என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம்.
- தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
கே.கே. நகர்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கொலை நடந்து 13 ஆண்டு கடந்த நிலையிலும் குற்றவாளி யார்? என்று தெரியவில்லை. பெரிய தலைவர்களின் நிலை இப்படி என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. உரிய விசாரணை நடத்தப்படவில்லை.
அரசுக்கு எது தேவையோ எடுத்துக் கொள்ளப்படுகிறது. மற்றவைகளை மூடி மறைக்கப்படுகிறது.
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது யாருக்கும் தெரியாது.
நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் அனைத்தும் தி.மு.க.வின் அலுவலகம் போன்று செயல்படுகிறது.
நான் பெரியார் குறித்து பேசியதற்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் நான் கொடுக்கும் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
ஆனால் என் மீது கொடுக்கப்படும் வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
என் மீது பல்வேறு இடங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான எல்லா வழக்குகளும் ஒன்றிணைந்து விசாரிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் நீதிமன்றம் மதிப்பை இழந்து வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என சி.ஓட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. நாங்கள் பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். ஆனால், எங்கள் கட்சி அந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.
இதிலிருந்து கருத்துக்கணிப்பின் நேர்மை புலப்படுகிறது. இது கருத்துக்கணிப்பல்ல, கருத்து திணிப்பு. நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல, போராளிகள் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம்.
ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. அதில் உண்மை உள்ளதா இல்லையா என தெரியவில்லை. அதில் வழக்கில் தொடர்புடைய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளிகளா அல்லது குற்றத்தில் தொடர்புடையவர்களா? என்பதை அரசு கூற வேண்டும்.
சவுக்குசங்கர் வீடு தாக்குதலுக்கு உள்ளானது. குற்றத்தை யார் புரிந்தார்? என்பது வெளிப்படையாகவே தெரியும். அதற்கு எதற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை. அதிகாரத்தில் உள்ளவர்களே அந்த குற்றச்செயல்களை செய்துள்ளனர்.
இது பூனை தன் குட்டியை கவ்வதும், எலியை பிடிப்பதற்கு உள்ள வித்தியாசமாகும். எங்களை கடிக்கும் போது எலியை கடிப்பது போல் கடிக்கிறீர்கள். கொடுமையானவர்களே குற்றச் செயல்களில் உடந்தையானவர்களை பூனை குட்டியை கவ்வதை போல் பிடிக்கிறீர்கள்.
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் ஒப்புக்காக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரம் அவர்கள் கையில் உள்ளதால் நாட்டில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுட்டு பிடிப்பதற்கு காரணம் அவர்களது இயலாமை. அவர்களை பிடித்தால் பல்வேறு உண்மைகள் வெளியே வரும் என்பதால் அவர்களை சுட்டுக்கொன்று விடுகின்றனர்.
சங்கிலி திருடர்களை சுட்டு பிடிப்பதற்கு என்ன காரணம்? கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த சம்பவத்தை விட இது பெரிய சம்பவமா?
குடித்துவிட்டு பாட்டிலை திரும்பி கொடுத்தால் பத்து ரூபாய், பாடையிலே படுத்துவிட்டால் 10 லட்ச ரூபாய், இது திராவிட மாடல் பாலிசி. வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு தி.மு.க.வை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.
நான் பிரபாகரனை போல தனித்தே நின்று போட்டியிடுவேன். நான் புலி போன்றவன் தனித்தே நின்று போட்டியிடுவேன். படை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பவன் அல்ல நான். கூட்டத்தில் ஒரு ஆளாக போட்டியிட துணிவோ, வீரமோ தேவையில்லை, தனித்து நிற்கவும் தான் துணிவும் வீரமும் தேவை.
எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம். எந்த குழப்பமும் இல்லை தடுமாற்றமும் இல்லை. இன்னும் சில மாதங்கள் உள்ளது. தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- தமிழாசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப் பாடமாகத் தேர்வுசெய்து பட்டப்படிப்பு (பி.ஏ), பட்ட மேற்படிப்பு (எம்.ஏ), இளம் முனைவர்(எம்.பில்), முனைவர் (பி.எச்டி) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் (பி.எட்) பட்டமும் பெற்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் தனியாக தமிழாசிரியர் பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்;
தனியார் பள்ளிகளிலும் தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் அரசு மூலம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்; தமிழ்ப் படித்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி வாடும் தமிழாசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவிற்கு சவால் விடுகிறார் விஜய்
- திமுகவுடன் விஜய் மோதவில்லை, இபிஎஸ் உடன் விஜய் மோதுகிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான். இதில் வேடிக்கை என்ன என்றால், அடுத்து நாங்கள் தான் ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தார் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக அவர் ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.
