என் மலர்tooltip icon

    உலகம்

    • உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.
    • ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    மாஸ்கோ:

    உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    போர் தொடர்ந்து நீடித்து வருவதால் இரு தரப்பிலும் ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷியா தரப்பில் சண்டையிட போதுமான ஆட்கள் இல்லாமல் சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரை களம் இறக்கி சண்டையிட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், ரஷியா வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் அரசுமுறை பயணமாக வடகொரியாவுக்கு இன்று செல்கிறார். 3 நாட்கள் பயணமாக இதில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னைச் சந்தித்து ராணுவ உதவிகளைக் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • தென்கொரியா அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த டிசம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார்.
    • இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சியோல்:

    தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

    இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஒரே நாளில் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. இதனால் யூன் சுக் இயோல் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    மேலும், அவர்மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்டவை பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். 52 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். புதிய அதிபராக லீ ஜே மியுங் செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளை அழிக்க முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் முயன்றதாக புகார்கள் எழுந்தன.

    சியோல் கோர்ட்டில் இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து யூன் சுக் இயோல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
    • சூரிய குளியல் மீது எனக்கு ஆர்வம் ஏதுமில்லை என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலிகாமெனியின் நெருங்கிய ஆலோசகரான ஜவாத் லாரிஜானி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், புளோரிடாவில் உள்ள டிரம்பின் சொகுசு பங்களாவான மார்-ஏ-லாகோவில் அவர் சூரிய குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய டிரோன் மூலம் தாக்கப்படலாம். இது மிகவும் எளிமையானது என தெரிவித்தார்.

    ஈரான் மிரட்டல் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது டிரம்ப் பதிலளிக்கையில், உண்மையில் அது ஓர் அச்சுறுத்தலாக இருக்கலாம். நான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் செய்தேன். ஆனால் எனக்கு அதன்மீது ஆர்வம் ஏதுமில்லை என கிண்டலாக தெரிவித்தார்.

    • விமானப் பயிற்சியின் போது இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதின.
    • இந்த விபத்தில் இந்திய மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

    டொரண்டோ:

    கனடா நாட்டின் மனிடோபாவில் உள்ள ஸ்டெயின்பாக் பகுதியில் விமானம் ஓட்டும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கேரளாவின் திருப்பூணித்துறையைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ், கனடாவைச் சேர்ந்த சவானா மே ராய்ஸ் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர்.

    நேற்று முன்தினம் இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வின்னிபெக்கில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தெற்கு விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்க முயன்றனர்.

    அப்போது எதிர்பாரா விதமாக 400 மீட்டர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்தில் சிக்கியது. உடனே தீயும் பற்றிக் கொண்டது. இதில் ஸ்ரீஹரி, சவானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக, கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

    • நிலநடுக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்தன.
    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

    கவுதமாலா:

    மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அங்கு 3 முதல் 5.7 வரை ரிக்டர் அளவுகளில் 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. தொடர் நில நடுக்கங்களால் பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இரவு சாலைகளில் படுத்து தூங்கினர்.

    நிலநடுக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி சிறுவன் உள்பட 4 பேர் பலியானார்கள். இதில் எஸ்குவிண்ட்லா பகுதியில் லாரியில் சென்றபோது, பாறைகள் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

    • டஜன் கணக்கான அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    • மற்றவர்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பணிபுரிகிறார்கள்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டஜன் கணக்கான அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் சுமார் 2,145 மூத்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பணிநீக்கம் செய்யப்படும் பெரும்பாலான ஊழியர்கள் GS-13 முதல் GS-15 வரையிலான பதவிகளில், மூத்த நிலை அரசாங்க பதவிகளில் உள்ளவர்கள் என்றும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே பணி ஓய்வு வழங்கியும் ஏற்கனவே ராஜினாமா செய்ய முன்வந்தவர்களை பணியில் இருந்த விடு பெற ஒப்புதல் வழங்கப்படுகிறது.

    தகவலின்படி, 1,818 ஊழியர்கள் தற்போது அறிவியல் அல்லது மனித விண்வெளிப் பயணம் போன்ற முக்கிய பணிப் பகுதிகளில் பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பணிபுரிகிறார்கள்.

    இதுகுறித்து செய்தி தொடர்பாளர் பெத்தானி ஸ்டீவன்ஸ் கூறுகையில், நாங்கள் அதிக முன்னுரிமை பெற்ற பட்ஜெட்டுக்குள் செயல்படுவதால், எங்கள் பணிக்கு நாசா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

    • அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.
    • போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், மூத்த அரசு அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த பழைய உரையாடலின் ஆடியோ ஒன்று லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்கள் காரணமாக ஆகஸ்ட் 5 தனது பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். மாணவர் போராட்டங்களை ஒடுக்க ஷேக் ஹசீனா மனிதாபிமான மீறல் குற்றங்களை ஏவியதாக புதிதாக அமைந்த இடைக்கால அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் தற்போது வெளியான ஆடியோவில், ஷேக் ஹசீனா, போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒடுக்க ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தவும், போராட்டக்காரர்களை எங்கு பார்த்தாலும் சுடவும் பாதுகாப்புப் படையினரிடம் ஹசீனா கூறுவதைக் கேட்க முடிகிறது.

