என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அந்தஸ்து பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம்
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று மும்பை வந்தடைந்தார்.
இன்று பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இந்தோ-பசிபிக் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்தும், உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்தும் ஸ்டார்மர் உடன் விவாதித்தேன்.
பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்கும்.
ஜூலை மாதம், எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம் " என்று தெரிவித்தார்.
இதன்பின் பேசிய கெய்ர் ஸ்டார்மர், 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2028-க்குள் இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற முயற்சிக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். 2047-க்குள் முற்றிலும் வளர்ந்த நாடு என்ற உங்களின் கொள்கை நிச்சயம் நிறைவேறும்.
உங்களின் பயணத்தில் நாங்கள் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறோம்காமன். காமன்வெல்த், ஜி20 இல் நாங்கள் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அந்தஸ்து பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம்' என்று கூறினார்.
- கரூரில் என்ன பூதமா உள்ளது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
- கரூரில் விஜய் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,"கரூரில் என்ன பூதமா உள்ளது" என கேள்வி எழுப்பினார்.
கரூரில் விஜய் உயிருக்க ஆபத்து உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? யார் வேண்டுமானாலும் கரூர் வரலாம். கரூர் மக்கள் ரொம்ப அன்பானவர்கள். கரூரில் என்ன பூதமா உள்ளது
அதிமுகவும்- தவெகவும் வெவ்வேறு பாதையில் உள்ள கட்சிகள், பொறுத்திருந்து பார்ப்போம். விசிகவினர் திருமாவளவன் கண்முன்னரே ஒருவரை அடித்ததற்கு இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதியப்படவில்லை.
விசிக தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கு திருமாவளவன் தான் பொறுப்பு. ஆதவ் அர்ஜூனாவை கட்சியை விட்டு அனுப்பிவிட்டு ஏன் இன்னும் திருமாவளவன் அவருடன் நட்பு பாராட்டுகிறார்?
ஆதவ் அர்ஜூனாவை தவெகவுக்கு அனுப்பி வைத்துவிட்டு திருமாவளவன் பாஜக மீது குறை கூறுவதா? கோவையில் பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தததை வரவேற்கிறோம்.
ஆனால், எம்ஜிஆர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை ஏன் வைக்கவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.
- 93-வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது.
- இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் நேற்று கடைபிடிக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.
இந்நிலையில் நேற்று விழாவின் ஒரு பகுதியாக இரவு விருந்தின்போது பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானை கிண்டலடிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்ட இடங்களின் பெயரால் பல உணவுகளுக்கு பெயரிடப்பட்டது.
மெனுவில் உள்ள உணவுகள்: ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா, ரஃபிகி ராரா மட்டன், போலாரி பனீர் மேத்தி மலாய், சுக்கூர் ஷாம் சவேரா கோஃப்தா, சர்கோதா தல் மக்கானி, ஜகோபாபாத் மேவா புலாவ், பகவல்பூர் நான்.
இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.
மெனுவின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏப்ரல் 22 இல் 26 உயிர்களை பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இரவு பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
- நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் தனது காலணியை வீச முயன்றார்.
- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.
அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.
இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய தலைமை நீதிபதி, "வழக்கறிஞர் ஒருவர் தன் மீது காலணி வீசிய சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானேன். ஆனால், அது ஒரு மறக்க வேண்டிய கடந்தகால நிகழ்வாகவே பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.
- ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான்.
- 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மீனவர்கள் கைது சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், இன்று (09.10.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இன்று (09.10.2025) அதிகாலை, ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 47 மீனவர்கள் (30 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் 17 காரைக்கால் மீனவர்கள்) இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதல்-அமைச்சர், சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும் என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் 2025-ம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான் என தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும் வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சாதாரண வீரராக மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை பெற்று தந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவை சாதாரண வீரராக மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன என்பது குறித்து சுப்மன் கில்லிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கில் கூறியதாவது:-
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளனர். அவர்களின் ரெக்கார்டை அவ்வளவு எளிதாக யாராலும் மேட்ச் செய்யவே முடியாது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் திறமை, அனுபவம் ஆகியவற்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தற்போதைய சூழலில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரின் இந்திய அணியின் எதிர்கால திட்டத்தில் இருக்கின்றனர்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உடனான நட்பு சிறப்பாக உள்ளது. இந்திய அணி வீரர்களை பாதுகாப்புடன் உணர வைப்பது எப்படி என்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து வருகிறோம்.
என்று கில் கூறினார்.
- 19,650 கோடி செலவில் இந்த விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.
