என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • துலாசம பூஜைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வர உள்ளார்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு எந்த நாளில் வந்தாலும் அவரை வரவேற்க கேரள அரசும் தேவசம் வாரியமும் தயாராக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள தேவசம்போர்டு மந்திரி வாசவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் சபரிமலை வர உள்ளதாக தெரிவித்தார்.

    துலாசம பூஜைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வர இருப்பதாகவும், இது பற்றி கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் வந்துள்ள நிலையில், சரியான தேதி விவரம் தெரிய வரவில்லை. அதேநேரம் அவர் எந்த நாளில் வந்தாலும் வரவேற்க கேரள அரசும் தேவசம் வாரியமும் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

    • நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை.
    • தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,

    வணக்கம்.

    "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்" என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.

    இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.

    நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.

    ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

    இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

    மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

    தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்!

    புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

    நல்லதே நடக்கும்.

    வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ஆண் பாவம் பொல்லாதது.
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

    2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ஆண் பாவம் பொல்லாதது. இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

    இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், ஆண்பாவம் பொல்லாதது' படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
    • மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்

    இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.

    அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்படலாம் என்று முன்பு தகவல் வெளியாகி இருந்தது. பின்னர் அது வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், காலியாக உள்ள பதவிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து விவாதம் நடைபெற்றது. மிதுன் மனாஸ் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பட் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு தலைவர் பதவிக்கு மிதுன் மனாஸ் பெயரே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பி.சி. சி.ஐ.யின் தலைவராக மிதுன் மனாஸ் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறார். இதே போல புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் உள்பட பல்வேறு நியமனங்களும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.

    டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.

    ஓய்வு பெற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடுகளின் இயக்குநராகவும் பணியாற்றி, நிர்வாக அனுபவத்தை பெற்றுள்ளார். இந்த அனுபவமே அவரை பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்குக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    • இனிமேல் H-1B விசா பெற ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது
    • அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.

    இந்த புதிய உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அமெரிக்காவில் தற்போதைய விசாவில் படித்து வரும் மாணவர்கள் தங்களது படிப்பை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்து கொள்ளலாம். ஆனால் படிப்பை முடித்த பிறகும் அவர்கள் சிக்கல்களை சந்திக்கலாம்.

    படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணிபுரிய 1 லட்சம் டாலர்கள் (ரூ.88 லட்சம்) கட்டண உயர்வை செலுத்த வேண்டும். இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதை குறைக்கும் என்று கூறப்படுகிறது. 

    • பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இறுதி முடிவை எடுப்பார்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.

    இந்த நிலையில் தங்களுக்கு தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது என அன்புமணி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என டாக்டர் ராமதாஸ் தரப்பினர் கூறிவரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் தரப்பினர் இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்தை அணுகினர்.

    இன்னும் 2, 3 நாட்களில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    மறுநாள் (புதன்கிழமை) வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பா.ம.க. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மிக முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீ காந்தி, சேலம் எம்.எல்.ஏ., அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஆசிரியர் பரந்தாமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இறுதி முடிவை எடுப்பார் என்றும் எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு அணிகளிலும் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    • பக்ராம் விமான தளத்தில் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்
    • சீனாவின் அணு ஆயுத தயாரிப்பு மையத்திற்கு அருகே பக்ராம் தளம் அமைந்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.

    இதையடுத்து அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க விரும்புகிறார். ஆனால் அதற்கு தாலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாலிபான்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் "விரைவில்" திருப்பித் தர வேண்டும். அந்த விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்" என்றார்.

    • இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் - டிரம்ப்
    • மொத்தம் 7 போர்களை தடுத்து நிறுத்தினேன்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்பட 7 போர்களை நிறுத்தியதாக கூறி வருகிறார்.

    இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.ஆனாலும் தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என்றும் ஆதங்கத்தை சில நாட்களுக்கு முன்பு வெளிப்படுத்தி இருந்தார். இதற்கிடையே டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சில நாட்டு தலைவர்கள் ஆதரவு அளித்தனர்.

