என் மலர்
நீங்கள் தேடியது "Hollywood"
- மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும்.
- உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்கின்றன.
மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும். அந்த நகரம் தான் 'ஜூடோபியா'
2016இல் வெளியான முதல் பாகத்தில் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு காவல்துறை வேளையில் சேர முயல் குடும்பத்தை சேர்ந்த ஜூடி ஹாப்ஸ் செல்கிறாள்.
அங்கு ஒரு திருட்டு நரி (நிக் வைல்ட்) உதவியுடன் ஒரு வழக்கின் மர்மங்களை ஜூடி ஹாப்ஸ் கண்டுபிடிப்பதே கதை. இறுதியில் நிக் வைல்டும் காவல் அதிகாரி ஆகிவிடுகிறான்.
இந்நிலையில் 'ஜூடோபியா 2' படத்தின் கதை முதல் பாகத்திலிருந்து தொடர்கிறது. காவல் துறையில் பார்ட்னர்களாக இருந்து வரும் ஜூடி ஹாப்ஸ் மற்றும் நிக் வைல்ட் இருவரிடையே பிரிவு ஏற்படுகிறது.
ஜூடி ஒரு பாம்பு ஜூடோபியாவில் ஊடுருவியதாக சந்தேகிக்கிறாள். ஜூடோபியா ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பாம்புகள் அங்கு வந்தது என அவள் கூறியதை யாரும் நம்பவில்லை.
ஆனால் ஜூடி நிக்கை சம்மதிக்க வைத்து அவனுடன் சேர்ந்த இதுகுறித்து விசாரணையை தொடங்குகிறாள்.
இதற்கிடையில், ஜூடோபியாவின் நிறுவனர்களான லிங்க்ஸ்லி என்ற சிங்கக் குடும்பம் ஒரு விருந்து வைக்கிறது. இந்த விருந்தின்போது ஒரு திருட்டு நடக்கிறது. பாம்பு ஏன் ஊருக்குள் வந்தது, அதற்கும் இந்த திருட்டுக்கும் என்ன தொடர்பு, ஜூடியும், நிக்கும் ஒற்றுமையாக இந்த மர்மத்தை அவிழ்த்தார்களா என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்: படம் அனிமேஷன் என்பதால் டப்பிங் கலைஞர்கள் கையில் தான் கதாபாத்திரங்களின் உயிர் உள்ளது. மேலும் முதல் படத்தை போல காமெடி வசனங்கள், சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.
இயக்கம்: அனிமேஷன் காட்சியமைப்புகள் ஜூட்டோபியாவுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன.கதை மீதான பார்வையாளரின் நம்பிக்கையை நிறுவுகின்றன. ஒவ்வொரு சிறிய காட்சியும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அமர்க்களப்படுகிறது.
நகரில் மனிதர்களை போல வெவ்வேறு பணிகளை செய்யும் வெவ்வேறு விலங்குகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்வது அங்கு கள எதார்த்தம் போலும். மேலும் மிருகங்களுக்கு இடையே இருக்கும் முரண்களை வைத்து நகைச்சுவை, சமூக கட்டமைப்பு, வர்க்க பேதங்கள் என அசல் நவநாகரீக மனித நகரங்களை கண் முன் கொண்டு வந்ததற்கு பாராட்டுகள்.
நிக், ஜூடி இடையே ஏற்படும் சச்சரவுகள், சண்டை என இருந்தாலும், இருவருக்கும் உள்ள கெமிஸ்ரிக்கு 100 மார்க் கொடுக்கலாம்.
மொத்தத்தில் கத்தி, துப்பாக்கி, சிவப்பு பெயிண்ட் (ரத்தம்) என கண்களை புண்ணாக்கும் படங்களுக்கு மத்தியில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் செல்ல ஏதுவான டிசம்பர் ட்ரீட் இந்த 'ஜூடோபியா 2'
மாலைமலர் ரேட்டிங் : 3.5 / 5
- இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 1946 காலகட்டத்தில் நடக்கிறது.
- துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, ரத்தம் என ஒரே சண்டை மையமாக கிராபிக் வலயன்ஸ் காட்சிகளுடன் படம் நகர்கிறது.
2022 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பின்லாந்து திரைப்படம் "SISU". இப்படம் இரண்டாம் உலகப் போரில் முடியும் தருவாயில் 1944 காலகட்டத்தில் நடக்கும் கதையாகும். பின்லாந்தில் வாழும் முன்னாள் கமாண்டோ அட்டாமி கோர்பி பின்லாந்தின் வடக்கு சமவெளியில் தனியே தோண்டுதல் பணி நடத்தி தங்கத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லும்போது ஹிட்லரின் நாஜி படை அதிகாரிகள் அவரின் தங்கத்தை பரித்துச் செல்கின்றனர்.
அட்டாமி கோர்பி அவர்களை துரத்திச் சென்று தனது தங்கத்தை மீட்பதே கதை. சாதராண முதியவர் என்ற பிம்பத்துக்கு பின்னால் அட்டாமி கோர்பியின் மிகவும் ஆக்ரோஷமான முன்னாள் கமாண்டோ என்ற பிம்பம் வெளிப்படும். இதுவே படத்தின் உயிர்நாடி. அட்டாமி கோர்பியை, "SISU"என்ற பின்னாலாந்தின் அர்பேன் லெஜண்ட் ஆக அவ்வூர் மக்கள் கருதுவார்கள். படம் முழு அட்டாமி கோர்பி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார் என்பதை கவனிக்க வேண்டும்.
இந்த பிம்பத்தோடு அவர் எதிர்கொள்ளப் போகும் புதிய சவால் என்ன?. அதுவே தற்போது வெளியாகி உள்ள 'SISU - தி ரோட் டு ரிவெஞ்ச்' என்ற இரண்டாம் பாகம்.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 1946 காலகட்டத்தில் SISU இரண்டாம் பாக கதை நகர்கிறது. இரண்டாம் உலகப் போரில் தனது குடும்பத்தை இழந்த பிறகு, அட்டாமி கோர்பி அவர்களுடன் வாழ்ந்த மர வீட்டை பிரித்து மூட்டை கட்டி அமைதியான ஒரு இடத்தில் வீட்டை மீண்டும் உருவாக்கி வாழலாம் என புறப்படுகிறார். இதன்போது அவர் சோவியத் யூனியன் எல்லைக்குள் நுழையவே இதை அறிந்த சோவியத் யூனியனின் செம்படைத் தலைவர் இகோர் அட்டாமியைக் கொல்ல தனது படைகளுடன் செல்கிறார்.
அவர்களே தனது குடும்பத்தை கொன்றவர்கள் எனவும் அட்டாமி கோர்பி அறிகிறார். அவர்களிடம் இருந்து தான் பெரிதாக கருதும் வீட்டின் மர பாகங்களை எப்படி அட்டாமி காற்றினார், தனது குடும்பத்துக்காக அவர்களை பழிவாங்கினாரா, அமைதியாக இடத்தில் மீண்டும் வீட்டை கட்டும் தனது கனவை நிறைவேற்றினாரா என்பதுதான் மீதிக் கதை.

இயக்கம்:
இந்த முழு படத்திலும் பத்து பக்க வசனங்கள் கூட இல்லை. படம் முழுவதும் ஆக்ஷனால் நிரம்பியுள்ளது. துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, ரத்தம் என ஒரே சண்டை மையமாக கிராபிக் வலயன்ஸ் காட்சிகளுடன் படம் நகர்கிறது. எனவே ஆக்ஷன் ரசிகர்களுக்கு படம் நல்ல தீனியாக அமைந்துள்ளது.
முதல் பாகத்தை போலவே மிகவும் ஆக்ரோஷமான காட்சிகளுடன் படம் நகர்கிறது. இருப்பினும் காட்சிகளிலும் கதையிலும் முதல் பாகத்தில் இருந்த வலு குறைந்துள்ளதாக தெரிகிறது. முதல் பாகத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாதபோது வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானதால் அவ்வாறு தோன்றலாம்.
