என் மலர்tooltip icon

    இந்தியா

    வன்முறையால் பதற்றம்: ஒடிசாவின் கட்டாக்கில் ஊரடங்கு உத்தரவு - இணைய சேவை முடக்கம்
    X

    வன்முறையால் பதற்றம்: ஒடிசாவின் கட்டாக்கில் ஊரடங்கு உத்தரவு - இணைய சேவை முடக்கம்

    • விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்
    • கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    ஒடிசா மாநிலம் தெபிகரா பகுதியில் உள்ள நதி படித்துறையில் துா்கா சிலையை கரைக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் கடந்த 3-ந்தேதி நள்ளிரவில் ஊா்வலமாகச் சென்றனா்.

    தா்கா பஜாா் வழியாகச் ஊா்வலம் சென்றபோது, அதிக சத்தத்தில் பாடல் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

    அப்போது துா்கா சிலை ஊா்வலத்தினா் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.

    இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் தடை உத்தரவை மீறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்.வித்யாதா்பூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி, வன்முறை நடைபெற்ற தா்கா பஜாா் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து நகரத்தின் மேற்குப் பகுதியான சி.டி.ஏ செக்டாா் 11-ல் முடிவடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.

    அப்போது அவா்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப் பட்டன. மேலும் கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். வன்முறையை தடுக்க கட்டாக்கில் 13 காவல் நிலைய எல்லை பகுதிகளில் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை ஒடிசா அரசு பிறப்பித்தது.

    இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 10 மணி முதல் தர்கா பஜார், மங்களாபாக், பூரிகாட், லால் பாக் மற்றும் ஜகத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலானது.

    மேலும், பொய்யான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்க கட்டாக் மாநகராட்சி, கட்டாக் வளா்ச்சி ஆணையம் மற்றும் 42 மவுஜா மண்டலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே துா்கா சிலை கரைப்பின்போது ஏற்பட்ட வன்முறைக்கு எதிராக கட்டாக் நகரில் இன்று 12 மணி நேர கடை அடைப்புக்கு விஷ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தது.

    கட்டாக் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியப் பகுதிகளில் போலீசார் மற்றும் விரைவு நடவடிக்கை படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    அமைதி காக்கும்படி முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×