    இந்த நிலையில் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் கூறி உள்ளார். விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிரம்ப் பேசியதாவது:-

    உலக அரங்கில் இதற்கு முன்பு செய்யப்படாத மதிக்கப்படும் பல விஷயங்களைச் செய்து வருகிறோம். நாங்கள் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறோம். போர்களை நிறுத்துகிறோம்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும், தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான போர்களை நிறுத்தினோம். மொத்தம் 7 போர்களை தடுத்து நிறுத்தினேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் வர்த்தகத்தை காரணம் காட்டி சண்டையை நிறுத்தினேன்.

    ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த முடிந்தால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால் நான் 7 போர்களை நிறுத்தி இருக்கிறேன். ஒவ்வொன்றிற்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் ரஷியா-உக்ரைன் போரை நீங்கள் நிறுத்தினால் நோபல் பரிசு பெற முடியும் என்று சொன்னார்கள்.

    ரஷியா-உக்ரைன் மோதலைத் தீர்ப்பது எளிது என்று நினைத்தேன்.ஏனென்றால் எனக்கு ரஷிய அதிபர் புதினுடன் நல்ல உறவு இருக்கிறது. அவர் மீது சில அதிருப்தி இருந்தாலும் போரை நிறுத்த முயற்சித்தேன். அது எளிதாக இல்லையென்றாலும் அதைச் செய்து முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.
    • தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மழையின் காரணமாக நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமார பாளையம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை வேறு தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் வந்தனர். பின்னர் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன்.

    * எடப்பாடி பழனிசாமி உடன் அரசியல் எதுவும் பேசவில்லை.

    * அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக காலம் வரும்போது சொல்கிறேன்.

    * அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.

    * தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.

    * விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது.

    * கூட்டம் வருவதை வைத்து தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என விஜய் சொல்லக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.
    • 'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் கோடு பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    சென்னைப் பெருநகரப் பகுதிக்கான (5.904 சதுர கி.மீ.) விரிவான போக்குவரத்து திட்டம் 2023-2048. 'மக்களும் பொருட்களும் தங்கு தடையின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துதல்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன், நகர்ப்புற போக்குவரத்து முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த புதிய செயலி அமைகிறது.

    இதன் மூலம் விரிவான போக்குவரத்து திட்டம் மூலம் பயண நேரத்தை மற்றும் பயண செலவைக் குறைத்தல், நம்பகமான, விரைவான பொதுப் போக்குவரத்தை வழங்குதல், பல்வகை பொதுபோக்குவரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல், குறைந்த போக்குவரத்து உமிழ்வு மற்றும் பயணத்தேவை மேலாண்மையை ஊக்குவித்தல் போன்றவை கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன் மொபைல் செயலியை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

    இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.

    இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும். யூபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும். ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.

    இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.

    • 69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
    • பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த பொதுக்குழுவில் நடிகர் சங்க கட்டடம் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இந்திய வீரர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர்.
    • கைகுலுக்காத சர்ச்சை தொடர்பாக நடுவரை பாகிஸ்தான் பகடையாக பயன்படுத்தியது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 'சூப்பர்4' சுற்றில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது.

    ஏற்கனவே லீக் சுற்றில் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எளிதாக வீழ்த்தியிருந்தது. ஆகவே இப்போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேட்டி அளித்த அஸ்வின், "இந்திய வீரர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். அவர்களின் திறமை மேல் எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கைகுலுக்காத சர்ச்சை தொடர்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் பிசிசி-ஐ ஒன்றும் சொல்ல முடியாமல் நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை பகடையாக பயன்படுத்தியது,

    பாகிஸ்தானுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்யாதீர்கள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் போட்டியை சுவாரசியமற்றதாக மாற்றுகிறீர்கள். நீங்கள் 150 ரன்களுக்கு அவுட்டாகி, இரண்டாவது இன்னிங்சில போட்டியை பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் ஆக்குகிறீர்கள்" என்று தெரிவித்தார்.

    ×