என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும்.
    • டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பத்து அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் போட்டியில் விளையாட வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    மற்றொரு போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியி எதிர்கொண்டு விளையாடுகிறது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது.

    கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து நல்ல நிலைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    ஐ.பி.எல். தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.
    • 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    இந்தியா சார்பாக 5 முறை ஒழும்பிக் போட்டிகளில் விளையாடிய தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வை அறிவித்துள்ளார்.

    சென்னையில் நேற்று நடந்த WTT ஸ்டார் போட்டியாளர் போட்டியின் 16வது சுற்றில் தோல்வியடைந்த பிறகு ஓய்வு பெறுவதாக சரத்கமல் அறிவித்தார்.

    42 வயதானால் சரத்கமல் 20 ஆண்டுக்கும் மேலாக இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்திவந்தார்.

    சரத் கமல், இதுவராவ் ஐந்து காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் பல வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

    டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சிறப்பாக விளையாடியதற்காக கேல் ரத்னா விருதை அவர் வென்றுள்ளார், மேலும் 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.

    • நம்பிக்கை தெரிவித்ததாக அல்-ஹயா கூறினார்.
    • பெஞ்சமின் நேதன்யாகு நேற்று தொடர் ஆலோசனைகளை நடத்தினார்.

    இஸ்ரேல் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும், ஐந்து பணயக் கைதிகளை விடுவிப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்து இருக்கிறது. இந்த முறை சரியாக 50 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும்.

    ரமலான் முடிவை குறிக்கும் ஈத், சனிக்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை முடிவடைகிறது. ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹயா, ஒரு தொலைக்காட்சி அறிக்கையின் போது, குழுவின் "நேர்மறையான" பதிலையும் அதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதையும் உறுதிப்படுத்தினார் என சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

    ஹமாஸ் ஆரம்ப போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை "முழுமையாகக் கடைப்பிடித்துள்ளது" என்றும், இஸ்ரேல் "இந்த திட்டத்தைத் தடுக்காது" என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் அல்-ஹயா கூறினார்.

    எகிப்து அறிவித்த போர் நிறுத்த ஒபந்தத்திற்கு இஸ்ரேல் ஒரு எதிர் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

    மத்தியஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று தொடர் ஆலோசனைகளை நடத்தினார். இதன் பிறகு, இஸ்ரேல் தனது எதிர் திட்டத்தை அமெரிக்காவுடன் முழு ஒருங்கிணைப்புடன் மத்தியஸ்தர்களுக்கு வழங்கியுள்ளது," என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறியது. இஸ்ரேல் தரப்பில் வழங்கப்பட்டுள்ள எதிர் திட்ட விவரங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.

    காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியது. மேலும் இம்மாத தொடக்கத்தில் முழுமையான மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்து நிறுத்தியது. இதுதவிர மீதமுள்ள 24 பணயக்கைதிகள் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் வரை அல்லது விடுவிக்கப்படும் வரை தனது படைகள் காசாவின் சில பகுதிகளில் நிரந்தரமாக இருக்கும் என்று கூறியது.

    • நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.
    • இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காக, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதன்மூலம் 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாளம் மன்னராட்சியில் இருந்து மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

    இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

    • ஏப்ரல் 6 ஆம் தேதி உ.பி. முழுவதும் இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை
    • அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அரசு எச்சரிக்கை

    உத்தரபிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 31) முதல் ஏப்ரல் 6 வரை மத வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் செயல்படுவதையும், இறைச்சி விற்பனை செய்வதையும் உத்தரப் பிரதேச அரசு தடை செய்துள்ளது.

    மேலும், ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மாநிலம் முழுவதும் இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று பாஜக அரசு தெரிவித்துள்ளது.

    அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது உ.பி. மாநகராட்சி சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அரசு எச்சரித்துள்ளது.

    • மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர்.
    • பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் வெளிநாட்டினரின் நிதி உதவியுடன் ஆபாசப்படம் எடுப்பதையே 5 ஆண்டுகளாக தொழிலாக செய்து வந்த தம்பதி சிக்கியது.

    உஜ்வால் கிஷோர் மற்றும் அவரது மனைவி நீலு ஸ்ரீவஸ்தவா ஆகியோர் நொய்டாவில் வசித்து வந்தனர். இந்த தம்பதி வெளிநாட்டினரிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு 5 ஆண்டுகளாக ஆபாசப்படம் எடுப்பதையே தொழிலாக செய்து வந்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

    இதனையடுத்து நொய்டாவில் உள்ள இந்த தம்பதியினரின் வீட்டில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியது. இதில் ரூ.15.66 கோடி சட்டவிரோத வெளிநாட்டு நிதியைக் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

    இந்த தம்பதி சமூக ஊடகங்களை பயன்படுத்தி மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர். மாடலிங் விளம்பரம் பார்த்து வரும் பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.

