என் மலர்
இந்தியா
- கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.
- இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது
புதுடெல்லி:
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஆட்சேபணைக்குரிய 1.25 கோடி வாக்காளர்களின் பெயர்களைக் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மற்றும் துணைத்தலைவர் எம்.பி.
சகரிகா கோஸ் ஆகியோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
திரிணாமுல் காங்கிரஸ் (TMC), மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) குறித்து, வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளை நீக்க, நீதிமன்றத்தின் தலையீட்டை வரவேற்று, இதை
நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
இந்த SIR நடவடிக்கை மென்பொருள் சார்ந்த முறைகேடு (Software Intensive Rigging) ஆகும். வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்க முயல்கிறது. இது பாஜகவின் சதி என குற்றம் சாட்டினர்.
- பாஜக தேசிய தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக இருந்தது.
- நிதின் நபினை தவிர்த்து வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நேற்று மனுதாக்கல் நடைபெற்றது. நிதின் நபின் மட்டுமே மனுதாக்கல் செய்ததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று முறையாக முடிவு அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பாஜக-வின் புதிய தேசியத் தலைவர் அறிவிக்கப்பட்டதை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெர்ரா கூறியதாவது:-
தேர்தல் எங்கே. நீங்கள் இதை தேர்தல் என்று ஏன் அழைக்கிறீர்கள்?. நீங்கள் முதலில் தலைவரை அறிவிக்கிறீர்கள். அதன்பின் தேர்தல் நடைபெறும் என சொல்கிறீர்கள். அதன்பின் தேர்தல் இல்லை.
இந்த தேர்தலில் தனக்கு பங்கு இல்லை. தன்னால் ஆதிக்கம் செலுத்தக்கூட முடியவில்லை. எந்தவிமான முறைகேடும் செய்ய முடியவில்லை என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய விரும்புகிறார்.
இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்தார்.
- டி.கே. சிவக்குமார் அடுத்த முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரசாரிடம் எழுந்து வருகிறது.
- காங்கிரஸ் மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும் என சித்தராமையா திட்டவட்டம்.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி தொடர்பான பிரச்சினை காங்கிரசில் இன்னும் நீடித்து வருகிறது. சித்தராமையாவின் இரண்டரை வருட முதலமைச்சர் பதவிக் காலம் முடிவடைந்ததால், டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறார்.
ஆனால், காங்கிரஸ் மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும். 5 வருட முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளதாக சித்தராமையா தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த நிலையில், சித்தராமையாவிடம் நீங்கள் டெல்லிக்கு செல்ல வாய்ப்புள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சித்தராமையா, "காங்கிரஸ் மேலிடம் அழைத்தால் நான் டெல்லிக்கு செல்வேன்" என்றார்.
துணை முதல்வரான டி.கே. சிவக்குமார் டெல்லியில் இருந்து நேற்று கர்நாடகம் திரும்பினார். இதன்மூலும் தலைமைத்துவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்பதை அவரது டெல்லி பயணம் குறிக்கிறது.
சித்தராமையா உள்பட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆதரவும் தனக்கு இருப்பதாக டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், கையில் பணம் இல்லாததால் விரக்தி.
- குடும்பத்தினரை செங்கலால் அடித்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஏட்டா பகுதியைச் சேர்ந்தவர் கமல் சிங். இவரது மகள் ஜோதி. மனைவி ரத்னா தேவி. கமல் சிங் தனது தந்தை கங்கா சிங் (70), தாய் ஷியமா தேவி (65) ஆகியோருடன் இரண்டு மாடி கட்டிடத்தில் வசித்து வந்தார்.
மகள் தேவிக்கு அடுத்த மாதம் திருமணம் ஏற்பாடு செய்துள்ளார் கமல் சிங். ஆனால் திருமண செலவிற்கு அவரால் பணத்தை திரட்ட முடியவில்லை எனத் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்துள்ளார்.
பண நெருக்கடியால் குடும்பத்தினரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கலால் பெற்றோர், மனைவி, மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பெற்றோர் மற்றும் மகள் ஆகிய 3 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர். மனைவி மற்றும் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனது குடும்பத்தினரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்துள்ளார். போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எந்தவொரு அதிகார அமைப்புக்கும் விமானக் கட்டணங்களையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ ஆய்வு செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லை.
- அத்தியாவசிய சேவைத் துறையில் தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விலையை உயர்த்த விமான நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் அளிப்பது நியாயமற்றது.
பண்டிகைக் காலங்களில் பன்மடங்கு விமான கட்டணங்கள் உயர்த்தப்படுவதன் மூலம் பயணிகள் 'சுரண்டப்படுவதாக' உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நிச்சயமாக நீதிமன்றம் தலையிடும் என்றும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து தனியார் விமான நிறுவனங்களால் விதிக்கப்படும் விமானக் கட்டண ஏற்ற இறக்கங்கள் மற்றும் இதர கூடுதல் கட்டணங்களைக் கட்டுப்படுத்த, பிணைப்புடன் கூடிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கும் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
மத்திய அரசின் சார்பில் பதிலளிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் கௌஷிக் கால அவகாசம் கோரியதை அடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு (2026) நீதிமன்றம் ஒத்திவைத்தது .
