என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்
- டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் 4 ஆவது பாடல் 'கண்ணுக்குள்ள' இன்று மாலை வெளியாகவுள்ளதாக இயக்குநர் கீர்த்திஸ்வரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அந்த பதிவில், 'டியூட்" படப்பிடிப்பின்போது பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- ஒவ்வொருமுறை வெளிநாடு செல்லும் போதும் விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்
- கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2007-ம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம், ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெற வெளிநாட்டு முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் மீது சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது டெல்லி உயர்நீதிமன்றம்
ஒவ்வொருமுறை வெளிநாடு செல்லும் போதும் விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு கேட்டு கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்
மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வெளிநாடு செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டில் என்ன செய்யப் போகிறார் என்ற தகவல்களை மட்டும் விசாரணை நீதிமன்றத்தில் வழங்கினால் போதும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை.
- இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம் என கூறினார்.
- அமராவதி, விசாகப்பட்டினத்தை தலைசிறந்த நகராக மாற்றுவதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.
- உலகத்தரம் வாய்ந்த ஏஐ நிபுணர்கள் இங்கு பயிற்சி பெறுவார்கள்.
மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதுணையாக இருந்து வருகிறார். தற்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் சந்திரபாபு நாயுடு காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு உதவியுடன் கொண்டு வருகிறார்.
அவர் ஆட்சி அமைத்து 16 மாத காலத்திற்குள் ரூ. 1.50 லட்சம் கோடிக்கு மேலான முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்கு கிடைத்துள்ளன. அமராவதி, விசாகப்பட்டினத்தை தலைசிறந்த நகராக மாற்றுவதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.
இந்தநிலையில் விசாகபட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி) முதலீட்டில் அமைகிறது.
அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
உலகளவில் கிளவுட் சேவைகள் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், கூகுளின் இந்த பிரம்மாண்ட முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த ஏஐ நிபுணர்கள் இங்கு பயிற்சி பெறுவார்கள். மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் முக்கிய துறைகளில் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் நிபுணர்கள். கிளவுட் ஆர்கிடெக்ட்கள், சைபர் பாதுகாப்பு. தரவு தனியுரிமை நிபுணர்கள் மற்றும் தரவு மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தேவை அதிகரிக்கும்.
நெட்வொர்க் உபகரணங்கள் சேமிப்பக அமைப்பு நிறுவல் பராமரிப்பு மற்றும் சரிசெய்தல்.. நிபுணர்கள் பல்வேறு துறைகளில் 24 நேரமும் பணியாற்ற வேண்டியிருக்கும். இதனால் வேலை வாய்ப்பு பெருகும்.
ஆந்திராவில் ஏஐ கண்டுபிடிப்புகள் துரிதப்படுத்தப்படும். இதன் மூலம் ஆந்திரா மட்டுமின்றி தென்னிந்திய வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு அடித்தளம் அமைத்துள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஐதராபாத் பெருநகரத்தை ஹைடெக் சிட்டியாக சந்திரபாபு நாயுடு மாற்றினார். அதேபோல விசாகப்பட்டினத்தையும் மாற்றி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.
- ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
- ரிதன்யாவுக்கு சொந்தமான 2 மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகிய மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, ரிதன்யாவுக்கு சொந்தமான 2 மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று தோழிகளிடம் ரிதன்யா பேசிய விவரங்கள் அந்த போனில் இருப்பதால், அந்த விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கவின் குமார் தரப்பில் வாதிடப்பட்டது.
மொபைல் போன்களை புலன் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 2 செல்போன்களையும் தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
- பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- புழல் ஏரிக்கு விநாடிக்கு 325 கன அடி நீர்வரத்து உள்ளது.
சென்னை புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 325 கன அடி நீர் வரத்து உள்ளது.
3,300 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் 3,006 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அதாவது, 21 அடி உயரம் கொண்ட ஏரியில் நீர்மட்டம் 19 அடி உள்ளது.
- IP68 மற்றும் IP69 தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது.
- ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே, செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட் அவுட் கொண்டிருக்கிறது.
சந்தைக்கு புதிதாக வந்திருக்கும் விவோ V60e, பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக, 200MP கேமராவுடன் ரூ.29,999 விலையில் கிடைக்கிறது. AI பெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
6,500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய விவோ V60e ஸ்மார்ட்போன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69 தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே, செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட் அவுட் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன் டச் ஓஎஸ் கொண்டிருக்கும் விவோ V60e ஸ்மார்ட்போனிற்கு, ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்டுகள் வழங்குவதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போன்றவை இதன் மதிப்பை உயர்த்துகிறது.
- ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஒருநாள் போட்டிக்கான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அந்த வகையில் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் 3-வது இடத்தில் இருந்து 10-வது இடத்தில் இருக்கும் பேட்டர்கள் ஒரு இடம் பின் தங்கினர். மற்றபடி பேட்டர் தரவரிசையில் மாற்றமில்லை.
அதேபோல் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றபடி இதிலும் மாற்றமில்லை.
ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் 5 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மற்றொரு வீரரான ஓமர்சாய் 19 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் பின் தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.
- இந்த பைக்கில் முதன் முதலாக டூயல் டிஸ்க் பிரேக்கை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
- ஐ-கோ அசிஸ்ட் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் ரைடர் 125 மோட்டார்சைக்கிள் வரிசையில் டூயல் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 124.8 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 3 வால்வு என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11.38 பிஎஸ் பவரையும், 11.2 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.
இந்த பைக்கில் முதன் முதலாக டூயல் டிஸ்க் பிரேக்கை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுபோல், 125 என்ஜின் பிரிவில் முதலாவதாக சில அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஐ-கோ அசிஸ்ட் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக இதில் பொருத்தப்பட்டிருக்கும் பாலோ-மி-ஹெட்லாம்ப், பார்க்கிங் செய்த பிறகு வீடு வரை செல்வதற்கு வழிகாட்டும் விளக்காக உதவும்.
நகர சாலையில் போக்குவரத்து நெரிசல்களிலும், சுலபமாக ஓட்டுவதற்கு ஏற்ப 'கிளைடு துரோ டெக்னாலஜி' தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. டி.எப்.டி. மற்றும் எல்.சி.டி. என இரண்டு வேரியண்ட்கள் இதில் உள்ளன. டி.எப்.டி. டிஸ்பிளேயுடன் கூடியது சுமார் ரூ.95,600 எனவும், எல்.சி.டி. ஸ்கிரீன் கொண்டது ரூ.93,800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- நல்ல பாக்டீரியாக்கள் அழிவதால் நமது உடலில் நோய்க்கிருமிகள் எளிதாக தொற்றிக்கொள்ளும்.
- புரோபயாட்டிக் நல்ல பாக்டீரியாவில் பொதுவாகவே பாதுகாப்பு தன்மைகள் அதிகமாக இருக்கிறது.
நமது உடலின் ஆரோக்கியத்துக்கு புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நமது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி அழிக்கின்றன. இதன் மூலம் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றன. இதில் முக்கியமாக குடல் பாக்டீரியா நமது ஆரோக்கியத்துக்கான அடிப்படை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதேபோல் பெண்களின் பெண் உறுப்புகளில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் அவர்களின் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. பெண்களின் கர்ப்பப்பைக்குள் நுழைய முயலும் தொற்றுக்களை தடுக்கும் முக்கியமான வேலைகளை இந்த நல்ல பாக்டீரியாக்கள் செய்கின்றன.
இந்த நல்ல பாக்டீரியாக்கள் அழிவதால் நமது உடலில் நோய்க்கிருமிகள் எளிதாக தொற்றிக்கொள்ளும். குறிப்பாக கர்ப்பப்பையில் நோய்த்தொற்றுக்கள் எளிதாக பரவி விடும். அப்படி பரவாமல் இருக்க யோனிப்பகுதியில் உள்ள பாக்டீரியாவின் அமிலத்தன்மை பி.எச். அளவை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை சீரமைக்கும் பாக்டீரியாக்கள்:
நமது உடலில் இயற்கையாக உள்ள நல்ல பாக்டீரியாக்கள் லாக்டோபேசிலிஸ் ஆகும். இவற்றில் கிரிஸ்பேக்டர்ஸ், கெசேரி, ஜென்சினி ஆகிய வகைகள் மிகவும் பொதுவான லாக்டோபேசிலிஸ் ஆகும். இதனுடைய தன்மையே இந்த அமிலத்தன்மை பி.எச். அளவை 3.5 முதல் 4.5 ஆக வைத்துக்கொள்ளும். அப்படி இருந்தால் தான் எந்தவித தொற்றுக்களும் நமது உடலின் உள்ளே நுழைய முடியாது.
எனவே பெண்களை பொருத்தவரைக்கும் கர்ப்பப்பை வாயில் பி.எச். அளவை பராமரிப்பது இந்த லாக்டோபேசிலிஸ் தான். இது மட்டுமல்ல, இந்த லாக்டோபேசிலிஸ் சில ஆன்டி பாக்டீரியாக்களை வெளிப்படுத்தும். அதாவது பாக்டீரியோசின், ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்த ஹைட்ரஜன் பெராக்சைடை புண்களை கழுவுவதற்கு பயன்படுத்துவோம்.
