என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு- பா.ஜ.க. தேசிய தலைவர் தேர்வு குறித்து பேச்சு
    X

    ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு- பா.ஜ.க. தேசிய தலைவர் தேர்வு குறித்து பேச்சு

    • கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடி பத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் புறப்பட்டு சென்றார். நாக்பூர் விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.

    அதன்பிறகு பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

    அந்த புத்தகத்தில், 'டாக்டர் ஹெட்கேவர், குருஜி ஆகியோருக்கு மனமார்ந்த வணக்கங்கள். உங்களின் நினைவுகளை போற்றி, இங்கு வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் அமைப்பின் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த இடம், தேச சேவையில் முன்னேற நம்மை ஊக்குவிக்கிறது. இந்த இடம், நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் இருக்கும் லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு ஒரு சக்தி மிகுந்த இடமாகும். நமது முயற்சிகள் மூலம் மகிமை எப்போதும் அதிகரிக்கட்டும்' என்று பிரதமர் மோடி எழுதி கையெழுத்திட்டார்.

    குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளி நோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

    அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அங்கு அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.

    அதன்பிறகு பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்றுள்ளார். நரேந்திர மோடி இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். மேலும் ஆா்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்லும் முதல் இந்திய பிரதமரும் அவா் என்பதால் இந்த பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தீர்க்கும் வகையில் பிரதமர் மோடி இன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவரது தேசிய தலைவர் பதவியும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும் இருப்பதால் புதிய தேசிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    அங்கு ஆலோசனையை முடித்துவிட்டு புறப்பட்ட பிரதமர் மோடி 'சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்து வைத்தார்.

    நாக்பூரில் சமீபத்தில் இரு பிரிவினரிடையே மோதல்-வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார். 2024 பாராளுமன்ற தோ்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அவர் அங்கு அவா் செல்கிறாா்.

    இதையொட்டி பிலாஸ்பூரில் சுமாா் 2 லட்சம் பொதுமக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமா் மோடி, சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ரூ.33,700 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறாா். தொடா்ந்து அவா் மக்களிடையே உரையாற்றுகிறார்.



    Next Story
    ×