என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
- ராஷ்டிரிய ஜனத தளம் 101 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 இடங்களிலும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
தொகுதி பங்கீடு செய்யப்பட்ட பிறகும் கூட அந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் அதன் மற்ற தோழமை கட்சிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு கணிசமாக 29 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதால் மற்ற தோழமை கட்சிகளுக்குள் அதிருப்தி நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக நிதிஷ்குமாரின் கோட்டை என்று சொல்லப்படும் ராஜகீர், சோன்பர்ஸா இடங்களை சிராகின் கட்சி உரிமை கோரி வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது.
- தற்போது டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன.
- தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய 2 நாட்களும் விடுமுறை தினங்கள் ஆகும். இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி தீபாவளி பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் அதன் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறைகள் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களிலும் மதுபானங்கள் தேவை சீராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் முக்கியமான இடங்களில் கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக பீர் வகைகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்படும்.
தற்போது டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன. அவற்றில் 5 முதல் 7 வகையான பீர்கள் வேகமாக விற்பனையாகின்றன. அந்த 7 வகை பானங்களும் கையிருப்பில் இருப்பதை கண்காணிக்க மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் விற்பனை பொதுவாக 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும். பண்டிகை காலங்களில், வழக்கமாக 15 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3 நாட்களில் ரூ.460 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்தது. கடந்த 2024-ம் ஆண்டு 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளது.
டாஸ்மாக்கின் தினசரி வருவாயில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கிட்டத்தட்ட 40 சதவீதம் பங்களிக்கின்றன. விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- பூஜ்ஜிய நேரத்தில் முதலில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு தராமல் முதலமைச்சரை பேச அனுமதி அளித்தது ஏன்?
- முதலமைச்சர் கூறிய கருத்துகள் அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தி.மு.க. அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினோம்.
* கரூர் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் கேள்விகளை எழுப்பிய பின்னர்தான் முதலமைச்சரை பேச சபாநாயகர் அனுமதித்திருக்க வேண்டும்.
* எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பிய பின் தான் முதலமைச்சர் அதற்கு பதில் கூற வேண்டும், முன்னதாகவே விளக்கம் அளித்தது ஏன்?
* பூஜ்ஜிய நேரத்தில் முதலில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு தராமல் முதலமைச்சரை பேச அனுமதி அளித்தது ஏன்?
* முதலமைச்சர் கூறிய கருத்துகள் அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.
* முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது.
* போதிய பாதுகாப்பு தராமல் அரசு அலட்சியமாக இருந்ததால் 41 பேர் பலி.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் நடித்த படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல்முறையாகும்.
- ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை.
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்`டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார்.
டீசல் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், என்னுடைய படம் எல்லாம் தீபாவளிக்கு வெளியாக கூடாதா? என்று டீசல் படம் குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
டீசல் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹரிஷ் கல்யாண், "நான் நடித்த படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல்முறை. இது சந்தோஷமாக இருந்தாலும், சில விமர்சனங்கள் என்னை காயப்படுத்துகின்றன. என் தயாரிப்பாளர்களிடம் "டீசல் படம் தீபாவளிக்கு வெளியிட என்ன தகுதி இருக்கிறது? பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் இல்லையே?" என கேட்கின்றனர். ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை. படத்துக்கு நல்ல கதை, நல்ல ஆட்கள் இருந்தால் போதாதா?" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
- இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரெயிலில் 1300 பேர் உட்கார்ந்து செல்ல முடியும்.
- மதுரையில் இருந்து சென்னைக்கு அன்று இரவே திரும்பும் வகையில் இந்த சேவை அமைகிறது.
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
17, 18, 19 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு ரெயில்களில் இடமில்லை. அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மேலும் சில சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடிய மக்கள் வசதிக்காக மதுரை வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலை (மெமு) இயக்குவதற்கு ஆலோசிக்கப்படுகிறது. இந்த ரெயில் 12 பெட்டிகளுடன் பகல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது.
இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரெயிலில் 1300 பேர் உட்கார்ந்து செல்ல முடியும். 700 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும் என்பதால் 2000 பேர் வரை பயணிக்கலாம்.
கடைசி நேர கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தீபாவளிக்கு முதல் நாள் வீடு சேரும் வகையில் முன்பதிவு இல்லாத ரெயில் விடப்படுகிறது. இதே போல மதுரையில் இருந்து சென்னைக்கு அன்று இரவே திரும்பும் வகையில் இந்த சேவை அமைகிறது.
மேலும் 18-ந்தேதி இரவு எழும்பூரில் இருந்து மதுரை அல்லது நெல்லைக்கு சிறப்பு ரெயில் இரவு 11 மணிக்கு மேல் இயக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. இது தவிர தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மாலையில் சிறப்பு ரெயில்களை அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தமிழ் செல்வன் கூறியதாவது:-
ரெயில்களில் உள்ள காத்திருப்போர் பட்டியலை கண்காணித்து வருகிறோம். சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிக்கு செல்ல கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்க ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக மதுரைக்கு பகல் நேர முன்பதிவு இல்லாத ரெயில் இயக்கப்படும்.
இரவிலும் சில ரெயில்களை இயக்க ஆலோசித்து வருகிறோம். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளிவரும். காலி ரெயில் பெட்டிகளை கணக்கெடுத்து அதற்கேற்ப சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அந்த நாட்களை கணக்கிட்டு கூடுதல் ரெயில்கள் விடப்படும்.
