என் மலர்tooltip icon

    இந்தியா

    • சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.
    • முன்பெல்லாம் மஞ்சள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு குங்குமம் தயாரிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்காக 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.

    இந்தநிலையில் சபரிமலை மற்றும் எரிமேலியில் ரசாயன குங்குமம் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் விற்பனைக்கு கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. எரிமேலியில் விற்பனை செய்யப்படும் ரசாயன குங்குமம் குறித்து சில கருத்துக்களை வக்கீல் ஒருவர் ஐகோர்ட்டில் முன் வைத்தார்.

    எரிமேலியில் பேட்டை துள்ளலில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடலில் பல வண்ண குங்குமபொடிகளை பூசிக் கொள்வார்கள். முன்பெல்லாம் மஞ்சள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு குங்குமம் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரசாயன குங்குமம் சந்தைகளில் முன்னணியில் உள்ளது.

    அந்த குங்குமத்தையே பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். பின்பு அவர்கள் ஷாம்பு மற்றும் சோப்புகளை அதிகளவில் பயன்படுத்தி ஆற்றில் குளிக்கிறார்கள். ஷாம்பு மற்றும் சோப்பு இருக்கும் பிளாஸ்டிக் கவர்கள் கண்ட இடத்தில் வீசப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதிக்கப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இதையடுத்து சபரிமலை-எரிமேலியில் ரசாயன குங்குமம் மற்றும் ஷாம்பு-சோப்பு உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை விற்பனை செய்யதடை விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

    மேலும் ரசாயன குங்குமம் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை தேவசம்போர்டு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்யவும் ஐகோர்ட் ஆணையிட்டது. இந்த விஷயத்தில் எரிமேலி பஞ்சாயத்து மற்றும் செங்கனூர் நகராட்சி ஆகியவை சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுத்து ஆரோக்கியமான சூழலை உறுதி செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 12-ந்தேதி மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும், அப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    • 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

    பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.

    பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.

    பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார்.

    இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக குறிப்பிடப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட வாக்குப்பதிவு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் மாநிலத்தின் சராசரி வாக்குப்பதிவு 57.29 சதவீதமாகவும், கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் 56.28 சதவீதமாகவும் இருந்தது.

    • நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

    இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரெயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், பனாரஸ் ரெயில் நிலையத்திலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பனாரஸ்–கஜுராஹோ, லக்னோ–ஷஹாரான்பூர், பிரோஸ்பூர்–டெல்லி மற்றும் எர்ணாகுளம்–பெங்களூரு வழித்தடங்களில் இயக்கப்படும்.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

    ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தபின் பனாரஸ்–கஜுராஹோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 



    • நடிகை ரன்யா ராவிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரன்யா ராவ் தனது வளர்ப்பு தந்தையான கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் அதிகாரத்தை பயன்படுத்தி தங்க கடத்தலில் ஈடுபட்டார்.

    பெங்களூரு:

    துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ரன்யா ராவ் தனது வளர்ப்பு தந்தையான கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் அதிகாரத்தை பயன்படுத்தி தங்க கடத்தலில் ஈடுபட்டார்.

    விமான நிலையத்திற்கு வந்திறங்கும் ரன்யா ராவை போலீஸ் வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் வைத்து ரன்யா ராவை அதிகாரிகள் சோதனை கூட நடத்தாமல் அனுப்பி வைத்திருந்தனர். இதற்கிடையில், கைதான ரன்யா ராவ் மீது காபி போசோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், ஓராண்டுக்கு சிறையில் இருந்து அவர் வெளியே வர முடியாத நிலையில் கம்பி எண்ணி வருகிறார்.

    அதே நேரத்தில் ரன்யா ராவ் கைதாகி 8 மாதங்கள் ஆவதால், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகள் தயாராகி வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக ரூ.123 கோடிக்கு ரன்யா ராவ் தங்கம் கடத்தி இருப்பது உறுதியாகி இருப்பதாகவும், அதுதொடர்பான ஆவணங்களை குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள் சேர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் குற்றப்பத்திரிகையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவ், போலீஸ் வாகனத்தை தவறாக பயன்படுத்தியது, இந்த தங்கம் கடத்தலில் தொடர்புடைய நகைக்கடை அதிபர்கள் உள்பட 4 பேர் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. மேலும் அடுத்த வாரம் ரன்யா ராவ் உள்ளிட்டோர் மீது அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்தியா வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை.
    • இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை என வெளியுறவுத்துறை கூறியது.

    புதுடெல்லி:

    கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்கமுடியாது. ஆகையால் நாங்களும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்வோம். இதுதொடர்பாக போர்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

    பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை குறித்த டிரம்பின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். உறுப்பு நாடுகளுக்கு இடையே முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கும், இந்தியா பசுபிக் பிராந்திய நலன் குறித்து விவாதிக்கவும் மதிப்புமிக்க தலமாக குவாட் அமைப்பை இந்தியா கருதுகிறது.