நடிகர்கள்:
அட்டாமி கோர்பி கதாபாத்திரத்தில் பின்லாந்து நடிகர் ஜோர்ம டோம்மிலா நடித்துள்ளார். படம் முழுவதும் அவர் பேசாமல், தனது முதிர்ந்த மற்றும் ஆக்ரோஷமான உடல் மொழியால் கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார்.
சோவியத் செம்படைகளின் தலைவராக இகோர் கதாபாத்திரத்தில் ஜாக் டூல்டன் நடித்துள்ளார். அட்டாமி கோர்பியை மையமாக வைத்தே கதை நகர்வதால் மற்ற பாத்திரங்கள் பெரிதும் வெளித்தெரியவில்லை.

ஒளிப்பதிவு:
படத்தின் ஒளிப்பதிவை மிகா ஒராசமா கையாண்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அடர்ந்த காடுகளின் பின்னணியில் நடக்கும் கதையை நம்பும்படியாக படம்பிடித்துள்ளார்.
சண்டைக் காட்சிகளுக்கு ஒராசமாவின் மெனக்கிடல் படத்தில் பிரதிபலிக்கிறது. அதிகப்படியான ரத்தம் மற்றும் கிராஃபிக் வன்முறை காட்சிகளை காத்திரம் குறையாமல் காட்டியிருக்கிறார்.
பின்னணி இசை
அட்டாமி கோர்பி ஒரு வார்த்தை கூட பேசாததால், கதைப் பின்னணியின் தீவிரத்தையும், அவரது உணர்ச்சியையும் பார்வையாளருக்கு யாரிட் கிளிஞ்சர் உடைய அழுத்தமான பின்னணி இசை வெற்றிகரமாக கடத்தியுள்ளது.
ரேட்டிங் : 3.5 / 5
- காலிஸை வேட்டையாட பூமியிலிருந்து மற்றொரு ரோபோ குழுவும் வந்து சேர்ந்துள்ளது.
- வில்லனாக இருந்த பிரிடேட்டர் இனத்தவனைக் கதாநாயகனாக வைத்து மாறுபட்ட கோணத்தில் படம் உருவாகி இருப்பது இயக்குனரின் புதிய பாய்ச்சல்.
வளிமண்டலத்தில் ப்ரிடேட்டர் இனத்திற்கென்று தனியான ஒரு கிரகம் இருக்கிறது. இந்தக் கிரகத்தின் பெயர் யாட்ஜா பிரைம். இதில் வசிக்கும் ப்ரிடேட்டர்கள் யாட்ஜா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள உயிரினங்களை வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
யாட்ஜா என்றால் பலசாலியாகவும், கருணையே அற்ற வேட்டைக்காரனாகவும் இருக்க வேண்டும். ஆனால், கதையின் நாயகனான யாட்ஜா இனத்தைச் சேர்ந்த டெக், மற்ற யாட்ஜா-களை விட பலவீனமாக இருக்கிறான். இதனால் டெக்கை வெறுக்கும் அவனது தந்தை, அவனைக் கொல்ல உத்தரவிடுகிறார். ஆனால், டெக்கின் அண்ணன், தன் தம்பிக்குத் தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவனைக் கொல்ல மறுக்கிறான்.
தந்தையே டெக்கைக் கொல்ல முயலும்போது, அண்ணன் தம்பியைப் பாதுகாக்கும் முயற்சியில் தந்தையின் கையால் இறக்கிறான். இறப்பதற்கு முன், தம்பி டெக்கை ஒரு விண்கலத்தில் ஏற்றி கென்னா என்ற கிரகத்திற்கு அனுப்பி வைக்கிறான். கென்னா கிரகத்தில் யாராலும் அழிக்க முடியாத காலிஸ்க் என்ற மிருகம் உள்ளது. அதைக் கொன்று வேட்டையாடினால், தன்னைத் தனது கிரகத்தில் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் டெக், அந்தக் காலிஸ்க்கைத் தேடிப் பல வினோத உயிரினங்கள் உள்ள அந்தக் கிரகத்தில் தனது பயணத்தைத் தொடர்கிறான்.
வழியில், பூமியிலிருந்து அந்தக் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட தியா என்ற மனித வடிவிலான ரோபோவை டெக் சந்திக்கிறான். தியா ஏற்கனவே காலிஸுடன் சண்டையிட்டு தனது உடலின் ஒரு பாதியை இழந்தவள். எனவே, காலிஸ் இருக்கும் இடத்தைத் தான் காட்டுவதாக டெக்குடன் ஒரு ஒப்பந்தம் செய்து பயணத்தைத் தொடர்கிறாள்.
இதற்கிடையே, காலிஸை வேட்டையாட பூமியிலிருந்து மற்றொரு ரோபோ குழுவும் வந்து சேர்ந்துள்ளது. டெக், தியா காலிஸைக் கண்டுபிடித்தார்களா? இறுதியில் காலிஸ் வேட்டையாடப்பட்டதா? என்பதுதான் மீதிக்கதை.
நடிகர்கள்:
டெக் கதாபாத்திரத்தில் டிமிட்ரியஸ் ஷுஸ்டர்-கோலோமதாங்கி மற்றும் தியா கதாபாத்திரத்தில் எல்லே பன்னிங் சிறப்பாக நடித்துள்ளனர். படம் முழுவதும் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், டெக் கதாபாத்திரத்திற்கு டிமிட்ரியஸ் ஷுஸ்டர் நியாயம் செய்திருக்கிறார். நகைச்சுவை உணர்வு கொண்ட தியா கதாபாத்திரத்திற்கு எல்லே பன்னிங் வலு சேர்த்துள்ளார். அதிக ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட படத்தில், இருவரின் கெமிஸ்ட்ரி காண்போருக்கு இதமளிக்கிறது.
இயக்கம்:
மனிதனே அல்லாத, அதிக CGI உடன் வேற்றுகிரகவாசிகள், மிருகங்கள், ரோபோக்கள் என நகரும் படத்தில், குடும்ப உறவு, அண்ணன் தம்பி பாசம், நட்பு, விரோதம், பலவீனம், நிராகரிப்பு போன்ற உணர்ச்சிகளை இயக்குநர் டான் ட்ராக்டென்பெர்க் தொட்டுக் காட்டி இருக்கிறார். முந்தைய படங்களில் வில்லனாக இருந்த பிரிடேட்டர் இனத்தவனைக் கதாநாயகனாக வைத்து மாறுபட்ட கோணத்தில் படம் உருவாகி இருப்பது இயக்குனரின் புதிய பாய்ச்சல்.
காட்சிகள் - ஒளிப்பதிவு:
கென்னா கிரகம் மிக பிரம்மாண்டமாக CGI வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டெக் - தியா தங்கள் சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் டிராகன்கள், யானை போன்ற மிருகங்கள், விசித்திரத் தாவரங்கள் சுவாரஸ்யமூட்டுகின்றன. டெக் மற்றும் காலிஸ்க் இடையே நடக்கும் சண்டை மிரட்டலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொருந்தக்கூடிய பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
மொத்தத்தில், ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் சாகசப் படமாக, அதிரடிகளுடன் கூடிய த்ரில்லிங் அனுபவத்தை 'ப்ரிடேட்டர்: பேட்லேன்ட்ஸ்' அளிக்கிறது.
ரேட்டிங்: 3.5/5
- அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
- டாம் குரூஸ் (63) மற்றும் அனா டி அர்மாஸ் (37) ஆகியோர் நட்சத்திர ஜோடியாக வளம் வந்தனர்.
ஹாலிவுட் நட்சத்திரங்கள் டாம் குரூஸ் (63) மற்றும் அனா டி அர்மாஸ் (37) ஆகியோர் தங்கள் காதல் உறவை முறித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 9 மாதங்களாக டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது.
அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூட வதந்தி பரவியது. ஆனால் மாறாக இருவரும் பிரிந்துவிட்டதாக அமெரிக்க ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இருவருக்கும் இடையிலான ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த உறவு எதிர்காலத்தில் நீண்ட காலம் நீடிக்காது என்று உணர்ந்த இருவரும், இணக்கமாகப் பிரிவது நல்லது என்று முடிவு செய்துள்ளனர் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயது வித்தியாசம் காரணமாக அவர்கள் திருமணம் செய்துகொள்ள தயங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

- அடைமொழிக்கு ஏற்றவாறு அவரின் பாறை போன்ற கட்டுக்கோப்பான உடல் பிரசித்தி பெற்றது.
- பாக்சிங் வீரராக ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ளது.
WWE முன்னாள் மல்யுத்த வீரரும் பிரபல ஹாலிவுட் நடிகருமானவர் "The Rock" என ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் (53 வயது). அடைமொழிக்கு ஏற்றவாறு அவரின் பாறை போன்ற கட்டுக்கோப்பான உடல் வகுக்காவே பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிந்தன.
இந்நிலையில் அண்மையில் ராக் பொதுவெளியில் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். அவரின் பிரதான அடையாளமான அவரது ஆஜானுபாகுவான உடல் தோற்றம் குன்றி ஒல்லியாக அவர் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்று கவலைப்படுகிறார்கள். அவருக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினை உள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என சமூக ஊடகங்களில் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.
இருப்பினும், இது அவரது வரவிருக்கும் படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக இருக்கலாம் என்று சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். சிலரோ, வயதானால் அப்படிதான் என ஆறுதல்பட்டுக்கொள்கின்றனர்.
பாக்சிங் வீரராக ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ளது. இது Mark Kerr என்ற பிரபல பாக்சிங் சாபியனின் வாழக்கை வரலாற்று படமாகும். இந்த படத்திற்காகவே ராக் தனது உடல் எடையில் 27 கிலோ குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- டாரண்டினோ இயக்கத்தில் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' வெளியானது.
- முதல் பாகத்தில் நடித்த பிராட் பிட் இப்படத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் டேவிட் ஃபிஞ்சர் தன் புதிய படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் குயிண்டன் டரண்டினோ மற்றும் டேவிட் ஃபிஞ்சர் ஆகியோர் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க உள்ளனர்.
கடந்த 2019 இல் டாரண்டினோ இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் வென்ற 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' படத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய படம் உருவாக உள்ளது.
இப்படத்திற்கு ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்: அட்வென்சர் ஆஃப் கிளிப் பூத் (once upon a time in hollywood: adventures of cliff booth) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
குயிண்டன் டாரண்டினோ எழுதிய இந்த கதையை , டேவிட் ஃபிஞ்சர் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த பிராட் பிட் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பண்டோரா கிரகத்தின் பின்னணியில் உருவாகியுள்ளது.
- படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.
ஹாலிவுட் பிதாமகன் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்' படத்தின் மூன்றாவது பாகமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
இந்த டிரெய்லர் நெருப்பு மற்றும் சாம்பல் என்ற கருப்பொருளை கொண்டு உருவாகியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.
பண்டோரா கிரகத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம், பார்வையாளர்களை மீண்டும் ஒரு மாயாஜால உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.
'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' டிசம்பர் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
- விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.
- "ரிஜானா- ஏ கேஜ்ட் பேர்ட்" எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.
தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.
இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நடிகை வரலட்சு சரத்குமார் "ரிஜானா- ஏ கேஜ்ட் பேர்ட்" எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
சந்திரன் ருத்னம் என்பவர் இயக்கிய "ரிஜானா- ஏ கேஜ்ட் பேர்ட்" படத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.
இந்த படம் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளது, 2005ல் சவுதி அரேபியாவில் குழந்தையைக் கொன்றதற்காக தலை வெட்டப்பட்ட ரிஜானா நபீக் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடிகை வரலட்சுமி கூறுகையில்," தி லயன் கிங்க படத்தில் குரல் கொடுத்திருக்கும் அகாடமி விருது வென்ற நடிகர் ஜெரோமி ஐரோன்ஸ் உடன் நடித்தது நம்பமுடியாத உணர்வாக இருக்கிறது.
