மும்பையில் 'தி ஒடிசி' பட விழா: இந்திய சினிமா ரசிகர்களுக்கு இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் புகழாரம்!

"இந்தத் திரைப்படத்தை தியேட்டர்களில், குறிப்பாக IMAX-ல் பார்க்கும்போது தான் அதன் முழு அனுபவமும் கிடைக்கும்."
The Odyssey Film
Published on

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன், தனது வரவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 'தி ஒடிசி' படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்தியா வந்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் சிறப்புத் திரையிடலில், அவரோடு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மேட் டாமன்', மார்வெல் ஸ்பைடர்மேன் புகழ் 'டாம் ஹாலண்ட்' மற்றும் தயாரிப்பாளரும் நோலனின் மனைவியுமான எம்மா தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திரையிடலுக்குப் பிறகு ரசிகர்களுடன் கலந்துரையாடிய நோலன், திடீரென ரசிகர்களை நோக்கி, "யார் சிறந்த நடிகர், மேட்டா அல்லது டாமா?" என்று நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டு அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் கூச்சலிட்டனர், இதனால் இரு நடிகர்களும் சற்று வெட்கமடைந்தனர்.

'தி ஒடிசி' திரைப்படம் இந்தியாவில் வரும் 17ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, போருக்குப் பிறகு தன் தாயகம் திரும்பப் போராடும் போர்வீரன் 'ஒடிசியஸ்' எதிர்கொள்ளும் சவால்களே படத்தின் கதை.

மேட் டாமன், டாம் ஹாலண்ட் உடன் சேர்ந்து ஆன் ஹாத்வே, ஜெண்டயா, ராபர்ட் பாட்டின்சன் போன்ற முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய ரசிகர்கள் குறித்து கிறிஸ்டோபர் நோலன் கூறுகையில், "நான் ஏற்கனவே இந்தியாவில் 'தி டார்க் நைட் ரைசஸ்' மற்றும் 'டெனெட்' ஆகிய படங்களின் படப்பிடிப்பை நடத்தியுள்ளேன்.

ஆனால், எனது ஒரு படத்தை இங்கு வந்து முறைப்படி வெளியிடுவது இதுவே முதல் முறை. உலகிலேயே இந்திய சினிமா ரசிகர்கள் தான் மிகவும் துடிப்பான மற்றும் சினிமா அறிவு மிக்கவர்கள்." என கூறினார்.

இவரைதொடர்ந்து பேசிய மேட் டாமன், "நாங்கள் ஏற்கனவே நெருங்கிய நண்பர்களுக்காக ஒரு பிரீமியர் நடத்தினோம். ஆனால், பொதுமக்களுடன் அமர்ந்து படத்தை ரசிப்பது இதுவே முதல் முறை.

படம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது எங்களுக்குப் பெரிய விஷயம். இந்தத் திரைப்படத்தை தியேட்டர்களில், குறிப்பாக IMAX-ல் பார்க்கும்போது தான் அதன் முழு அனுபவமும் கிடைக்கும்."

இவர்களை தொடர்ந்து, டாம் ஹாலண்ட் மைக் பிடித்ததும் அரங்கில் இருந்தவர்கள் "ஸ்பைடி, ஸ்பைடி!" என கத்தத் தொடங்கினர். அதற்கு அவர், "இந்திய ரசிகர்கள் தரும் எனர்ஜியைப் போல உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. உங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com