என் மலர்
நீங்கள் தேடியது "இஸ்ரேல்"
- அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன் பின் இஸ்ரேல் சென்றார்.
- உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.
கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது.
2017 ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன்பின் அதே வருடம் ஜூலை 4 - 6 வரை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
எப்ஸ்டீன் கோப்புகளில், ஜூலை 9, 2017 தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், "இந்திய பிரதமர் மோடி ஆலோசனை பெற்றார், இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்காகத் தேவையான எல்லாவற்றையும் (danced and sanged) செய்தார். அது நல்ல பலனளித்தது" என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தொழிலதிபர் அனில் அம்பானி 2017 மார்ச் 16 அன்று எப்ஸ்டீனுக்கு அனுப்பிய செய்தியில், அதிபர் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 2014 டிசம்பரில், எப்ஸ்டீனுக்கு, "உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து கேப்புகளில் உள்ள விவரங்களுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை, பிரதமர் மோடி, 2017 இல் இஸ்ரேலுக்கு பயணம் செய்தார் என்பது மட்டும் தான் உண்மை, மற்ற அனைத்தும் எப்ஸ்டீனின் கற்பனையே என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ், "குழந்தைகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு இருக்கும் ஆழமான மற்றும் நீண்டகாலத் தொடர்பு தெளிவாகியுள்ளது. இது நாட்டுக்கே அவமானகரமானது.
பிரதமர் நரேந்திர மோடி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன மாதிரியான ஆலோசனைகளைப் பெற்றார்?, மோடியின் இஸ்ரேல் பயணத்தின் மூலம் டிரம்ப்புக்கு என்ன நன்மை கிடைத்தது?
அது பலனளித்தது! என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்ததன் பொருள் என்ன? ஆகிய மூன்று கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். இது தேசத்தின் கண்ணியம் தொடர்பான விஷயம்" என தெரிவித்துள்ளது.
- அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.
- பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் உண்மை.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2019 இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது.
அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோயால் பில் கேட்ஸ் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் என புதிய கோப்புகளில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு
அதேநேரம் தற்போது வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பில் இடம்பெற்றுள்ள எப்ஸ்டீனின் மின்னஞ்சல் ஒன்றில், பிரதமர் மோடியின் பெயர் மற்றும் அவர் 2017 இல் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் "அந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் குறித்த உண்மைத் தகவலைத் தவிர, மற்ற அனைத்தும் ஒரு குற்றவாளியின் தரம் குறைந்த கற்பனைகளே.
இதற்கு எள்ளளவும் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை; இதை மிகுந்த அருவருப்புடன் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.
- காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
காசாவில் கடந்த அக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.
காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, காவல் நிலையம், கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.
காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.
காசா நகரில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போலீசார் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக இந்த எல்லை திறக்கப்படுவது. சிகிச்சைக்குக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு இது ஒரு முக்கியமாக நிகழ்வாகும்.
அக்டோபர் 10-ஆம் தேதி போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 509 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஹமாஸ்க்கு எதிரான போரினால் கடந்த 2024-ல் இருந்து எல்லை மூடப்பட்டது.
- ஹமாஸ் தாக்குதலின்போது உயிரிழந்தவரின் உடல் பாகம் கிடைத்ததும், இஸ்ரேல் எல்லையை திறக்கிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரினால் கடந்த 2024-ம் ஆண்டு எகிப்து உடனான காசாவின் முக்கிய எல்லையை இஸ்ரேல் மூடியது. இந்த நிலையில் நாளை முதல் இந்த எல்லை (Rafah) திறக்கப்படும் என காசாவிற்கு வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் உள்ள இஸ்ரேலிய இராணுவ அமைப்பு {கோகாட் (COGAT)} தெரிவித்துள்ளது.
ஆனால் மக்களின் வரையறுக்கப்பட்ட நடமாட்டத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ரஃபா எல்லை மீண்டும் திறக்கப்படுவது டிரம்பின் காசாவின் போர் நிறுத்தத் திட்டத்திற்கான முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக் காவல்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் இந்த எல்லைப் பகுதியாக வெளியேறும் மற்றும் நுழையும் நபர்களை இஸ்ரேலும் எகிப்தும் சரிபார்க்கும்.
காசாவில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு அனுமதி பெற்று மீண்டும் காசா திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
- காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
- மீட்கப்பட்ட உடல் ரான் க்விலி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த கடைசி பிணைக்கைதியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது திங்கள்கிழமை, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட உடல் ரான் க்விலி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காகக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த அனைத்து பிணைக்கைதிகளும் இப்போது தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம்இஸ்ரேல் உடன் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது உயிருடன் மீதமிருந்த பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது,
- அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
- போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
காசாவில் கடந்த அக்டோபர் 10 போர் நிறுத்தம் ஏற்பட்ட போதும் இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளுக்கும் உதவிக் குழுக்களுக்கும் இஸ்ரேல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால் மக்கள் சொற்ப நிவாரண பொருட்களும் கிடைக்காமல் அத்தியாவசிய தேவைகளுக்கும் அலைமோதி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய 3 வெவ்வேறு தாக்குதல்களில் 3 பத்திரிகையாளர்கள், 2 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
சாஹ்ராவில் எகிப்து அரசு தலைமையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அனஸ் குனைம், அப்துல் ரவூப், ஷாத் முகமது கெஷ்டா ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்
பத்திரிகையாளர்கள் சென்ற அந்த வாகனம் டிரோன்களைப் பயன்படுத்தி ராணுவ ரகசியங்களைச் சேகரிக்க முயன்றதாகவும், அதனாலேயே வான்படை அந்த வாகனத்தைக் குறிவைத்துத் தாக்கியதாகவும் இஸரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேபோல் முவாஸி பகுதியில் பெண் ஒருவர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், புரைஜ் முகாமில் நடைபெற்ற ஷெல் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்கு காசா பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவனை இஸரேல் ராணுவம் சுட்டுக்கொன்றதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலையில் அவன் பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்றதாகவும், விரைவில் திரும்பி வருகிறேன் எனக் கூறியதாகவும் கொல்லப்பட்ட 13 வயது சிறுவனின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