மேலும் பீகார் மாநிலத்துக்கு செல்ல கூடிய ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருக்கிறோம். கூட்ட நெரிசலை குறைக்க நடைமேடை டிக்கெட் நிறுத்தம் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகள் ஒரு சில முக்கிய ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்றார்.
- கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.
- காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின்பு ஹிஜாப் தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் உத்தரவு நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின்பு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநில கொச்சியில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் மாணவி ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, முஸ்லிம் மாணவியை ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வர அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத உரிமைகள் மற்றும் RTE சட்டத்தை சுட்டிக்காட்டி, கல்வி அமைச்சர் சிவன்குட்டி ஹிஜாப் தடையை நீக்க உத்தரவிட்டார்.
- எப்படியாவது கலவரம் செய்ய வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வந்துள்ளனர்.
- தங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இப்படி ஒரு போர்க்குரல் அ.தி.மு.க.வினரிடம் இருந்து வருமா எனத் தெரியவில்லை.
சென்னை:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர்.
இதனிடையே, சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* கூட்டணிக்காக தான் அ.தி.மு.க. இப்படி செய்கின்றனர்.
* என்ன கூட்டணி அமைத்தாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
* அதிமுக- தவெக கூட்டணி அமைந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
* எப்படியாவது கலவரம் செய்ய வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வந்துள்ளனர்.
* தங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இப்படி ஒரு போர்க்குரல் அ.தி.மு.க.வினரிடம் இருந்து வருமா எனத் தெரியவில்லை.
* அ.தி.மு.க. எந்த மெகா கூட்டணி அமைத்தாலும் பயன் தராது என்றார்.
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர்.
- அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை :
தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. முதலில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விவாதித்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.வுக்கு இன்று ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு பேசினார்.
அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் எதை எதை நீக்க வேண்டும் என்று இருக்கையில் அமர்ந்து சொல்லுங்கள் என்று துரைமுருகன் கூறினார்.
இருப்பினும், சபாநாயகர் இருக்கையின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்ததால் அ.தி.மு.க.வினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
- இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணியுடன் அடுத்தடுத்து தோல்வியடைந்தது.
- இந்திய அணி வரும் 19-ந் தேதி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மட்டும் இலங்கை நடக்கிறது.
8 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அதன் அடிப்படையில் முதல் 4 இடங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளனர். அடுத்த 4 இடங்களில் நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் உள்ளனர்.
முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதனால் 4 புள்ளிகளுடன் இந்திய அணி 4-வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி வரும் 19-ந் தேதி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
- இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த 74 வயதான முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால், தான் இறந்தது போல் நடித்து தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், தான் மரணமடைந்தால் இந்த ஊரில் யார் எல்லாம் தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு வருவார்கள், யாரெல்லாம் என் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்று அறிய மோகன் லாலுக்கு ஆசை ஏற்பட்டது.
இதையடுத்து தான் இறந்தது போல மொகல் லால் தனக்கு இறுதிச்சடங்கு நடத்தினார். இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, எழுந்து உட்கார்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிகாரிகள் பேட்டி கொடுக்கவில்லையா?
கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியானபோது கள்ளக்குறிச்சி செல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்றது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள். ஆனால் கரூரில் அப்பாவி மக்கள் இறந்ததால் அங்கு சென்றேன்.
கரூரில் கூட்ட நெரிசலில் அப்பாவி பொதுமக்கள் மிதிபட்டு இறந்ததால் அங்கு உடனடியாக சென்றேன்.
ஒருநபர் ஆணையம் அமைத்த உடனேயே அதிகாரிகள் சம்பவம் குறித்து பேட்டி அளித்தது ஏன் என இ.பி.எஸ். கேள்வி எழுப்பினார்.
அதற்கு, கரூர் விவகாரத்தை திட்டமிட்டு அரசியலாக்கி பொதுவெளியில் வதந்திகள் பரவியதால் தான் அதிகாரிகள் பேட்டி அளித்தனர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிகாரிகள் பேட்டி கொடுக்கவில்லையா?
கரூர் சம்பவம் தொடர்பாக அரசியல் ரீதியாக இல்லை, அலுவல் ரீதியாக மட்டும்தான் அதிகாரிகள் பேட்டி அளித்தனர் என்று கூறினார்.
- 28-ந்தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் உடற்கூராய்வு செய்யும் பணிகள் தொடங்கின.
- 5 மேசைகளில் உடற்கூராய்வு நடைபெற்றது.
சென்னை :
தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. முதலில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்? நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்? 39பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்? என்று பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து கூறியதாவது:-
* இறந்தவர்கள் குடும்பத்தாரின் மனநிலையை கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் விரைவாக உடற்கூராய்வுகள் நடைபெற்றது.
* 28-ந்தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் உடற்கூராய்வு செய்யும் பணிகள் தொடங்கின.
* 5 மேசைகளில் உடற்கூராய்வு நடைபெற்றது. 14 மணி நேரமாக உடற்கூராய்வு நடைபெற்றது.
* உடற்கூராய்வு செய்யப்பட்ட நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
* குஜராத் விமான விபத்தின் போது 12 மணி நேரத்தில் உடற்கூராய்வு நடந்து முடிந்தது.
* உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல என்றார்.






