என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூட்டணியில் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் கேட்போம்- ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழுவில் முடிவு
    X

    கூட்டணியில் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் கேட்போம்- ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழுவில் முடிவு

    • பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இறுதி முடிவை எடுப்பார்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.

    இந்த நிலையில் தங்களுக்கு தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது என அன்புமணி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என டாக்டர் ராமதாஸ் தரப்பினர் கூறிவரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் தரப்பினர் இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்தை அணுகினர்.

    இன்னும் 2, 3 நாட்களில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    மறுநாள் (புதன்கிழமை) வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பா.ம.க. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மிக முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீ காந்தி, சேலம் எம்.எல்.ஏ., அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஆசிரியர் பரந்தாமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இறுதி முடிவை எடுப்பார் என்றும் எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு அணிகளிலும் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×