என் மலர்
தலைப்புச்செய்திகள்
- யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.
யூலர் (EULER) மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.
இதற்காக யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
இதன்மூலம் யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது 32.5 சதவீத உரிமையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை மொத்த வாகன விற்பனையில் 35 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அகத்தியா படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- ஓடிடி வெளியீட்டை படக்குழு வெளியிட்டுள்ளது
"ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார். திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலில் இண்டெர்நேஷனல் தயாரித்துள்ளது.
திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழரின் மகத்துவத்தையும், தமிழரின் மருத்துவத்தையும் எப்படி ஆங்கிலேயர் அழித்தன என்பதை ஒரு ஹாரர் ஜானரில் கதைக்களத்தை அமைத்துள்ளனர்.
இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
- ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது.
- அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு ஒப்படைப்பதே பாஜக மாடல்.
ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி அமைப்பு சென்றால் இந்தியா அழிந்துவிடும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
இன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய கூட்டணியின் துணை மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைத்த போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது. அந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்).
கல்வி முறை அவர்களின் கைகளுக்குச் சென்றால் இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது, நாட்டை முடித்து விடுவார்கள். இது மிகவும் மெதுவாக தற்போது நடந்து வருகிறது.

இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆதிக்கத்தில் உள்ளனர் என்பதை மாணவர் அமைப்புகள் மற்றும் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மகா கும்பமேளா பற்றி பெருமையடித்தது குறித்து விமர்சித்த ராகுல்காந்தி, வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறித்து பிரதமர் பேசியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரதமர் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் கல்வி முறை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவர்களின் மாடல், அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு தாரைவார்ப்பதாகும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் இந்தியா கூட்டணியின் மாணவர்கள். நமது சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் கல்வி முறையில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. நாம் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடி ஆர்எஸ்எஸ்ஸை பின்னுக்குத் தள்ளுவோம் என்று ராகுல் காந்தி சூளுரைத்தார்.
இதற்கிடையே ஜந்தர் மாந்தரில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி விதிகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் பலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?
- சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது.
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், முருக பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா வைத்து இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதை கண்டித்து சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழி பாதை, நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதி மன்றம் ஊக்குவிக்க கூடாது' என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு? என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் எனக்கூறி சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
- 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
- 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
சென்னை:
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதுடன் நூர் அகமது குறித்து ஒரு வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் பிரபலமான டயலாக்கான நான் ஒரு தடவ சொன்னா நூரு தடவ சொன்ன மாதிரி என்ற டயலாக்கை நூர் அகமது பேசியுள்ளார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவுக்கு Baasha of spin என தலைப்பிட்டுள்ளது.
- தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.
- ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீசரரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.
போலீஸ் கதாபாத்திரத்தில் நானியை இதில் பார்க்க முடிகிறது. ஆனால் இடையில் அவர் உண்மையில் போலீஸ் தானா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் டீசரில் இடம் பெற்றதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் ஒரு காதல் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை கிருஷ்ண காந்த் வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் நுடானா மோகன் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
- சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்தது.
- நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்தது.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.
இன்றைய நாள் முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்து 77,984.38 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்து 23,658.95 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் சென்செக்ஸ் 1.4 சதவீதமும் நிஃப்டி 1.32 சதவீதமும் உயர்ந்து வர்த்தகம் ஆனது.
- அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் என பதில் அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவு.
- 10 நாள் அவகாசம் கொடுத்த நீதிமன்றம் இதற்கு மேல் வழங்கப்படாது என கண்டிப்பு.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்யக்கோரி முறையாக நோட்டீஸ் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் அவகாசம் தேவை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிப்பட்டது.
இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததது. இந்த வழக்கு பல நாட்களாக நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
அவகாசம் கேட்பது நியாயமற்ற முறையாக இருந்தாலும் கூட, இன்னும் 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
போக்குவரத்துத்துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
இந்த ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 12-ந்தேதி நடந்த விசாரணையின்போது, அமைச்சராக தொடர விருப்பமா? என செந்தில் பாலாஜியிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.
- அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
டெல்லியிலிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் இன்று காலை சென்ற அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.
தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தரையிறங்கும் விமானத்தின் வேகத்தை குறைக்க முடியவில்லை. இதனால் விமானம் ஓடுபாதையில் வளைந்து வெகு தூரம் சென்றது. விமானி உடனடியாக அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி விரைவாக செயல்பட்டதால் பெரிய அளவிலான விபத்து தவிர்கப்பட்டது.
விமானத்தில் இருந்த துணை முதல்வர் உட்பட 44 பயணிகளும் பாத்திரமாக இருப்பதாக சிம்லா விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மசாலாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டது
- கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே. சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்தது.
- சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே.சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.
இதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ராஜீவ் சந்திரசேகா் வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.
இப்பதவிக்கு ராஜீவ் சந்திரசேகா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்தில் கட்சியின் கவுன்சில் கூட்ட நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளர் மற்றும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, கேரள மாநில பாஜக தலைவராக ராஜீவ் சந்திரசேகரன் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தோ்வான ராஜீவ் சந்திரசேகா், மத்திய பாஜக கூட்டணி அரசில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா், நீா் வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளாா்.
பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜீவ் சந்திரசேகா் பணியாற்றி உள்ளார். கடந்த மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

- மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது.
- தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.
நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை காடர் (துரோகி) என்று நகைச்சுவையாக விமர்சனம் செய்தார்.
தில் தோ பாகல் ஹை படத்தின் பிரபலமான இந்தி பாடலை பாடி சிவசனோ மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுகள் குறித்தும் மற்றும் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் நகைச்சுவையாக நிகழ்த்தினார் நடிகர் குணால் கம்ரா (stand-up comedian).
சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.
அவர்கள் ஒரு வாக்காளருக்கு 9 பொத்தான்களை கொடுத்தார்கள். இதனால் எல்லோரும் குழப்பம் அடைந்தார்கள் என்று அவர் மேலும் நிகழ்ச்சியின்போது நகைச்சுவையாக குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் ரிக்ஷா ஒட்டுபவர், ஒருவரின் தந்தையை திருடிய துரோகி என்றார்.
இந்த நிகழ்ச்சியை கேட்டு ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டலில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய பகுதியை சூறையாடி சேதப்படுத்தினர். மேலும் ஷிண்டேவை சாடி அவர் பேசிய வீடியோவை வெளியிட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.
மேலும் 2 நாட்களில் நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரை சிவசேனா தொண்டர்கள் மகாராஷ்டிராவில் சுதந்திரமாக வெளியே நடமாட விடமாட்டார்கள் என்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தாக்குதல் நடத்திய சிவசேனா கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுதி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியதில் தவறு ஏதும் இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
குணால் கம்ரா வெறுமன தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் உண்மைகளைக் கூறி பொது மக்களின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கம்ரா எதுவும் தவறாக செய்யவில்லை. இந்த துரோகிகள் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை இழிவுப்படுத்திய பிரஷாந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் ஆகியோரை பார்க்கவில்லை.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாஷந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் சத்ரபதி சம்பாஜி மகாராஜா மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனை கருத்து தெரிவித்ததாக, இருவரையும் கைது செய்ய வேண்டும் போராட்டம் நடைபெற்றது சுட்டிக்காட்டி மேற்கண்டவாறு தெரிவித்தார்.






