என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சுமார் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை, அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்த லலிதா என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் தனது மகன் வினோத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார்.
சிறை விதிமுறைகளின்படி, கைதிக்கு கொடுப்பதற்காக அவர் கொண்டு வந்திருந்த பிஸ்கட், கடலைமிட்டாய், ஊறுகாய் மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை சிறைக் காவலர்கள் சோதனை செய்தனர்.
ஏட்டு கண்ணன் தலைமையிலான சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையின்போது, பேரீச்சம்பழங்களில் சிலவற்றின் கொட்டைகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சுமார் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறை அலுவலர் முனியாண்டி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கஞ்சாவை மறைத்து கொண்டு வந்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருளை கடத்த முயன்ற குற்றத்திற்காக லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்ட லலிதாவின் மகன் வினோத், ஏற்கனவே கடையம் போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் சிறையில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
- ஐ.டி. பார்க் பகுதியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திடீரென கொட்டும் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. அப்போது திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
மேலும் அங்குள்ள ஐ.டி. பார்க் பகுதியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் சிக்கியதில் 2 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
முன்னதாக, பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள சாலையில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையை விரைவில் திறக்க மாநில நிர்வாகம் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. டேராடூனில் மேக வெடிப்பைத் தொடர்ந்து ரிஷிகேஷில் உள்ள சந்திரபாகா நதியில் காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் 3 பேர் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட நீதிபதி சவின் பன்சால், துணைப் பிரிவு நீதிபதி கும்கம் ஜோஷி மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதத்தை பார்வையிட்டனர். காணாமல் போனவர்களை விரைவில் தேடி மீட்குமாறு மீட்பு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக டேராடூனில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், மக்களை பாதுகாக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டின் தரலி-ஹர்சில், சாமோலியில் தரலி, ருத்ரபிரயாக்கில் உள்ள செனகாட், பவுரியில் சைன்ஜி, பாகேஷ்வரில் காப்கோட் மற்றும் நைனிடால் மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த மழை, மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவை இந்த பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அங்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1200 கோடி நிவாரணத் தொகையை அளித்துள்ளது. வெள்ள சேதத்தினை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் மேலும் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மழை தொடர்ந்து வரும் நிலையில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மழை நின்ற பிறகே உண்மையான பாதிப்புகள் கணக்கெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் இணையத்தில் ட்ரெண்டானது.
தங்கபாண்டியன் என்பவர் தனது இன்ஸ்டா ஐடியில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவரது வீடியோக்கள் அனைத்தும் வைரலானதை தொடர்ந்து பல மக்கள் அந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கினர்.
'மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனி தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்... என்று அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
இதனிடையே கூமாப்பட்டி பிளவக்கல் அணை பகுதியில் பொதுமக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் கூமாபட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இதன்மூலம் பிரபலமான தங்கபாண்டியன் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். மேலும் ஒரு இன்ஃப்லூயுன்சராக அவதாரம் எடுத்தார்.
