என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "journalists"

    • 'ஆப்பிள் டெய்லி' பத்திரிகை, ஹாங்காங் மற்றும் சீன அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது.
    • ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கிலேயர் காலனியாதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    அன்று முதல் ஹாங்காங் சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக உள்ளது. இருப்பினும் அங்கு ஜனநாயகத்துக்கு எதிரான குரல்களை சீனா தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.

    இந்நிலையில் ஹாங்காங்கின் பிரபல ஊடக தொழிலதிபர் ஜிம்மி லாய்க்கு தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    ஜிம்மி லாய் தொடங்கிய 'ஆப்பிள் டெய்லி' பத்திரிகை, ஹாங்காங் மற்றும் சீன அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது.

    2021-ல் அரசின் அழுத்தங்கள், சொத்துக்கள் முடக்கம் மற்றும் ரெய்டுகள் காரணமாக இந்தப் பத்திரிகை மூடப்பட்டது.

    அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சதி செய்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வகையில் கட்டுரைகளை வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

    தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நீடித்தன.

    இந்நிலையில் ஏற்கனவே மோசடி வழக்கில் ஜிம்மி லாய் 5 ஆண்டு 9 மாத தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேலும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

    அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய்க்கு தற்போது 78 வயது ஆவதால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 20 ஆண்டு தண்டனை ஆயுள் தண்டனைக்கு சமமாகும்.

    தாம் சீனாவின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஓர் அரசியல் கைதி என்று லாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    பெரும்பாலும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய் உடல்நிலை மோசமாக உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். 

    • பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் திருவானந்தபுர காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர்.
    • வாஷிங்டன் போஸ்டின் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவே கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டன

    அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நாளிதழ் நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் கடந்த புதன்கிழமை, 300 பத்திரிகையாளர்கள் வரை பணிநீக்கம் செய்தது.

    பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் திருவானந்தபுர காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர்.

    இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் பதிப்பாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வில் லூயிஸ் நேற்று (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    நிறுவனத்தின் நிதி நெருக்கடி மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைக் கையாண்ட விதம் குறித்து ஊழியர்களிடையே எழுந்த கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் வில் லூயிஸ் பதவி விலகியுள்ளார். கடந்த 15 மாதங்களாக அவர் அந்த பதவியில் இருந்தார்.

    "வாஷிங்டன் போஸ்டின் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவே கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டன" என்று லூயிஸ் தனது பிரியாவிடை குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    அவருக்குப் பதிலாக நிறுவனத்தின் நிதி அதிகாரி ஜெஃப் டி'ஒனோப்ரியோ தற்காலிக சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார்.   

    • அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
    • போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

    காசாவில் கடந்த அக்டோபர் 10 போர் நிறுத்தம் ஏற்பட்ட போதும் இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளுக்கும் உதவிக் குழுக்களுக்கும் இஸ்ரேல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இதனால் மக்கள் சொற்ப நிவாரண பொருட்களும் கிடைக்காமல் அத்தியாவசிய தேவைகளுக்கும் அலைமோதி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய 3 வெவ்வேறு தாக்குதல்களில் 3 பத்திரிகையாளர்கள், 2 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

    சாஹ்ராவில் எகிப்து அரசு தலைமையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் அனஸ் குனைம், அப்துல் ரவூப், ஷாத் முகமது கெஷ்டா ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்

    பத்திரிகையாளர்கள் சென்ற அந்த வாகனம் டிரோன்களைப் பயன்படுத்தி ராணுவ ரகசியங்களைச் சேகரிக்க முயன்றதாகவும், அதனாலேயே வான்படை அந்த வாகனத்தைக் குறிவைத்துத் தாக்கியதாகவும் இஸரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    அதேபோல் முவாஸி பகுதியில் பெண் ஒருவர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

    மேலும், புரைஜ் முகாமில் நடைபெற்ற ஷெல் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    மேலும், மேற்கு காசா பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவனை இஸரேல் ராணுவம் சுட்டுக்கொன்றதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    காலையில் அவன் பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்றதாகவும், விரைவில் திரும்பி வருகிறேன் எனக் கூறியதாகவும் கொல்லப்பட்ட 13 வயது சிறுவனின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.

    அக்டோபர் 10 போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசாவை நிர்வகிக்க டிரம்ப் உருவாக்கிய 'அமைதி'க் குழுவில் இஸ்ரேல் இணைத்துள்ளது. 

    • பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த்துக்கு அசாம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
    • கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஒரு ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது

    தி வயர் பத்திரிகையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த்துக்கு அசாம் போலீசார் சம்மன் அனுப்பியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சில நாட்களுக்கு முன்பு இருவர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்த சில நாட்களில் சம்மன் அனுப்பியுள்ளனர். FIR நகல் எதுவும் இல்லாமல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை முடக்க தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஒரு ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

    இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

    ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.

    • 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பொரும்பாலனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதல்களின் கோரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியில் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டு வருகின்றனர்.

     

     

     

     

    இதுவரை பல்வேறு கட்டங்களில் நடந்த தாக்குதல்களில் சுமார் 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (RSF) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

     

    கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அதன் புகாரில், இந்தப் பத்திரிகையாளர்களில் பலர் வேண்டுமென்றே இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வழக்கம்போல் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம்.
    • 15 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.7.5 லட்சம்.

    தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் நிதி உதவியினை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.

    அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும். போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- (ரூபாய் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
    • காசாவிற்குள் வெளிநாட்டு பத்ரிக்கையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது.

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

    தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தற்போது மத்திய காசாவில் அகதிகள் முகாம் மற்றும் மருத்துவமனை மீது இஸ்ரேல் காசாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

    மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் குட்ஸ் நியூஸ் நெட்வொர்க்கில் [Quds News] பணியாற்றிய பத்திரிகையாளர்கள் படம்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடாத்தியுள்ளது.

     

    இதனால் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 130க்கும் மேற்பட்ட பாலஸ்தீன செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவிற்குள் வெளிநாட்டு பத்ரிக்கையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது. 

     

    • கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 35 பத்திரிகையாளர் குடும்பத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.
    • கொரோனா தொற்றால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 123 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.

    இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தலைமையிலான பத்திரிகையாளர் நலத்திட்டக்குழு, மறைந்த பத்திரிகையாளர்கள் 35 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

    பத்திரிகையாளர்கள் நல நிதியிலிருந்து 7 பத்திரிகையாளர்கள் மற்றும் 35 பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 16 பத்திரிகையாளர் குடும்பங்களும் அடங்கும். இவர்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

    மேலும் நிரந்தர உடல்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 2 பத்திரிகையாளர்கள், பெரிய நோய்களுக்கு சிகிச்சைபெறும் 5 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க இக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, மொத்தம் ரூ.1.81 கோடி நிதியுதவி வழங்க இக்குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் என்கவுண்டர் செய்வதற்கு முன், பத்திரிகையாளர்களை வர வழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். #AligarhEncounter
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாக முஸ்டாக்கிம் மற்றும் நவ்சாத் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர். 

    இந்த நிலையில், நேற்று இவர்கள் 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை விரட்டி சென்ற போது அலிகாரில் உள்ள பழைய கட்டிடத்தில் மறைந்து கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். 

    இதனையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் மறைந்து இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகளை என்கவுண்டர் செய்தனர்.

    முன்னதாக சம்பவ இடத்திற்கு பத்திரிகையாளர்களை வரவழைத்து துப்பாக்கிச்சண்டையை படம் பிடித்து கொள்ளவும் அனுமதி வழங்கினர்.

    யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பு ஏற்தில் இருந்து மாநிலத்தில் உள்ள 60க்கு மேற்பட்ட ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    பத்திரிகையாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம், வாகனம், கேமரா சேதமடைந்தால் ரூ.50 ஆயிரம் என ஏராளமான சலுகைகளை மத்தியப்பிரதேசம் மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. #MPcabinet #deceasedjournalists #exgratiahike
    போபால்:

    மக்கள் தொடர்புத்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா இன்று போபால் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மரணம் அடைந்தால் தற்போது அரசின் சார்பில் அவர்களின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

    பத்திரிகையாளர்களின் வாகனங்கள், கேமராக்கள் சேதம் அடைந்தால் தற்போது அளிக்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும். அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை வீட்டுக்கடன் பெறும் பத்திரிகையாளர்களுக்கு வட்டித்தொகையில் 5 சதவீதத்தை தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மாநில அரசு ஏற்றுகொள்ளும்.

    நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.#MPcabinet #deceasedjournalists  #exgratiahike 
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து சென்னையில் இன்று கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #ThoothukudiFiring #BanSterllite #SterliteProtestChennai
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் தற்போது தணிந்துள்ள நிலையில், இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



    எனினும், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதைக் கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழர் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    போராட்டத்தின்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

    இதேபோல் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  #ThoothukudiFiring #BanSterllite #SterliteProtestChennai

    ×