இவை அனைத்தையும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்கிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் யோனி பகுதியில் தங்கியிருப்பதால் எந்த கிருமிகளும் கர்ப்பப்பைக்குள் செல்ல முடியாது. இந்த லாக்டோபேசிலிஸ் அப்படி ஒரு பாதுகாப்பை கொடுக்கும். இதுதவிர இவை அந்த செல்லின் மேற்பரப்பு எல்லாவற்றிலுமே, அதனுடைய செல் ஏற்பிகளுடன் சேர்ந்து செல்கள் வழியாக தொற்றுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி ஒரு அடுக்கு போல உருவாகி காணப்படும்.
வெளியில் இருந்து ஏதாவது கெட்ட பாக்டீரியா நமது உடலின் உள்ளே நுழைந்து ஊடுருவினால், அது அதிகமாக பரவிய பிறகுதான் கிருமிகளிடம் இருந்து நோய் தாக்கம் ஏற்படும். இதனை தடுப்பதற்கு லாக்டோபேசிலிஸ் இதனுடைய செல்களின் சீட்ஸ் மேலே ஒரு பாதுகாப்பு படிவத்தை உருவாக்குகிறது. மேலும் ஆன்டிபயாடிக் போல வெளியிடுகிறது. அது தவிர இது ஒரு பாதுகாப்பு அடுக்கையும் உருவாக்குகிறது.
இவை தவிர இது நமது உடலில் சில நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் சீரமைக்கிறது. செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை சீரமைப்பதால் இதை கடந்து எந்த கிருமிகளும் நமது உடலில் நுழைய முடியாது. அது ஒரு பாதுகாப்பான நோய் எதிர்ப்பு சக்தி மெக்கானிசத்தையும் உருவாக்குகிறது. இதெல்லாம் இந்த நல்ல பாக்டீரியாவின் முக்கியமான விஷயங்கள் ஆகும்.
பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் பூஞ்சை தொற்று:
அப்படி இருக்கும் நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த நல்ல பாக்டீரியா பழுதானாலோ அல்லது அழிக்கப்பட்டாலோ அல்லது குறைவானாலோ பல நேரங்களில் நமது உடலில் எளிதாக சில கிருமிகள் தொற்றிக்கொள்ளும். முக்கியமாக பூஞ்சை நோய்த்தொற்று வரும். அதாவது பூஞ்சை தொற்று தான் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும். உடலில் ஏதாவது ஒரு பகுதியில் நோய்க்கிருமி வருகிறது என்றால், அந்த இடத்தில் பாதுகாப்பு இல்லாத அடுக்குகள் இருந்தால், உடனே பூஞ்சை தொற்று பரவி பெண்களுக்கு தொல்லை கொடுக்கும்.
இந்த பூஞ்சை நோய்த்தொற்றான கார்ட்னரெல்லா என்பது எளிதாக பரவும் தன்மை கொண்டது. இது உடலில் பரவும் போது தான் கிருமிகளும் உடலில் தொற்றி எளிதில் பரவலாம். அது வைரஸ் ஆக இருக்கலாம், பாக்டீரியாவாக இருக்கலாம், வேறு பலவிதமான தொற்றுக்களாக இருக்கலாம், அருகில் இருக்கிற மலக்குடல் பகுதியில் ஈகோலை எனப்படும் கெட்ட பாக்டீரியா வரலாம், பல நேரங்களில் சிறு நீர்க்கு ழாயிலும் கெட்ட பாக்டீரியா ஊடுருவலாம். அதாவது நமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியா பழுதடைந்தால், அந்த பகுதியில் பாதுகாப்பு தன்மை குறைவாகி, அந்த நோய்த்தொற்றுகள் நமது உடலில் எளிதாக பரவுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். நமது உடலில் எப்பொழுதெல்லாம் பாக்டீரியா பழுதடையலாம் என்று பார்க்கலாம்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
நல்ல பாக்டீரியாக்கள் அழிவதற்கான காரணங்கள்:
குறிப்பாக ஏதாவது நோய்க்காக நாம் ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிடும்போது இந்த நல்ல பாக்டீரியாக்கள் பழுதடைய வாய்ப்பு உள்ளது. நமது உடலில் ஏதோ ஒரு நோய் வரும்போது நாம் என்ன நினைக்கிறோம்? உடனே ஆன்டிபயாட்டிக் மருந்து சாப்பிடுகிறோம். அந்த ஆன்டிபயாடிக் நோய்க்கிருமிகளை மட்டுமல்லாமல், சில நேரங்களில் இந்த நல்ல பாக்டீரியாவையும் பழுதடைய செய்யும். இன்னும் சில நேரங்களில் நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
இதனால்தான் சில பெண்களுக்கு நல்ல பாக்டீரியாக்கள் குறைவதால் பல நேரங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு விடும். இதை நீங்கள் பல நேரங்களில் உணர்ந்து இருப்பீர்கள். அதாவது ஏதோ ஒரு காரணத்துக்காக பெண்கள் ஆன்டிபயாடிக் மருந்து எடுக்கும் போது, அவர்களுக்கு யோனி பகுதியில் அரிப்பு ஏற்படும், வெள்ளைப்படுதல் ஏற்படும், அரிப்பு இருக்கும், நமைச்சல் இருக்கும். இவை அனைத்தும் பூஞ்சை தொற்றுகள் வருவதால் ஏற்படுகிறது. இதனால் பெண்கள் பலரும் அவதிப்படுவது உண்டு.
