என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எழும்பூர்-மதுரைக்கு முன்பதிவு இல்லாத பகல் நேர சிறப்பு ரெயில்
- இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரெயிலில் 1300 பேர் உட்கார்ந்து செல்ல முடியும்.
- மதுரையில் இருந்து சென்னைக்கு அன்று இரவே திரும்பும் வகையில் இந்த சேவை அமைகிறது.
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
17, 18, 19 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு ரெயில்களில் இடமில்லை. அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மேலும் சில சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடிய மக்கள் வசதிக்காக மதுரை வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலை (மெமு) இயக்குவதற்கு ஆலோசிக்கப்படுகிறது. இந்த ரெயில் 12 பெட்டிகளுடன் பகல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது.
இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரெயிலில் 1300 பேர் உட்கார்ந்து செல்ல முடியும். 700 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும் என்பதால் 2000 பேர் வரை பயணிக்கலாம்.
கடைசி நேர கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தீபாவளிக்கு முதல் நாள் வீடு சேரும் வகையில் முன்பதிவு இல்லாத ரெயில் விடப்படுகிறது. இதே போல மதுரையில் இருந்து சென்னைக்கு அன்று இரவே திரும்பும் வகையில் இந்த சேவை அமைகிறது.
மேலும் 18-ந்தேதி இரவு எழும்பூரில் இருந்து மதுரை அல்லது நெல்லைக்கு சிறப்பு ரெயில் இரவு 11 மணிக்கு மேல் இயக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. இது தவிர தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மாலையில் சிறப்பு ரெயில்களை அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தமிழ் செல்வன் கூறியதாவது:-
ரெயில்களில் உள்ள காத்திருப்போர் பட்டியலை கண்காணித்து வருகிறோம். சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிக்கு செல்ல கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்க ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக மதுரைக்கு பகல் நேர முன்பதிவு இல்லாத ரெயில் இயக்கப்படும்.
இரவிலும் சில ரெயில்களை இயக்க ஆலோசித்து வருகிறோம். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளிவரும். காலி ரெயில் பெட்டிகளை கணக்கெடுத்து அதற்கேற்ப சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அந்த நாட்களை கணக்கிட்டு கூடுதல் ரெயில்கள் விடப்படும்.
மேலும் பீகார் மாநிலத்துக்கு செல்ல கூடிய ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருக்கிறோம். கூட்ட நெரிசலை குறைக்க நடைமேடை டிக்கெட் நிறுத்தம் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகள் ஒரு சில முக்கிய ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்றார்.






