The Odyssey
The Odyssey

எப்படி இருக்கிறது 'தி ஒடிஸி..' மகாகாவியத்திற்கு நியாயம் செய்தாரா நோலன்? - திரைவிமர்சனம்

முடிவுகள், அதன் விளைவுகள், தர்க்கம், வலி, துரோகம், குற்றவுணர்வு, மனவலிமை, மனமுடைவு என 'படம் பேசுகிறது'.
Published on
தி ஒடிஸி - திரைவிமர்சனம்(3.5 / 5)

கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் மகாகவி ஹோமரால் எழுதப்பட்ட மாகாவியம் 'ஒடிஸி'. டிரோஜன் போரில் வென்று டிராய் நகரை கைப்பற்றிய பின்னர் கிரேக்க பேரரசன் ஒடிசியஸ், தனது நாடான இத்தாக்காவுக்கு திரும்பும் பயணத்தை பேசுவதே இக்காவியம். 24 புத்தகங்களாக மொத்தம் 600 பக்கங்களை கொண்டது இது.

டிரோஜன் போரில் வென்ற பின்னர் ஒடிசியஸ் அவன் செல்லும் வழியில் சந்தித்த ஆபத்துகளை கடந்து அவனுக்காக காத்திருக்கும் மனைவி பெனிலோப், மகன் டெலிமாச்சோஸ் இடம் எப்படி சென்றடைந்தான் என்பதுவே இதன் கதைக் கரு. போரின் கோரங்கள் துரத்த, வழியில் அவன் சந்திக்கும் அசாதரண தடைகளே கதையின் அச்சாணி.

நோலனின் மேதைமை

ஒடிஸி கதையை தழுவி இதன் முன்னரும் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் இப்படி ஒரு உயிர்ப்பான கதையுடன் கிறிஸ்டோபர் நோலனின் திரை மேதைமை இணைந்தால் எப்படி இருக்கும்?.. அதுவே 'தி ஒடிஸி' திரைப்படம்.

இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டெனெட் உள்ளிட்ட சைன்ஸ் பிக்ஷன் படங்கள் மூலம் அதிகம் அறியப்படும் கிறிஸ்டோபன் நோலனுக்கு புராண கதைக்களம் புதிது. ஆனால் போர்ப் பின்னணி புதிதல்ல.

இரண்டாம் உலகப்போரை 'டன்கிரிக்' படம் மூலம் கண்முன் காட்டிய நோலன், 'ஓபன்ஹைமர்' மூலம் வெடிகுண்டு கண்டிடுபிடித்த ஓபன்ஹைமரின் மனசாட்சியத்தை முன்வைத்து போரின் கொடூரங்களை பேசியிருந்தார்.

அந்த வகையில் போர் பின்னணியில் நோலன் எடுக்கும் மூன்றாம் படம் 'தி ஒடிசியஸ்'. எனவே இதை கிறிஸ்டோபர் நோலனின் 'வார் ட்ரையாலஜி' எனலாம்.

கதை - நடிப்பு

கதையின் நாயகன் ஒடிசியஸ் ஆக நடிகர் மேட் டாமன் மிரட்டியுள்ளார். அவரின் வழி, போர், போரின் கொடூரங்களால் உண்டான குற்றவுணர்வு, வீடு திரும்பதுலக்கான பேரவா, வழியில் எதிர்ப்படும் சாகசங்கள் என கதையை நகர்த்துகிறார் நோலன்.

பல உயிர்களை பலி கொண்டு போரில் பெறும் வெற்றியை வீரம் எனக் கூறும் வரையறை கேள்விக்கு உள்ளாகிறது.

படத்தில் கையாளப்பட்டுள்ள களம், டிரோஜன் போருக்கு பின் ஒடிஸியஸ் மேற்கொள்ளும் பயணத்துடன் விரிய, அவன் வென்று வந்த போரின் வலிகள் அவனை அழுத்துகிறது. இதை தன் அழுத்தமான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் மேட் டாமன். மறுப்புரம் குடும்பத்திடம் சென்றடையும் குறிக்கோள் ஒடிசியஸை முன்னேறிச் செல்ல வைக்கிறது.