சிவில் விமான போக்குவரத்து துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கக் கோரி கடந்த மாதம் சமூக ஆர்வலர் எஸ். லட்சுமிநாராயணன் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில்,
"எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, தனியார் விமான நிறுவனங்கள் எகானமி வகுப்பு (Economy class) பயணிகளுக்கான இலவச செக்-இன் லக்கேஜ் அளவை 25 கிலோவிலிருந்து 15 கிலோவாகக் குறைத்துள்ளன என்றும், இதன் மூலம் 'முன்பு டிக்கெட் சேவையின் ஒரு பகுதியாக இருந்த ஒரு விஷயத்தை தற்போது புதிய வருவாய் ஈட்டும் வழியாக மாற்றியுள்ளன'. என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செக்-இன் லக்கேஜ் வசதியைப் பயன்படுத்தாத பயணிகளுக்கு எந்தவிதமான தள்ளுபடி, இழப்பீடு அல்லது சலுகைகள் வழங்கப்படாதது, இம்முறையின் 'தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான தன்மையை' காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எந்தவொரு அதிகார அமைப்புக்கும் விமானக் கட்டணங்களையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ ஆய்வு செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லை. இது மறைமுகக் கட்டணங்கள் மற்றும் கணிக்க முடியாத விலை நிர்ணயம் மூலம் நுகர்வோரை சுரண்ட விமான நிறுவனங்களுக்கு வழிவகுக்கிறது.
தன்னிச்சையான கட்டண உயர்வு, ஒருதலைப்பட்சமாக சேவைகளைக் குறைத்தல் மற்றும் தரைமட்டத்தில் குறைகளைத் தீர்க்கும் வசதி இல்லாமை போன்ற ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற இத்தகைய நடைமுறைகள், குடிமக்களின் சமத்துவம், தடையற்ற நடமாட்டம் மற்றும் கண்ணியமான வாழ்வு ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
ஒழுங்குமுறைப் பாதுகாப்புகள் இல்லாததால், குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் அல்லது வானிலை மாற்றங்களினால் ஏற்படும் இடையூறுகளின் போது கட்டணங்கள் மிகக் கடுமையாக உயர்கின்றன. இது ஏழைகளையும் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்களையும் பெருமளவில் பாதிக்கிறது. வசதி படைத்த பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிகிறது; ஆனால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடிமக்கள் பெரும்பாலும் உச்சக்கட்ட விலையேற்றத்தின் போது அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
விமானக் கட்டணங்களை நிர்ணயிக்கும் கணினி வழிமுறைகள், ரத்து செய்யும் கொள்கைகள், சேவைகளின் தொடர்ச்சி மற்றும் குறைதீர்க்கும் வழிமுறைகளை முறைப்படுத்துவதில் அரசு காட்டும் மெத்தனம், அரசியலமைப்பு ரீதியிலான கடமையைத் தவறுவதற்கு சமமாகும். இதில் நீதிமன்றத்தின் அவசரத் தலையீடு அவசியம்.
மேலும், அத்தியாவசிய சேவைத் துறையில் தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விலையை உயர்த்த விமான நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் அளிப்பது நியாயமற்றது. கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையில், அவசர காலப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை நியாயமான மற்றும் சுரண்டலற்ற முறையில் பெறுவதும் அடங்கும். விமானப் பயணம் என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி ஒரு தேவையாக மாறும் அவசர காலங்களில், தன்னிச்சையான கட்டண உயர்வுகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குடிமக்களின் இந்த உரிமையைப் பறிக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக இது தொடர்பாக மத்திய அரசு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- கேரள மாநில ஆளுநர் சில பகுதிகளை தவிர்த்து விட்டார்.
- சில பகுதிகளை சேர்த்து வாசித்துள்ளார் என பினராயி விஜயன் குற்றச்சாட்டு.
கேரள மாநிலத்தின் இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் சட்டசபை கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் அப்படியே வாசிக்க வேண்டும்.
ஆனால், கேரள மற்றும் தமிழ்நாடு சட்டசபைகளில் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அல்லேகர் இன்று சட்டசபையில் ஆளுநர் உரையை வாசித்தார். அப்போது சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்துவிட்டார். இதை கவனித்த முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் சில பகுதிகளை தவிர்த்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:-
ஆளுநர் 12-வது பத்தியின் முதல் பகுதியை வாசிக்கவில்லை அல்லது 15-வது பத்தியின் கடைசி பகுதியை முடிக்கவில்லை. 72 மக்கள் கொண்ட கொள்கை உரையில் 157 பத்திகளில் 16-வது பத்தியை இணைத்து வாசித்துள்ளார்.
மத்திய அரசு நிதி வழங்காதது மற்றும் மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காதது போன்றவற்றை தவிர்த்துள்ளார்.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க.வின் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சியை வலுப்படுத்த பங்களித்த பா.ஜ.க.வின் அனைத்து முன்னாள் தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.
கட்சி என்று வரும்போது நிதின் நவீன்தான் தலைவர். நான் ஒரு கட்சித் தொண்டன்.
