என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சனாதனத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கூச்சலிட்டார்.
    • இத்தகைய விஷயங்கள் என்னை எவ்விதத்திலும் பாதிக்காது" என்று நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த சமயத்தில் 'சனாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது' என்று தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கூச்சலிட்டார்.

    இதனையடுத்து காலணி வீசிய வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவ தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

    அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்வீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

    இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தான் அவர் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
    • கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் நிதி. பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த நாட்டின் வளர்ச்சி வேகத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    மேட்டுப்பாளையத்தை பொறுத்தவரை ஒரு பைபாஸ் சாலை வேண்டும், அதற்கான வேலைகள் தயார் செய்து கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.

    தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.

    தி.மு.க. எப்போது பார்த்தாலும், ஏதாவது ஒரு பைலை அவருக்கு அனுப்புகிறது. அதுக்கு அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால், உடனே அவரை ஒரு மிகப்பெரிய ஒரு எதிரியாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். கவர்னர் ரவி சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறார். தமிழக அரசு அவர் மீது வன்மம் கொண்டுள்ளது.

    கரூர் சம்பவத்தை பொறுத்த அளவுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய என்.டி.ஏ. கூட்டணி எம்.பிக்கள் குழு அவர்களுடைய அறிக்கைகளை கொடுத்து இருக்கிறார்கள். அந்த அறிக்கை வெளிவந்த பிறகு அதை பத்தி பேசுகிறேன்.

    ஊடகங்கள் முடக்கப்படுவது தமிழக அரசின் மிகப்பெரிய அராஜகத்தை தான் காட்டுகிறது. தி.மு.க., எப்போதுமே பத்திரிகையாளர்கள், மீடியாக்களை நசுக்குவதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டால் அவர்கள் நல்லவர்கள். எதிராக வெளியிட்டால் உடனே அவர்கள் கெட்டவர்கள்.

    சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவுப்படுத்துகிறது. கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.

    தமிழக பா.ஜ.க. கட்சியின் சார்பில் பூத்களை வலிமைப்படுத்தும் பணி ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக நடந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியான எங்களது கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் இணைந்து, வேலைகளை வேகப்படுத்தி செய்து கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டியின்போது கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் கரு.மாரிமுத்து (கோவை வடக்கு), தர்மண் (நீலகிரி), செந்தில்குமார் (ஈரோடு வடக்கு), மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ், மாவட்டசெயலாளர்கள் உமாசங்கர், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஆனந்தகுமார் சாமிநாதன், காரமடை நகர தலைவர் சதீஸ்குமார், மேட்டுப்பாளையம் நகர தலைவர் கே.ஆர்.எஸ்.சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • வேலூர் இப்ராஹிமின் கார் ஓட்டுநர் ரஷித்தையும் போலீசார் கைது செய்தனர்.
    • 15 கிராம் கஞ்சாவை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் வேலூர் இப்ராஹிம். இந்நிலையில், கஞ்சா வழக்கில் வேலூர் இப்ராஹிம் மகன் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், வேலூர் இப்ராஹிமின் கார் ஓட்டுநர் ரஷித்தையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 15 கிராம் கஞ்சா, கார் உள்ளிட்டவைகளை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
    • மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும். அந்த இந்தாண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

    மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை போனஸ் பெறுவார்கள்.

    தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன்.

    வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

    மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

    பல்வேறு கூட்டுறவு அமைப்பு, நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணை தனியே வெளியிடப்படும்.

    நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணை தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆலோசனையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    • விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்
    • கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    ஒடிசா மாநிலம் தெபிகரா பகுதியில் உள்ள நதி படித்துறையில் துா்கா சிலையை கரைக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் கடந்த 3-ந்தேதி நள்ளிரவில் ஊா்வலமாகச் சென்றனா்.

    தா்கா பஜாா் வழியாகச் ஊா்வலம் சென்றபோது, அதிக சத்தத்தில் பாடல் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

    அப்போது துா்கா சிலை ஊா்வலத்தினா் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.

    இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் தடை உத்தரவை மீறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்.வித்யாதா்பூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி, வன்முறை நடைபெற்ற தா்கா பஜாா் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து நகரத்தின் மேற்குப் பகுதியான சி.டி.ஏ செக்டாா் 11-ல் முடிவடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.

    அப்போது அவா்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப் பட்டன. மேலும் கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். வன்முறையை தடுக்க கட்டாக்கில் 13 காவல் நிலைய எல்லை பகுதிகளில் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை ஒடிசா அரசு பிறப்பித்தது.

    இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 10 மணி முதல் தர்கா பஜார், மங்களாபாக், பூரிகாட், லால் பாக் மற்றும் ஜகத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலானது.

