என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வடகொரிய மக்களின் வாழ்க்கை நிலை வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே உள்ளது.
- வடகொரியாவின் அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.
உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.
வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.
இந்நிலையில், Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளது.
சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது.
- அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவனந்தபுரம்:
செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில், செல்போனில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன. அவற்றில் "ஆபாச சாட்டிங்" தொடர்பான செயலிகளும் ஏராளமாக இருக்கின்றன.
அதுபோன்ற செயலியை பயன்படுத்தி பணத்தை இழப்பவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் "டேட்டிங் செயலி" பயன்படுத்திய சிறுவன் ஒருவன், பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நடந்திருக்கிறது.
14 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன், சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த நபர்கள், சிறுவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பலரால் சிறுவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறான். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுவனை காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, மேலும் பலரால் சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேட்டிங் செயலியை பயன்படுத்திய சிறுவன், பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.
சென்னை:
தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் அறிஞர் அண்ணா கொள்கைகளை பின்பற்றி அரசியல் பணிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி த.வெ.க. தலைவர் விஜய்யை அண்ணா பாராட்டி பேசுவது போல் சிறப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் கோடான கோடி உழைக்கும் மக்களின் உணர்வுமிக்க தம்பிகளின் பேராதரவை பெற்று தமிழ் மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.
'இன்று தம்பி விஜய் உன்னை அழைக்கிறேன், தம்பி வா. தலைமை தாங்க வா' என்பது உள்பட விஜய்யை புகழ்ந்து பேசும் பல வசனங்களுடன் அண்ணா, பெரியாருடன் விஜய் இருப்பது போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகி வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது.
- அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6 மணிக்கு, சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றனர்.
காலை 9 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பி துரை எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.
சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க. வக்கீல்களும் கட்சி நிர்வாகிகளும் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், டெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் ஓட்டலுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி தங்கினார்.

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் நேரில் வாழ்த்தினார். அப்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.
இதையடுத்து, மத்திய மந்திரி அமித்ஷாவை, இன்று இரவு 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்தும் இருவரும் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இந்த சந்திப்புகளை முடித்துவிட்டு இன்று இரவு எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் தங்குகிறார்.
நாளை 17 -ந்தேதி அவர் தமிழகம் திரும்புகிறார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வராமல், நேரடியாக கோவைக்கு செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமியை ஏராளமான கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வழி அனுப்பி வைத்தனர்.
பெல்லங்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த ஹாரர்-த்ரில்லர் "கிஷ்கிந்தாபுரி" படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டிக்கெட் விற்பனையிலும் உயர்வு பதிவாகியுள்ளது. புக் மை ஷோ தகவல்படி, சனிக்கிழமையே சுமார் 75,000 டிக்கெட்டுகள் விற்பனையானது. இது வெள்ளிக்கிழமை விட 25,000 அதிகமாகும்.
இப்படத்தை கவுஷிக் பேகல்பட்டி ( Chavu Kaburu Challaga புகழ்) இயக்கியுள்ளார். இது ஒரு ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
சாண்டி மாஸ்டர், தனிக்கெல்லா பாரணி, ஸ்ரீகாந்த் அய்யங்கார், ஹைப்பர் ஆதி, மக்ரந்த் தேஷ்பாண்டே, சுதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சாண்டி மாஸ்டர் இதி ஒரு வித்தியாசமான வில்லன் கதாப்பாத்திரம் மற்றும் தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் நடித்த ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திவரும் லோகா படத்திலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் சாண்டி நடித்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடன இயக்குநராக இருந்து தற்போது வில்லன் கதாப்பாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இன்னும் பல மொழிகளில் பல திரைப்படங்களில் கமிட் ஆகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தொழில்நுட்பம்:
இசை: சைதன் பாரத்வாஜ்
தயாரிப்பு: சாகு கருபட்டி – ஷைன் ஸ்க்ரீன்ஸ்
ஒளிப்பதிவு – சின்மயி சலஸ்கர்
எடிட்டிங் – நிரஞ்சன் தேவரமணே
கலை இயக்கம் – டி. சிவ காமேஷ்
தயாரிப்பு வடிவமைப்பு – மனிஷா தத்
- அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
கிண்டி:
சென்னை கிண்டியில் ராமசாமி படையாட்சியாருக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* சமூக நீதிக்கு தி.மு.க. துரோகி மட்டுமல்ல விரோதி. தி.மு.கவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை.
* சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.
* மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதலமைச்சர் பொய் சொல்கிறார்.
* அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றார்.
- போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது
- இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் முறையிட்டு உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். ஓய்வறை வாசலில் பாகிஸ்தான் வீரர்கள் காத்துக் கொண்டிருந்த போது இந்திய அணி அறைக் கதவு மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போட்டிக்கு முன்பே மத்திய அரசு மற்றும் பி.சி.சி.ஐ. உடன் ஆலோசித்து பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்து விட்டதாக கேப்டன் சூர்ய குமார் யாதவ் கூறினார். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டு உள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவா் மோசின் நக்வி 'எக்ஸ்'தள பதிவில் 'கிரிக்கெட்டின் மூலமாக இருக்கும் எம்.சி.சி.யின் விதிகளை யும், ஐ.சி.சி.யின் நடத்தை விதிகளையும் போட்டி நடுவா் (ஆண்டி பை கிராப்ட்) மீறியது தொடா் பாக ஐ.சி.சி.யிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட நடுவரை ஆசிய கோப்பை போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.
ஐ.சி.சி. நிராகரிப்பு
பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடுவர் பைகிராப்டை நீக்கும் மனநிலையில் இல்லை என்று கூறிப்படுகிறது. மோஷின் நக்வியின் கோரிக்கை மீது ஐ.சி.சி. நட வடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து ஐ.சி.சி. தனது முடிவை விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.
போட்டி நடுவரை நீக்காவிட்டால் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலகப் போவதாகவும் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரிக்க இருப்பதால் அந்த அணி போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோசின் நக்வி ஆசிய கவுன்சிலின் தலைவராக இருக்கிறார். அவர் ஜெய்ஷா தலைவராக இருக்கும் ஐ.சி. சி.யிடம் தான் முறையிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலையில் விவாதம் நடந்து வருகிறது.
- விவாதத்தில் கருத்துக்களை சொல்ல யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.
சென்னை:
தமிழ்நாட்டில் பா.ஜ.க.- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த சூழ்நிலையில் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க.வில் இருப்பவர்களுக்கு அரசியல், சமூக ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி? கட்சியை பலப்படுத்தி சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் களத்தை சந்திப்பது எப்படி? என்பது உள்பட பல்வேறு செயல்கள் பற்றி விவாதித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
சிந்தன்பைடெக் (சிந்தனை அரங்கம்) என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நடத்துவார்கள். ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த சிந்தனை அமர்வு நிகழ்ச்சி தமிழ்நாட்டில் இன்று நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள அரங்கத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலையில் விவாதம் நடந்து வருகிறது.
கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், கரு.நாகராஜன் மற்றும் பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள், செயலாளர்கள், 7 அணிகளின் தலைவர்கள், அணி பிரிவுகளின் பொறுப்பாளர்கள் 25 பேர், முக்கிய நிர்வாகிகள் என சுமார் 70 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். கூட்டம் நடைபெறும் அரங்குக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. காலை தொடங்கிய இந்த கூட்டம் இரவு வரை நடக்கிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், கூட்டணிக்குள் ஏற்படும் குழப்பங்கள், மக்கள் மனநிலை அமைப்பு ரீதியாக கட்சியின் நிலை, தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது, தேர்தல் வெற்றிக்கான வழி முறைகள் மற்றும் கூட்டணியை வலுப்படுத்துவது என்பது உள்பட 10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
ஒவ்வொருவரும் பேசி முடித்ததும் அதன் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கருத்துக்களை சொல்ல யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.

இந்த அமர்வின் போது அவ்வப்போது தேனீர் இடைவேளை மட்டும் விடப்படும். இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சி வலுப்படாமல் இருப்பதற்கு நிர்வாகிகளிடையே நிலவும் கோஷ்டி பூசல்கள், கட்சியை விட தங்கள் சுயநலத்தின் மீது கொண்டுள்ள அக்கறை உள்ளிட்ட சில முக்கிய காரணங்கள் உள்ளன. இதுபற்றி எடுத்துச் சொல்லப்போவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
நாள் முழுவதும் அனைவரது கருத்துக்கள், சிந்தனைகள், ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகள், எதிர்பார்ப்பது பற்றிய விவரங்களை பி.எல்.சந்தோஷ் கேட்கிறார்.