நிதின் நபின் இப்போது நமது தலைவராக இருக்கிறார். அவரது பொறுப்பு பா.ஜ.க.வுக்கு மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதாகும்.
நிதின் நபின் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் முழு பொறுப்புடன் வெற்றிகரமாக முடித்து தன்னை நிரூபித்துள்ளார். அவரிடம் இளமைத்துடிப்புடன் கூடிய ஆற்றலும், நிறுவனங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவமும் உள்ளது. இது ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பா.ஜ.க.வில் தலைவர்கள் மாறுகிறார்கள். ஆனால் கொள்கைகள் மாறுவதில்லை. தலைமை மாறுகிறது. ஆனால் திசை மாறுவதில்லை.
பா.ஜ.க. ஒரு தனித்துவமான கட்சியாக உருவெடுத்தது. இப்போது அது ஒரு ஆளும் கட்சி என்பதை நிரூபித்துள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதே எப்போதும் எங்களது முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. அதிகாரத்தை நாங்கள் சேவைக்காக மாற்றியுள்ளோம். அதனால் தான் பா.ஜ.க. மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகிறது.
கடந்த 11 ஆண்டுகளில் அரியானா, அசாம், திரிபுரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தனது சொந்த பலத்தால் முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு வங்கம், தெலுங்கானாவில் பா.ஜ.க. மக்களின் ஒரு முக்கிய குரலாக உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.
- டெல்லி கர்தவ்ய பாதையில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
- இதில் வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லி கர்தவ்ய பாதையில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெறுகிறது.
ராணுவத்தின் வலிமை மற்றும் கலாசார பன்முக தன்மையின் வளமை ஆகியவற்றை பறைசாற்றுவதுடன் இந்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதற்காக நேற்று முதல் 26-ம் தேதி வரை இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை மற்றும் பிற மத்திய ஆயுத படைகள் இணைந்து வந்தே மாதரம் தொடர்பாக இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும்படி தேச கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய, பல்வேறு நிலைகளில் உள்ளவர்களை கவுரவிக்கும் வகையில், 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்காக பணியாற்றியவர்கள், சிறந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் அடங்குவர். அவர்கள் கடமை பாதையில் அமர வைக்கப்படுவர்.
விமான சாகச நிகழ்ச்சிகள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார்.
- அமித் ஷா தனது 49 வயதில் தேசிய தலைவர் பதவியை ஏற்றார்.
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்றார். 45 வயதான நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார். பாஜக தலைமையகத்தில் முறையான செயல்முறைகள் முடிந்த பிறகு, இன்று பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்மூலம் பாஜகவில் குறைந்த வயதில் தேசிய தலைவர் பொறுப்பை வகிப்பவராக நிதின் நபின் மாறியுள்ளார். முன்னதாக, அமித் ஷா தனது 49 வயதில் தேசிய தலைவர் பதவியை ஏற்றார். ஜே.பி. நட்டா 2020 முதல் கட்சியின் தேசியத் தலைவராக இருந்தநிலையில், அவரது பதவிக்காலம் 2024 இல் முடிவடைந்தது. ஆனால் தேர்தல் போன்ற காரணங்களால் பதவி நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று (ஜன, 19 ) நடைபெற்றது. இத்தேர்தலுக்கு வேறு எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அவருக்கு இசட்-பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. இன்று காலை அவர் பதவியேற்பதற்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, ஜே.பி. நட்டாவும் இதே போன்ற பாதுகாப்பைப் பெற்றார்.
- கடன் வாங்கும் வரம்பை சுமார் ரூ.4000 கோடி வரை குறைத்தது மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கட்டுப்பாடுகள் மாநிலத்தின் நிதி நிலையைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
- ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும்
தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. கேரள அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையைத் தொடங்கி வாசித்தார். அப்போது, கேரளாவிற்கு வழங்கப்பட வேண்டிய நிதிப் பங்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக, கடன் வாங்கும் வரம்பை சுமார் ரூ.4000 கோடி வரை குறைத்தது மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கட்டுப்பாடுகள் மாநிலத்தின் நிதி நிலையைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனால் 2025-26 நிதியாண்டில் சுமார் ரூ.17,000 கோடி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் கேரளா குறிப்பிடத்தக்க சமூக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகப் பாராட்டினார். வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மாநில அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். கேரள மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், பத்து ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் மலையாளத்தை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் உரையில் விளக்கினார். அதே வேளையில், சிறுபான்மையினரின் மொழி உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் கேரளாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜனவரி 29 அன்று அவையில் தாக்கல் செய்வார்.
- ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
- 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் எந்த தவறும் செய்யாத ஒரு நபர் தன மீதான தவறான குற்றச்சாட்டால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய நெட்டிசன்கள் அப்பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், வீடியோ வெளியிட்ட பெண் தலைமறையாகியுள்ளதாகவும் போலீசார் அவரை வலைவீசி தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- சபரிமலை தங்கக் கவசம் தங்கத்தகடு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது.
- 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அதிரடியாக சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.
இந்நிலையில், சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சென்னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.