இந்நிலையில் கூமாப்பட்டி தங்கபாண்டியன் பேருந்தில் வரும்பொழுது கதவு இடித்து கை முறிவு ஏற்பட்டுள்ளது. இது பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நடந்தது என அவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
- புதிய மாருதி சுசுகி விக்டோரிஸ் காரில் 1.5 லிட்டர், NA பெட்ரோல் எஞ்சின், மைல்ட்-ஹைப்ரிட், ஸ்டிராங்-ஹைப்ரிட் மற்றும் CNG வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- இந்த யூனிட் லிட்டருக்கு 28.65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. புதிய விக்டோரிஸ் மாடலின் அறிமுக விலை ரூ. 10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இந்த மாடல் BNCAP மற்றும் GNCAP சோதனைகள் இரண்டிலும் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
வெளிப்புறத்தில், மாருதி சுசுகி விக்டோரிஸ் புதிய எல்இடி டிஆர்எல்-கள், புதிய முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள், முழு எல்இடி லைட்கள், புதிய 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், டெயில்கேட்டில் எல்இடி லைட் பார் மற்றும் சில்வர் நிற ரூஃப் ரெயில்களைப் பெறுகிறது. இந்த கார் பத்து விதமான நிறங்கள் மற்றும் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய விக்டோரிஸ் மாடலின் உள்புறத்தில், லெவல் 2 ADAS சூட், புதிய 10.1-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டால்பி அட்மோஸ் மியூசிக் சிஸ்டம், வென்டிலேட்டெட் முன்புற இருக்கைகள், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் உடன் இயங்கும் டெயில்கேட், அண்டர்பாடி CNG டேங்க், பனோரமிக் சன்ரூஃப், 60W மற்றும் 45W USB டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், HUD, சரவுண்ட் லைட்கள் மற்றும் 10.25-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

புதிய மாருதி சுசுகி விக்டோரிஸ் காரில் 1.5 லிட்டர், NA பெட்ரோல் எஞ்சின், மைல்ட்-ஹைப்ரிட், ஸ்டிராங்-ஹைப்ரிட் மற்றும் CNG வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் e-CVT யூனிட்கள் அடங்கும். இந்த யூனிட் லிட்டருக்கு 28.65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
இந்திய சந்தையில் மாருதி விக்டோரிஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், டாடா ஹரியர், ஃபோக்ஸ்வாகன் டைகுன், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷக் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.
மாருதி சுசுகி விக்டோரிஸ் மாடலின் 1.5 MT LXi வேரியண்ட் விலை ரூ. 10.50 லட்சம் என துவங்கி, டாப் எண்ட் மாருதி விக்டோரிஸ் 1.5 e-CVT ZXi+ (O) விலை ரூ. 19.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- புடவைகளில் இருக்கும் புகைப்படங்களை பெண்கள் ஜெமினியில் ஜெனரேட் செய்து பதிவிட்டனர்.
- ஜெமினியில் புகைப்படங்களை எடிட் செய்வது பாதுகாப்பானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.
கூகுளின் Gemini Al தளம் மூலம் உருவக்கப்படும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Gemini 2.5 Flash Image Tool மென்பொருளை பயன்படுத்தி இந்த புகைப்படங்களை ஜெமினி நொடிகளில் உருவாக்கித் தருகிறது.
Nano Banana என அழைக்கப்படும் இந்த புதிய ட்ரெண்ட்-ல் இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை ஜெனரேட் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக புடவைகளில் இருக்கும் அழகான புகைப்படங்களை பெண்கள் ஜெமினியில் ஜெனரேட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், ஜெமினியில் புகைப்படங்களை எடிட் செய்வது பாதுகாப்பானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெமினியில் புடவையுடன் இருக்கும்படியாக ஒரு புகைப்படம் ஜெனரேட் செய்தேன். ஆனால் அதில், நான் கொடுத்த படத்தில் தெரியாத என்னுடைய மச்சம் ஜெனரேட் செய்யப்பட்ட படத்தில் உள்ளது. ஆகவே ஆன்லைனில் பதிவிடப்படும் அனைத்து அனைத்து புகைப்படங்களையும் ஏஐ கவனிக்கிறது. ஆகவே புகைப்படங்களை பதிவிடும்போது கவனமாக இருங்கள்" என்று தெரிவித்தார்.
