என் மலர்
உலகம்
- ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர்.
- கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இங்கிலாந்தில் டான்காஸ் டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் பகுதிக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ஹண்டிங்டன் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். சிலர் கழிவறைக்குள் சென்று பதுங்கி கொண்டனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் பயத்துடன் அவசர அவசரமாக வெளியேறினார்கள்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து இருந்தார் என்றும் எங்கே பார்த்தாலும் ரத்தம் இருந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.
கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார். "ஹண்டிங்டன் அருகே ரெயிலில் நடந்த தாக்குதல் சம்பவம் பயங்கரமானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.
அவசர நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போலீசாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.
- வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
- தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.
மலேசியாவில் தனது 2 வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு பெண்களும் 2020 ஆம் ஆண்டு முதல் வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கடந்த மாதம் தங்களது தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை மற்றும் 18 பிரம்படி தண்டனைகள் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது
- 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றி எலான் மஸ்க் பேசி வருகிறார்
- பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.
எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
இந்நிலையில், 2025ம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த டெமோ நிகழ்ச்சி வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றி எலான் மஸ்க் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்படியே தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும்.
- 1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1 முதல் மூடப்பட்டது.
அக்டோபர் மாத இறுதி வரை அரசாங்க நிதியுதவி மற்றும் ஆண்டு இறுதியில் காலாவதியாகவுள்ள மத்திய சுகாதார மானியங்களை நீட்டிப்பது உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட மசோதாவைத் தடுக்க குடியரசுக் கட்சியினர் வாக்களித்தனர். இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 31 நாட்களாக தீர்வு எட்டப்படாமல் பணி நிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இந்த பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் இதை மதிப்பிட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 62,149 கோடிக்கும் அதிகமாகும்.
பணிநிறுத்தம் இப்படியே தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என பட்ஜெட் அலுவலகம் எச்சரித்துள்ளது.
1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம்(CBO) என்பது அமெரிக்க காங்கிரஸ்(பாராளுமன்றத்துக்கு) பட்ஜெட் மற்றும் பொருளாதாரம் தொடர்பான மதிப்பீடுகளை வழங்கும் கட்சி சார்பற்ற சுயாதீனமான கூட்டாட்சி நிறுவனம் ஆகும்.
- வெள்ளிக்கிழமை 3 உடல்களை ஹமாஸ் அமைப்பினர் அனுப்பி வைத்துள்ளனர்.
- அவைகள் பிணைக்கைதிகளின் உடல்கள் அல்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். அப்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் எடுத்துச் சென்றது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலில் 1200 பேர் உயிரிழந்த நிலையில், காசாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் உயிரோடு உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும். பிணைக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும். அதற்கு இணையாக இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். உயிரிழந்த பாலஸ்தீனர்களை ஒப்படைக்க வேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை 30 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் காசாவுக்கு அனுப்பி வைத்தது. அத்துடன் பிணைக்கைதிகள் விடுவிப்பு- பாலஸ்தீன கைதிகள் விடுதலை ஒப்பந்தம் நிறைவுக்கு வந்தது. ஆனால் ஹமாஸ் இன்னும் அனைத்து உடல்களையும் ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது.
இதனால் மேற்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவது குறித்து பதற்றமான நிலைதான் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு மூன்று உடல்களை இஸ்ரேலுக்கு காசா அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் உடல்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த உடல்கள் 2023, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டபோது இறந்தவர்களின் உடல்கள் அல்ல என இஸ்ரேல் புலனாய்வுத்துறை கூறியதாக, ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெயர் தெரிவிக்க விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகமும், மூன்று உடல்களும் எந்தவொரு பிணைக்கைதிகள் உடையது அல்ல. ஆனால், விரிவான அறிக்கை ஏதும் கொடுக்கப்படவில்லை.
அதேவேளையில் ஹமாஸ் ஆயுதப்படை பிரிவு "நாங்கள் உடல்களின் மாதிரிகளை ஒப்படைக்க முன்வந்ததாகவும், ஆனால் இஸ்ரேல் அதை மறுத்துவிட்டு, பரிசோதனைக்காக உடல்களை கேட்டதாகவும். இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை நிறுத்துவதற்கான உடல்களை ஒப்படைத்தோம்" என தெரிவித்துள்ளது. அந்த உடல்கள் யாருடைய உடல்கள் எனத் தெரியவில்லை.
