search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சைப்ரஸ் நாட்டில் இருந்து காசாவிற்கு உதவிப் பொருட்களுடன் புறப்பட்டது கப்பல்
    X

    சைப்ரஸ் நாட்டில் இருந்து காசாவிற்கு உதவிப் பொருட்களுடன் புறப்பட்டது கப்பல்

    • காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்து முகாமில் தங்கியுள்ளனர்.
    • லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா. தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது.

    காசா மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்க்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தாலும், இந்த போரில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீர்குலைந்துள்ள வடக்கு காசாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

    சாலை வழியாக உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு காசாவில் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு வான்வழியாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யும்போது பாராசூட் செயல்படாமல் உணவு பொட்டலங்களுடன் மக்கள் மீது விழுந்தது. இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.

    இதற்கிடையே லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் தவித்து வருவதாக ஐ.நா. தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வந்தது. இந்த நிலையில் பிரபல சமையல் கலைஞர் ஜோஸ் அன்ட்ரேஸ் காசாவிற்கு உணவு பொருட்கள் சேகரித்து வழங்க முடிவு செய்தார். அவரது அறக்கட்டளை மூலம் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டது.

    சுமார் 200 டன் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த உணவு பொருட்கள் கப்பல் மூலம் காசா கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருந்து காசாவிற்கு கப்பல் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று உணவுப் பொருட்களுடன் சைப்ரஸ் நாட்டில் இருந்து கப்பல் புறப்பட்டுள்ளது.

    இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கப்பல் காசா சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உணவுப் பொருட்கள் மற்றும் உதவி பொருட்கள் வழங்க காசா அருகே கடல் பாலம் அமைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்த கடல் பாலம் செயல்பாட்டிற்கு வர பல வாரங்கள் ஆகலாம். இதற்கிடையே அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ராணுவ உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகம்

    ஐந்து மாத போரில் காசாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில், பெரும்பாலான மக்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து பொதுமக்களை படுகொலை செய்தனர். சுமார் 1200 பேரை கொலை செய்த நிலையில் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    சண்டைக்கிடையில் ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×