எனவே, இப்போது இரண்டாவது இடத்திற்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நாம்தான் எப்போதும் முதல் இடத்திற்கு வரப்போகிறோம். நாம்தான் ஆளுங்கட்சி. நான் ஏதோ, மமதையில் அகங்காரத்தில் சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். மக்களிடத்தில் இருக்கும் ஆதரவு மக்கள் நம்மை வரவேற்கும் காட்சியை வைத்து நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.
திமுக Vs தவெக என விஜய் பேசியதை மறைமுகமாக சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜயின் பேச்சை சுட்டிக்காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-
* தேர்தலிலேயே நிற்காத ஒருவரை தலையில் தூக்கி வைத்து வருகிறார்கள். அவர் தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்.
* எதோ ஒரு தனியார் சர்வேயில் அவர் 2ம் இடம் பிடித்துவிட்டாராம். அடுத்து அவர் தான் ஆட்சியை பிடிக்க போகிறாராம். பாவம் அவரை உசுப்பி விடுகிறார்கள்.
* அவர் சொல்கிறார், 2026 தேர்தலில் 2 பேருக்கு மட்டும் தான் போட்டி. ஒருபக்கம் DMK இன்னொரு பக்கம் TVK.
* அதிமுகவை விட தவெக பெரிய சக்தி என சவால் விடுகிறார் விஜய். எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவிற்கு சவால் விடுகிறார் விஜய்
* 2ம் இடம் யாருக்கு என்பதில் தான் விஜய்க்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் போட்டி, 2ம் இடம் யார் என்பதில் தான் அண்ணாமலைக்கு விஜய்க்கும் போட்டி.
* திமுகவுடன் விஜய் மோதவில்லை, இபிஎஸ் உடன் விஜய் மோதுகிறார்
- ஒட்டுமொத்தமாக இதுவரை 87 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்து உள்ளனர்.
- ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் மிட்னாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அவரது குடும்பம் கடனுக்கும், வறுமைக்கும் ஆளானதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது மனைவி வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெண்ணிலாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க. அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 27 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 87 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்து உள்ளனர்.
இத்தகைய சூழலில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.
- தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கான்வாயில் சென்ற வாகனங்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வாகனம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து இந்த சம்பவம் அதிபர் புதினை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.
இந்த சம்பவம் மாஸ்கோவில் உள்ள உளவுத்துறை தலைமையகமான எஃப்.எஸ்.பி. அருகே நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்களில் கார் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
அதிபர் கான்வாயில் இடம்பெற்று இருந்த ஔரஸ் செனட் லிமோசின் ரக கார் ஒன்றின் எஞ்சின் பகுதியில் தீ ஏற்பட்டு, பிறகு முகப்பு பகுதி முழுக்க பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காரின் பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளது. தீப்பிடித்து எரிந்த காரில் இருந்தது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
- கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடி பத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் புறப்பட்டு சென்றார். நாக்பூர் விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
அந்த புத்தகத்தில், 'டாக்டர் ஹெட்கேவர், குருஜி ஆகியோருக்கு மனமார்ந்த வணக்கங்கள். உங்களின் நினைவுகளை போற்றி, இங்கு வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் அமைப்பின் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த இடம், தேச சேவையில் முன்னேற நம்மை ஊக்குவிக்கிறது. இந்த இடம், நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் இருக்கும் லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு ஒரு சக்தி மிகுந்த இடமாகும். நமது முயற்சிகள் மூலம் மகிமை எப்போதும் அதிகரிக்கட்டும்' என்று பிரதமர் மோடி எழுதி கையெழுத்திட்டார்.
குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளி நோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அங்கு அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்றுள்ளார். நரேந்திர மோடி இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். மேலும் ஆா்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்லும் முதல் இந்திய பிரதமரும் அவா் என்பதால் இந்த பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தீர்க்கும் வகையில் பிரதமர் மோடி இன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவரது தேசிய தலைவர் பதவியும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும் இருப்பதால் புதிய தேசிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அங்கு ஆலோசனையை முடித்துவிட்டு புறப்பட்ட பிரதமர் மோடி 'சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்து வைத்தார்.
