என் மலர்tooltip icon

    உலகம்

    • வடக்கு ஈராக்கில் அடையாள விழா நடைபெற்றது.
    • 75 வயதான ஓகலன், 1999 முதல் துருக்கிய சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.

    இதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) வடக்கு ஈராக்கில் ஒரு அடையாள விழா நடைபெற்றது. அதில் போராளிகள் தங்கள் ஆயுந்தங்களை மொத்தமாக போட்டு எரித்தனர். 

    கடந்த பிப்ரவரியில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) நிறுவனத் தலைவர் அப்துல்லா ஓகலன், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைப்பைக் கலைக்க சிறையில் இருந்தபடி அழைப்பு விடுத்தார்.

    Abdullah ocalan

     75 வயதான ஓகலன், 1999 முதல் துருக்கிய சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவரது விடுதலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடத்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் நாற்பதாயிரம் மக்கள் உயிரிழந்த துருக்கிய-குர்திஷ் மோதல் இந்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

    • விமானத்திற்கு எரிபொருளை வழங்கிய இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டன.
    • விமானத்தின் காக்பிட்டில் இருந்து குரல் பதிவையும் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது.

    270 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த 15 பக்க அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.

    விபத்து நடந்த இடத்தின் ட்ரோன் புகைப்படம் மற்றும் வீடியோகிராஃபியை ஆய்வு செய்து விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் அதிகபட்ச வேகமான 180 நாட்களை எட்டியது. இதைத் தொடர்ந்து, விமானத்திற்கு எரிபொருளை வழங்கிய இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டன.

    எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரன் நிலையில் இருந்து கட்-ஆஃப் நிலைக்கு மாற்றப்பட்டன. சிறிது நேரத்திலேயே சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டாலும் விமானம் மீண்டும் உந்துதலை அடையும் முன்பே விபத்துக்குள்ளானது.

    விமானத்தின் காக்பிட்டில் இருந்து குரல் பதிவையும் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது. எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்சை ஏன் அணைத்தீர்கள் என்று ஒரு விமானியிடம் கேட்டபோது, மற்ற விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளிப்பதை குரல் பதிவில் கேட்க முடிகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விமானி வேண்டும் என்றே ஸ்விட்சை அணைத்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இந்நிலையில் போயிங் 737 விமானங்களில் எஞ்சினுக்கு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்ச் குறித்து அமெரிக்க அரசின் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அமைப்பு 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட எச்சரிக்கை கவனம் பெற்று வருகிறது.

    டிசம்பர் 2018 வெளியிடப்பட்ட அந்த அறிக்கைப்படி, சில போயிங் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் ஒரு தவறான பூட்டுதல் அம்சம் இருக்கிறது. இது பாதுகாப்பற்றது என்று கூறப்பட்டது. அகமதாபாத்தில் விபத்தை ஏற்படுத்திய போயிங் 737-8 விமானத்திலும் இதே சுவிட்ச் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்ரேல் "மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை" மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
    • காசாவில் சுமார் 90,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.

    இஸ்ரேல் காசாவை குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாற்றுகிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் பிலிப் லசரினி தெரிவித்துள்ளார்.

    காசாவில், இஸ்ரேல் "மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை" மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    காசாவில் பசிக்கொடுமை எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது என்றும் கடந்த இரண்டு மாதங்களில் காசாவின் உணவு விநியோக மையங்களில் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதில் 615 பேர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் விநியோக மையத்தில் கொல்லப்பட்டனர். பசியை ஆயுதமாகப் பயன்படுத்தி இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. 

    ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின்படி, இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், காசாவில் சுமார் 90,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.

    இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது 28 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

    குறிப்பாக மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பலாவில் நேற்று இரவு தொடங்கி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் இரண்டு பெண்களும் அடங்குவர் என்று அல்-அக்ஸா மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 15 பேர் இறந்ததாக நாசர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 57,762 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 137,656 பேர் காயமடைந்துள்ளனர்.  

    • சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி சென்றனர்.
    • டிராகன் விண்கலம் 26-ந்தேதி மாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

    அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி சென்றனர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26-ந்தேதி மாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

    14 நாட்கள் பயணமாக சென்றுள்ள அவர்கள் விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். அத்துடன் தங்கள் கடைசி பணி ஓய்வுநாளையும் எடுத்துக்கொண்டனர். தற்போது பூமிக்கு திரும்புவது குறித்த நாசாவின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக ஆக்சியம் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.

    அதில் மேலும், 'பூமியில் இருந்து 250 மைல்களுக்கு மேலே இருந்தவாறு விண்வெளி வீரர்கள் 60-க்கு மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏராளமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து, தங்கள் அன்பார்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள்' என கூறப்பட்டு இருந்தது.

