என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வுக்கு எதிரான விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்- சீமான்
- எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம்.
- தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
கே.கே. நகர்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கொலை நடந்து 13 ஆண்டு கடந்த நிலையிலும் குற்றவாளி யார்? என்று தெரியவில்லை. பெரிய தலைவர்களின் நிலை இப்படி என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. உரிய விசாரணை நடத்தப்படவில்லை.
அரசுக்கு எது தேவையோ எடுத்துக் கொள்ளப்படுகிறது. மற்றவைகளை மூடி மறைக்கப்படுகிறது.
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது யாருக்கும் தெரியாது.
நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் அனைத்தும் தி.மு.க.வின் அலுவலகம் போன்று செயல்படுகிறது.
நான் பெரியார் குறித்து பேசியதற்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் நான் கொடுக்கும் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
ஆனால் என் மீது கொடுக்கப்படும் வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
என் மீது பல்வேறு இடங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான எல்லா வழக்குகளும் ஒன்றிணைந்து விசாரிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் நீதிமன்றம் மதிப்பை இழந்து வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என சி.ஓட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. நாங்கள் பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். ஆனால், எங்கள் கட்சி அந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.
இதிலிருந்து கருத்துக்கணிப்பின் நேர்மை புலப்படுகிறது. இது கருத்துக்கணிப்பல்ல, கருத்து திணிப்பு. நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல, போராளிகள் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம்.
ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. அதில் உண்மை உள்ளதா இல்லையா என தெரியவில்லை. அதில் வழக்கில் தொடர்புடைய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளிகளா அல்லது குற்றத்தில் தொடர்புடையவர்களா? என்பதை அரசு கூற வேண்டும்.
சவுக்குசங்கர் வீடு தாக்குதலுக்கு உள்ளானது. குற்றத்தை யார் புரிந்தார்? என்பது வெளிப்படையாகவே தெரியும். அதற்கு எதற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை. அதிகாரத்தில் உள்ளவர்களே அந்த குற்றச்செயல்களை செய்துள்ளனர்.
இது பூனை தன் குட்டியை கவ்வதும், எலியை பிடிப்பதற்கு உள்ள வித்தியாசமாகும். எங்களை கடிக்கும் போது எலியை கடிப்பது போல் கடிக்கிறீர்கள். கொடுமையானவர்களே குற்றச் செயல்களில் உடந்தையானவர்களை பூனை குட்டியை கவ்வதை போல் பிடிக்கிறீர்கள்.
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் ஒப்புக்காக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரம் அவர்கள் கையில் உள்ளதால் நாட்டில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுட்டு பிடிப்பதற்கு காரணம் அவர்களது இயலாமை. அவர்களை பிடித்தால் பல்வேறு உண்மைகள் வெளியே வரும் என்பதால் அவர்களை சுட்டுக்கொன்று விடுகின்றனர்.
சங்கிலி திருடர்களை சுட்டு பிடிப்பதற்கு என்ன காரணம்? கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த சம்பவத்தை விட இது பெரிய சம்பவமா?
குடித்துவிட்டு பாட்டிலை திரும்பி கொடுத்தால் பத்து ரூபாய், பாடையிலே படுத்துவிட்டால் 10 லட்ச ரூபாய், இது திராவிட மாடல் பாலிசி. வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு தி.மு.க.வை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.
நான் பிரபாகரனை போல தனித்தே நின்று போட்டியிடுவேன். நான் புலி போன்றவன் தனித்தே நின்று போட்டியிடுவேன். படை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பவன் அல்ல நான். கூட்டத்தில் ஒரு ஆளாக போட்டியிட துணிவோ, வீரமோ தேவையில்லை, தனித்து நிற்கவும் தான் துணிவும் வீரமும் தேவை.
எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம். எந்த குழப்பமும் இல்லை தடுமாற்றமும் இல்லை. இன்னும் சில மாதங்கள் உள்ளது. தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.






