என் மலர்tooltip icon

    செய்திகள்

    • அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர்.
    • குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன், வேதங்கள், ஆயகலைகள் என அனைத்து கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றான்.

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் உலக புகழ் பெற்ற ஆலயம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.

    அந்த வகையில், சபரிமலையில் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பன், ஆண்டுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். கேரள முறைப்படி, மகர ராசியில் சூரியன் வரும் மாதம், 'மகர மாதம்' எனப்படுகிறது. இந்த மாதத்தின் முதல் நாளான மகர சங்கராந்தி அன்று, சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் கிடைப்பது வழக்கம். இந்த மகர ஜோதி தரிசனத்துக்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது.

    மகிஷாசுரனின் சகோதரியான மகிஷி என்ற அரக்கி, தன் சகோதரன் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க நினைத்தாள். இதனால் பிரம்ம தேவரை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய பிரம்மரிடம், ''சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் புத்திரனால் மட்டுமே எனக்கு மரணம் ஏற்பட வேண்டும்'' எனும் வரத்தை கேட்டாள். அதன்படி வரத்தை பெற்ற மகிஷி, தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி வந்தாள்.

    அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது அமிர்தத்தை எடுத்து சென்ற அசுரர்களிடம் இருந்து அமிர்தத்தை மீட்க விஷ்ணு பகவான், மோகினியாக அவதாரம் எடுத்தார். மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும், சிவனுக்கு ஹரிஹர அம்சமாக அவதரித்தவரே, ஐயப்பன்.

    அதே வேளையில், பந்தள மன்னன் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் மிகவும் வருந்தினான். அவன் குழந்தை பாக்கியம் வேண்டி தினமும் சிவனிடம் மனம் உருகி வேண்டி வந்தான். சிவனும், விஷ்ணுவும் குழந்தை ஐயப்பனை காட்டில் ஒரு மரத்திற்கு அடியில் விட்டுச்சென்றனர். அந்த சமயம் காட்டில் வேட்டைக்கு வந்த பந்தள மன்னன், ஒரு குழந்தை இருப்பதை கண்டான்.

    அப்போது அங்கு வந்த ஒரு முனிவர், ''மன்னா, உங்களுடைய குழந்தையில்லாக் குறையை போக்கவே இவன் அவதரித்திருக்கிறான். எனவே, இவனை எடுத்து வளர்ப்பாயாக. பன்னிரெண்டு வயது வரும்போது இவன் யார் என்பதை அறிவாய்'' என்று கூறினார். அந்த குழந்தையின் கழுத்தில் துளசி மாலையுடன் மணியும் இருந்தது. எனவே அந்த குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயரிட்ட மன்னன், குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச்சென்று ராணியிடம் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ராணி, அந்த குழந்தையை மிகவும் பாசத்தோடு வளர்த்தாள். சிறுவயதிலேயே மணிகண்டன் பல அற்புதங்களை செய்தார்.

     

    குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன், வேதங்கள், ஆயகலைகள் என அனைத்து கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றான். குருவின் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான். இந்நிலையில் ராணிக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது. அதற்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். தனக்கு மகன் பிறந்தாலும், மணிகண்டனுக்கே முடிசூட்ட வேண்டும் என்று மன்னன் விருப்பம் கொண்டார். ஆனால் இதை விரும்பாத மந்திரி ஒருவர், ராணியின் மனதை மாற்றி, மணிகண்டனை விரட்ட முடிவு செய்தான்.

    அதன்படி சதித்திட்டம் ஒன்றை தீட்டினான் மந்திரி. ராணியும் அதற்கேற்றார் போல் தீராத தலைவலி வந்தது போல நடித்தாள். ராணியின் தலைவலி தீர வேண்டுமானால் புலிப் பால் கொண்டு வரவேண்டும் என்று மருத்துவர்களை சொல்ல வைத்தான் மந்திரி. புலிப் பாலை கொண்டுவர முடியுமா? என அரசவையில் அனைவரும் திகைத்தனர். ஆனால், இது தனக்கு எதிரான சதித்திட்டம் என்பதை அறிந்தும், மணிகண்டன் ''நான் காட்டுக்குள் சென்று புலிப் பாலை கொண்டு வருகிறேன்'' எனப் புறப்பட்டான். காட்டுக்குள் சென்றால் நிச்சயம் திரும்பி வரமாட்டான் என்று மந்திரி பூரிப்புக்கொண்டான்.