    குவாட் அமைப்பு தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது. சமீபத்தில் மும்பையில் இந்திய கடலோர பாதுகாப்பு வாரம் நடந்தது. குவாட் துறைமுகம் தொடர்பான கருத்தரங்கமும் நடந்தது.

    இந்தியா வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை. இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை. இது குறித்து அறிந்ததும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

    கடந்த சில மாதங்களாக ரஷிய ராணுவத்தில் பல இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை விரைவில் விடுவிக்கவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த விஷயத்தை மீண்டும் ரஷிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளோம்.

    எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 44 இந்தியர்கள் தற்போது ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ரஷிய தரப்புடன் தொடர்பில் இருக்கிறோம். இவர்களின் குடும்பங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ரஷிய ராணுவத்தில் பணியாற்ற வழங்கப்படும் சலுகைகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    • ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர்.
    • தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1800 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அமைச்சரின் மகனின் நிறுவனத்துக்கு வெறும் ரூ. 300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த் பவார்.

    இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.

    இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்

    இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    மகாராஷ்டிரத்தில், தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1800 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அமைச்சரின் மகனின் நிறுவனத்துக்கு வெறும் ரூ. 300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

    மேலும் முத்திரைத் தீர்வையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கொள்ளை மட்டுமல்ல, கொள்ளைக்கு ஒப்புதல் கொடுக்கும் சட்ட முத்திரைகூட.

    இது 'வாக்கு திருட்டு' மூலம் உருவாக்கப்பட்ட அந்த அரசாங்கத்தின் 'நிலத் திருட்டு'. அவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தாலும், மீண்டும் வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வருவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

    ஜனநாயகம், பொதுமக்கள் அல்லது தலித்துகளின் உரிமைகள் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

    மோடி ஜி, உங்கள் மௌனம் நிறைய பேசுகிறது. தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பறிக்கும் கொள்ளையர்களால் உங்கள் அரசாங்கம் இயங்குவதால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.   

    • எஸ்.எஸ்.சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்களையும் மறந்து விடாதீர்கள்.
    • இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் "சோர்-சோர்" என்று முழக்கமிட்டனர்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில் நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இந்நிலையில் பீகாரின் ரேகா பகுதியில் இன்று நடந்த பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, "ஞானேஷ் குமார், தவறு செய்துவிட்டு நீங்கள் அமைதியாக ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைத்தால், அது நடக்காது. ஞானேஷ் குமாரின் பெயரை ஒருபோதும் மறக்காதீர்கள் என்று பொதுமக்களிடம் நான் சொல்கிறேன்.

    அதேபோல எஸ்.எஸ்.சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்களையும் மறந்து விடாதீர்கள். அரியானாவில் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டதை, மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் "சோர்-சோர்" (திருடன்-திருடன்) என்று முழக்கமிட்டனர்.

    முன்னதாக 2024 அரியானா சட்டமன்றத் தேர்தலின் போது முடிவுகளைத் மாற்றுவதற்காக 25 லட்சம் போலி வாக்குகள் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

    இதில் ஞானேஷ் குமார், எஸ்.எஸ்.சந்து, விவேக் ஜோஷி ஆகிய மூன்று தேர்தல் ஆணையர்கள் குற்றவாளிகள் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • அவரது வீட்டின் வெளியே ஒரு கும்பல் கூச்சல் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தது.
    • ரமேஷ் குமார் அவர்களை கண்டித்து சத்தம் போடாமல் இருக்க கூறியுள்ளார்.

    அரியானா மாநிலத்தில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் வீட்டின் வெளியே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஹிஸார் பகுதியில் வசித்து வரும் அரியானா காவல்துறையின் துணைஆய்வாளராகப் (SI) பணியாற்றி வந்த 57 வயதான ரமேஷ் குமார் அடுத்த ஜனவரியில் ஓய்வு பெற இருந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில், அவரது வீட்டின் வெளியே ஒரு கும்பல் கூச்சல் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தது.

    ரமேஷ் குமார் அவர்களை கண்டித்து சத்தம் போடாமல் இருக்க கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த கும்பல் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்தது.

    ரமேஷ் குமாரை அவரின் வீட்டின் வெளியே வைத்து செங்கல் மற்றும் தடிகளால் அந்த கும்பல் தாக்கியுள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரமேஷ் குமரை தாக்கியவர்கள் அதே குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் ஸ்கூட்டரையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

    உயிரிழந்த ரமேஷ் குமாருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
    • மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    டெல்லியில் தெருநாய்கள் பிரச்சனை தொடர்பாக தாமாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் டெல்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

    அண்மையில் நடந்த விசாரணையில் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    இந்நிலையில் தெருநாய்கள் பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரெயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும். அங்கு தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும்.

    பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.  

    • AMSS ஏற்பட்ட கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
    • பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தானியங்கி அமைப்பில் (AMSS) ஏற்பட்ட கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.

    நேற்று மாலை தொடங்கிய இந்தக் கோளாறு, ஆட்டோ டிராக் சிஸ்டம் (ATS) மற்றும் தானியங்கி செய்தி மாற்றும் அமைப்பு (AMSS) ஆகியவற்றைப் பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொழில்நுட்பக் குழு கோளாறை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும், விரைவில் அதைச் சரிசெய்வதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தீர்க்க தங்கள் ஊழியர்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்களும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (AMSS) தொழில்நுட்பக் கோளாறால் தங்கள் விமான நிலையத்திலும் விமான இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணம் மேலதிக தகவல்களுக்கு பயணிகள் தங்கள் விமான நிறுவங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் தடங்கலுக்கு வருந்துவதாகவும் மகாரஷ்டிராவின் மும்பை சத்திரபதி மகராஜ் விமான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  

    • ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • யூனுஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்கிறார்.

    தான் வாழ்வதற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதற்காக இந்திய மக்களுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.

    மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து அவாமி லீக் ஆட்சிக் கவிழ்ந்து ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார்.

    வங்கதேசத்தில் தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஆட்சி செய்கிறது.

    மக்கள் மீது படைகளை ஏவி தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட மனிதாபிமான மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அந்நாட்டு நீதிமன்றத்தில் ஷீக் ஹசீனா பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளது.

    ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசம் தேர்தல்களை சந்திக்கவுள்ள நிலையில், ஷேக் ஹசீனா யூனுஸ் அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் கீழ் வங்கதேசம் இந்தியாவுடன் சுமூகமான உறவில் இருந்த நிலையில் தற்போது முகமது யூனுஸ் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில் இந்திய அங்கில ஊடகத்திற்கு ஷேக் ஹசீனா அளித்த பேட்டியில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முகமது யூனுஸின் நிலைப்பாடுதான் இந்தியாவுடனான வங்கதேச உறவுகள் மோசமடையக் காரணம்.

    யூனுஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்கிறார். இது இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவை மோசமாக்கும்.

    சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல், சட்ட ரீதியான ஒடுக்குமுறைகள் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கிற்கு காரணம். இதுபோன்ற செயல்பாடுகளை வங்கதேச மக்கள் விரும்பவில்லை. இருநாடுகளிடையேயான உறவு மிகவும் ஆழமானது. இந்தியா எங்களின் உண்மையான நட்பு நாடு என்பதில் பெருமை கொள்கிறோம்.

    இத்தனை நாட்கள் பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    ஆட்சியில் இருந்தபோது மக்களைத் தாக்க படைகளுக்கு நான் உத்தரவிட்டேன் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். இருப்பினும், வங்கதேசத்தில் இப்போது சுதந்திரமான நீதித்துறை அமைப்பு இல்லை.

    அவாமி லீக் கட்சி முறையற்ற காரணத்திற்காக தடை செய்யப்பட்டது. சட்டப்பூர்வமாக அதை எதிர்த்துப் போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • பகல்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
    • அரியானாவில் வாக்கு மோசடி குறித்த தரவுகளை சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி வெளியிட்டார்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு 11 ஆம் தேதி நடக்கிறது.

    இதனை முன்னிட்டு இன்று பீகாரில் பகல்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், அரியானாவில் 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர், வாக்குப் பட்டியலில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போலியானவர்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து அரியானா தேர்தலைத் திருடிவிட்டனர் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன்.

    மக்களவை, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் அவர்கள் திருடியதாக நாங்கள் ஆதாரங்களுடன் கூறினோம், இப்போது அவர்கள் பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்.

    கடைசி தருணம் வரை எங்களுக்கு வாக்காளர் பட்டியல் கிடைக்கவில்லை. பீகார் ஜென் z இளைஞர்கள் இங்கு வாக்குத் திருட்டு நடக்க விடமாட்டார்கள்.

    இந்த வாக்குத் திருட்டு அதானி மற்றும் அம்பானி போன்றவர்களுக்கு உங்கள் நிலத்தை வழங்கவும், உங்கள் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கவும் இந்த வாக்கு திருட்டு நடத்தப்படுகிறது.

    நிதிஷ் குமார், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பீகார் மக்களை தொழிலாளிகளாக மட்டுமே வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி என்பதை நாட்டின் ஜென் z  இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்போம் என்று தெரிவித்திருந்தார்.

    நேற்று முன் தினம் அரியானாவில் வாக்கு மோசடி குறித்த தரவுகளை சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    ×