என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இலங்கையில் நிலச்சரிவு, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
    • இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், டியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இலங்கையில் நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 341 பேரை காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.

    • ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன்.
    • கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.

    இந்தியாவுக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி, ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பரிசாக வழங்கினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என்று தெரிவித்தார்.

    • 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • முதல் இன்னிங்சில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி தற்போது வரை 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    இதில் மார்னஸ் லபுஷேன் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவரது 25-வது டெஸ்ட் அரை சதம் ஆகும். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை மார்னஸ் லபுஷேன் படைத்துள்ளார். அவர் 45 ரன்கள் எடுத்த போது இந்த வரலாற்றை படைத்தார். இவருக்கு அடுத்தப்படியாக ஸ்மித் 827 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக வார்னர் (753), ஹெட் (752), ரூட் (639) ஆகியோர் உள்ளனர்.

    • விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • நாடு முழுவதும் 550 விமானங்கள் ரத்தான நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 550 இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளன.

    விமானிகளுக்கான புதிய விதிமுறைகள், ஊழியர்கள் பற்றாக்குறை, மோசமான வானிலை, பயணிகள் நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை என நிர்வாக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தில் 550 விமானங்கள் ரத்தான நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விமான சேவை பாதிப்புக்கு நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதங்கத்தை பதிவாக வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நரகத்திற்கு போ இண்டிகோ! இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விமான நிலையங்களில் பயணிகள் பல நாட்களாக சிக்கித் தவிக்கின்றனர், ஆனால் உங்கள் செயலி விமானங்கள் ஏறும் நேரத்தில் ரத்து செய்யும் வரை "சரியான நேரத்தில்" இருப்பதைக் காட்டுகிறது. இது ஒரு தொழில்நுட்ப கோளாறு அல்ல - இது அலட்சியம்.

    புதிய DGCA விதிகள் நடைமுறையில் இருப்பதால், வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக உங்கள் அட்டவணையை நீங்கள் சரிசெய்திருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய குழப்பம் அபத்தமானது. என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள், உங்களால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திப்பு பேசினார்.

    தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளை பல மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கவனிக்க தொடங்கி விட்டனர். இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய விஜய்க்கு கரூர் சம்பவத்திற்கு பிறகு சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தற்போது கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையனால் புத்துயிர் ஏற்பட்டு உள்ளது என்றே கூறலாம்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை செங்கோட்டையனும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க.வினரின் சந்திப்பு அக்கட்சியுடன் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    • பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான வர்த்தகம், ராணுவத் தளவாடம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    உலகத் தலைவர்களுடன் நான் உரையாடும் போதெல்லாம், விரிவான கலந்துரையாடல்களில், இந்தியா நடுநிலையானது அல்ல என்று நான் எப்போதும் கூறுவேன். இந்தியாவுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, அந்தப் பக்கம் அமைதி. அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம், அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். இடையே உலகத் தலைவர்களிடம் வலியுறுத்துகிறோம்.

    கோவிட் முதல் இன்றுவரை, உலகம் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. மிக விரைவில், உலகம் கவலைகளிலிருந்து விடுபட்டு, உலக சமூகத்திற்கு சரியான திசையில் ஒரு புதிய நம்பிக்கை எழும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அ.ம.மு.க. உறுதியாக இருக்கிறது.
    • தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செய லாளர் டி.டி.வி.தினகரன் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை அமித்ஷா தான் இயக்குகிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அ.ம.மு.க.வை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அ.ம.மு.க. அந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை.

    அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு. செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி. அவரது நிலைப்பாட்டை பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.

    நான் நட்புடன் நெருங்கி பழகியவர்களில் அவரும் ஒருவர். அவரது முடிவை பற்றி விமர்சிப்பது நன்றாக இருக்காது. அவரை பற்றி விமர்சிப்பது அவருக்கு நான் கொடுக்கும் மரியாதையை குறைப்பதாக இருக்கும்.

    மத்திய மந்திரி அமித்ஷாவை நான் சந்திக்க மாட்டேன். அவரும் என்னை அழைக்கமாட்டார். இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அ.ம.மு.க. உறுதியாக இருக்கிறது. அதை இன்று ஜெயலலிதா வினைவிடத்தில் உறுதிமொழியாக ஏற்றோம்.

    தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் சைதை ஜி.செந்தமிழன், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். வேதாசலம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதல் ஒருநாள் போட்டியில் கோலி சதம் அடித்தார்.
    • சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.

    முன்னதாக முதல் 2 போட்டியிலும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்திருந்தார். இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார். உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.