- அதானி குழும பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்தான ஹிண்டன்பெர்க் அறிக்கையை அரசின் செபி அமைப்பு நிராகரித்தது
மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்துச் சுமையைக் குறைக்க நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
குன்றுகளை தரைமட்டமாக்கி, ஆறுகளை மடைமாற்றிவிட்டு, நிலப்பரப்புகளை இணைக்க பாலங்கள் அமைத்து 1,160 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.19,650 கோடி செலவில் இந்த விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.
அதானி ஏர்போர்ட்ஸ் மற்றும் பொது-தனியார் கூட்டு முயற்சியில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விமான நிலையம் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி அதானிக்கு ஷீல்ட் கொடுக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.
அந்த புகைப்படத்தில், மோடிக்கு அதானி ஷீல்ட் கொடுப்பதுபோல் சித்தரிக்கப்பட்டு, அதானி குழுமத்தின் சிறந்த ஊழியருக்கான வாழ்நாள் விருது மோடிக்கு கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மோடியின் அர்ப்பணிப்பு அதானி குழுமத்தை மென்மேலும் வளர செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான அரசு திட்டங்களின் டெண்டர்கள் அதானிக்கு வழங்கப்படுவது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது தெரிந்ததே. தாராவி மறுக்கட்டுமான திட்டம், பழங்குடியினர் மற்றும் சுற்றுசூலை பாதிக்கும் என விமர்சனத்துக்குள்ளாகும் கிரேட்டர் நிகோபார் திட்டம் உள்ளிட்டவை அதானி குழுமம் வசம் செல்வதை காங்கிரஸ் சுட்டிக்காட்டி வருகிறது.
மேலும் அண்மையில் அதானி குழும பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்தான ஹிண்டன்பெர்க் அறிக்கையை அரசின் செபி அமைப்பு நிராகரித்தது அதானிக்கு நிவாரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
- அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார்.
- அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் ஒய். புரன் குமார். ரோதக் சரக ஐ.ஜியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் போலீஸ் மையத்தின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே புரன் குமார் சண்டிகரில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். புரன் குமாரின் மனைவி அம்னீத்குமாரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அவர் அரியானா அரசில் வெளியுறவு ஒத்துழைப்புத் துறை ஆணையாளர் மற்றும் செயலாளராக உள்ளார்.
அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார். கணவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்து அவர் நாடு திரும்பினார்.
இந்தநிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரியானா மாநில போலீஸ் டி.ஜி.பி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் மீது அம்னீத்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
போலீசில் அம்னீத்குமார் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
டி.ஜி.பி சத்ருஜீத் கபூர், ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் எனது கணவரை பொய்யான புகாரில் சிக்க வைக்க சதித்திட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது சாதாரண தற்கொலை வழக்கு அல்ல.
ஒரு பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியை சக்திவாய்ந்த மேலதிகாரிகளால் திட்டமிட்டு துன்புறுத்தியதன் நேரடி விளைவு ஆகும். அதிகாரம் மிக்கவர்களின் கொடுமையால் உடைந்து போன எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் அம்னீத்குமார் கூறும்போது, பல ஆண்டு களாக எனது கணவர் அவமானம், துன்புறுத்தலை எதிர்கொண்டார். டி.ஜி.பி கபூரின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு அற்பமான புகாரில் தன்னை பொய்யாக சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டப் படுவதாக எனது கணவர் என்னிடம் தெரிவித்து இருந்தார் என்றார். அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- விருஷபா படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- விருஷபா படத்திற்கு Sam CS இசை அமைத்துள்ளார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மோகன்லால் அடுத்ததாக விருஷபா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு பான் இந்தியன் காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விருஷபா படம் நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக விதி மீறல்கள் நடைபெற்றது.
நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்தார். இதனையடுத்து கன்னட பிக்பாஸ் செட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடி சீலிடப்பட்ட பிக்பாஸ் ஸ்டூடியோ, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தலையீட்டின் பேரில் மீண்டும் திறக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மட்டுமல்லாது கலாச்சாரத்திற்கும் கேடான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என இதற்கு கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
- இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
- 2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்ட்டது.
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
முதலாவதாக மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.''
உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை' ( László Krasznahorkai) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.
- ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த மைதானத்தில் டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.
மதுரை:
வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகில் 11½ ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.
மழை பெய்தால் விரைவாக தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் கேலரி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 7,300 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மைதானம் அதன் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான். இதை இந்திய முன்னாள் கேப்டன் தோனி இன்று திறந்து வைக்கிறார். எதிர்காலத்தில் இங்கு டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகில் 11½ ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியத்தை தோனி இன்று திறந்து வைத்துள்ளார்.






