என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் - டிரம்ப்
    • மொத்தம் 7 போர்களை தடுத்து நிறுத்தினேன்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்பட 7 போர்களை நிறுத்தியதாக கூறி வருகிறார்.

    இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.ஆனாலும் தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என்றும் ஆதங்கத்தை சில நாட்களுக்கு முன்பு வெளிப்படுத்தி இருந்தார். இதற்கிடையே டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சில நாட்டு தலைவர்கள் ஆதரவு அளித்தனர்.

    இந்த நிலையில் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் கூறி உள்ளார். விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிரம்ப் பேசியதாவது:-

    உலக அரங்கில் இதற்கு முன்பு செய்யப்படாத மதிக்கப்படும் பல விஷயங்களைச் செய்து வருகிறோம். நாங்கள் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறோம். போர்களை நிறுத்துகிறோம்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும், தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான போர்களை நிறுத்தினோம். மொத்தம் 7 போர்களை தடுத்து நிறுத்தினேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் வர்த்தகத்தை காரணம் காட்டி சண்டையை நிறுத்தினேன்.

    ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த முடிந்தால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால் நான் 7 போர்களை நிறுத்தி இருக்கிறேன். ஒவ்வொன்றிற்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் ரஷியா-உக்ரைன் போரை நீங்கள் நிறுத்தினால் நோபல் பரிசு பெற முடியும் என்று சொன்னார்கள்.

    ரஷியா-உக்ரைன் மோதலைத் தீர்ப்பது எளிது என்று நினைத்தேன்.ஏனென்றால் எனக்கு ரஷிய அதிபர் புதினுடன் நல்ல உறவு இருக்கிறது. அவர் மீது சில அதிருப்தி இருந்தாலும் போரை நிறுத்த முயற்சித்தேன். அது எளிதாக இல்லையென்றாலும் அதைச் செய்து முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.
    • தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மழையின் காரணமாக நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமார பாளையம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை வேறு தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் வந்தனர். பின்னர் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன்.

    * எடப்பாடி பழனிசாமி உடன் அரசியல் எதுவும் பேசவில்லை.

    * அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக காலம் வரும்போது சொல்கிறேன்.

    * அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.

    * தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.

    * விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது.

    * கூட்டம் வருவதை வைத்து தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என விஜய் சொல்லக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.
    • 'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் கோடு பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    சென்னைப் பெருநகரப் பகுதிக்கான (5.904 சதுர கி.மீ.) விரிவான போக்குவரத்து திட்டம் 2023-2048. 'மக்களும் பொருட்களும் தங்கு தடையின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துதல்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன், நகர்ப்புற போக்குவரத்து முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த புதிய செயலி அமைகிறது.

    இதன் மூலம் விரிவான போக்குவரத்து திட்டம் மூலம் பயண நேரத்தை மற்றும் பயண செலவைக் குறைத்தல், நம்பகமான, விரைவான பொதுப் போக்குவரத்தை வழங்குதல், பல்வகை பொதுபோக்குவரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல், குறைந்த போக்குவரத்து உமிழ்வு மற்றும் பயணத்தேவை மேலாண்மையை ஊக்குவித்தல் போன்றவை கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன் மொபைல் செயலியை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

    இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.

    இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும். யூபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும். ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.

    இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.

    • 69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
    • பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த பொதுக்குழுவில் நடிகர் சங்க கட்டடம் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இந்திய வீரர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர்.
    • கைகுலுக்காத சர்ச்சை தொடர்பாக நடுவரை பாகிஸ்தான் பகடையாக பயன்படுத்தியது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 'சூப்பர்4' சுற்றில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது.

    ஏற்கனவே லீக் சுற்றில் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எளிதாக வீழ்த்தியிருந்தது. ஆகவே இப்போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேட்டி அளித்த அஸ்வின், "இந்திய வீரர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். அவர்களின் திறமை மேல் எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கைகுலுக்காத சர்ச்சை தொடர்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் பிசிசி-ஐ ஒன்றும் சொல்ல முடியாமல் நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை பகடையாக பயன்படுத்தியது,

    பாகிஸ்தானுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்யாதீர்கள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் போட்டியை சுவாரசியமற்றதாக மாற்றுகிறீர்கள். நீங்கள் 150 ரன்களுக்கு அவுட்டாகி, இரண்டாவது இன்னிங்சில போட்டியை பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் ஆக்குகிறீர்கள்" என்று தெரிவித்தார்.

    • தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார்.
    • விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார்.

    த.வெ.க. தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரசாரம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

    * ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்களை சந்திக்கலாம். மக்களிடத்திலே அவர்கள் ஆதரவை கேட்கலாம்.

    * தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார்.

    * விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார். அது அவருடைய நம்பிக்கை.

    * விஜய் பரீட்சை எழுதட்டும், அவர் என்ன மதிப்பெண் எடுக்கிறார் என்று பார்த்துவிட்டு பிறகு அதைப்பற்றி விவாதிக்கலாம்.

    * விஜய் இப்போதுதான் படித்துக்கொண்டு இருக்கிறார். பரீட்சை எழுதி மதிப்பெண் பெறட்டும்.

    * ஆசிரியர்கள் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்கள். ஆனால் மாணவர் பாஸ் ஆவாரா? இல்லையா? என்பது மதிப்பெண் வந்தால்தான் நமக்கு தெரியும்.

    * மாணவராக இருந்து விஜய் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தேசிய கட்சி, மாநிலக்கட்சி என அவரவர்களுக்கு உரிய பதில்களை சொல்கிறார்கள்.

    * அ.தி.மு.க. தான் தி.மு.க.வை வீழ்த்துகிற சக்தியும், ஆற்றலும், வலிமையும், அனுபவமும், கிளைக்கழகமும், தொண்டர்களும், மக்கள் செல்வாக்கும் கொண்ட கட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தி.மு.க.வை வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜிஎஸ்டி குறைப்பால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
    • ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்துள்ளது. இதை ஜிஎஸ்டி 2.0 எனக் கூறுகிறார்கள். முன்னதாக 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும 18 ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஆடம்பர கார்கள், பைக்குகள், சிகரெட் போன்றவற்றிற்கு 40 சதவீத வரியை அறிமுகம் செய்துள்ளது.

    இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்த சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    ஜிஎஸ்டி 2.0 மற்றும் H1-B விசா கட்டண உயர்வு குறித்து பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

    • ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
    • அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.

    ராமேசுவரம்:

    புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.

    அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது. 

    பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

    • தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
    • ஆதாரங்களை கர்நாடக மாநில சிஐடி-யிடம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

    கர்நாடக மாநில ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதாவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், systematic ஆக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    மேலும், இது தொடர்பான ஆதாரங்களை கர்நாடக மாநில சிஐடி-யிடம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இந்நிலையில், கர்நாடகா முழுவதும் பதிவான அனைத்து 'வாக்குத் திருட்டு' புகார்களையும் விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது அம்மாநில காங்கிரஸ் அரசு அமைத்துள்ளது.

    ஏற்கனவே ஆலந்த் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் மோசடி வழக்கை விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுத் துறை ஏடிஜிபி B.K. சிங், குழுவுக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை.
    • நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுளால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 75 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 937 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக 15. 52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வு சரியாக நடத்தப்படவில்லை.

    தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. கேள்வித்தாள் அவுட் ஆகியுள்ளது. இதற்கு காரணமான தேர்வு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை கண்டித்து தான் நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

    ஆங்கில வழியில் எழுதியவர்களுக்கு எளிமையான கேள்விகளும், தமிழிலில் எழுதியவர்களுக்கு ஏன் கடினமான கேள்விகளையும் கேட்க வேண்டும். 6 முதல் 10ம் வகுப்பு வரை கேள்வி கேட்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு மேற்பட்ட கல்வி பாடத்தில் இருந்து கடினமான கேள்வி ஏன் கேட்க வேண்டும்.

    தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் இந்த முறைகேட்டால் தற்போது பல லட்சம் பேர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மாநில அரசு என்ன பதில் கூறப்போகிறது. அதே நேரம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை.

    பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும் , தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை, மின்துறை போன்ற பலதுறைகளில் ரூ7 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பணம் வாங்கி கொண்டு தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக உதவி ஆய்வாளர்கள் பணியில் 900 பேரில் 400 பேர் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இந்த முறைகேட்டிற்கு யார் காரணம். 58 வயதில் ஓய்வு பெற வேண்டியவர்களை ஓய்வூதியம் கொடுக்க வழியில்லாமல் 60 வயது வரை வேலை பாருங்கள் என்கின்றனர். அப்படியானால் 2 ஆண்டுகள் தேர்வு எழுதாமல் காத்திருப்பவர்களின் நிலை என்னவாகும். முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டும். கருணை அடிப்படையில் மீண்டும் பணி புரிவதற்கு ஏன் கொடுக்க வேண்டும். இதை யார் தட்டி கேட்பது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி முறைகேடு நடைபெறக்கூடாது என்பதை பொதுக்கூட்டம் மூலம் அரசிற்கு முன் வைக்கிறோம். தேர்வில் தோல்வி அடைந்த பலர் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர். அதனால் இந்த பெரம்பலூரை தேர்வு செய்தேன்.

    நான் தொடர்ந்து மக்களை சந்தித்து கொண்டே தான் இருக்கிறேன். நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை. இதயத்துல இருந்து பேசுறேன். தனக்கு ஒரு பிரச்சனை வரும்போது தான் வீதிக்கு வர்றாங்களே தவிர, பொதுவான மக்களின் பிரச்சனைக்கு கற்ற பிள்ளைகள், கற்றறிந்தவர்கள் வந்து களத்துல நின்று அதை தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறது இல்லை.

    அதனால அது, இனிமேலாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு நமக்கான சரியான தலைமையை தேர்வு செய்து, சரியான அதிகாரத்தை நிறுவ வேண்டும். இல்லையென்றால் அடுத்த தலைமுறையும் இதே மாதிரி வீதியில் நின்று போராடி கொண்டு இருக்க வேண்டும். தற்போது நடைபெறும் பொதுக்கூட்டம் தி.மு.க.வுக்கு எதிராக தான் நடத்தப்படுகிறது.

    விஜய் பா.ஜ.க. கொள்கை எதிரி, தி.மு.க. அரசியல் எதிரி என்கிறார். கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வேறுபாடுன்னு கேட்டா விளக்கம் சொல்ல விஜய்க்கு தெரியணும். இல்லையென்றால் பேசக்கூடாது. விஜய்க்கு வரும் கூட்டத்தை பார்க்காதீங்க, கூட்டம் எல்லாருக்கும் வரும்.

    நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர். அதே நேரம் பக்கத்தில் வெறும் 40 விவசாயிகள் போராடி கொண்டிருந்தார்கள். வடிவேலுக்கு வராத கூட்டமா. இல்ல விஜயகாந்திற்கு வராத கூட்டமா. கூட்டம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கூட்டம் வரும். அந்த படம் நல்லா இருந்தா அடுத்த காட்சியில் அதே கூட்டம் இருக்கும்.

    ரொம்ப நல்லா இருந்தா அதற்கு அடுத்த காட்சியிலும் அதே கூட்டம் இருக்கும். இல்லைன்னா அடுத்த கட்டத்தில் திரையரங்கு ஈ ஆட்டிடும். விஜய்யை பார்க்க கூடுவார்கள். அவர் பேசுறதை கேட்க கூட மாட்டார்கள். என்னை பார்க்க வரமாட்டார்கள். நான் என்ன பேசுறான்னு கேட்க கூடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று கோவையில் உள்ள மாலில் இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியானது
    • இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.

    தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    நேற்று கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

    இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் கதை மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறு போல உள்ளது என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    குறிப்பாக டிரெய்லரில் தனுஷ் இருக்கும் புகைப்படங்களோடு மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படங்களை இணைத்து இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டது வைரலாகி வருகிறது. 

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    ×