என் மலர்
உலகம்
- இஸ்ரேல் காசா போர் கடந்த 21 மாதமாக நடந்து வருகிறது.
- இந்தப் போரில் காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
காசா முனை:
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. கடந்த 21 மாதமாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்துக்குகும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் தண்ணீர் பிடிக்கச் சென்றவர்கள் என்ற தகவல் வெளியாகியது.
இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியதும் அவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். எனினும், பலர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு, அப்படியே தரையில் சாய்ந்தனர். போர் நிறுத்தம் பற்றி விவாதித்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
- நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
அந்தமான் கடல் பகுதியில் இன்று 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று மாலை சுமார் 6.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 9.47 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.39 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
- இஸ்லாமாபாத்தில் மாணவர்களிடம் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
- இந்தியாவுடனான பதட்டங்களின் போது 55 பொதுமக்கள் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்காக நாடு அதன் அணுசக்தி திறனை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
இஸ்லாமாபாத்தில் மாணவர்களிடம் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இந்தியாவுடனான சமீபத்திய பதட்டங்கள் அணுசக்தி மோதலுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகளை ஷெரீப் நிராகரித்தார்.
மேலும் இந்தியாவுடனான பதட்டங்களின் போது 55 பொதுமக்கள் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
- கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார்
- பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.
பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க கொலம்பியா பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கொலம்பிய பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதனால் அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்காக அரசு நிர்வாகத்தால் வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் கொலம்பியா பல்கலைக்கழகம், டிரம்ப் நிர்வாகத்தின் சில உத்தரவுகளை ஏற்றது. அதன்படி பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.
இந்த நிலையில் ஆராய்ச்சி நிதியை திரும்ப பெற டிரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்த கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடாக டிரம்ப் அரசுக்கு ரூ.1,700 கோடியை செலுத்த பல்கலைக் கழகம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்திற்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அடுத்த வாரம் அதிபர் டிரம்ப்பை சந்தித்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் டிரம்பின் மிரட்டலுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் அடிபணிந்து உள்ளது.
- குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோவாகின் கவுண்டி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தில்ப்ரீத் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், விஷால், பவிட்டர் சிங், குர்தாஜ் சிங், மன்ப்ரீத் ரந்தாவா,சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இக்கும்பல் சித்ரவதை, சதித்திட்டம், சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பவிட்டர் சிங் படாலா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாககூறப்படும் குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு முகமை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் 27 பேரின் யூ டியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
- வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சமீப காலமாக அரசாங்கத்தின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை பதிவிட்டனர்.
இதனால் அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. எனவே அந்த சேனல்களை தடைசெய்ய வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பத்திரிகையாளர்கள் உள்பட 27 பேரின் யூ டியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனை மீறி அரசினை விமர்சித்தால் அந்த யூடியூப் சேனல்கள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
யூ டியூப் சேனல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையால் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இதனை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் யூடியூப் சேனல் முடக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார்.
- இதற்காக பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
டெஹ்ரான்:
ஈரானைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர் நர்கெஸ் முகமதி.
இவர் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதற்காக பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் பெண்களுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருவதால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டது.
ஏமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டுவீச்சில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாக மனித உரிமை அமைப்புகளும், நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவித்துள்ளனர்.
ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏமன் மனித உரிமைகள் குழு, இந்த சம்பவத்தைக் கண்டித்து, குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இறந்த சிறுவர்களில் இருவர் 12 வயதினர், மற்ற இருவர் 14 வயதினர் என்றும், ஐந்தாவது குழந்தையின் வயது தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும் மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் பிற போராளிகளுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரின் முக்கிய களமாக தைஸ் நகரம் இருந்து வருகிறது.
ஏமனில் உள்நாட்டுப் போர் 2014 இல் தொடங்கியது. அப்போது ஹவுதிகள் தலைநகர் சனாவையும் வடக்கு யேமனின் பெரும்பகுதியையும் கைப்பற்றினர்.
- பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் இரண்டு நாடுகள் சீனாவும் ஈரானும் ஆகும்.
ஈரானில் புக்கானைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியிருந்தது.
இந்நிலையில் கொலைக் குற்றவாளிக்கு ஈரானிய அதிகாரிகள் பொதுவில் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொதுவில் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
வழக்கின் மிகவும் தீவிரத் தன்மை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை பொதுவாக விதிக்கப்படுகிறது.
