search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Team India"

    • 2018-ம் ஆண்டிற்குப் பிறகு ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
    • தற்போது ரெட் பாலில் பயிற்சி பெற்று வருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பையை வென்றது. இதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. அவர் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமி்க்கப்பட்டுள்ளார்.

    ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். இந்த நிலையில் அவர் ரெட் பந்தில் இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

    இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. அப்படி திரும்பினாலும் அதிர்ச்சி அடைவதற்கு ஏதுமில்லை. ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் தொடரில் கூட விளையாடலாம்.

    டெஸ்ட் அணிக்கு அவர் தயாரானால் ரோகித் சர்மா மற்றும் கம்பீருக்கு அதைவிட சிறந்தது ஏதும் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

    ஹர்திக் பாண்ட்யா டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் இன்னும் விளையாடாமல் உள்ளார். அவர் துலீக் டிராபியிலும் இடம் பெறவில்லை.

    30 வயதாகும் ஹர்திக் பாண்ட்யா 2016-ம் ஆண்டு ஒருநாள் மற்றம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 2017-ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கிய டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதங்களுடன் 532 ரன்கள் அடித்துள்ளார். 17 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

    • இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை எதிர்கொண்டது.
    • முதல் ரவுண்டில் குகேசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

    புடாபெஸ்ட்:

    45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்றுள்ளன. மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை சேர்க்கும் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும்.

    போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை எதிர்கொண்டது. இந்திய வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். அவர் 30-வது காய் நகர்த்தலில் மொராக் கோவின் டிசிர் முகமதுவை தோற்கடித்தார். அர்ஜூன் எரிகாசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். முதல் ரவுண்டில் குகேசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

    பெண்கள் பிரிவில் இந்தியா முதல் சுற்றில் ஜமைக்காவை சந்தித்தது. இதில் இந்தியாவின் வைஷாலி, ஜமைக்காவின் கிளார்க் அடானியையும், தானியா சச்தேவ், வாட்சன் கேப்ரியாலையும் சாய்த்தனர்.

    • இங்கிலாந்து தொடர் முழுவதும் விராட் கோலி விளையாடவில்லை.
    • கார் விபத்து காரணமாக ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் விளையாடி 600 நாட்களுக்கு மேல் ஆகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.

    அதன்பின் தற்போது வருகிற 19-ந்தேதியில் இருந்து வங்கதேச அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    இங்கிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரில் விராட் கோலி முழுமையாக விளையாடவில்லை. தனிப்பட்ட காரணத்திற்கான தொடரில் இருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. பின்னர் லண்டனில் அவரது மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்ததால் விலகியது தெரியவந்தது. இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்.

    ரிஷப் பண்ட் மோசமான கார் விபத்திற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளார். சுமார் 600 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    துலீப் டிராபியில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அனைத்து வீரர்களும் துலீப் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்கள்.

    டி20 உலகக் கோப்பைக்குப் பின் பும்ரா சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டும் வரும் முகமது ஷமியும் இடம் பெற வாய்ப்பில்லை.

    ஆல்-ரவுண்டர் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் மூவரும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    வேகபந்து வீச்சில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பெறலாம்.

    வங்கதேச அணிக்கெதிராக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் அகமது, தேவ்தத் படிக்கல், ஜடேஜா, அக்சர் பட்டேல், அஸ்வின், ரிஷப் பண்ட், த்ருவ் ஜுரேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோரும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போராடுவார்கள்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது.
    • அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில்தான நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உறுதியாக உள்ளது.

    ஐசிசி-யின் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீசில் முடிவடைந்த நிலையில், ஐசிசி சாம்பியின்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

    பாதுகாப்பு காரணம், அரசியல் விவகாரம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை. "hybrid model" என அழைக்கப்படும் வேறுநாட்டில் போட்டி நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. குறைந்தபட்சம் இந்தியா மோதும் போட்டிகளில் அனைத்தும் நடத்தப்படலாம்.

    ஆனால் இந்திய அணி பாகிஸ்தானிற்கு வந்து விளையாட வேண்டும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர்கள், வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது, பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தினேஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தினேஷ் கனேரியா கூறுகையில் "பாகிஸ்தான் சூழ்நிலையை பார்க்கும்போது, இந்திய அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது என்றுதான் நான் சொல்வேன். பாகிஸ்தான் இதுகுறித்து யோசிக்க வேண்டும். ஐசிசி இது தொடர்பாக முடிவு எடுக்கும். பெரும்பாலும் இது "hybrid model" தொடர்பானதாக இருக்கும். துபாயில் போட்டிகள் நடத்தப்படும்.

