என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என விஜய் சொல்லக்கூடாது: நயினார் நாகேந்திரன்
- அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.
- தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.
சேலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மழையின் காரணமாக நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமார பாளையம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை வேறு தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் வந்தனர். பின்னர் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன்.
* எடப்பாடி பழனிசாமி உடன் அரசியல் எதுவும் பேசவில்லை.
* அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக காலம் வரும்போது சொல்கிறேன்.
* அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.
* தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.
* விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது.
* கூட்டம் வருவதை வைத்து தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என விஜய் சொல்லக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.