- ராமதாஸ் வீடு அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அன்புமணி ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
- தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்தபோது அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு 2 முறை அவகாசம் கொடுத்தும் அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து நேற்று பா.ம.க. மற்றும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக டாக்டர் அன்புமணி தரப்பினர் திண்டிவனம் டாக்டர் ராமதாஸ் வீடு அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அன்புமணி ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திப்பதற்கு முக்கிய நிர்வாகிகள் தற்போது தைலாபுரம் தோட்டத்திற்கு ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர். இதனால் தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சென்னையில் விஜய் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போவதாகவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
இதேபோல் சென்னையிலும் விஜய் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 27-ந்தேதியன்று வட சென்னையிலும், அக்டோபர் 25-ந்தேதியன்று தென் சென்னையிலும் சாலை மார்க்கமாக சென்று விஜய் மக்களை சந்திக்க அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நாளில் 4 மாவட்டங்களுக்கு செல்லும் திட்டத்தை மாற்றி ஒருநாளில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயின் தேர்தல் பிரசார பயணம் குறித்து புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் லோகா படத்தின் வசூல் மோகன்லால் நடித்த துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாளில் தாண்டியுள்ளது. அதிக வசூல் பெற்ற மலையாள சினிமா பட்டியலில் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
மேலும் புக் மை ஷோ செயலியில் இதுவரை அதிகம் டிக்கெட் புக் செய்யப்பட்ட மலையாள திரைப்படம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. திரைப்படம் வசூலி உலகளவில் 250 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது.
- எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை காக்க வந்த தெய்வம் என்று மக்கள் வரவேற்பதை கண்டு எதிரிகளும், துரோகிகளும் வயிற்று எரிச்சல் ஆகின்றனர்.
- பொறாமையால் எதிரிகளும், துரோகிகளும் வசை பாடி கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின்பு அம்மா தனது அயராது உழைப்பால் இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கினார். குறிப்பாக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலையை நிற்க வைத்து மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இந்த இயக்கத்தை வெல்ல எவருமில்லை என்ற வரலாற்றை நிரூபித்தார்.
இருபெரும் தலைவர்கள் மறைவுக்கு பின் தொண்டர்கள் கண்ட பொக்கிஷமாக, இருபெரும் தலைவர்கள் வடிவமாக, 8 கோடி மக்களின் நம்பிக்கையாக, எடப்பாடியார் இந்த இயக்கத்திற்கு பொக்கிஷமாக கிடைத்தார். மேலும் அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்டெடுத்து, தமிழ்நாட்டை ஒரு குடும்பத்தில் சிக்காமல் மீட்க எழுச்சி பயணத்தை நடத்தி வருகிறார்.
ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை ஒழித்து, மீண்டும் மக்களாட்சி மலர எளிய தொண்டராய், களப்போராளியாய் உரிமை போராட்டத்தை எடப்பாடியார் நடத்தி வருகிறார். சாமானிய மக்களுக்களின் உரிமை குரலாக, தன்மானத்தோடு களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். இதுவரை 150 தொகுதிக்கு மேல் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு 65 லட்சம் மக்களை சந்தித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை காக்க வந்த தெய்வம் என்று மக்கள் வரவேற்பதை கண்டு எதிரிகளும், துரோகிகளும் வயிற்று எரிச்சல் ஆகின்றனர். பொறாமையால் எதிரிகளும், துரோகிகளும் வசை பாடி கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள், துரோகிகள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் பிரச்சனை, தொண்டர்களிடம் பிரச்சனை, நிர்வாகிகளிடம் பிரச்சனை, தலைமை இடத்தில் பிரச்சனை என்று வாய்க்கு வந்ததை கூறி அவர்களே இன்றைக்கு தமிழகத்தில் பிரச்சனையாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இன்றைக்கு பொதுநலத்துடன், சேவை நோக்கத்துடன் எடப்பாடியார் திகழ்ந்து எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருபெரும் தலைவர்களின் செல்வாக்கால் எதிரிகளிடம் சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் இன்றைக்கு எதிரிகளுக்கு தூக்கம் தொலைந்து விட்டது.
தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்க, வளமான எதிர்காலத்தை உருவாக்க எடப்பாடியார் உழைத்துக் கொண்டிருக்கிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இருபெரும் தலைவர்களால் விலாசத்தை பெற்றவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு அ.தி.மு.க.வின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து தோற்றுத்தான் போனார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக் காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால் தொண்டர்கள் சொத்தான அ.தி.மு.க.விற்கு சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது.
