என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.
    • கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம். ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட் எடுக்க முடியாது!

    தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.

    மேலும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தனது பிறந்த நாள் அன்று தினேஷ் கார்த்திக் அறிவித்து இருந்தார்.

    இந்நிலையில், ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்லா வகையிலும் எங்கள் கீப்பரை வரவேற்கிறோம், தினேஷ் கார்த்திக், புதிய அவதாரத்தில் ஆர்சிபி-க்கு திரும்புகிறார். அவர் ஆர்சிபியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் ஆகிறார்.

    கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம். ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட் எடுக்க முடியாது! அவருக்கு முழு அன்பையும் பொழியுங்கள், 12வது மேன் ஆர்மி! என தெரிவித்துள்ளது.


    • ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது.
    • போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.

    கொலோன்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-சுலோவாக்கியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

    சுலோவாக்கியா அணிக்காக 25-வது நிமிடத்தில் இவான் ஷ்ரான்ஸ் கோல் அடித்தார். ஆட்டம் நிறைவடையும் தருவாயில் இங்கிலாந்துக்காக பெல்லிங்காம் கோல் அடித்தார். கடைசி நிமிட கோலால் இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பியது.

    இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி கால்இறுதியில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த மற்றொரு 2-வது சுற்று போட்டியில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

    ஸ்பெயின் அணியில் ரோட்ரி (39-வது நிமிடம்), ரூயிஸ் (51), வில்லியம்ஸ் (75), ஒல்மோ(91) கோல் அடித்தனர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நார்மென்ட் அடித்த சுயகோலால் ஜார்ஜியாவுக்கு ஒரு கோல் கிடைத்தது.

    ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.

    • மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது
    • டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகிறது

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. டி20 தொடர் அறிமுகமான 2007 ஆம் ஆண்டு முதல் தொடரில் டோனி தலைமையில் இந்திய அணி அதன்பின் நடந்த தொடர்களில் வெற்றிபெறவில்லை. தற்போது 17 வருடங்கள் களைத்து 2 வது முறையாக இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளதை நாடே கொண்டாடி வருகிறது.

    இந்த வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த மோடி, தனது எக்ஸ் தளத்தில் டி20 ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தனியாக வாழ்த்து பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

     

    இந்நிலையில் ஜடேஜாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

    மோடி ஜடேஜாவுக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'நீங்கள் ஆல் ரவுண்டராக தனித்துவமான முறையில் செயப்பட்டீர்கள். கிரிக்கெட் ரசிகர்கள் உங்களது ஸ்டிரோக் பிளே ஸ்டைலையும்,, அற்புதமான ஃபீல்டிங்கையும் விரும்புகிறார்கள். தற்போதும் கடந்த டி20 போட்டிகளிலும் உங்களின் வசீகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களின் பயணம் தொடர எனது வாழ்த்துகள் என்று எழுதியிருந்தார்.

    இந்நிலையில் 'டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு பெற்று விட்டார், அவரை பாராட்டி ஒரு டிவீட் எழுது' என CHAT GPT யிடம் கூறியதற்கு அச்சு அசலாக மோடியின் பதிவு போலவே வாக்கியம் பிசகாமல் CHAT GPT எழுதியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவின் டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ். ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது.
    • இதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    டெக்சாஸ்:

    அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ். ஓபன் பேட்மிண்ட்ன் தொடர் நடைபெறுகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜப்பான் வீராங்கனை நட்சுகி நிடைரா உடன் மோதினார்.

    இதில் மாளவிகா 16-21, 13-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்தப் போட்டி சுமார் 43 நிமிடங்கள் நடந்தது.

    • இந்திய அணி 17 ஆண்டுக்குப் பிறகு 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதற்கிடையே, உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்தார் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா.

    இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பாய்ந்து பிடித்த கேட்சை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக இர்பான் பதான் கூறுகையில், என் கடைசி மூச்சு உள்ள வரை சூர்யகுமார் யாதவின் கேட்சை மறக்கமாட்டேன்.