மனித உரிமை குழுக்களின் தரவுகளின்படி, உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் இரண்டு நாடுகள் சீனாவும் ஈரானும் ஆகும்.
- ஐரோப்பிய யூனியன் வரி கொள்கைகளால் அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- டிரம்ப் தற்போது 24 நாடுகள் மற்றும் 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கு புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார்
ஐரோப்பிய யூனியன் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% புதிய வரியை ஆகஸ்ட் 1 முதல் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மெக்சிகோவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மெக்சிகோ தென் அமெரிக்காவின் போதைப்பொருள் மைதானமாக மாறி வருவதாக டிரம்ப் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐரோப்பிய யூனியன் வரி கொள்கைகளால் அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வர்த்தக நடவடிக்கைகள், அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது 2024 தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புடன் சேர்த்து, டிரம்ப் தற்போது 24 நாடுகள் மற்றும் 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கு புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தங்கள் தாய்மொழியான திபெத்திய மொழியைப் பேச தடை விதிக்கப்பட்டு, சீன மொழியில் கற்பிக்கப்படுகிறார்கள்.
- திபெத்திய கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு "மாணவர் காலனித்துவம்" என்று TAI அறிக்கை தெரிவித்துள்ளது.
சீன ஆக்கிரமிப்பு திபெத்தில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் சீன அரசு நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று திபெத்தியன் ஆக்ஷன் இன்ஸ்டிட்யூட் (TAI) அறிக்கை வெளியிட்டுள்ளது.
திபெத்தின் கிராமப்புறங்களில் இருந்து குறைந்தது ஒரு லட்சம் 4-6 வயதுடைய பாலர் பள்ளி குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு சீன நிர்வாகத்தால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, 6-18 வயதுடைய சுமார் 9 லட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் துறவிகள் கூட இந்தக் கட்டாயப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த பள்ளிகளில் குழந்தைகள் தங்கள் தாய்மொழியான திபெத்திய மொழியைப் பேச தடை விதிக்கப்பட்டு, சீன மொழியில் கற்பிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் சீன மொழியைக் கற்கவும் பேசவும் கட்டாயப்படுத்தப்படுவதோடு, அரசு அங்கீகரிக்கப்பட்ட வரலாறு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இது திபெத்திய கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு "மாணவர் காலனித்துவம்" என்று TAI அறிக்கை தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து போதனைகள் வழங்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
ஜூன் 18, 2024 அன்று ஜினிங்கில் உள்ள திபெத்திய நடுநிலைப் பள்ளியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்
குழந்தைகள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும், சித்தாந்தக் கல்வி புகுத்தப்படுவதாகவும், அடையாள அழிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த வாக்குமூலங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் சீன அரசின் தலையீடும், திபெத்திய மக்களின் தனித்துவத்தை அழிக்கும் இந்த அடையாள அழிப்பு கொள்கைகளும் திபெத்தின் அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று TAI தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
திபெத்தின் 4,700 ஆண்டுகால கலாச்சாரத்தை அழிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் மேற்கொண்ட ஒரு திட்டமிட்ட உத்தி இது என அறிக்கையை தயாரிப்பதில் களப்பணி ஆற்றிய திபெத்திய சமூகவியலாளர் டாக்டர். கியால் லோ தெரிவித்துள்ளார்.
- 1971 ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன் பாகிஸ்தான் எஃகு ஆலை முதலில் கட்டப்பட்டது.
- 2008ஆம் ஆண்டு இந்த ஆலை சரிவை சந்தித்தது.
பாகிஸ்தான் எஃகு ஆலையை மீண்டும் தொடங்கவும், நவீனப்படுத்தவும் பாகிஸ்தான்- ரஷியா இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சோவியத் யூனியன் உதவியுடன கட்டப்பட்ட பாகிஸ்தான் எஃகு ஆலை ஒப்பந்தத்திற்காக சீனாவும் போட்டியிட்டது. ஆனால் மாஸ்கோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான்- ரஷியா இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தத் திட்டம் எஃகு உற்பத்தியை மீண்டும் தொடங்கி விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும், இது இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.
1971 ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன் பாகிஸ்தான் எஃகு ஆலை முதலில் கட்டப்பட்டது. பின்னர் 2008ஆம் ஆண்டு இந்த ஆலை சரிவை சந்தித்தது.