    வீரர்களின் பாதுகாப்புக்குத்தான் முதல் முன்னுரிமை. மரியாதை என்பதுதான் 2-வது முன்னுரிமைதான். ஏராளமான விசயங்கள் உள்ளன. பிசிசிஐ தனது சிறந்த வேலையை செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இறுதி முடிவை அனைத்து நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என நினைக்கிறேன். இது "hybrid model" தொடராகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கம்ரான் அக்மல் கூறுகையில் "இந்தியா பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். நாம் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் விளையாடி, நேசிக்க வேண்டும்" என்றார்.

    • கவுன்ட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
    • காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு பறிபோனது.

    இந்திய டெஸ்ட் அணி வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரிசையாக விளையாட இருக்கிறது. உள்ளூர் போட்டியில் விளையாடினால்தான் இந்திய சீனியர் அணியில் இடம் என்பதால் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் துலீக் டிராபியில் விளையாடுகிறார்கள்.

    இந்திய அணிக்கு எப்போதுமே இடது கை பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறைதான். அதை போக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐபிஎல் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுகம் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் காயம் காரணமாக அதில் விளையாட முடியவில்லை. இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் அணியில் இடம் பிடித்தார்.

    இருந்தபோதிலும் தனது முயற்சியை சாய் சுதர்சன் கைவிடவில்லை. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சனின் ஆட்டம் விக்ரம் சோலங்கிற்கு (குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் டைரக்டர்) பிடித்துப் போக, இங்கிலாந்தின் கவுன்ட்டி அணியான சர்ரே அணியில் இணைய உதவி புரிந்தார். இவர் ஏற்கனவே அந்த அணியின் பயற்சியாளராக இருந்தனர்.

    சர்ரே அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன் நேற்று நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிராக 178 பந்தில் 105 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். இது அந்த அணிக்காக விளையாடும் 3-வது போட்டியாகும். ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு இன்னிங்சில் 73 ரன்கள் அடித்துள்ளார்.

    தற்போது துலீப் டிராபியில் இந்தியா "சி" அணியில் இடம் பிடித்துள்ளார். துலீப் டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது நிச்சயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு அணியை தேர்வு செய்வதில் பெரிய தலைவலியை ஏற்படுத்தும்.

    ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் ஆவலில் உள்ளனர்.

    • இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்தியாவின் டி20 அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ். இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதிரடி வீரரான இவர் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்து விளையாட விரும்புகிறார். இந்த அணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடினால்தான் தேசிய அணியில் இடம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    இதனால் புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்தியா வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான் முக்கியம் என இவர்கள் கருதுகிறார்கள். விரைவில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா "சி" அணியில் சூர்யகுமார் இடம் பிடித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் புச்சிபாபு கிரிக்கெட்டில் தமிழக அணிக்கு எதிராக விளையாடும்போது, சூர்யகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காரணமாக துலீப் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.

    இதனால் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விரும்பும் சூர்யகுமாருக்கு காயம் வழிவிடுமா? என்பதை பார்க்க வேண்டும்.

    தமிழ்நாடு அணிக்கெதிராக மும்பைக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். தமிழ்நாடு லெவன் 379 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் 156 ரன்னில் சுருண்டது.

    சூர்யகுமார் யாதவ் முதல் தர கிரிக்கெட்டில் 82 போட்டிகளில் 5,628 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 43.62 ஆகும். சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.

    • மோர்னே மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • லக்னோ அணி வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

    கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் போன்றவர்களையும் தேர்வு செய்யாமல் இருந்தது.

    இதற்கிடையே, பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கலை நியமிக்குமாறு கம்பீர் கேட்டிருந்தார். அதற்கு பி.சி.சி.ஐ. எந்த பதிலும் கூறாமல் இருந்தது.

    இந்நிலையில், இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

    கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல உறவில் இருந்து வருகின்றனர். கம்பீர் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்கு விளையாடிய போது மோர்கல் விளையாடியுள்ளார்.

    லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடரை இழந்து இருக்கிறது.
    • இலங்கைக்கு எதிரான தொடரில் பும்ரா இடம் பெறவில்லை.

    கொழும்பு:

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடரை இழந்து இருக்கிறது. இந்த தொடரில் முதல் முறையாக பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ள கம்பீருக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    பந்துவீச்சில் இந்த தொடரில் இந்தியா சொதப்பியது என்று சொன்னால் பேட்டிங்கில் மிகவும் மோசமாக விளையாடியது. இலங்கை அணி விக்கெட்டுகளை முதலில் அடுத்தடுத்து எடுத்தாலும் கடைசி மூன்று வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்தியா தடுமாறியது. இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் இந்தியாவை கிண்டல் அடித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு ஜீரோவாக இருக்கிறது. மேலும் தாம் சொல்வதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பலரும் நீங்கள் சொல்வது சரிதான் பும்ரா போன்ற ஒரு வீரர் இல்லாமல் இந்தியா தடுமாறி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    கடந்த டி20 உலக கோப்பையில் பும்ரா 15 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக முஹம்மது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இந்த தொடரில் விளையாடினர். அதிலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆர்ஸ்தீப் சிங் இடம்பெறவில்லை. குறிப்பாக இந்திய அணி பிளேயிங் லெவன் தேர்வு செய்த விதம்தான் தோல்விக்கு காரணம் என்று பலரும் கம்பீரை சாடி வருகின்றனர்.

    • நாட்டுக்காக விளையாடுவது ஒரு சிறந்த உணர்வு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
    • இந்த புதிய பதவி பல பொறுப்புகளையும், உற்சாகத்தையும் கொண்டுவந்துள்ளது.

    இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை செல்ல உள்ளது. இதில் முதலில் தொடங்கும் முதல் டி20 போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

    இந்நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், கேப்டன் பொறுப்பை குறித்து சூரியகுமார் யாதவ் மனம் திறந்துள்ளார்.

    இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் என் மீது அன்பையும், ஆதரவையும் பொழிந்த அனைவருக்கும் நன்றி.

    கடந்த வாரங்களில் நடந்தது கனவுபோல் இருக்கிறது. நாட்டுக்காக விளையாடுவது ஒரு சிறந்த உணர்வு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    இந்த புதிய பதவி பல பொறுப்புகளையும், உற்சாகத்தையும் கொண்டுவந்துள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தெரிவித்துள்ளார்.

    • டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை செல்ல உள்ளது. இதில் முதலில் தொடங்கும் முதல் டி20 போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

    இந்நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

    டி20 அணி:

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.

    ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

    • டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக செயல்பட்டார்.
    • இலங்கை தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், பின்னர் சூர்யகுமார் யாதவ் நிரந்தர கேப்டனாக நியமிக்க வாய்ப்பு.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வந்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அத்துடன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20-யில் இருந்து ஓய்வு பெற்றனர்.

    இதனால் டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 27-ந்தேதி விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதனால் இந்த தொடருக்காக அறிவிக்கப்படும் கேப்டன் 2026 உலகக் கோப்பை வரை நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா இலங்கை டி20 தொடரில் விளையாடுகிறார். இந்த தொடருக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம். ஆனால் இலங்கை தொடருக்கு மட்டுமல்ல, 2026 டி20 உலகக் கோப்பை வரை சூர்யகுமார் சாத்தியமான கேப்டனாக இருக்கலாம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இன்று மாலை மாற்றம் செய்யப்பட்ட திட்டம் குறித்து கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் ஹர்திக் பாண்ட்யாவிடம் பேசியதாகவும், நீண்ட கால ஆப்சனை கருத்தில் கொண்டு ஸ்திரதன்மையை உறுதி செய்ய இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • உலகக்கோப்பை வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசினார்
    • இது மைத்தனத்தில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    டி20 உலகக்கோப்பையை வென்றெடுத்த இந்திய அணிக்கு நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதனத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கிரிக்கெட் ரசிகர்கள் திரளாக பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

    மைதானத்தில் வைத்து இந்திய அணி வீரர்கள் பாடல்களுக்கு நடனமாடியும் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்தும் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். உலகக்கோப்பை வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், நாங்கள் இந்தியா வந்திறங்கியதில் இருந்து இருந்து மக்களின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் காண்கிறோம். இந்த கோப்பை அவர்களுக்கே சொந்தம்.

    மும்பை எப்போதும் வெற்றியை கொண்டாடுவதில் ஏமாற்றியது இல்லை. ரசிகர்கள், மக்கள் மற்றும் மொத்த தேசத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் அணியின் வீரர்கள் குறித்து அவர் பேசுகையில், ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் உலகின் பயங்கரமாக வீரர்களின் ஒருவராக விளங்கும் டேவிட் மில்லரை வீழ்த்த எங்களுக்கு பேருதவியாக இருந்தது. கடைசி ஓவரில் பதிவீசுவது எப்போதும் கடினமான ஒன்று. ஆனால் அதை செய்து காட்டிய பாண்டியாவுக்கு Hats off என்று தெரிவித்தார். ரோகித்தின் பேச்சால் நெகிழ்ச்சி அடைந்த பாண்டியா கண்கலங்கினார். இது மைதானத்தில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.  

    ×