என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊழல்களுக்கு தடையாக இருப்பதால் கவர்னர் ஆர்.என்.ரவியை தி.மு.க. எதிரியாக பார்க்கிறது- எல்.முருகன்
- தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
- கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் நிதி. பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த நாட்டின் வளர்ச்சி வேகத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மேட்டுப்பாளையத்தை பொறுத்தவரை ஒரு பைபாஸ் சாலை வேண்டும், அதற்கான வேலைகள் தயார் செய்து கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.
தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
தி.மு.க. எப்போது பார்த்தாலும், ஏதாவது ஒரு பைலை அவருக்கு அனுப்புகிறது. அதுக்கு அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால், உடனே அவரை ஒரு மிகப்பெரிய ஒரு எதிரியாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். கவர்னர் ரவி சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறார். தமிழக அரசு அவர் மீது வன்மம் கொண்டுள்ளது.
கரூர் சம்பவத்தை பொறுத்த அளவுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய என்.டி.ஏ. கூட்டணி எம்.பிக்கள் குழு அவர்களுடைய அறிக்கைகளை கொடுத்து இருக்கிறார்கள். அந்த அறிக்கை வெளிவந்த பிறகு அதை பத்தி பேசுகிறேன்.
ஊடகங்கள் முடக்கப்படுவது தமிழக அரசின் மிகப்பெரிய அராஜகத்தை தான் காட்டுகிறது. தி.மு.க., எப்போதுமே பத்திரிகையாளர்கள், மீடியாக்களை நசுக்குவதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டால் அவர்கள் நல்லவர்கள். எதிராக வெளியிட்டால் உடனே அவர்கள் கெட்டவர்கள்.
சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவுப்படுத்துகிறது. கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.
தமிழக பா.ஜ.க. கட்சியின் சார்பில் பூத்களை வலிமைப்படுத்தும் பணி ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக நடந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியான எங்களது கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் இணைந்து, வேலைகளை வேகப்படுத்தி செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின்போது கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் கரு.மாரிமுத்து (கோவை வடக்கு), தர்மண் (நீலகிரி), செந்தில்குமார் (ஈரோடு வடக்கு), மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ், மாவட்டசெயலாளர்கள் உமாசங்கர், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஆனந்தகுமார் சாமிநாதன், காரமடை நகர தலைவர் சதீஸ்குமார், மேட்டுப்பாளையம் நகர தலைவர் கே.ஆர்.எஸ்.சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.