    மேலும், பொய்யான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்க கட்டாக் மாநகராட்சி, கட்டாக் வளா்ச்சி ஆணையம் மற்றும் 42 மவுஜா மண்டலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே துா்கா சிலை கரைப்பின்போது ஏற்பட்ட வன்முறைக்கு எதிராக கட்டாக் நகரில் இன்று 12 மணி நேர கடை அடைப்புக்கு விஷ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தது.

    கட்டாக் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியப் பகுதிகளில் போலீசார் மற்றும் விரைவு நடவடிக்கை படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    அமைதி காக்கும்படி முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    • மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    • மனுவுக்கு அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

    தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல்துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார்.

    இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

    • திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது.
    • என்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது:-

    நான் இதுவரை 2 படங்களில் நடித்து உள்ளேன். அவற்றை நீங்கள் பார்த்ததில்லை என்றாலும் பிரச்சனை இல்லை. ஆனால் 'பைசன்' படத்தை பாருங்கள். இதைத்தான் என்னுடைய முதல் படமாகப் பார்க்கிறேன். நீங்களும் அப்படி பார்ப்பீர்கள் என நம்புகிறேன். இந்த படத்திற்காக மொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்துள்ளது.

    என்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன். இயக்குநர் மாரி செல்வராஜும் ரொம்ப உழைத்து, கஷ்டப்பட்டு இறங்கி சம்பவம் பண்ணியிருக்காரு. அது எல்லோருக்கும் போய் சேரணும். கண்டிப்பாக படத்திற்கு போங்கள் என்றார். 



    • பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது.
    • இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    காசா போர் நிறுத்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்: இஸ்ரேல் - ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார்.

    இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காப் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போர் நிறுத்த திட்டத்தை இருதரப்பும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "இந்த வார இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது, காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மிகவும் முக்கியமான விவாதங்கள் நடந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாகவும், விரைவாகவும் நடந்து வருகின்றன. மேலும் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நூற்றாண்டு பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிப்பேன். நேரம் மிகவும் முக்கியமானது. இதில் விரைவாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்து விடும்" என்று கூறியுள்ளார்.

    • ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
    • ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இடம் பெறுவது கடினமே.

    இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, வீராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட் டுமே விளையாட முடிவு செய்துள்ளனர்.

    இருவரையும் ஒருநாள் போட்டிக்கான அணியில் மீண்டும் இடம் பெறுவதில் தேர்வு குழு விருப்பத்துடன் இல்லை என்று கடந்த காலங்களில் தகவல் வெளியானது.

    ஆனாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் தேர்வு பெற்றுள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் வருகிற 19-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் 25-ந்தேதி களில் நடக்கிறது.

    ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றாலும் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார். டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கேப்டன் பதவியை பறித்ததால் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. வீராட் கோலிக்கு இதே நிலைதான்.

    2027-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வு குழு இந்த முடிவை மேற்கொண்டு உள்ளது. அதன் முதல்கட்ட பணியாகத்தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இடம் பெறுவது கடினமே. அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இதற்கிடையே ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ.) பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அனுபவம் வாய்ந்த இருவரும் 2027 உலக கோப்பை அணிக்கு தேவை என்று கிரிக்கெட் வாரியத்தில் சில உறுப்பினர்கள் கருதுகின்றனர். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கடந்த மார்ச் மாதம் கைப்பற்றியது. இது குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது. அதே நேரத்தில் பலர் 2027 உலக கோப்பைக்கு சுப்மன்கில் தலைமையிலான இளம் அணியை தயார்படுத்துவது அவசியம் என்று தெரிவித்தனர். இதனால் பி.சி.சி.ஐ. கூட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

    38 வயதான ரோகித் சர்மா 273 ஒருநாள் போட்டி யில் 11,168 ரன் எடுத்து உள்ளார். 32 சதமும், 58 அரை சதமும் அடித்து உள்ளார்.

    36 வயதான விராட் கோலி 302 ஒருநாள் போட்டியில் 14,181 ரன் எடுத்துள்ளார். 51 சதமும், 74 அரை சதமும் இதில் அடங்கும்.

    • ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
    • நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

    சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்திவைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது.

    அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்பு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு வரும் அவர், பின்பு பம்பைக்கு சென்று, அங்கிருந்து சன்னிதானத்துக்கு செல்கிறார்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். ஐப்பசி மாத பூஜையின் இறுதி நாளான 22-ந்தேதியே ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்ளார்.

    அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 22-ந்தேதி இரவே சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 24-ந்தேதி வரை கேரளாவில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐப்பசி மாதாந்திர பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் ஜனாதிபதி வருகை தரும் 22-ந்தேதி பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிகிறது. ஆனால் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    • ஜிஎஸ்டி நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
    • மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது?

    கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.

    இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளதாக பாஜகவினர் மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது.

    எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பிஜேபி தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.

    ×