நாக்பூரில் சமீபத்தில் இரு பிரிவினரிடையே மோதல்-வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார். 2024 பாராளுமன்ற தோ்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அவர் அங்கு அவா் செல்கிறாா்.
இதையொட்டி பிலாஸ்பூரில் சுமாா் 2 லட்சம் பொதுமக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமா் மோடி, சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ரூ.33,700 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறாா். தொடா்ந்து அவா் மக்களிடையே உரையாற்றுகிறார்.
- பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ, சகோதரத்துவ உணர்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டிய பெருமகனார்.
- மனித வாழ்வு மேன்மை அடைவதற்கான இத்தகைய மார்க்கங்களைப் போதிப்பதால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் என்றும் போற்றுகிறார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
"எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள்; என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள்; எனக்கு முன்னாள் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கிவிட்டார்கள். உலர்ந்த ரொட்டித் துண்டுகளையும், காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன்" என்று தன் அன்பர்களுக்குக் கூறியவர் அண்ணல் நபிகள் பெருமான்.
பொய்மை, ஆடம்பரம் இவற்றைத் தவிர்த்து எளிமை, அன்பு, அடக்கம் இவற்றை குணநலன்களாகக் கொள்ள வழி காட்டிய கருணை வள்ளல் அவர்.
பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ, சகோதரத்துவ உணர்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டிய பெருமகனார்.
"தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு" என்று உழைப்பை மதித்திடும் உத்தமப் பண்பை உலகுக்கு நீதியாய் போதித்தவர்.
மனித வாழ்வு மேன்மை அடைவதற்கான இத்தகைய மார்க்கங்களைப் போதிப்பதால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் என்றும் போற்றுகிறார்கள். அத்தகைய நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இசுலாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விமான நிலைய பணியாளர்கள் காத்திருந்தனர்.
- விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன், அதன் டயரில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்தனர்.
டயரில் கோளாறு ஏற்பட்ட நிலையில், சாதுரியமாக செயல்பட்ட விமானி அசம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். தரையிறங்கிய பின் விமானத்தின் டயர்களை பரிசோதனை செய்ததில், 2-வது சக்கரத்திலுள்ள டயர் வெளியே வெடித்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
- ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
- ரியான் பராக் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.
ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுவதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டவுள்ளார். காயம் காரணமாக சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் இந்த போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்ட்டது.
அதன்படி ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தற்போது 3 ஆவது போட்டியில் இன்று சென்னை அணியை கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.
2024 இல் 4 ஆம் வரிசையில் களமிறங்கி சிப்பாராக விளையாடிய ரியான் பராக் இந்தாண்டு 3 ஆம் வரிசையில் களமிறங்கி 4 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில், ரியான் பராக் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ரியான் பராக் 4 ஆம் வரிசையில் இருந்து 3 ஆம் வரிசைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். ரியான் பராக் எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
நேர்மையாகச் சொல்லப் போனால், ரியான் பராக் எவ்வளவுக்கு எவ்வளவு பந்துகள் விளையாடுகிறாரோ அவ்ளவுக்கு அவ்வளவு அணிக்கு நல்லது. ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அனால் அவருக்கு பேட்டிங் செய்ய நிறைய நேரம் தருவதற்காக 3 ஆம் இடத்தில தற்போது இறங்குகிறார்.
அவருக்கு அதிக நேரம் கிடைத்தால், அவர் அதிக ரன்கள் எடுக்க முடியும், அது அணிக்கு பயனளிக்கும். அவர் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்" என்று தெரிவித்தார்.
- மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் பீதியடைந்தனர்.
இந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4-ஆக பதிவானது.
நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
- டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை.
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை:
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் சூட்டை கிளப்பி இருப்பதுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே அமித்ஷா-செங்கோட்டையன் சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று அமித்ஷா, செங்கோட்டையனிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை. அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி விட்டு செங்கோட்டையனை அவருக்கு எதிராக எப்படி திருப்பி விட முடியும் என்பதும் பாரதிய ஜனதா கட்சியினரின் கேள்வியாக உள்ளது.
- மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், ஏற்கனவே நிதி இல்லாமல் தவிக்கின்றனர்.
- இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல்.
வங்கிகள் மாத வரம்பிற்கு மேல் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
இந்த முடிவை விமர்சித்து மு.க,.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.
அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.
ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.