    பிபிசி உறுதிப்படுத்திய ஆடியோவின்படி, அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.

    இந்த ஆடியோ, ஜூலை 18 அன்று டாக்காவில் உள்ள வங்கதேச பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபபனில் இருந்து செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பின் போது பதிவு செய்யப்பட்டது.

    இந்த அழைப்பிற்குப் பிறகு டாக்கா முழுவதும் இராணுவ நிலை துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் பதிவுகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

    போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும்  குழு கண்டறிந்துள்ளது.

    தடயவியல் ஆய்வாளர்களும் இந்த ஆடியோ உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினர். ஷேக் ஹசீனா தற்போது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலைக்காக விசாரணையில் உள்ளார்.

    குற்றவாளிஎன நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.  

    • 2022ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
    • 2023 மே மாதம் லிண்டாவை சிஇஓ-வாக நியமித்தார்.

    உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். பின்னர் டுவிட்டர் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். கடந்த 2023ஆம் ஆண்டு மூத்த விளம்பர நிர்வாகியான லிண்டா யாக்காரினோவை சிஇஓ-வாக நியமித்தார்.

    சுமார் இண்டு வருடம் பணியாற்றிய நிலையில், லிண்டா தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா செய்த அவர் "எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் xAI (Chatbot Grok உருவாக்கிய நிறுவனம்) உடன புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்த எக்ஸ் இன்னும் சிறந்ததை எட்டவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அங்கு பிரதமர் மோடி உற்சாகமாக மேளம் கொட்டி மகிழ்ந்தார்.

    விண்ட்ஹோக்:

    கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த கட்டமாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றுள்ளார்.

    நமீபியாவின் விண்ட்ஹோக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி உற்சாகமாக மேளம் கொட்டி மகிழ்ந்தார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் 27-வது வெளிநாட்டு விருது ஆகும். தற்போதைய சுற்றுப்பயணத்தில் பெறும் 4வது விருது ஆகும்.

    அதைத் தொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளர்களில் நமீபியாவும் ஒன்று. இந்தியாவில் மிகப்பெரிய வைர மெருகூட்டல் தொழில் உள்ளது. அதுவும் எனது சொந்த மாநிலமான குஜராத்தில். வரும் காலங்களில் இரு நாடுகளிடையே உள்ள நட்பு இந்த வைரங்களைப் போலவே பிரகாசிக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • போலந்து, பெலாரஸ் எல்லையில் உக்ரைனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள லுட்ஸ்க் நகர் மீது கடும் தாக்குதல்.
    • மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்களை இங்கேதான் இறக்குமதி செய்து, மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    உக்ரைன் மீது "ஷாஹேத்" டிரோன்கள் மூலம் ரஷியா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. 728 டிரோன்கள், 13 குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    போலந்து, பெலாரஸ் எல்லையில் உக்ரைனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள லுட்ஸ்க் என்ற நகர் மீது கடுமையாக தாக்கியுள்ளது. மேலும் 10 பிராந்தியங்களில் உள்ள முக்கிய நகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் விமான நிலையங்கள் லுட்ஸ்க் நகரில் உள்ளன. இந்த நகரின் மீது சரக்கு மற்றும் விமானப்படை விமானங்கள் பரப்பது வழக்கமான ஒன்று.

    உக்ரைனின் வடக்கு பிராந்தியம் ரஷியாவை எதிர்த்து போரிடுவதற்கு முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்களை இங்கேதான் இறக்குமதி செய்து, மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த சப்ளைக்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    கடந்த ஜூலை 4ஆம் தேதி ரஷியா இது போன்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருந்தது. உக்ரைன் எல்லையின் முன்பகுதியில் சுமார் ஆயிரம் கி.மீ. தூரம் வரையில் ஆக்கிரமிப்பை விரிவுப்படுத்த ரஷியா தற்போது தாக்குதலை அதிகரித்துள்ளது.

    • இரு வாரத்துக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
    • அவரது உடல் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    கராச்சி:

    பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (32). கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சமீப காலமாக அவர் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் இன்று அங்கு சென்றுபார்த்தபோது ஹுமைரா இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

    தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். உடற்கூராய்வுக்கு பின் இறப்புக்கான காரணம் தெரியவரும். இரு வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    பாகிஸ்தானின் பிரபல நடிகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி தோல்வி அடைந்தது.
    • இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி தலைவராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து, கடந்தாண்டு ரிஷி சுனக் தலைமையில் பொதுத் தேர்தலை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்தது. தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை கடந்தாண்டு ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். தேர்தலில் வெற்றி பெற்ற அவர் எம்.பி.யாக தொடர்கிறார்.

    இந்நிலையில், ஆரம்ப காலத்தில் பணிபுரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாச்சிஸ் நிதி நிறுவனத்தில் மீண்டும் ரிஷி சுனக் பணியில் சேர்ந்துள்ளார்.

    முதுநிலை ஆலோசகர் பணியில் ரிஷி சுனக் இணைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளார். உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சீனியர் ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார்.

    தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் 'தி ரிச்மண்ட் திட்டம்' என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

    கோல்டுமேன் சாச்சிஸ் நிதி நிறுவனத்தில் தொடக்க நிலை பணியாளராக சேர்ந்து ரிஷி சுனக் 5 ஆண்டு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×