இந்த பூஞ்சை தொற்றுகள் ஏன் வந்தது என்று பார்த்தால், நாம் சாப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்து அந்த நல்ல பாக்டீரியாவை அழித்துவிடுகிறது. அல்லது அதை பழுதாக்கி விடுகிறது. அதனுடைய செயல்பாடு குறைவானவுடன் கிருமிகள் பரவி பூஞ்சை தொற்றுக்கள் எளிதாக ஏற்பட்டு விடுகிறது. இதுதான் இதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
அதனால்தான் பொதுவாகவே ஆன்டிபயாடிக் மருந்து எடுக்கும்போது முக்கியமாக, நல்ல பாக்டீரியாக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, குறிப்பிட்ட வகையான ஆன்டிபயாடிக் மருந்து எடுங்கள் என்று சொல்கிறோம். அப்படி குறிப்பிட்ட வகை ஆன்டிபயாடிக் எடுக்கும்போது கூட, நல்ல பாக்டீரியாக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் கூடவே சில மருந்துகள் எடுத்தால் இந்த மாதிரி எளிதில் பரவக்கூடிய பூஞ்சை உள்ளிட்ட தொற்றுகள் வராமல் தடுக்க முடியும். இதெல்லாம் சில முக்கியமான விஷயங்கள். இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்:
எனவே அந்த வகையில் புரோபயாடிக் எனப்படும் இந்த நல்ல பாக்டீரியாவான லாக்டோபேசிலிஸ், நமது உடலுக்கு நல்ல ஒரு பாதுகாப்பை கொடுக்கும் பாக்டீரியாவாக இருக்கிறது. அதனால் தான் பொதுவாகவே இந்த நல்ல பாக்டீரியாக்கள் பழுதாகக்கூடாது. அதனால் தான் நாம் ஆன்டிபயாடிக் எடுக்கும்போது, கூடவே நல்ல பாக்டீரியாக்களை பாதுகாப்பதற்கான ஒரு மருந்தையும் எடுத்துக்கொள்வோம். அதாவது நல்ல பாக்டீரியா இருக்கும் மற்றொரு மருந்தை கூடுதலாக எடுத்துக்கொள்வோம்.
இந்த புரோபயாட்டிக் நல்ல பாக்டீரியாவில் பொதுவாகவே பாதுகாப்பு தன்மைகள் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்தும் இந்த ஆன்டிபயாடிக்கின் தாக்கத்தால் உருவாகிற எதிர்மறை விளைவை குறைத்து ஆரோக்கியமான செல்கள் வளர்வதற்கும், பாதுகாப்பு அடுக்கு உருவாவதற்கும் உதவி செய்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம்.
இந்த வகையில் எந்த ஒரு ஆன்டிபயாடிக்கும் இந்த புரோபயாடிக் பாக்டீரியாவை அழித்து விடாமல் பார்ப்பதற்கு, நாம் ஒரு புரோபயாடிக் மருந்து எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம். பெண்களின் ஒவ்வொரு வாழ்க்கை தரத்திலும், குறிப்பாக மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும். எனவே அந்த புரோபயாடிக் பாக்டீரியா அழிந்துவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும்.
இந்த புரோபயாடிக் பாக்டீரியா இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல. இதை சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். இந்த நல்ல பாக்டீரியாவை அவர்கள் எப்படி கண்டு பிடித்தார்கள்? இந்த நல்ல பாக்டீரியாவை நமது உடலில் அதிகப்ப டுத்துவது எப்படி? அதற்கு என்னென்ன வகையான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்? இதைப்பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
- நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் அப்துல் கலாம் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்தவர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை - முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்!
உயர்கல்விக்காக நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் தன்னிறைவுக்கும் உழைத்தால், அதுதான் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்குச் செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக்கடன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.
- மகுடம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலி நடித்து வருகிறார்.
விஷாலின் 35ஆவது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கி வந்தார். இப்படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.
விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.
இந்நிலையில், ரவி அரசு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகுடம் படத்திலிருந்து ரவி அரசு விலகிய நிலையில், இப்படத்தை நடிகர் விஷால் இயக்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.