    இந்த கண்ணீர் நான் சோகமாக இருப்பதாலோ அல்லது என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களினாலோ அல்ல. இவை மகிழ்ச்சியான கண்ணீர் என தெரிவித்தார்.

    • டி20 போட்டியில் இரண்டாவது உலகப் பட்டத்தை வென்றது இந்திய அணி.
    • ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வென்றுள்ளது.

    டி20 உலகக் கோப்பையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வெற்றப்பெற்றதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் விதிவிலக்கான செயல்பாட்டின் மூலம் "தங்கள் விமர்சகர்களை வாயடைத்து உள்ளனர்" என்று கூறினார்.

    பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து டி20 போட்டியில் இரண்டாவது உலகப் பட்டத்தை வென்றது.

    இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருப்பதாவது:-

    ரோஹித் சர்மாவின் விதிவிலக்கான தலைமையின் கீழ், இந்திய அணி குறிப்பிடத்தக்க உறுதியையும் பின்னடைவையும் வெளிப்படுத்தியுள்ளது.

    ஐசிசி டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வென்ற முதல் அணியாக மாறியுள்ளது.

    அவர்கள் தங்கள் விமர்சகர்களை மீண்டும் மீண்டும் நட்சத்திர நிகழ்ச்சிகளால் எதிர்கொண்டு அமைதிப்படுத்தியுள்ளனர்.

    அவர்களின் பயணம் உத்வேகம் தருவதற்கு ஒன்றும் இல்லை, இன்று அவர்கள் முன்னணி வரிசையில் இணைகிறார்கள்.

    இந்த குழு அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தளராத மனப்பான்மை ஆகியவற்றால் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது.

    ரோஹித் ஷர்மாவின் தலைமையில், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிறரின் உதவியால் 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றியுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • பேர்ஸ்டோவ், மார்க் வுட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    முதல் டெஸ்ட் ஜூலை 10-ல் லண்டனிலும், 2-வது டெஸ்ட் ஜூலை 18ல் நாட்டிங்காமிலும், 3வது டெஸ்ட் ஜூலை 26-ல் பர்மிங்காமிலும் நடைபெற உள்ளது.

    இத்தொடருக்கான அணியை மேற்கிந்திய தீவுகள் ஏற்கனவே அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் பங்கேற்க உள்ள 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    பேர்ஸ்டோவ், மார்க் வுட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

    இங்கிலாந்து அணி விவரம் வருமாறு:

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜிம்மி ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், தில்லான் பென்னிங்டன், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
    • உங்கள் முயற்சிகள் தொடர என் வாழ்த்துக்கள்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்தி ஜடேஜாவை வாழ்த்தி சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது

    ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். உங்களின் ஸ்டைலான ஸ்ட்ரோக் ஆட்டம், ஸ்பின் மற்றும் சிறப்பான பீல்டிங்கை கிரிக்கெட் பிரியர்கள் பாராட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக சிறப்பாக டி20 போட்டிகளில் விளையாடியதற்கு நன்றி. உங்கள் முயற்சிகள் தொடர என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.


    • 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
    • நடிகை கியராவின் திருமண பதிவு 16.26M லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை வெற்றி தொடர்பான கோலியின் பதிவு, இன்ஸ்டாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்தியரின் பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமணப் பதிவு பெற்றிருந்தது.

    தற்போது நடிகை கியராவின் திருமண பதிவு 16.26 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    ஆலியா பட்டின் திருமணப் பதிவு 13.19 மில்லியன் லைக்குகளுடனும் கேத்ரினா கைஃபின் திருமணப் பதிவு 12.6 மில்லியன் லைக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

    • விராட் கோலி, ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
    • டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது என்றார் ஜடேஜா.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நன்றி நிறைந்த இதயத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுகிறேன். ஒரு வலிமையான குதிரை துள்ளிக் குதிப்பதைபோல, எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது. இது எனது உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சென்னை:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.

    ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்னிலும் அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்திருந்தது.

    இதற்கிடையே, நேற்று நடந்த இரண்டாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    அடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் ஸ்நே ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சூன் லூஸ் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ×