என் மலர்
உலகம்

பாலியல் சாம்ராஜ்யம்: வெளியான சில மணி நேரத்தில் Epstein files-இல் டிரம்ப் தொடர்புடைய 16 கோப்புகள் மாயம்
- வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.
- அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, அதில் இருந்த 16 முக்கியமான கோப்புகள் மாயமாகியுள்ளன.
இதில் டொனால்ட் டிரம்ப் தொடர்பான புகைப்படங்களும் அடங்கும் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன. இதில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஆனால், சனிக்கிழமை காலையில் பார்த்தபோது, அதில் குறைந்தது புகைப்படங்கள் உள்ளிட்ட 16 கோப்புகள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மாயமான கோப்புகளில் ஒன்று, ஜெப்ரி எப்ஸ்டீன், டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமாகும்
நிர்வாணப் பெண்களின் படங்கள் மற்றும் எப்ஸ்டீனின் இடத்தில் எடுக்கப்பட்ட சில ரகசிய புகைப்படங்களும் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோப்புகள் எதற்காக நீக்கப்பட்டன அல்லது தவறுதலாக நீக்கப்பட்டனவா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
இன்னும் என்னவெல்லாம் மறைக்கப்படுகின்றன? அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
இதையும் படியுங்கள்: கம்போடியா உடனான மோதல் எதிரொலி: 1,000 பள்ளிகளை மூடியது தாய்லாந்து
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
'எப்ஸ்டீன் கோப்புகள்'
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.