நிறைவாக மாலை 6 மணியளவில் அவர் ஆலோசனை வழங்குகிறார். அப்போது அரசியல் ரீதியாக கட்சியினர் என்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டும். கட்சி அமைப்பை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சி கட்டுப்பாடு, தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு இணக்கமாக செயல்படுவது உள்ளிட்ட விஷயங்களில் பா.ஜ.க.வினர் நடந்து கொள்ள வேண்டிய விதங்கள் பற்றி எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் குழப்பங்கள் நடந்து வரும் நிலையில் இன்று இந்த கூட்டம் நடப்பதால் கட்சி மேலிடத்தின் முடிவு பற்றியும் அவர் விரிவாக விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மோகன்லால் அடுத்ததாக Vrusshabha என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு பான் இந்தியன் காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசரை வரும் 18 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.
ஒளிப்பதிவு: Antony Samson
எடிட்டிங்: KM பிரகாஷ்
- சூதாட்டசெயலி வழக்கு தொடர்பாக சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
- ஷிகர் தவான் எட்டு முறை விசாரிக்கப்பட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் உத்தப்பாவிற்கு அமலாக்கத்துறை (ED ) சம்மன் அனுப்பியுள்ளது.
சூதாட்டசெயலி வழக்கு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. ஷிகர் தவான் எட்டு முறை விசாரிக்கப்பட்டுள்ளார்.
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டக்குபதி, விஜய் தேவரகொண்டா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோரும் முன்னதாக விசாரிக்கப்பட்டனர்.
பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை அண்மையில் மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை, அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்த லலிதா என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் தனது மகன் வினோத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார்.
சிறை விதிமுறைகளின்படி, கைதிக்கு கொடுப்பதற்காக அவர் கொண்டு வந்திருந்த பிஸ்கட், கடலைமிட்டாய், ஊறுகாய் மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை சிறைக் காவலர்கள் சோதனை செய்தனர்.
ஏட்டு கண்ணன் தலைமையிலான சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையின்போது, பேரீச்சம்பழங்களில் சிலவற்றின் கொட்டைகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சுமார் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறை அலுவலர் முனியாண்டி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கஞ்சாவை மறைத்து கொண்டு வந்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருளை கடத்த முயன்ற குற்றத்திற்காக லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்ட லலிதாவின் மகன் வினோத், ஏற்கனவே கடையம் போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் சிறையில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
- ஐ.டி. பார்க் பகுதியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திடீரென கொட்டும் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. அப்போது திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
மேலும் அங்குள்ள ஐ.டி. பார்க் பகுதியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் சிக்கியதில் 2 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
முன்னதாக, பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள சாலையில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையை விரைவில் திறக்க மாநில நிர்வாகம் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. டேராடூனில் மேக வெடிப்பைத் தொடர்ந்து ரிஷிகேஷில் உள்ள சந்திரபாகா நதியில் காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் 3 பேர் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட நீதிபதி சவின் பன்சால், துணைப் பிரிவு நீதிபதி கும்கம் ஜோஷி மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதத்தை பார்வையிட்டனர். காணாமல் போனவர்களை விரைவில் தேடி மீட்குமாறு மீட்பு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக டேராடூனில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், மக்களை பாதுகாக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டின் தரலி-ஹர்சில், சாமோலியில் தரலி, ருத்ரபிரயாக்கில் உள்ள செனகாட், பவுரியில் சைன்ஜி, பாகேஷ்வரில் காப்கோட் மற்றும் நைனிடால் மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த மழை, மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவை இந்த பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அங்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1200 கோடி நிவாரணத் தொகையை அளித்துள்ளது. வெள்ள சேதத்தினை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் மேலும் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மழை தொடர்ந்து வரும் நிலையில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மழை நின்ற பிறகே உண்மையான பாதிப்புகள் கணக்கெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