    இந்தியாவில் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக ரஷ்யாவில் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. .

    இந்த மோசடியில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆபாச பட தொழிலில் தள்ளப்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.

    • குஜராத் டைட்ன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
    • குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்ன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2017 முதல் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் ரஷித் கான் நேற்றைய போட்டியில் முதல் முறையாக 4 ஓவர்கள் முழுமையாக பந்துவீசவில்லை.

    20 ஓவர்கள் கொண்ட போட்டியில் ரஷித் கான் 4 ஓவர்களுக்கு குறைவாக பந்துவீசியது இதுவே முதல் முறை ஆகும். நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய ரஷித் கான் 10 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 160 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

    • தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
    • திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள்.

    விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது.

    விழாவில் கவுதம புத்தர், அம்பேத்கர், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் திருமாவளவன் கூறியதாவது:-

    * திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுத்து விடக்கூடாது.

    * தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக, முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்த நினைக்கும். தப்பித்தவறி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்துவிடும்.

    * தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.

    * விசிகவிற்கு எத்தனை சீட்டு கிடைக்கும். 6 சீட்டு 7, 8 ஆகுமா என்று கேட்கிறார்கள். 6 சீட்டு 10 சீட்டு ஆனாலும் 20 சீட்டு ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்க போவதில்லை. ஆனால் நாங்கள் இருக்கும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் வலுவான ஒரு சக்தி என்பதை வரும் தேர்தலிலும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

    • வேலூரில் நேற்று 103 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.
    • 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும்.

    சென்னையில் இன்று 100 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நேற்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் சேலத்தில் நேற்று 104 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.

    மதுரை நகர் பகுதியிலும், ஈரோட்டிலும் 103 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்திலும், வேலூரிலும் நேற்று 103 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.

    தருமபுரி, கரூர் பரமத்தி மற்றும் திருச்சியில் நேற்று 102 டிகிரி வெயில் பதிவானது. கோவை மற்றும் திருத்தணியிலும் 100 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலையில் 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலையால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலையை நீடிக்கும் என்று தெரிவித்து இருக்கிறது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 செல்ஷியஸை ஒட்டியும் குறைந்தபட்சம் 27 டிகிரி வரை வெப்பம் பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    • ஹர்திக் பாண்ட்யாவுக்கும் சாய் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • நடுவர் குறுக்கிட்டு 2 வீரர்களையும் பிரித்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இப்போட்டியின் 14வது ஓவரை சாய் கிஷோர் வீசினார். அப்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கும் சாய் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பிட்ச்சிற்கு இடையே வந்து முறைத்து கொண்டனர். உடனே நடுவர் குறுக்கிட்டு 2 வீரர்களையும் பிரித்தார். பின்பு பாண்ட்யா போ என்பது போல சைகை செய்தார்.

    பின்னர் போட்டி முடிந்ததும் மோதலை மறந்துவிட்டு சாய் கிஷோரை ஹர்திக் பாண்ட்யா கட்டியணித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

    • மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தில் 3000-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    பாங்காக்:

    மியான்மர் நாட்டின் மண்டாலே நகரருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.

    இதனால் கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க துறவிகளுக்கான மடாலயமும் இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளைச் சந்தித்துள்ளன.

    இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மியான்மரில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோல், தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    • ரன்வீர் அல்லாபாடியாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • சர்ச்சை கருத்து கூறியதற்காக யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டார்.

    புதுடெல்லி:

    பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா. பீர்பைசெப்ஸ் என அறியப்படும் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கினார்.

    சமீபத்தில் Indias Got Tatent நிகழ்ச்சியில் பங்கேற்ற ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒருமுறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா? இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?'' என கேட்டார்.

    ரன்வீரின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவருக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, சர்ச்சை கருத்து கூறியதற்காக யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், நகைச்சுவை நடிகை ஸ்வாதி சச்தேவா ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    வீட்டில் ஒரு வைப்ரேட்டரைக் கண்டுபிடித்தது குறித்து தனது தாயின் எதிர்வினையை ஸ்வாதி நகைச்சுவையாகக் கூறுகிறார். ஒரு வைப்ரேட்டரைக் கண்டுபிடித்த பிறகு, தனது அம்மா தன்னுடன் வெளிப்படையாகப் பேச முயற்சித்ததைப் பற்றி நகைச்சுவையாகக் கூறிய ஸ்வாதி, தனது அம்மா வைப்ரேட்டரை ஒரு கேஜெட் மற்றும் பொம்மை என்று எப்படி சங்கடமாகக் குறிப்பிட்டார் என்பதையும் விளக்கினார்.

    ஸ்வாதி சச்தேவாவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நகைச்சுவை என்ற பெயரில் ஸ்வாதி ஆபாசத்தைப் பரப்புவதாக குற்றம்சாட்டிய நெட்டிசன்கள், அவரது கருத்து வெட்கக் கேடானது எனவும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

    ×