என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026 சட்டசபை தேர்தல்: தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனை
- பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலையில் விவாதம் நடந்து வருகிறது.
- விவாதத்தில் கருத்துக்களை சொல்ல யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.
சென்னை:
தமிழ்நாட்டில் பா.ஜ.க.- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த சூழ்நிலையில் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க.வில் இருப்பவர்களுக்கு அரசியல், சமூக ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி? கட்சியை பலப்படுத்தி சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் களத்தை சந்திப்பது எப்படி? என்பது உள்பட பல்வேறு செயல்கள் பற்றி விவாதித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
சிந்தன்பைடெக் (சிந்தனை அரங்கம்) என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நடத்துவார்கள். ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த சிந்தனை அமர்வு நிகழ்ச்சி தமிழ்நாட்டில் இன்று நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள அரங்கத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலையில் விவாதம் நடந்து வருகிறது.
கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், கரு.நாகராஜன் மற்றும் பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள், செயலாளர்கள், 7 அணிகளின் தலைவர்கள், அணி பிரிவுகளின் பொறுப்பாளர்கள் 25 பேர், முக்கிய நிர்வாகிகள் என சுமார் 70 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். கூட்டம் நடைபெறும் அரங்குக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. காலை தொடங்கிய இந்த கூட்டம் இரவு வரை நடக்கிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், கூட்டணிக்குள் ஏற்படும் குழப்பங்கள், மக்கள் மனநிலை அமைப்பு ரீதியாக கட்சியின் நிலை, தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது, தேர்தல் வெற்றிக்கான வழி முறைகள் மற்றும் கூட்டணியை வலுப்படுத்துவது என்பது உள்பட 10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
ஒவ்வொருவரும் பேசி முடித்ததும் அதன் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கருத்துக்களை சொல்ல யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.
இந்த அமர்வின் போது அவ்வப்போது தேனீர் இடைவேளை மட்டும் விடப்படும். இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சி வலுப்படாமல் இருப்பதற்கு நிர்வாகிகளிடையே நிலவும் கோஷ்டி பூசல்கள், கட்சியை விட தங்கள் சுயநலத்தின் மீது கொண்டுள்ள அக்கறை உள்ளிட்ட சில முக்கிய காரணங்கள் உள்ளன. இதுபற்றி எடுத்துச் சொல்லப்போவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
நாள் முழுவதும் அனைவரது கருத்துக்கள், சிந்தனைகள், ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகள், எதிர்பார்ப்பது பற்றிய விவரங்களை பி.எல்.சந்தோஷ் கேட்கிறார்.
நிறைவாக மாலை 6 மணியளவில் அவர் ஆலோசனை வழங்குகிறார். அப்போது அரசியல் ரீதியாக கட்சியினர் என்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டும். கட்சி அமைப்பை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சி கட்டுப்பாடு, தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு இணக்கமாக செயல்படுவது உள்ளிட்ட விஷயங்களில் பா.ஜ.க.வினர் நடந்து கொள்ள வேண்டிய விதங்கள் பற்றி எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் குழப்பங்கள் நடந்து வரும் நிலையில் இன்று இந்த கூட்டம் நடப்பதால் கட்சி மேலிடத்தின் முடிவு பற்றியும் அவர் விரிவாக விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.