அவருடன் நடித்ததன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது. ஜெரோமி ஐரோன்ஸ் ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமாவிலும் மதிக்கக்கூடிய நபர்" என்றார்.
- தொடர்ந்து இந்தி திரை உலகில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.
- படத்தை ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் கெவின் ஸ்பேசி இயக்கி இருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திஷாபதானி. இதைத்தொடர்ந்து. தொடர்ந்து இந்தி திரை உலகில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.
திஷா பதானி ஏற்கனவே ஜாக்கிசானுடன் 'குங்பூ', 'யோகா' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் 'ஹாலிகார்ட்ஸ்' என்ற ஆக்சன், திரில்லர் படத்தின் மூலம் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.
படத்தை ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் கெவின் ஸ்பேசி இயக்கி இருக்கிறார். படத்தில் டால்ப் லண்ட்கிரென், டைரஸ் கிப்சன், பிரியானா ஹில்ட்பிராண்ட் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடந்த படத்தின் முன்னோட்ட பகுதி மெக்சிகோ டுரோங்காவில் படமாக்கப்பட்டது. படத்தின் காட்சிகள் வெளியாகி பிரமிக்க வைத்தன.
- தி பென்டாஸ்டிக் 4: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
- பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ஜோசப் குவின், எபோன் மோஸ்-பச்ராச் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹாலிவுட் சூப்பர்ஹீரோ பாணி திரைப்படங்களில் கோலோச்சி வருவது மார்வெல் மற்றும் டிசி. இதில் மார்வெல் யுனிவர்ஸ்க்கு ரசிகர்கள் அதிகம்.
தீவிர மார்வெல் ரசிகர்களுக்கு அவெஞ்சர்ஸ் சீரிஸ்க்கு முன்னோடியாக 2005 இல் வெளியான 'பென்டாஸ்டிக் 4' படம் நினைவிருக்கும். இந்த பென்டாஸ்டிக் 4 சீரிஸில் தற்போது புதிய உருவாகி உள்ளது.
மார்வெல் ஸ்டுடியோஸ் பேனரில் மேட் ஷாக்மேன் இயக்கியுள்ள இப்படத்துக்கு 'தி பென்டாஸ்டிக் 4: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ஜோசப் குவின், எபோன் மோஸ்-பச்ராச் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
- சீனாவின் தேசிய திரைப்பட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- இதனால் சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு இருந்த சந்தை வெகுவாக பாதிக்கப்படும்
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா எதிர் வரி விதித்தது. இதனால் அமெரிக்கா வரியை 145 சதவீதமாக கூட்டியது. மாறி மாறி வரிகளை விதித்து வருவதால் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் வலுத்துள்ளது.
மற்ற நாடுகளிடம் அமெரிக்காவின் வல்லாண்மைக்கு எதிராக ஒன்று சேர சீனா அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே உலகம் முழுவதும் மார்க்கெட் கொண்ட அமெரிக்காவில் தயாராகும் ஹாலிவுட் படங்கள் ரிலீசுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனாவின் தேசிய திரைப்பட நிர்வாகம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹாலிவுட் திரைப்படங்களின் வெளியீட்டை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.
அதன் அறிவிப்பில், "சீனா மீதான வரிகளை துஷ்பிரயோகம் செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் தவறான நடவடிக்கை, அமெரிக்க திரைப்படங்கள் மீதான உள்நாட்டு பார்வையாளர்களின் ஆதரவு குறைய வழிவகுக்கும்.
நாங்கள் சந்தை விதிகளைப் பின்பற்றுவோம், பார்வையாளர்களின் விருப்பத்தை மதிப்போம். ஆனால் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க படங்களின் எண்ணிக்கையை மிதமாகக் குறைப்போம்" என்று கூறியது. இதனால் சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு இருந்த சந்தை வெகுவாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது.
- சீனா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக அறிவித்தது.
வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.
இந்நிலையில், டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.