ஒவ்வொரு தொண்டர்களும் மன உறுதியுடன் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தாய் இல்லாத பிள்ளையாக நாம் இருந்தபோது தாயாக நமக்கு கிடைத்தவர் தான் எடப்பாடியார். அவர் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். தொண்டருக்கு தொண்டராக எடப்பாடியார் நமக்கு கிடைத்துள்ளார். இதுதான் ஜனநாயகத்தின் அற்புதம், ஜனநாயகத்தின் வளர்ச்சி. இதை சர்வாதிகாரர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த சர்வாதிகாரர்கள் எடுக்கும் முடிவுக்கு சில கருங்காலிகள் துணை போகிறார்கள்.
அ.தி.மு.க.விற்கும், தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக எடப்பாடியார் உள்ளார். அவருக்கு பலவீனத்தை ஏற்படுத்த சலசலப்பை ஏற்படுத்தும் சில செல்லாக்காசுகளால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. தொண்டர்கள் அனைவரும் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். சர்வாதிகாரிகளுக்கும் அவர்களுக்கு துணை போகும் கருங்காலிக்கும் தக்க பாடத்தை நாம் புகட்ட வேண்டும். தொண்டர்கள் நாம் எல்லோரும் மன உறுதியோடும், விசுவாசத்தோடும் எடப்பாடியாரிடம் இருக்க வேண்டும்.
சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுகிறார்கள். அவர்கள் முகத்திரையை கிழித்து எறியவேண்டும். மீண்டும் 2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் நாம் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
- எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்த போர் 2 ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே கடந்த வாரம் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை குறி வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கத்தார் அழைப்பு விடுத்தது.
அதன்படி நேற்று அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்தது.
இதில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, துருக்கி அதிபர் எர்டோகன், பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் முடிவு செய்து உள்ளன.
- எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.
- துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க. தான் என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல என்று கூறினார்.
மேலும் டி.டி.வி. தினகரன் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
* கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டதால் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்.
* கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் வேட்பாளர் பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து வாங்கச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.
* அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல. சசிகலா கூறியதால் தான் 122 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
* ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.
* அதிகாரத்தில் இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராக முடியவில்லை.
* எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.
* பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனக்கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி.
* துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.
* தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என இதுவரை அமித்ஷா குறிப்பிடவில்லை.
* நீங்கள் விரும்புபவர் தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அமித்ஷா எங்களிடம் கூறியிருந்தார்.
* டெல்லிக்கு சென்று 6 கார்கள் மாறிமாறி திருட்டுத்தனமாக அமித்ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி.
* அதிமுகவிற்கு தற்போது உள்ள 20 சதவீத வாக்குகளும் வரும் தேர்தலில் 10 சதவீதமாக குறையத்தான் போகிறது.
* 2026 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி தோற்பதற்கு நாங்கள் காரணமில்லை. அவர்தான் காரணம்.
* தன்மானம் தான் முக்கியம் என பேசிவரும் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்றது ஏன்?
* எடப்பாடி பழனிசாமியை தாக்கிப்பேசினால் அவரால் தாங்க முடியாது என்று கூறினார்.
- வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
- மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து (வயது 28) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். வைரமுத்து மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், இவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிகிறது. இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் இரு குடும்பத்திற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண்ணின் தாயார் வைரமுத்து வேலை பார்க்கும் கடைக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார். பின்னர், இருவருக்கும் சில மாதங்களில் பதிவு திருமணம் செய்து வைப்பதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பெண் தான் பணிபுரிந்து வரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரவு வழக்கம்போல் வைரமுத்து வேலையை முடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அவரை வழிமறித்தனர். பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வைரமுத்துவை ஓட ஓட விரட்டி சென்று, கழுத்து, கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வைரமுத்துவை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் தொடர்பு டையவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காதலியின் குடும்பத்தினர் இதில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை துரிதப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் அடியமங்கலம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழல் நிலவுகிறது.






