாவில் ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில காலம் எடுக்கும் ஹமாஸ் அமைப்பினர் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

    மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளனர். தெற்கு காசாவில் கான்யூனுஸ் நகரில் பெரிய நகர்ப்புற நிலப்பரப்பில் சுரங்கப்பாதைகள் உள்ளன. மத்திய, தெற்கு காசாவில் ஹமாசை அழித்து ராணுவம், வேறு வழிகளில் செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வடக்கு காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 8 ஆயிரம் பேர் கொல்லப் பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தெற்கு காசாவின் கான்யூ னிஸ் நகரில் ஒரு குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் பலியானார்கள்.

    • காசா முழுவதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.
    • இஸ்ரேல் பிணைக் கைதிகள் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல் திவிரமடைந்து வருகிறது. காசா முழுவதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.

    இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

    காசாவில் ஏராளமான கட்டிடங்கள், குண்டுவீச்சில் தரைமட்டமாகின. மேலும் அங்குள்ள ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளை இஸ்ரேல் குறி வைத்து உள்ளதாக காசாவில் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வானி ஆஸ்பத்திரியை இஸ்ரேலின் டாங்கிகள் சுற்றி வளைத்துள்ளன. ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு தளங்கள் சேதமடைந்து உள்ளன. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 90 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. அங்கு புல்டோசர்கள் மூலம் கட்டிடம் இடிக்கப்பட்டதாகவும் மக்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    காசாவில் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாலில் அவசர சிகிச்சைப் பிரிவு முடங்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.


    காயம் அடைந்தவர்களுக்கு தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கணக்கான நேபாளிகள் உள்ளனர்.

    மேலும் புதிதாக காயம் அடைந்தவர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். காசாவில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் இஸ்ரேல் தாக்குதல் வளையத்துக்குள் உள்ளது. இதனால் நோயாளிகள் தஞ்சமடைந்து பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.

    ரஹிதா என்பவரும் அவரது மகள் சமரும் நடந்து சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தேவாலய வளாகத்துக்குள் மற்றவர்களை பாதுகாக்க முயன்றமேலும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் தேவாலய வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இருந்த 3 இஸ்ரேல் பிணை கைதிகளை தவறுதலாக சுட்டுக் கொன்றதை இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டது. இதையடுத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாகு உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஹமாஸ் அமைப்பிடம் இருந்த இஸ்ரேல் பிணைக் கைதிகள் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ். மேசன் அங்கு சென்று உதவியதாக தெரிவித்தனர்.
    • கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில், ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதற்கிடையே செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் செங்கடலில் பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல் தொலைவில் வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கப்பல் மீது தாக்கியதில் தீப்பிடித்தது என்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலையடுத்து செங்கடல் பகுதியில் இருந்து அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ். மேசன் அங்கு சென்று உதவியதாக தெரிவித்தனர். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள்.
    • செங்கடல் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடந்து வரும் போரில் ஹமாசுக்கு பல அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக வரும் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.

    அதன் படி கடந்த மாதம் இந்தியா நோக்கி வந்த இஸ்ரேல் நாட்டு தொழில் அதிபருக்கு சொந்தமான சரக்கு கப்பலை அவர்கள் நடுக்கடலில் வழிமறித்து கடத்தி சென்றனர். இந்த நிலையில் செங்கடல் மற்றும் பாப்-அல் மண்டப் கடற்பகுதிகள் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர்.

    நேற்று இஸ்ரேல் நோக்கி பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் அந்த டிரோன்களை பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் இடைமறித்து தாக்கி வீழ்த்தியது. இதனால் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த டிரோன்கள் ஏமன் நாட்டு கடற்பகுதியில் 110 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏவப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவத்தால் செங்கடல் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    • இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
    • பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீது போர் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினரும் களம் குதித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • இஸ்ரேல் ராணுவத்துடன் மூன்று நிலைகளில் ஹமாஸ் படையினர் மோதலில் ஈடுபட்டனர்.
    • இஸ்ரேலிய வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேலுக்குள் கடந்த 7-ந் தேதி புகுந்து தாக்குதலை நடத்திய ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். சமீபத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை சேர்ந்த 4 பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தனர். இந்த நிலையில் வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக ஹமாஸ் படை பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு உபைடா வெளியிட்ட வீடியோவில், வரும் நாட்களில் பல வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க உள்ளோம். காசாவில் தரைவழி தாக்குதலின்போது இஸ்ரேல் ராணுவத்துடன் மூன்று நிலைகளில் ஹமாஸ் படையினர் மோதலில் ஈடுபட்டனர்.இஸ்ரேலிய வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் 22 ராணுவ வாகனங்களை அழித்திருக்கிறோம். ஆசிப் என்ற ஏவுகணையை பயன்படுத்தி எங்கள் கடற்படை பதிலடி கொடுத்துள்ளது என்றார்.

