என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உடற்தகுதியுடன் இருந்தால்., முகமது ஷமி குற்றச்சாட்டுக்கு அஜித் அகர்கர் பதில்
- இங்கிலாந்து தொடரின்போது உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அணியில் இடம் பிடித்திருப்பார்.
- ரஞ்சி டிராபியில் எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ஆஸ்திரேலியா தொடருக்கான ஒயிட்பால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ரஞ்சி டிராபியில் விளையாடும்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் விளையாட முடியாது?. உடற்தகுதிக்கா இந்திய அணி என்னை அழைக்கவில்லை என முகமது ஷமி இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
ஆங்கில செய்தி நிறுவனமான என்.டி.டி.வியின் உலக மாநாடு 2025-ல் அஜித் அகர்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது முகமது ஷமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அவர் என்னிடம் சொல்லியிருந்தால், நான் பதில் அளித்திருப்பேன். அவர் இங்கு இருந்திருந்தால், அவருக்கு பதில் கூறியிருப்பேன். அவர் சமூக ஊடகத்தில் என்ன சொன்னார் என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. நான் படித்திருந்தால், அவருக்கு போன் செய்திருக்கலாம். இருந்தபோதிலும், பெரும்பாலான வீரர்களுக்கு எனது போன் எப்போதும் தயாராக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவருடன் பலமுறை பேசியுள்ளேன். ஆனால், இங்கே அதை தலைப்பு செய்தியாக்க விரும்பவில்லை.
அவர் இந்தியாவுக்கான அற்புதமான வீரர். அவர் சொன்னதை, என்னிடம் சொல்லியிருக்கலாம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கூட, அவர் உடற்தகுதியின் இருந்தால், இங்கிலாந்துக்குச் செல்வார் என நாங்கள் கூறியிருந்தோம். துரதிருஷ்டவசமாக அவர் உடற்தகுதி பெறவில்லை.
தற்போது உள்ளூர் தொடர் தொடங்கியுள்ளது. அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க இருக்கிறோம். தற்போது முதல்சுற்று போட்டி நடைபெறுகிறது. இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளை பார்க்க வேண்டும். அவர் சிறப்பாக பந்து வீசினால், ஷமியை போன்றவர்களை ஏன் விரும்பாமல் இருக்க வேண்டும். இந்த வருடம் 8 மாதங்களுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா தொடரில் கூட, அவர் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், அவர் உடதற்குதியுடன் இல்லை. அடுத்த சில மாதங்களாக அவருடைய உடற்தகுதியை நிலைத்து வைத்திருந்தால், கதை மாறியிருக்கலாம். இந்த கணக்கில், எனக்குத் தெரிந்தவரை, அவர் அந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு போதுமான அளவு பொருத்தமாக இல்லை.
இவ்வாறு அஜித் அகர்கர் தெரிவித்தார்.