ஒப்பந்தத்தின்படி 11 உடல்களை இஸ்ரேல் பெற்றுள்ளது. ஆனால் 17 உடல்களை ஒப்படைப்பதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. ஒருசில நாட்கள் இடைவெளி விட்டுவிட்டு ஒன்று அல்லது இரண்டு உடல்களை என ஹமாஸ் உடல்களை ஒப்படைத்து வருகிறது.
இஸ்ரேல் 225 உடல்களை ஒப்படைத்துள்ளது. இதில் 75 உடல்கள் மட்டுமே உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
- அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்தது.
- 2022ல் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்தியாவின் ஒரே தனித்துவமான வெளிநாட்டு விமான தளமாக விளங்கிய தஜிகிஸ்தானில் உள்ள அயினி விமான தளத்தை விட்டு இந்திய ராணுவம் வெளியேறியது.
மத்திய ஆசியாவின் மூலோபாய மூக்கியத்துவம் வாய்ந்த பகுதியான அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்த நிலையில், 2022ல் ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா மற்றும் ரஷ்யாவின் அழுத்தம் காரணமாக இந்தியா உடனான இருதரப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தஜிகிஸ்தானின் இந்த முடிவு புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
- எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து கடந்த வாரம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
- இதற்கு பதிலடியாக 400 கி.மீ. நீளம் கொண்ட பைப்லைன் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள, முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தொடர்ந்து எரிபொருள் கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது.
மாஸ்கோ மற்றும் நிஸ்னி நோவ்கொரோடுவில் உள்ள ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 400 கி.மீ. நீளம் கொண்ட கோல்ட்செவோய் பைப்லைன்கள் மூலம் விமான எரிபொருள், டீசல், பெட்ரோல் ஆகியவை ரஷிய படைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த எரிபொருள் பைப்லைன்களை தாக்கி அழித்ததாக உக்ரைன தெரிவித்துள்ளது. இது ரஷியப் படைகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள எரிபொருள் கட்டமைப்புகள் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதற்கு பதிலடியாக உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுளுள்து.
ராமென்ஸ்கி மாவட்டம் அருகே உள்ள கட்டமைப்பை இலக்காக நிர்ணயித்து மூன்று எரிபொருள் லைன்களையும் தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது. இந்த எரிபொருள் பைப் லைன்கள் 3 மில்லியன் டன் வரை விமான எரிபொருள், 2.8 மில்லியன் டன் வரை டீசல், 1.6 மில்லியன் டன் வரை பெட்ரோல் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
இன்று காலை ரஷியா, தென் உக்ரைன் பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். மத்திய போல்டாவா பிராந்தியில் உள்ள கியாஸ் நிலையம் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
- உலகின் மிகப்பெரிய தொல்பொருளியல் அருங்காட்சியகமாக இது விளங்குகிறது.
- 5,000 ஆண்டுகால வரலாற்று நாகரிகத்தை 12 காலரிகள் சித்தரிக்கின்றன.
கெய்ரோ:
எகிப்தில் உலகின் மிகப்பெரிய மியூசியம் இன்று திறக்கப்பட்டுள்ளது. ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெரிய பிரமிட் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நவீன காலத்தின் எத்தகைய கலாசார அடையாளங்களை அருங்காட்சியகம் கொண்டுள்ளது என்பதை மக்கள் அறிந்துகொள்வதே இதன் நோக்கம்.
உலகின் மிகப்பெரிய தொல்பொருளியல் அருங்காட்சியகமாக இது விளங்குகிறது. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கலைப் பொருட்கள் உள்ளது.
அருங்காட்சியகத்தில் உள்ள மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது எகிப்திய மன்னர் டுட்டன்காமுனின் கல்லறை. இந்தக் கல்லறை முதல் தடவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மியூசியம் அக்டோபர் 2024-ல் பொதுமக்களுக்கு ஓரளவு திறக்கப்பட்டது.
பிரமாண்ட சிலைகள், பழங்கால கல்லறைகளுடன் வரிசையாக அமைந்துள்ள 6 மாடி படிக்கட்டைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது. இது அருகிலுள்ள பிரமிடுகளின் காட்சியுடன் கூடிய பரந்த சாளரத்திற்கு வழிவகுக்கிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் ரோமானிய சகாப்தம் வரையிலான 5,000 ஆண்டுகால வரலாற்று நாகரிகத்தை 12 காலரிகள் சித்தரிக்கின்றன.
ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகங்கள் மற்றும் மறுசீரமைப்பு பட்டறைகளுக்கு திறந்திருக்கும் சேமிப்பு பகுதிகளும் இந்த வளாகத்தில் அடங்கும்.
நவம்பர் 4-ம் தேதி முதல் பொதுமக்கள் இந்த மியூசியத்தை பார்வையிடலாம்.
- பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள எதிர் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது
- தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தேர்தல் சீர்திருத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள சடேமா கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த விவகாரம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசனின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மீண்டும் வெற்றி பெற்று சாமியா சுலுஹு ஹாசன் மீண்டும் அதிபராக தேர்வானார்.
அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாக முக்கிய எதிர்க்கட்சியான சடேமா குற்றம் சாட்டியது. இதையடுத்து அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையால் தான்சானியா நாட்டில் இணையத்தை முடக்கிய ஆளும் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
- விர்ஜீனியா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
- ஆண்ட்ரூ தன்னை பலமுறை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது இளைய சகோதரர் ஆண்ட்ரூ உடைய இளவரசர் பட்டத்தைப் பறித்து, அவரை கோட்டையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.
லண்டன் மேற்கில் உள்ள விண்ட்ஸர் கோட்டையில் ஆண்ட்ரூ அவர் வசித்து வரும் மாளிகையை காலி செய்ய மன்னர் உத்தரவித்தகக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மரபுப்படி அவரின் இளவரசர் பட்டத்தை பறிப்பதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
பாலியல் வலையமைப்பை உருவாக்கி சிறுமிகளை கடத்தி பெரும் புள்ளிகளுக்கு அனுப்பி வைத்த அமெரிக்க பெரும்புள்ளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் ஆண்ட்ரூவுக்கு இருந்த தொடர்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.
இளமைப் பருவத்தில் இளவரசர் ஆண்ட்ரூவால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அமெரிக்க-ஆஸ்திரேலிய வழக்கறிஞர் விர்ஜீனியா கியுஃப்ரேவின் குற்றச்சாட்டுக்கு மூலம் எப்ஸ்டீன் உடனான ஆண்ட்ரூவின் தொடர்வு அம்பலமானது.
விர்ஜீனியா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்துகொண்ட பிறகு வெளியான அவரது Nobody's Girl என்ற நினைவுக் குறிப்பில், ஆண்ட்ரூ தன்னை பலமுறை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த களங்கத்தின் காரணமாகவே மன்னர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது நீண்ட மாதங்களாக நடந்த விசாரணைக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், ஆண்ட்ரூ உடைய "டியூக் ஆஃப் யார்க்" பட்டத்தை தானாக முன்வந்து ஆண்ட்ரூ துறந்தார். தற்போது, அவரது மற்ற பட்டங்களையும் சார்லஸ் மன்னர் பறித்துள்ளார்.
தற்போது கோட்டையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள மற்றொரு இடத்தில் வசிக்க உள்ளதாக என்று கூறப்படுகிறது.
யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-பும் முந்தைய காலங்களில் எப்ஸ்டீன் உடன் நெருக்கமாக இருந்ததும் தற்போது சர்ச்சையாவது குறிப்பிடத்தக்கது.
- ஹைட்டியில் நதியின் கரைகள் நிரம்பி வழிந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் 120க்கும் மேற்பட்ட தங்குமிடங்களுக்கு இடம்பெயந்தனர்.
- புயல் தற்போது பெர்முடா நோக்கி நகர்ந்து வருகிறது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகள் கரீபியன் தீவுநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இதில் கியூபா, ஹைதி, ஜமைக்கா, டொமினிக்கன் குடியரசு உள்பட 13 நாடுகள் உள்ளன.
இந்நிலையில் கரீபியன் தீவுகளைத் தாக்கிய சக்திவாய்ந்த மெலிசா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் மெலிசா புயல் ஹைட்டி மற்றும் ஜமைக்காவைத் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஹைட்டியில் குறைந்தது 30 பேரும், ஜமைக்காவில் குறைந்தது 19 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி சென்று சேர்ந்ததில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகளில் பல நாட்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். உணவுப் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஹைட்டியில் நதியின் கரைகள் நிரம்பி வழிந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் 120க்கும் மேற்பட்ட தங்குமிடங்களுக்கு இடம்பெயந்தனர்.

ஜமைக்காவின் சில கிராமங்களில் அனைத்து கட்டிடங்களும் சூறாவளியால் அழிக்கப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
புயலால் 52 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கியூபாவிலும் புயல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. மெலிசா புயல் தற்போது பெர்முடா நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.
- இதனால் நியூயார்க் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தன. சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. இதனால் நியூயார்க்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளம் சூழ்ந்து சேதத்தை சந்தித்தன. பேருந்து படிக்கட்டு வாயிலாக உள்ளே தண்ணீர் புகுந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






