என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஹமாஸ் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
    • இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் முயற்சி மேற்கொண்டன. இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அப்போது காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

    அதன்படி ஏழு வாரங்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. போர் நிறுத்தம் முடிவடைந்த பிறகு மேலும் போர் இடைநிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், 7 வார போர் நிறுத்தம் முடிவடைந்த பின்னர், தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. மனிதாபிமான உதவிகள் செல்ல தடைவிதித்தது.

    இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை எகிப்து வழங்கியது. எகிப்து தனது பரிந்துரையில், "ஹமாஸ் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதில் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் அடங்குவார். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும். சில வாரங்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்" குறிப்படப்பட்டுள்ளது.

    இந்த போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இதுவர 50,082 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,13,408 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    • சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'.
    • இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்ததில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
    • சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே டிராக்டர் மீது பளளி வாகனம் மோதிய விபத்தில் எல்கேஜி குழந்தை உள்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்ததில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தில், டிராக்டரில் இருந்த பெண், 8 குழந்தைகள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
    • வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.

    மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டாலும், அணிக்கான முடிவுகளை தோனி எடுப்பதாக பரவலாக பேசப்பட்டது.

    இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான முடிவுகளை ருதுராஜ் கெய்க்வாட்டின் பின்னணியில் இருந்து தான் எடுப்பதாக கூறப்படுவதை தோனி மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயணிக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். அவரிடம் சிறந்த தலைமைப் பண்பு உள்ளது. அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார்.

    இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் ருதுராஜிடம் கூறியது என்னவென்றால், நான் ஒரு அறிவுரை கூறினால் அதனை நீங்கள் கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும் என அர்த்தம் கிடையாது. நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.

    கடந்த ஐபிஎல் தொடரின்போது, ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் 99 சதவிகித முடிவுகளை எடுத்தது அவர்தான். பந்துவீச்சில் மாற்றங்கள், ஃபீல்டிங்கில் மாற்றங்கள் போன்ற மிகவும் முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவருக்கு நான் உதவியாக இருந்தேன். வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.

    என தோனி கூறினார்.

    • இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது.
    • ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா தெரிவித்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த நிதியாண்டில் சாதி கணக்கெடுப்பை நடத்தப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

    ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா இன்று சட்டமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

    இன்று பட்ஜெட் கூட்டத்தின்போது சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரதீப் யாதவ், கடந்த வருடம் பிப்ரவரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரை அதில் என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என அரசு விளக்க வேண்டும்.

    தெலுங்கானா மாநிலம் நம்மை விட தாமதமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது, அதன் அறிக்கையும் கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் தீபக் பிருவா, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பணி மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அடுத்த நிதியாண்டில், எங்கள் அரசு சாதி கணக்கெடுப்பு பணியைத் தொடங்கும்.

    இதற்கான பொறுப்பு எந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுவது என்பதை முடிவு செய்வதற்கான செயல்முறை நடந்து வருகிறது.  சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை, பணியின் அளவுகள் மற்றும் நிதி அம்சத்தை உறுதி செய்வதற்கான பொறுப்பு மாநில பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4ஆம் தேதி  ஒரு நிறுவனத்தை பணியமர்த்த இந்த துறை மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக பிருவா கூறினார்.

    • ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
    • திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது.

    சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

    ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

    இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அதிமுக பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர்.
    • தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.

    பாராளுமன்ற கூட்டத்தில் கேந்திரிய வித்யாலயாவில் தமிழ், இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.

    கனிமொழி எம்.பி கேட்ட கேள்விக்கு தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    கூடுதலாக 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 86 இந்தி, 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.

    தமிழ்நாட்டில் 21,725 பள்ளிகளில் ஒரு மொழி மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 35,092 பள்ளிகளில் இரு மொழி, 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்றார். 

    • மகாத்மா பட்டம் நாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலானது. அதை இரண்டு பேர் மட்டுமே அனுபவித்தனர்.
    • ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.

    சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் ராவல் தீர்மானத்தை தாக்கல் செய்ய, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாகன் புஜ்பா், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய் வடேட்டிவார் ஆகியோர் ஆதரித்து பேசினர்.

    மகாத்மா பட்டம் நாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலானது. அதை இரண்டு பேர் மட்டுமே அனுபவித்தனர். அவர்கள் மகாத்மா காந்தி மற்றும் மகாத்மா பூலே என அமைச்சர் ஜெயக்குமார் ராவல் தெரிவித்தார்.

    ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.

    • யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.

    யூலர் (EULER) மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.

    இதற்காக யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.

    இதன்மூலம் யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது 32.5 சதவீத உரிமையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிர்காலத்தில் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை மொத்த வாகன விற்பனையில் 35 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அகத்தியா படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • ஓடிடி வெளியீட்டை படக்குழு வெளியிட்டுள்ளது

    "ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார். திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலில் இண்டெர்நேஷனல் தயாரித்துள்ளது.

    திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழரின் மகத்துவத்தையும், தமிழரின் மருத்துவத்தையும் எப்படி ஆங்கிலேயர் அழித்தன என்பதை ஒரு ஹாரர் ஜானரில் கதைக்களத்தை அமைத்துள்ளனர்.

    இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    • ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது.
    • அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு ஒப்படைப்பதே பாஜக மாடல்.

    ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி அமைப்பு சென்றால் இந்தியா அழிந்துவிடும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

    இன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய கூட்டணியின் துணை மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைத்த போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.

    அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது. அந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்).

    கல்வி முறை அவர்களின் கைகளுக்குச் சென்றால் இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது, நாட்டை முடித்து விடுவார்கள். இது மிகவும் மெதுவாக தற்போது நடந்து வருகிறது.

    இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆதிக்கத்தில் உள்ளனர் என்பதை மாணவர் அமைப்புகள் மற்றும் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

    கடந்த வாரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மகா கும்பமேளா பற்றி பெருமையடித்தது குறித்து விமர்சித்த ராகுல்காந்தி, வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறித்து பிரதமர் பேசியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பிரதமர் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் கல்வி முறை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவர்களின் மாடல், அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு தாரைவார்ப்பதாகும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் இந்தியா கூட்டணியின் மாணவர்கள். நமது சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் கல்வி முறையில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது.  நாம் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடி ஆர்எஸ்எஸ்ஸை பின்னுக்குத் தள்ளுவோம் என்று ராகுல் காந்தி சூளுரைத்தார்.

     இதற்கிடையே ஜந்தர் மாந்தரில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி விதிகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் பலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    ×