    இந்நிலையில் அவரை ஜெயில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவக் வெளியாகி உள்ளது. அதில் போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசியவுடன், நான் விடுவிக்கப்பட்டேன் என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • சுமார் 4 மணி நேரம் இரண்டு பேரும் அரசியல் குறித்து விரிவாக விவாதித்து உள்ளனர்.
    • எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் காங்கிரஸ் மீதான ஈர்ப்பு இருந்துள்ளது.

    திருச்சி:

    தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தல் வரும் போதெல்லாம், ஒருமுறை அந்த கட்சி, மறுமுறை இந்த கட்சி என்ற நிலையே கடந்த கால வரலாறாக இருந்து வந்துள்ளது. ஆனால் வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தல் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    எப்போதுமே தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு வரிந்து கட்டி களப்பணிகளை தொடங்கும் அரசியல் கட்சிகள் எப்போதும் இல்லாத அளவில் இந்த தேர்தலுக்காக ஓராண்டுக்கு முன்னரே தயாராகி விட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் 'மக்கள் சந்திப்பு' என்ற கருப்பொருளுடன் பயணங்களை தொடங்கி விட்டனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.வெ.க. ஆகிய கட்சி தலைவர்கள் வாகனங்களுடன் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க.வும் கட்சியை பலப்படுத்தி அதற்கேற்றவாறு அரசின் சாதனைகளை கூறி மக்கள் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    தற்போது வரை 4 முனை போட்டி என்று கணிக்கப்பட்ட நிலையில் வரும் காலங்களில் அது மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய், தங்கள் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் யாரும் தங்களுடன் சேரலாம் என்று தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்க்க பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆனால் அந்த கனவு பொய்த்து விட்டது. ஏற்கனவே விஜய் தமது அரசியல் எதிரி தி.மு.க., கொள்கை எதிரி பா.ஜ.க. என கொள்கை முழக்கமிட்டு வந்தார். ஆகவே பா.ஜ.க. இடம்பெற்றுள்ள கூட்டணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்பது தெள்ளத்தெளிவானது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து விஜயுடன், ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு அரை மணி நேரம் பேசி ஆறுதல் தெரிவித்தார். இது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கரூர் எம்.பி. ஜோதிமணி, 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் காங்கிரசில் சேர ராகுல் காந்தியை சந்தித்ததாக புது குண்டை தூக்கி போட்டார். அதன்பின்னர் கரூரில் மீண்டும் அக்கட்சியின் மாநில நிர்வாகி அருள் ராஜை அவர் சந்தித்தார்.

    இந்த நிலையில் தற்போது விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான திருச்சி வேலுச்சாமியை சந்தித்து பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக எஸ்.ஏ.சந்திரசேகர் விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    இந்த திருமணத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமிக்கும் அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர் இருவரும் ஒரே காரில் திருவாரூர் புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் அதே காரில் அவர்கள் திருச்சி விமான நிலையம் வந்தனர். சுமார் 4 மணி நேரம் இரண்டு பேரும் அரசியல் குறித்து விரிவாக விவாதித்து உள்ளனர்.

    எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட காலமாக வேலுச்சாமி உடன் தொடர்பில் இருந்து வந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு காமராஜர் குறித்து திருச்சி வேலுச்சாமி வைக்கும் வாதங்களை பார்த்து அவ்வப்போது பாராட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் காங்கிரஸ் மீதான ஈர்ப்பு இருந்துள்ளது.

    தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி தொடர்பாக அவர்கள் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியிடம் கேட்ட போது, எஸ்.ஏ.சந்திரசேகர் எனது நீண்ட கால நண்பர். திருவாரூர் திருமண நிகழ்வில் எனக்கும் அழைப்பு வந்ததை அறிந்த அவர் என்னை தொடர்புகொண்டு பேசி என்னை திருச்சியில் சந்தித்தார். இது வழக்கமான சந்திப்பு தான். கூட்டணியை தலைமை தான் முடிவு செய்யும். நான் சொல்வது முறையல்ல.

    திருவாரூர் திருமண நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பழனிசாமியின் மகன், இரண்டு முறை எம்.பி.யாக இருந்த எம்.ஜி.முருகையா மகன், காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்த பூம்புகார் சங்கர் மகன் ஆகிய மூன்று பேரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றுவதை நான் பார்க்க நேர்ந்தது. அவர்களின் தந்தைகளுடன் நான் தொடர்பில் இருந்ததால் அவர்கள் வந்து என்னிடம் நலம் விசாரித்தனர்.