    புலிப் பால் வேண்டி காட்டிற்கு சென்ற மணிகண்டன், அங்கு மனிதர்களை துன்புறுத்தி வந்த மகிஷி அரக்கியை அம்பு எய்து வீழ்த்தினான். தன்னை வீழ்த்தியது கண்டிப்பாக சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த ஒருவராகதான் இருக்கும் என்பதை உணர்ந்த மகிஷி, மறு உருவம் பெற்று எழுந்தாள். பின்பு, மணிகண்டனை வணங்கி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டினாள். ஆனால் மணிகண்டன், இந்த அவதாரத்தில் தான் பிரம்மச்சாரியாக வாழப்போவதாகவும், எனவே தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே 'மஞ்சமாதா' என்று அழைக்கப்படுகிறாள்.

    இதையடுத்து, ஒரு புலியின் மீது அமர்ந்தபடி பந்தள நாட்டு அரண்மனைக்கு திரும்பினார் ஐயப்பன். இதைப் பார்த்து வியந்த அனைவரும் பயபக்தியில் வணங்கி நின்றனர். மன்னன், ஐயப்பன் தெய்வ பிறவி என்பதை உணர்ந்தான். ஐயப்பன், தான் சபரிமலையில் ஒரு அம்பை எய்வதாகவும், அந்த அம்பு எந்த இடத்தில் விழுகிறதோ அங்கே ஒரு கோவில் கட்டும்படியும் அருளினார்.

    அதன்படி பந்தள நாட்டு மன்னன், சபரிமலையில் ஐயப்பன் கோவிலை கட்டினான். மகரசங்கராந்தி நாளில், பரசுராமர் உதவியுடன் கோவில் திறக்கப்பட்டது. மகரசங்கராந்தி நாளில், விரதம் இருந்து இருமுடி கட்டி தன்னை காண வரும் பக்தர்களுக்கு ஐயப்பன் ஜோதி வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    ஐயப்ப சுவாமி பந்தள அரண்மனையில் வளர்ந்தவர். இருப்பினும், அதன்பின்னர் சபரிமலையில் யோக நிலையில் அமர்ந்தவர். இதனால் ஆண்டுதோறும் ஐயப்பனை காண வரும்போது பந்தள மன்னன், பந்தளத்தில் இருந்து ஆபரணங்களை எடுத்து செல்வார். பின்பு, அதை ஐயப்பனுக்கு அணிவித்து வழிபட்டு மகிழ்வதாக கூறப்படுகிறது.

    இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மகர ஜோதி தினத்தில், பந்தளத்தில் இருந்து ஆபரணங்கள் கொண்டு வந்து சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பார்கள். அதன்பின்பு, அன்றைய தினத்தில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். பொதுவாக, தை மாதம் முதல் நாள் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்கழி மாதம் 30-ம் நாள் (14-1-2026) மாலை 6.30 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனத்தை பெறலாம்.

    மகர ஜோதி தரிசனத்துக்காக, சபரிமலையில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருகை தருவார்கள். கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள். ஜோதி தரிசனத்தை காணும்போது, 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தர்கள் எழுப்பும் முழக்கம் விண்ணை தொடும் அளவு எதிரொலிக்கும். பக்தர்கள் மகர ஜோதி தரிசனத்தை பக்தி பரவசத்துடன் கண்டு களிக்கும் காட்சியை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

    • பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்.
    • கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேற்று த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பினார்.

    இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அடுத்த வாரம் மீண்டும் விஜய் ஆஜராக உள்ளார்.

    * எந்த தேதியில் விஜய் மீண்டும் ஆஜர் என்பது தொடர்பாக முடிவு செய்யவில்லை.

    * விசாரணை குறித்த தகவல்களை வெளியே சொல்வது மாண்பாக இருக்காது.

    * சி.பி.ஐ. விசாரணையில் த.வெ.க. தலைவர் விஜய் தேவையான விளக்கத்தை அளித்திருந்தார்.

    * பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்.

    * ஜன நாயகன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது கருத்து கூற முடியாது.

    * கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.
    • புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் தைப்பொங்கல் சிறப்பு வழிபாடு செய்வதற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தவாறு உள்ளனர்.

    தென் மாவட்டத்தை சேர்ந்த தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் ஆண்டு தோறும் தைப் பொங்கலுக்கு முன்பு பாதயாத்திரையாக முருகன் படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் முன் ஆடி பாடி வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.

    அவர்கள் இன்று அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் (15-ந்தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.

    1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் தங்கம் உருக்கும் தொழில் கூடம் உள்ளது. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரிடம் அதே மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்ற 17 வயது சிறுவன் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்த நிலையில், சுஹாஷ் மற்றும் ஓம்கார் மட்டும் நேற்று கடையில் இருந்துள்ளனர். அப்போது சுமார் 1½ கிலோ தங்க நகைகளை உருக்கி, அதனை தங்க கட்டியாக மாற்றிய சுஹாஷ், அதனை எடை போட்டு எடுத்து வருமாறு சிறுவன் ஓம்காரிடம் கொடுத்துள்ளார். அதனை எடுத்துக்கொண்டு கடையின் முகப்பு பகுதிக்கு வந்த ஓம்கார், திடீரென மனம் மாறி தங்க கட்டியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடி தலைமறைவானார். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

    உடனடியாக இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை லாவகமாக மடக்கி கைது செய்தனர்.

    மேலும், அவரிடம் இருந்த 1½ கிலோ தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    • யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
    • அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் நாட்டு வெடி குண்டை விழுங்கியதால், இரண்டு வயது பெண் யானை குட்டி பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள குத்தியாலத்தூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, இறந்து கிடந்த யானை குட்டியின் உடலைக் கண்டெடுத்தனர்.

    வனத்துறை கால்நடை மருத்துவர் நடத்திய முதற்கட்ட சோதனையில், யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    யானை குட்டியின் பிரேத பரிசோதனையில், அது சக்தி வாய்த்த நாட்டு வெடிகுண்டை விழுங்கியதால் வாய் சிதைந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

    காட்டுப்பன்றிகள் அல்லது யானைகள் விளைநிலங்களுக்குள் வருவதைத் தடுக்க விவசாயிகள் இது போன்ற வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது வழக்கம்.

    இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.

    அவர் தனது விளைநிலத்தைப் பாதுகாக்க இந்த வெடிகுண்டை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    உயிரிழந்த யானை குட்டியின் உடல், வனத்துறை விதிகளின்படி அதே இடத்தில் புதைக்கப்பட்டது.  

    • ‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் மத்திய அரசு விஜய்க்கு அரசியல் அழுத்தம் தருவதாக தி.மு.க.வும், தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    • ‘ஜன நாயகன்’ படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும்.

    'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்காததால் அறிவித்த தேதியில் படம் வெளியாகாமல் போனது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளது.

    இதனிடையே, 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் மத்திய அரசு விஜய்க்கு அரசியல் அழுத்தம் தருவதாக தி.மு.க.வும், தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    'ஜன நாயகன்' படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும்.

    தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் Mr.மோடி என்று கூறியுள்ளார். 



    • காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
    • எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நேற்று மும்பை தெட்சணமாற நாடார் சங்கம் கிளை சேர்மன் காசிலிங்கம் தலைமையில் பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ஜஸ்டின், ஆல்பர்ட் உட்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

     

    கடந்த 2 நாட்களாக தாராவி பகுதியில் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்ட எம்.பி. விஜய்வசந்த் நேற்று வார்டு 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

    சாலிமார் வாடு பகுதியில் 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலுவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். நிறைவாக எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

     

    இந்த பொதுக்கூட்டத்தில் ஹோலிவாட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பல மொழி படங்களில் நடித்தாலும் கரகாட்டகாரன் படம்தான் அவரது தனி அடையாள சின்னமாக இருந்து வருகிறது.
    • தாயார் தேவிகா திடீர் இறப்பு அவரை நிலைகுலைய செய்தது.