அக்டோபர் 10 போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காசாவை நிர்வகிக்க டிரம்ப் உருவாக்கிய 'அமைதி'க் குழுவில் இஸ்ரேல் இணைத்துள்ளது.
- அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
- இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது.
ஜெருசலேம்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது, அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது ஆகியவையே இந்த குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.
இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இக்குழுவில் இணையும் 8-வது நாடு இஸ்ரேல் ஆகும். இந்த வாரியத்தில் பிரதமர் நேதன்யாகு இணைய ஒப்புக்கொண்டுள்ளார். இதை அவரது அலுவலகம் நேற்று அறிவித்தது.
டிரம்பின் இந்த வாரியத்தில் அமீரகம், மொராக்கோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இணைய ஒப்புதல் தெரிவித்தன.
- 2025 தொடக்கத்தில் UNRWA-வின் செயல்பாடுகள் இஸ்ரேலிய நிலப்பரப்பில் தடை செய்யப்பட்டன.
- 37 உதவி அமைப்புகளின் செயல்பாட்டு உரிமங்களை (Operating Licences) இஸ்ரேல் ரத்து செய்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமையின் தலைமையகத்தை இஸ்ரேல் இடிக்கத் தொடங்கியுள்ளது. காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் குழுக்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேமில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (UNRWA), தனது ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்களை இஸ்ரேலிய ராணுவம் பிடுங்கிக் கொண்டதாகவும், அலுவலகத்தை விட்டு அவர்களை வெளியேற்றியதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீதானது மட்டுமல்லாமல், சர்வதேச விதிகளை மீறும் செயல் என்றும், ஐநா சபையின் சலுகைகள் மற்றும் அதன் பாதுகாப்பிற்கு எதிரான ஒரு தீவிரமான விதிமீறல் எனவும் முகமை தெரிவித்துள்ளது. புல்டோசர்களுடன் வந்த இஸ்ரேலிய இராணுவக் குழு ஒன்று, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தெருக்களை மூடிவிட்டு, இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்திய பிறகு ஐநா முகமையின் வளாகத்திற்குள் புகுந்ததாகவும், அங்குள்ள கட்டடங்களை இடிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி UNRWA அமைப்பை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. ஆதாரங்கள் எதையும் வழங்காமலேயே, அந்த அமைப்புக்கு ஹமாஸுடன் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனை அந்த ஐநா முகமை வன்மையாக மறுத்துள்ளது.
இதனிடையே அந்த அமைப்பிற்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைப் பின்பற்றியே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024 அக்டோபரில் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2025 தொடக்கத்தில் UNRWA-வின் செயல்பாடுகள் இஸ்ரேலிய நிலப்பரப்பில் தடை செய்யப்பட்டன.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவீர், தான் அந்தப் பணிக் குழுக்களுடன் தலைமையகத்திற்குச் சென்றதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் இதனை ஒரு 'வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனை தாண்டியும் உதவிசெய்த 37 உதவி அமைப்புகளின் செயல்பாட்டு உரிமங்களை (Operating Licences) இஸ்ரேல் ரத்து செய்துள்ளது.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் காசாவுக்கு நிவாரணம் வழங்கி வந்த 37 குழுக்களுக்கு இஸ்ரேல் தடை விதித்தது.
- போரை விடப் பசியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு நாகரிகச் சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி.
காசா பகுதியில் தொடரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க, பிரபல ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி ரஃபா எல்லைப் பகுதிக்கு நேரில் சென்றுள்ளார்.
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அங்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் காசாவுக்கு நிவாரணம் வழங்கி வந்த 37 குழுக்களுக்கு இஸ்ரேல் தடை விதித்தது.
எல்லையில் ஆயிரக்கணக்கான லாரிகள் உணவு மற்றும் மருந்துகளுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவை காசாவுக்குள் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐநாவின் அகதிகள் தூதராக நீண்ட காலம் பணியாற்றிய ஆஞ்சலினா ஜோலி, ரஃபா எல்லைக்கு நேரில் சென்று அங்குள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டார்.
இதுகுறித்து பேசிய ஏஞ்சலினா, "இங்கு நடப்பது மனிதாபிமானத்திற்கு எதிரானது. பசியாலும் போரினாலும் வாடும் குழந்தைகளுக்கு உடனடியாக உதவி கிடைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதற்கிடையே ஆஸ்கர் விரித்து வென்ற ஸ்பெயினைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகர் ஜேவியர் பார்டெம், "உதவிகளைத் தடுப்பது என்பது பொதுமக்கள் மீதான நேரடித் தாக்குதல்.
இது போர்க்குற்றத்திற்குச் சமமானது. போரை விடப் பசியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு நாகரிகச் சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி" என்று இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
- அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.
- அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.
71 வயதான ஜாக்கி சான் 'Unexpected Family" என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சீன தலைநகர் பீஜிங்-இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாக்கி சான் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய ஜாக்கி சான், அண்மையில், காசா குழந்தைகளின் துயரங்களை விவரிக்கும் வீடியோ ஒன்றை பார்த்து மனமுடைந்தேன்.
அந்த வீடியோவில், ஒரு பாலஸ்தீன சிறுவனிடம், பெரியவனானதும் நீ என்னவாக விரும்புகிறாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்தச் சிறுவன் எவ்வித உணர்ச்சியுமின்றி, மிகச் சாதாரணமாக, "எங்கள் ஊரில் குழந்தைகள் வளர்வதே இல்லை. ஏனெனில் வளர்வதற்கு முன்பே கொல்லப்பட்டு விடுகிறோம்" என்று பதிலளித்தான்.
அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.
என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.
நாம் முதுமையை ஒரு சுமையாக நினைக்கிறோம். ஆனால் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு அந்த முதுமை மறுக்கப்படுகிறது. அவர்கள் வளர்வதற்கு முன்பே போரினால் சிதைக்கப்படுகிறார்கள்.
வன்முறை என்பது ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருந்தால், மரணத்தைப் பற்றி அந்தச் சிறுவனால் இவ்வளவு சாதாரணமாகப் பேச முடியும் என்பதுதான் உலகிற்கு அது சொல்லும் செய்தி" என்று உருக்கமாக தெரிவித்தார்.
2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசா போரில் இதுவரை 71,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த 23 மாதங்களில் காசாவில் 1 மணி நேரத்துக்கு 1 குழந்தை கொல்லப்பட்டுள்ளது.
- காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 70,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20,000 பேர் குழந்தைகள் ஆவர்.
- 3,000 முதல் 4,000 குழந்தைகள் தங்கள் கை அல்லது கால்களை இழந்து ஊனமுற்றுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் 2025-ஆம் ஆண்டு பாலஸ்தீனியர்களுக்கு மற்றுமொரு துயரமான ஆண்டாகவே அமைந்தது.
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆண்டாகவும் இது அமைந்தது.