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்த நாட்களில் 230-க்கு மேற்பட்ட சூரிய உதயத்தை பார்த்துள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள், சுமார் 1 கோடி அதாவது 96.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்திருப்பதாகவும் ஆக்சியம் கூறியுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவின் ஆக்சியம் 4 டிராகன், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14 புறப்பட்டு, ஜூலை 15ஆம் தேதி கலிஃபோர்னியா கடற்கரையருகே தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோடை வெப்பத்தை சமாளிக்க உள்ளூர் மக்கள் வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
    • வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் கோடைக்காலம் தொடங்கி கடுமையான வெப்ப அலைவீ சுகிறது. இந்தநிலையில் அங்குள்ள காந்தகார் நகரில் கோடை வெப்பத்தை சமாளிக்க உள்ளூர் மக்கள் வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

    அதாவது வாடகை டாக்சிகளில் உள்ளூர்காரர்களால் உருவாக்கப்பட்ட ஏர்கூலர் எந்திரத்தை காரின் மேல் பொருத்தி வருகிறார்கள். ஏர் கூலர் எந்திரத்துடன் ராட்சத குழாய் ஒன்றை சொருகி கார் ஜன்னலோடு அதை இணைந்துள்ளனர். வாகனம் முன்னே செல்ல செல்ல, ஏர் கூலர் எந்திரத்தில் ஊற்றப்பட்டுள்ள தண்ணீர் காற்றுடன் இணைந்து ராட்சத குழாய் மூலமாக குளிர்ந்த காற்றாக ஜன்னல் வழியாக காருக்குள் வீசுவதுபோல் வடிவமைத்துள்ளனர்.

    இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்குள்ள டாக்சிக்காரர்கள் அனைவரும் இந்த முறையை செயல்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



    • கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு டிரம்ப் கடிதம் எழுதி உள்ளார்.
    • வரிவிதிப்பு, அமெரிக்கா-கனடா இடையிலான விரிசலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டிரம்ப், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார். பின்னர் அந்த வரிவிதிப்பை ஜூலை 9-ந் தேதிவரை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். அந்த காலக்கெடு முடிவடைய இருந்தபோது, காலக்கெடுவை ஆகஸ்டு 1-ந் தேதிவரை ஒத்திவைத்தார்.

    ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து, ஜப்பான், வங்காளதேசம், மலேசியா உள்பட 14 நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்று அந்த நாடுகளுக்கு டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    அந்த பட்டியலில் கனடா இடம் பெறவில்லை. இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு டிரம்ப் கடிதம் எழுதி உள்ளார். அதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கனடா பொருட்கள் மீதான வரி, 35 சதவீதமாக உயர்த்தப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    'பென்டானில்' என்ற வலி நிவாரண மருந்தின் கடத்தலை தடுக்க கனடாவை வலியுறுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே கனடாவுடனான சவால் அல்ல என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

    இந்த வரிவிதிப்பு, அமெரிக்கா-கனடா இடையிலான விரிசலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

    • மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருகிறது.
    • நாட்டின் பல பகுதிகளில் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு பிரிவினர் போராடி வருகின்றனர்.

    பாங்காக்:

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருகிறது.

    நாட்டின் பல பகுதிகளில் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இந்தக் குழுக்களை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

    இந்நிலையில், மியான்மரின் மத்திய பகுதியில் சகாயிங் பிராந்தியத்துக்கு உட்பட்ட லின்டாலு கிராமத்தில் உள்ள புத்த மடாலயம் ஒன்றில் நேற்று திடீரென ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதில் அங்கே தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் என 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அந்த பிராந்தியத்தில் போராடி வரும் எதிர்ப்பு முன்னணிக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உயிர் பிழைப்பதற்காக ஏராளமான மக்கள் அந்த மடாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

    புத்த மடாலயத்தில் தங்கியவர்கள் மீது ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல் மியான்மர் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • H-1B (வேலை விசாக்கள்) மற்றும் J (பார்வையாளர் விசாக்கள்) ஆகியவற்றுக்கு பொருந்தும்.
    • தற்போது, அமெரிக்க பி-1/பி-2 விசாவுக்கு 185 டாலர் (சுமார் ரூ. 15,800) செலவாகிறது

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த 'பிக் பியூட்டிஃபுல் பில்' மசோதா கடந்த ஜூலை 4 அன்று சட்டானது.

    இந்த சட்டத்தின்கீழ் குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு 250 டாலர் (சுமார் ரூ. 21,400) புதிய விசா கட்டணத்தை (Visa Integrity Fee) டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    இந்த புதிய கட்டணம், ஏற்கனவே உள்ள விசா செலவுகளுடன் கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் இது திரும்பப் பெற முடியாத கட்டணமாகும். இது 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.

    இந்தக் கட்டணம் B-1/B-2 (சுற்றுலா மற்றும் வணிக விசாக்கள்), F மற்றும் M (மாணவர் விசாக்கள்), H-1B (வேலை விசாக்கள்) மற்றும் J (பார்வையாளர் விசாக்கள்) ஆகியவற்றுக்கு பொருந்தும். A மற்றும் G பிரிவுகளில் உள்ள விசாக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்தியர்கள் உட்பட அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகள் அனைவரும் இந்தக் கூடுதல் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள்.