    இதன் மூலம் விஜய் இளைஞர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது என்றார். அதேபோல் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், அதில் அமைய உள்ள அரசியல் கூட்டணி குறித்தும் விரிவாக பேசியுள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தேசிய கட்சியான பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்தது போல், முதன்முறையாக கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்கும் த.வெ.க.வும் தேசிய கட்சியான காங்கிரசுடன் கூட்டணி வைப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்தநிலையில்தான் த.வெ.க. தலைவர் விஜய்யின் தந்தை, காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியை சந்தித்து பேசியது தற்போதைய அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க த.வெ.க. காய் நகர்த்துகிறதா? என்பது அடுத்துவரும் அரசியல் களம்தான் முடிவு செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    • தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழகத்தின் பல முக்கிய மாநில உரிமைகள் தாரை வார்க்கப்பட்டன.
    • பறிபோன உரிமைகளுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்து, அவற்றை மீட்டெடுத்துக் காட்டியவர் ஜெயலலிதா.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உள்ளங்களிலும், கோடிக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களின் இதயங்களிலும் அவர் வாழ்ந்து வருகிறார்.

    "தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழகத்தின் பல முக்கிய மாநில உரிமைகள் தாரை வார்க்கப்பட்டன. காவிரி நதிநீர் விவகாரமாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, பறிபோன அந்த உரிமைகளுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்து, அவற்றை மீட்டெடுத்துக் காட்டியவர் ஜெயலலிதா.

    அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்யும் தி.மு.க., அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டிப் புதைத்து வருகிறது."

    அ.தி.மு.க. ஜாதி, மதம், இனம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கம். எல்லோரும் சமம் என்பதே எங்கள் கொள்கை. அதே சமயம், கோவில்களில் காலங்காலமாக என்ன மரபுகள் (ஆகம விதிகள்) பின்பற்றப்படுகிறதோ, அந்த நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

    தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இது குறித்து மேலும் கருத்து கூற இயலாது."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்னுடைய தலைமையில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 11 நாட்கள் 190 கி.மீ. திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடைபயணம் நடக்கிறது.
    • மஞ்சள் நிற கொடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனக்கு வழங்கி திருச்சியில் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்னுடைய தலைமையில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 11 நாட்கள் 190 கி.மீ. திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடைபயணம் நடக்கிறது.

    சமத்துவ நடைபயணம் என்பதால் இந்துக்கள் வழிபடும், கோவில், கிறிஸ்தவர்கள் தேவாலயம், இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதி, சீக்கியர்கள் வழிபடும் கோவில்கள், குருத்வாராக்கள் அடங்கிய சின்னங்கள் பொருந்திய சிவப்பு, மஞ்சள் நிற கொடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனக்கு வழங்கி திருச்சியில் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

    இந்நிகழ்வில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மதுரையில் நடக்கும் நிறைவு விழாவில் வைரமுத்து பங்கேற்கிறார்.

    இதற்கான தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியில் வீரர்கள் என 1000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சீருடை வழங்க இருக்கிறோம். இந்த நடைபயணத்தில் மருத்துவ, பொறியியல் கல்லூரி மாணவர்கள் அதிகமாக பங்கேற்கின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் இல்லாத பிரச்சனைகளை இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி விட்டார்கள். சமய மோதல்களை ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்.

    நீதித்துறையில் மதவாத வெறி மேலோங்கி வருவதை கண்டு கவலைப்படுகிறேன். பெரியார் சிலையை உடைப் போம் என்றும் சொன்னார்கள். எந்த இடம், நேரம் என்று அறிவித்துவிட்டு வாருங்கள். கோழைத்தனமாக இரவில் வந்து சிலையை சேதப்படுத்த கூடாது. அறிவித்துவிட்டு வாருங்கள். அங்கே என்ன நடக்கிறது என்று பாருங்கள். நான் நிற்பேன்.

    தி.மு.க. கூட்டணியில் நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்போம் என்று நாங்கள் இதுவரை சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரியில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
    • பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

    புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் என்.ஆர். காங்கிரசோடு இணைந்து புதுச்சேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான ராங்கசாமியோடு பேச்சுவார்த்தை நடத்த த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் முயற்சித்து வருகிறார்.

    இந்தநிலையில் புதுவையில் செயல்படுத்த வேண்டிய பல திட்டங்கள் கிடப்பில் உள்ளதால் பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    அதற்கு பா.ஜ.க கூட்டணியில் நீடித்தால் தான் சரியாக இருக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் புதுச்சேரியில் தனித்து போட்டியிட த.வெ.க. தயாராகி வருகிறது.

    இங்கு ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.கவின் என்.டி.ஏ. கூட்டணி, காங்கிரஸ்- தி.மு.க.வின் இந்தியா கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஏற்கனவே களத்தில் உள்ள நிலையில் சார்லஸ் மார்டினும் புதிய கட்சி தொடங்கி போட்டியிட உள்ளார்.

    இதனால், புதுச்சேரியில் 5 முனை போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

    ×