என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி.
    • பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும்

    டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.

    மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    டெல்லியில் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை மட்டும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை விற்கவும் அனுமதி அளித்துள்ளது.

    பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லியில் மாலை 6 - இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள மங்கலபுரி பகுதியிலுள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இன்று திடீரென்று வாலிபர் ஒருவர் மருத்துவமனையின் மாடியில் இருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

    பரப்பரப்பான இந்த சூழலில் அந்த வாலிபரிடம் கீழே இறங்குமாறு வேண்டுகோள் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது தகுந்த நேரத்திற்குள் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரால் அந்த வாலிபர் பத்திரமாக காப்பாற்றப்பட்டார். மேலும், அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா ? அல்லது எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலிபரின் இந்த தீடீர் தற்கொலை முயற்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அவர் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.



    • முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
    • ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இதனை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.

    7 மாதங்களுக்கு பிறகு இருவரும் களம் காணுவதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால், பிரஷித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜூரல், நிதிஷ் குமார், ஹர்ஷித் ராணா ஆகியோர் புறப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • குண்டலப்பள்ளி -கனிகிரி புறவழி சாலை பணிக்காக ரூ. 4,920 கோடியில் அடிக்கல் நாட்டுகிறார்.
    • கெயில் எரிவாயு திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    நாளை கர்னூலில் உள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவை பார்வையிடுகிறார். பின்னர் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    ஓர்வக்கல் மற்றும் கொப்பர்த்தி தொழில்துறை வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார். பாபக்கினி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கிறார். குண்டலப்பள்ளி -கனிகிரி புறவழி சாலை பணிக்காக ரூ. 4,920 கோடியில் அடிக்கல் நாட்டுகிறார். சப்பாவரம்-ஷீலாநகர் இடையே ரூ. 960 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பசுமை சாலை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பீலேறு- கலூரு இடையே 4 வழி சாலை விரிவாக்க பணிக்கு ரூ.1,140 கோடியில் பணியை தொடங்கி வைக்கிறார். கெயில் எரிவாயு திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்- மந்திரி பவன் கல்யாண், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    பிரதமர் மோடி நந்தியால் மாவட்டத்தில் உள்ள மல்லிகார்ஜூன சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீசைலம் கோவில்களில் பூஜை செய்து வழிபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவெறும்பூர் பகுதி பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள இடம்.
    • நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரெயில் இன்று முதல் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு புறப்பட்ட அந்த ரெயிலில் திருவெறும்பூரில் இருந்து திருச்சி எம்.பி. துரை வைகோ ஏறி தஞ்சையில் வந்து இறங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவெறும்பூர் பகுதி பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள இடம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பலமுறை மத்திய ரெயில்வே அமைச்சர், ரெயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தேன்.

    அதன் பயனாக இன்று முதல் திருச்சி-தாம்பரம் ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு வந்து நடைமுறைக்கு வந்தது. இது திருச்சி மக்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த சிறப்பு ரெயில் போலவே அனைத்து அதிவிரைவு ரெயில்களும் திருவெறும்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தனர்.
    • ஆசிய கோப்பையில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்

    பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா பாகிஸ்தான் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதனால் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி பேசுபொருளானது.

    இதனையடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி விரும்பாததால் இப்போது வரை ஆசிய கோப்பை இந்திய அணியிடம் வழங்கப்படவில்லை.

    இதனையடுத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.

    இந்நிலையில், ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஹைபை கொடுத்துக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மலேசியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 21 வயதிற்குட்பட்ட சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி 3-3 என்ற கணக்கில் டிரா ஆனது.

    • ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே ஆதாரம் இத்தகைய கல்வி உதவித் தொகைகள் தான்.
    • அனைத்து மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை இன்னும் வழங்கப்படாததால் அவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் தேவையற்ற தாமதம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித் தொகை (Post Matric Scholarship Scheme) வழங்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி பயிலும் ஏழைக்குடும்ப மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக இந்த உதவித் தொகையைத் தான் நம்பியிருக்கிறார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதலாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையாக தலா ரூ. 52,980 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

    முதலாம் ஆண்டின் இறுதியில் இந்த உதவித் தொகை முழுமையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.52,980 வழங்குவதற்கு பதிலாக இதுவரை மொத்தம் ரூ.3025 மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள ரூ.49,955 இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், அந்த மாணவர்களால் இரண்டாம் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை. உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்தும்படி பல்கலைக்கழகம் கெடுபிடி காட்டி வரும் நிலையில், உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்கப்படாவிட்டால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் இன்னும் கல்வி உதவித் தொகை வழங்கப்படாததற்கு, இதற்கு பொறுப்பான பல்கலைக்கழக அதிகாரிகளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை அதிகாரிகளும் தான் காரணம் ஆவர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாணவர்கள் சந்தித்து முறையிடும் போதெல்லாம் அவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்களே தவிர, எவரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே ஆதாரம் இத்தகைய கல்வி உதவித் தொகைகள் தான். அவை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும். இதை உணர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் உள்பட இதுவரை கல்வி உதவித் தொகை வழங்கப்படாத அனைத்து மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகின.
    • இன்றைய சட்டசபை நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அது தொடர்பாக நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகின.

    இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ள மசோதாக்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் மிகவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில், அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருமொழிக்கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்றைய சட்டசபை நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.
    • அனைவருக்கும் ஒன்றாக பி.பி. அதிகமாகி விட்டதோ என்று நினைத்தேன் என்று கூறினார்.

    தமிழக சட்டசபையின் 2-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளில் கருப்பு பட்டையை அணிந்து வந்தனர். கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.

    இந்நிலையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்தார்.

    இதுதொடர்பாக அவர், அனைவருக்கும் ஒன்றாக பி.பி. அதிகமாகி விட்டதோ என்று நினைத்தேன் என்று கூறினார்.

    சிறையில் அடையாள பட்டை அணிந்திருப்பது போல் அ.தி.மு.க.வினர் வந்துள்ளனர் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

    அ.தி.மு.க.வினர் குறித்த சபாநாயகர், அமைச்சர் ரகுபதியின் கிண்டலால் சட்டசபையில் சிரிப்பலை உண்டானது.

    • டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்.
    • வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நினைவூட்டுகிறது.

    ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார். அவருக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனால் அவர்களோடு உரையாடி வந்தார்.

    இன்று ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம். இளைஞர்களை தூண்டி, நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார். வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை... வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
    • சட்டசபையின் 2-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அதன்பின்னர், கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர். அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதும் நேற்றைய கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து.

    இந்நிலையில் தமிழக சட்டசபையின் 2-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளில் கருப்பு பட்டையை அணிந்து வந்தனர். கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.

    • மண்டல வாரியாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.
    • அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்கூட்டியே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. மேலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மண்டல வாரியாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர். 

    ×