மனைவி பெனிலோப் உடன் ஒடிசியஸ்க்கு இருக்கும் உறவுப் பிணைப்பு படத்தில் பேசப்பட்டுள்ளது. பெனிலோப் ஆக திரையில் தோன்றும் நடிகை அன்னா ஹாத்வே அந்த பிணைப்பை நம்பும்படியாக கடத்தும் பணியை திறம்பட செய்திருக்கிறார். படத்தில் வரும் மற்றொரு பாசப் பிணைப்பு பெனிலோப் தனது மகன் டெலிமாச்சோஸ் உடன் கொண்டது. டெலிமாச்சோஸ் ஆக வரும் டாம் ஹாலண்ட், ஒரு பேரரசனின் மகனாக, தந்தையின் வருகைக்கு காத்திப்பதன் அலைபாய்வை தேர்ந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆன்டினஸ் இக்கதையின் வில்லன் என ஒரு வகையில் கூறலாம். ஒடிஸியஸ் வருவதற்கு முன், அவன் மகன் டெலிமாச்சோஸை கொன்றுவிட்டு, மனைவி பெனிலோபை தன்வசப்படுத்தி இத்தக்காவை கைப்பற்ற நினைக்கும் கேரக்ட்டர். இதில் நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சனும் வழக்கம்போல தன் கதாபாத்திரத்தோடு ஒன்றும்படிக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்கம்

பிரமாண்டத்திற்கு பெயர் போனவர் என்பதை நோலன் மீளுமொருமுறை நிரூபித்துள்ளார்.

ஒடிஸியஸின் பயணத்தை அதலபாதாளம் முதல் நெடிதுயர்ந்த மலைகள் வரை, குகைகள், கடல்கள், சுழல்கள் என ஒடிஸியஸின் சாகச பயணத்தை செதுக்கியிருக்கிறார் நோலன்.

மறுபுறம் இந்த பிரமாண்ட வெளிகளுக்கு நேரெதிராக குறுகிய அறைகள், மாளிகையின் இருள் மூலைகள் என பெனிலோப், டெலிமாச்சோஸ், ஆன்டினஸ் போர்ஷனை பண்ணியிருக்கிறார். இந்த மாறுபட்ட புறச்சூழல்களை அவரவர் பாத்திரங்களின் மனோவிகற்பங்களை வெளிப்படுத்தும் கருவியாக கையாண்டிருக்கிறார் அவர்.

நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஒரு கதையில் எதை பிரதானப்படுத்த வேண்டும், எந்த உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்த வேண்டும் என்ற நோலனின் தெளிவு படம் முழுக்க வெளிப்பட்டு உள்ளது. உறவுச் சிக்கல், எடுக்கப்படும் முடிவுகள், அதன் விளைவுகள், தர்க்கம், வலி, துரோகம், குற்றவுணர்வு, மனவலிமை, மனமுடைவு என 'படம் பேசுகிறது'.

ஒளிப்பதிவு - படத்தொகுப்பு

நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஹொயிட் வேன் ஹொய்டெமா ஐந்தாவது முறையாக அவருடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

ஒரு மகா காவியத்தை எப்படி காட்சி அமைப்புகளில் கொண்டு வர வேண்டும் என்பதில் ஹொய்டெமாவும் நோலனும் பெருமதியான அக்கறை எடுத்துக்கொண்டதை படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் உணர முடியும்.

முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராக்களால் எடுக்கப்பட்ட காட்சிகளை நேர்த்தியாக எடிட் செய்து படத்தின் சமநிலைக்கு படத்தொகுப்பாளர் ஜெனிபர் லேம் நியாயம் செய்திருக்கிறார்.

நவீன உலகின் மனிதர்கள் என்ற பிரஞயை உடைத்து ஒரு தொன்ம வாழ்வியலுக்கு படம் நம்மை இட்டுச் செல்கிறது என்றே சொல்லலாம்.

இசை

இசையமைப்பாளர் லூட்விக் கோரன்சன் படத்தின் பிரமாண்டத்திற்கும், உணர்வுக்கும் கடத்தியதாக தனது பின்னணி இசையை கோர்த்துள்ளார். எங்கு இசையும், எங்கு அமைதியும் வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com