    கரகாட்டகாரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனகா. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியுடன் அதிசயபிறவி மற்றும் தங்கமான ராசா, பெரிய வீட்டுபண்ணைக்காரன், கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, சரத்குமாருடன் சாமுண்டி என அடுக்கடுக்காக படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

    குறுகிய காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தாலும் கரகாட்டகாரன் படம்தான் அவரது தனி அடையாள சின்னமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தாயார் தேவிகா திடீர் இறப்பு அவரை நிலைகுலைய செய்தது.

    இதைத் தொடர்ந்து அடையாரில் உள்ள அவரது வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். வீட்டோடு தனிமையில் வாழ்ந்து வந்த கனகாவை நடிகை குட்டி பத்மினி திடீரென சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. புகைப்படத்தில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தார்.

    இந்நிலையில் நடிகர் ராமராஜனை கனகா திடீரென தற்போது நேரில் சந்தித்து பேசி உள்ளார். ராமராஜன் வீட்டில் மதிய உணவும் சாப்பிட்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு கரகாட்டகாரன் ஜோடியின் திடீர் சந்திப்பு சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

    • இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.
    • பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    அமெரிக்கக் கடற்படையின் ரகசியங்களைச் சீனாவிற்கு விற்ற 25 வயது முன்னாள் கடற்படை வீரர் ஜின்ச்சாவ் வெய் என்பவருக்கு அமெரிக்க மத்திய நீதிமன்றம் 200 மாதங்கள் (சுமார் 17 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்துள்ளது.

    சான் டியாகோவில் உள்ள USS Essex என்ற போர்க்கப்பலில் பணியாற்றி வந்த வெய், 2022-ஆம் ஆண்டு முதல் சீன உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    வெய் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடுகளைச் சீனாவிற்கு வழங்கியுள்ளார்.

    இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.

    அமெரிக்கக் கடற்படையின் தாக்குதல் திறன்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வெய் பெற்றுள்ளார்.

    பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "வெய் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காகத் தனது சக வீரர்களின் உயிரையும், நாட்டின் பாதுகாப்பையும் பணயம் வைத்துள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம்" என்று கூறி 200 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர். 

    சீன வம்சாவளியை சேர்ந்த வெய்-க்கு 2022-ஆம் ஆண்டு அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தபோதுதான் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

    குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தபோதே அவர் ராணுவ ரசிகசியங்களை கசிய விட்டுள்ளார். வெய் போலவே  ஜாவோ என்ற மற்றொரு அமெரிக்க கடற்படை வீரரும் சீனாவுக்கு உளவு பார்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார். இந்த தொடர் சம்பவங்கள் அமெரிக்க ராணுவத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.  

    • 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.
    • 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!

    கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.

    நாளை சென்னை சங்கமம் 2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.

    2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்! என்று கூறியுள்ளார். 



    • சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
    • தை அமாவாசை.

    13-ந் தேதி (செவ்வாய்)

    * மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

    * சுவாமிமலை முருகனுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந் தேதி (புதன்)

    * சர்வ ஏகாதசி.

    * போகிப் பண்டிகை.

    * சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (வியாழன்)

    * தைப் பொங்கல்.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் விழா தொடக்கம்.

    * மதுரை செல்லத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோலம், மாலை தங்கப் பல்லக்கில் ஊஞ்சல் சேவை.

    * சமநோக்கு நாள்.

    16-ந் தேதி (வெள்ளி)

    * மாட்டுப் பொங்கல்.

    * பிரதோஷம்.

    * மதுரை கூடலழகர் பெருமாள் கணு உற்சவ விழா தொடக்கம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (சனி)

    * உழவர் திருநாள்.

    * மதுரை செல்லத்தம்மன் விருட்சப சேவை.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.

    * கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (ஞாயிறு)

    * தை அமாவாசை.

    * தென்காசி விசுவநாதர், சங்கரன்கோவில் சங்கர நாராயணன் தலங்களில் லட்சதீபம்.

    * மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந் தேதி (திங்கள்)

    * மதுரை செல்லத்தம்மன் ரத உற்சவம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் விழா தொடக்கம்.

    * மேல்நோக்கு நாள்.

    ×