    தற்போது, அமெரிக்க B-1/B-2 விசாவுக்கு 185 டாலர் (சுமார் ரூ. 15,800) செலவாகிறது. புதிய கட்டணம் அமலுக்கு வந்தால் மற்ற செலவுகளுடன் சேர்ந்து மொத்த செலவு சுமார் 472 டாலராக (ரூ. 40,502) ஆக உயரும். இது தற்போதைய விசா செலவை விட 2.5 மடங்கு அதிகம்.

    • காசா இனப்படுகொலையை வைத்து உலகளாவிய பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
    • மார்கோ ரூபியோ, அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.

    காசா மற்றும் மேற்குக் கரை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸை அமெரிக்கா தடை செய்துள்ளது.

    காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்று வெளிப்படையாகக் கூறி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் இத்தாலிய மனித உரிமை ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான அல்பானீஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 

    அண்மையில் அவர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்த அறிக்கையில் காசா இனப்படுகொலையை வைத்து உலகளாவிய பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

    இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்கள், அதன் மூலம் லாபம் ஈட்டிய பெறுநிறுவனங்கள், அதன் நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்து குற்றவியல் விசாரணை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அவர் வலியுறுத்தினார். எனவே அல்பானீஸை மவுனமாக்க டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் எதிராக "அரசியல் மற்றும் பொருளாதாரப் போருக்குப் பிரச்சாரம் செய்வதாக" குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.

    இதன்மூலம் அமெரிக்காவில் அல்பானீஸ் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களும் முடக்கப்படுகின்றன. மேலும் அவர் நாட்டிற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடை குறித்த செய்தி வெளியிடப்பட்ட பிறகு, எப்போதும் போல நீதியின் பக்கம் உறுதியாக நிற்பதே முடிவு என்று அல்பானீஸ் கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சித்தார்.

    • போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
    • இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் நேற்று ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

    மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானி உட்பட ஐந்து பேரை மீட்டனர்.

    அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் பயிற்சியின் போது நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

    • சுமார் 75 சதவீதத்திற்கு மேல் இந்த புதிய சுரங்கம் அமைக்கும் பணி முடிவு அடைந்தது.
    • இந்த திட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறார்கள்.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூமிக்கு அடியில் 18 மீட்டர் அகலத்தில் கழிவுநீர் வெளியேற்றுவதற்காக ரூ.60 ஆயிரம் கோடியில் புதிதாக சுரங்கம் அமைத்து பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த திட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறார்கள். சுமார் 75 சதவீதத்திற்கு மேல் இந்த புதிய சுரங்கம் அமைக்கும் பணி முடிவு அடைந்தது.

    இந்தநிலையில் சுரங்கம் தோண்டுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவு அடைந்ததால் கூடுதலாக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு மும்முரமாக பணி நடந்து வந்தது. அப்போது அந்த சுரங்கம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 31 தொழிலாளர்கள் சிக்கியிருப்பது தெரிந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்தில் சிக்கிய 31 தொழிலாளர்களும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 105 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் வீசியது.
    • ஜெர்மனியில், வறட்சி மற்றும் வெப்பம் காட்டுத்தீ உருவாகி அதில் பல ஏக்கர் விளைநிலங்கள் தீயில் கருகி நாசமாகின.

    பாரீஸ்:

    ஐரோப்பா நாடுகளில் கடந்த மாதம் கோடைக்காலம் தொடங்கியது. அதில் இருந்து ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அலை வீசுகிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 105 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் வீசியது. ஸ்பெயினில் 106 டிகிரிவரை வெப்பம் வாட்டி வதைத்தது. குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் ஸ்பெயின் அருகே லிஸ்பனில் உள்ள மோரா நகரில் அதிகபட்சமாக 138 டிகிரிவரை வெப்பம் பதிவானது.

    வெப்ப அலைவீச்சை சமாளிக்க இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக பிரான்சின் மெட்டியோ நகரம், ஜெர்மனியின் முனிச் ஆகிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

    மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக வளாகங்கள் ஆகியவை பகுதிநேரமாகவே செயல்பட்டு வருகின்றன. நகரில் உள்ள பூங்காக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தற்காலிக தண்ணீர் பம்புகள், செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இளைப்பாற அனுமதிக்கப்பட்டனர்.

    ஜெர்மனியில், வறட்சி மற்றும் வெப்பம் காட்டுத்தீ உருவாகி அதில் பல ஏக்கர் விளைநிலங்கள் தீயில் கருகி நாசமாகின. தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட ஐரோப்பா ஏற்கனவே சுமார் 30 டிகிரி செல்சியல்வரை வெப்பம் உயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    புவி வெப்பமயமாதல், அதிகரித்து வரும் தொழில்புரட்சி, புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெப்ப அலைவீச்சு உயர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஐரோப்பா நாடுகளில் 2,300 பேர் உயிரிழந்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

    ×