காசா போர்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.
இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் பாதி பேர் மீடகப்பட்ட நிலையில் 96 பேர் இன்னும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 26 மாதங்களாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 70,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20,000 பேர் குழந்தைகள் ஆவர். 1.7 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 3,000 முதல் 4,000 குழந்தைகள் தங்கள் கை அல்லது கால்களை இழந்து ஊனமுற்றுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

இனப்படுகொலை
செப்டம்பர் 2025-ல் ஐநா விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.
உயிரிழப்புகள், பசி மற்றும் மருத்துவத் தேவைகளைத் தடுத்தல் போன்றவை இதற்கு ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டன.
மக்களைக் கொல்லுதல், கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதல், வாழ்க்கைச் சூழலை அழித்தல், பிறப்புகளைத் தடுத்தல் ஆகிய 4 குற்றங்களையும் இஸ்ரேல் திட்டமிட்டு தொடர்வதால் காசாவில் இஸ்ரேல் புரிவது இனப்படுகொலையே என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல, அவை காசா மக்களின் அன்றாட வாழ்வை முடக்குவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

பசி, பட்டினி, பஞ்சம்:
இஸ்ரேல் விதித்த கடுமையான தடைகளால் 2025-ல் பஞ்சம் உச்சத்தை அடைந்தது. போர் தொடங்கியதில் இருந்து 461 பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்துள்ளனர், இதில் பெரும்பாலான மரணங்கள் 2025-ல் நிகழ்ந்தவை.
5 வயதிற்குட்பட்ட 54,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் அறிக்கையின்படி, காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர்.
காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

இடிபாடுகளாக எஞ்சிய காசா:
அக்டோபரில் வெளியான ஐநா அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 373.5 டிரில்லியன்) ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும்.
போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அறிக்கை தெரிவித்தது.
நவம்பரில் வெளியான ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (UNCTAD) கடந்த நவம்பரில் வெளியிட்ட அறிக்கை, காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கிறது.

அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.
காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

அடிப்படை தேவைகளுக்கு அலைமோதும் காசா மக்கள்:
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காசாவின் அடிப்படை உள்கட்டமைப்பை முற்றிலுமாக முடக்கியுள்ளன.
காசாவின் ஒரே மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டது. ஒட்டுமொத்த மின் விநியோக அமைப்பில் 80% சிதைக்கப்பட்டுள்ளது.
மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும், சிறிய ஜெனரேட்டர்கள் மூலமும் மிகக் குறைந்த அளவே மின்சாரத்தைப் பெறுகின்றனர்.
இஸ்ரேலின் குண்டுவீச்சுகள் கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் மற்றும் தண்ணீர் பம்பிங் நிலையங்களை அழித்ததால் மக்கள் உப்பு மற்றும் உலோக வாடை வீசும் பாதுகாப்பற்ற தண்ணீரை அருந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது குழந்தைகளுக்கு தோல் வியாதிகள் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்களை உண்டாக்கி வருகிறது.

மருத்துவமனைகள் போதிய மருந்துகள், மின்சாரம் மற்றும் உபகரணங்கள் இன்றி இயங்குகின்றன. மருத்துவர்கள் மொபைல் போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் அவலநிலை நீடிக்கிறது.
சாலைகள் தகர்க்கப்பட்டுள்ளதால், மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மக்களைச் சென்றடைவதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது.

வெனிஸ் வெளிச்சம்
இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.

பிரெஞ்சு-துனிசிய இயக்குனர் கவுதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஹிந்த் ரஜப் உடைய வாழ்வின் இறுதித் தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளது.

ஐநா பொதுச் சபையும், தனி நாடு அங்கீகாரமும்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்சனை முதன்மையாக விவாதிக்கப்பட்டது.
"தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது அவர்களின் உரிமை" என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.

இந்த ஐநா பொதுச்சபை கூடுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா,போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தன.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் வைத்து, பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன.
இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்தது. இதை இஸ்ரேலும், அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்தது.

டிரம்ப் அமைதி திட்டமும், கண்துடைப்பு போர் நிறுத்தமும்:
அக்டோபர் 10, 2025 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
காசாவில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட அரசாங்கத்தை அமைப்பது, இஸ்ரேலியப் படைகளுக்குப் பதிலாக சர்வதேச அமைதிப் படையை நிலைநிறுத்துவது இதில் அடங்கும்.
மேலும், ஒப்பந்தப்படி, டிசம்பர் 9-க்குள், ஹமாஸிடம் எஞ்சியிருந்த இஸ்ரேல் பணய கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர். பதிலாக, இஸ்ரேல் சிறையிலிருந்த பாலஸ்தீனியர்களை விடுவித்தது.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை.
தீவிரவாதிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், நவம்பர் 30 வரை மட்டும் 352 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2025-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையிலும், காசா மக்களின் துயரமும் கண்ணீரும் முடிவுக்கு வந்தபாடில்லை. இதற்கிடையே 2026 ஜனவரி 1-ந்தேதி முதல் காசாவில் பல உதவி அமைப்புகளின் செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
- காசாவில் ஹமாஸ் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
- ஸ்டாஃப்களின் செயல்பாடுகள் குறித்த தகவலை பரிமாற்றம் செய்ய சில அமைப்புகள் தவறியதாகவும் குற்றச்சாட்டு.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு காசாவில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு பல்வேறு மனிதாபிமான அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. சில அமைப்புகள் ஹமாஸ் மற்றும் மற்ற பயங்கரவாத குழுவினருக்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக எல்லைகள் அற்ற டாக்டர்கள் அமைப்பு சில ஸ்டாஃப்களின் பணி என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க தவறி விட்டது எனத் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 1-ந்தேதி முதல் ஸ்டாஃப், நிதி மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக தகவல்களை பரிமாற்றம் செய்யவில்லை என்றால், காசாவில் செயல்பட தடைவிதிக்கப்படும் எனத் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கான எல்லைகள் அற்ற டாக்டர்கள் அமைப்பு பதில் அளிக்கவில்லை. ஆனால் மற்ற சர்வதேச அமைப்புகள் இது ஸ்டாஃப்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளன.