    • காசாவுக்கு பொலிவியாவும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப தயாராகி வருகிறது என்று தெரிவித்தது.
    • பொலிவியா மக்களும், அரசாங்கமும் இஸ்ரேல் அரசுடன் தூதரக உறவுகளை முறித்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

    இஸ்ரேலுடனான தூதரக தொடர்பை துண்டித்து கொள்வதாக பொலிவியா நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிவியன் தகவல் முகமை கூறும்போது, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை பொலிவியா துண்டித்து கொள்கிறது.

    காசாவுக்கு பொலிவியாவும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப தயாராகி வருகிறது என்று தெரிவித்தது. மேலும் ஐ.நா.வுக்கான பொலிவியா பிரதிநிதி டியாகோபாரி, ஐ.நா. சபையில் பேசும்போது, பொலிவியா மக்களும், அரசாங்கமும் இஸ்ரேல் அரசுடன் தூதரக உறவுகளை முறித்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை, சர்வதேச சட்டம் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்காத அரசாக இஸ்ரேலை நாங்கள் கருதுகிறோம் என்றார்.

    இதற்கிடையே கொலம்பியா, சிலி ஆகிய நாடுகள் தங்களது இஸ்ரேலுக்கான தூதர்களை ஆலோசனைக்காக திரும்ப அழைத்துள்ளன. இதுதொடர்பாக சிலி வெளியுறவு அமைச்சகம் கூறும்போது காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்களைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலுக்கான சிலி தூதர் ஜார்ஜ் கர்வாஜலை சாண்டியாகோவிற்கு திரும்ப அழைக்க சிலி அரசு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்தது.

    • இஸ்ரேல் தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
    • எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்தேதி தாக்குதல் நடத்தியது.

    இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 19-வது நாளாக தாக்குதல் நடந்து வருகிறது.

    இதற்கிடையே காசா மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது. அதன்படி இஸ்ரேல் தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 704 பேர் பலியானார்கள். இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் கூறும்போது, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது" என்றார்.

    ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. நேற்று 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும், ஏராளமான ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    இதற்கிடையே காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, இஸ்ரேலின் தாக்குதலில் காசா பகுதியில் 2360 குழந்தைகள் உள்பட 5791 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

    காசாவில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி உள்ளன. இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.

    இதனால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் காசாவுக்குள் எரி பொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

    அதே போல் காசாவில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

    • இஸ்ரேலை சேர்ந்த பெரும்பாலானோர் அவர்கள் குடும்பத்தினர் முன் வைத்தே கொலை
    • ஹமாஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி சீறிப்பாய்ந்து தாக்கின. மேலும், ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர்.

    ஒவ்வொரு வீட்டையும் குறிவைத்து தாக்கினர். இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீட்டிற்குள் நுழைந்து ஒரு குடும்பத்தில் உள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கும் முன், அந்த குடும்பத்தின் சிலரை அவர்கள் கண்முன்னே சுட்டுக்கொலை செய்தனர். இப்படி பலரை ஈவிரக்கம் இன்றி கொலை செய்துள்ளனர்.

    அந்த வகையில் நாகின் டி.வி. தொடரில் நடித்துள்ள நடிகை மதுரா நாயக்கின் சகோதரி (உறவினர்) மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவர்களது குழந்தைகள் கண்முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த வேதனையான செய்தியை மதுரா நாய்க் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ''நான் மதுரா நாயக். இந்தியவாழ் யூதர் (Jew). இந்தியாவில் நாங்கள் மொத்தம் 3 ஆயிரம் பேர் உள்ளோம். அக்டோபர் 7-ந்தேதி, நாங்கள் மகள் மற்றும் மகனை எங்களது குடும்பத்தில் இருந்து இழந்துள்ளோம். என்னுடைய உறவினர் (சகோதரி) ஒடாயா மற்றும் அவரது கணவர் ஆகியோர், அவர்களின் இரண்டு குழந்தைகள் முன் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.


    துக்கம் மற்றும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தற்போது இஸ்ரேல் வலியில் உள்ளது. ஹமாஸின் தாக்குதலில் எங்களது குழந்தைகள், பெண்கள், தெருக்கள் எரிகின்றன. பெண்கள், குழந்தைகள், முதியவர்களை இலக்காக வைத்து தாக்கியுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • போரை தொடங்கியது நாங்கள் அல்ல, ஆனால் முடித்து வைப்போம் என இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
    • நான்கு முறை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் டெலிபோனில் பேசியுள்ளார்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் கடுமையான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

    நேரடியாக போரில் குதிக்கவில்லை என்றாலும், ஆயுதங்கள் வழங்குவதற்கு தயாராக இருந்தது. ஈரான், லெபனானை மிரட்டும் வகையில் போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

    இந்த நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. என்றாலும், என்னென்ன ஆயுதங்கள் என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளது.

    இந்த போர் நேரத்தில் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு எங்கள் பகுதியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு முக்கியமானது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்கு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் டெலிபோனில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×