என் மலர்
இந்தியா
- முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- பீகார் தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (11ம் தேதி) நடைபெறுகிறது.
இதனால், கட்சி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.
மீதிமுள்ள தொகுதிகளில் நாளை மறுநாள் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
- தொடர் விடுமுறையால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வகுப்புகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தசரா விடுமுறையின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், கடந்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரை பள்ளிக்கூடங்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது.
அந்த விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், தொடர் விடுமுறையால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வகுப்புகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் வருகிற ஜனவரி மாதம் 24-ந் தேதி வரை தினமும் ஒரு வகுப்பு கூடுதலாக நடத்தும்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனவரி மாதம் 24-ந் தேதிக்குள் தினமும் கூடுதலாக ஒரு வகுப்புகளை நடத்தி பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
- பூடானில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட நீர்மின் நிலையத்தை தொடங்கி வைக்கிறார்
- பிரதமர் ஷெரிங் தோப்கேவையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.
புதுடெல்லி:
அண்டை நாடான பூடான், இந்தியாவுடன் சிறந்த நட்புறவை பேணி வருகிறது. இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பூடானில் 2 நாள் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் சேர்ந்து இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்கிறார். மேலும் பிரதமர் ஷெரிங் தோப்கேவையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.
இதைப்போல பூடானின் முன்னாள் மன்னர் ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமரின் இந்தப் பயணத்தின்போது, பூடானில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள 1020 மெகாவாட் நீர் மின் நிலையத்தை அந்த நாட்டு மன்னருடன் சேர்ந்து திறந்து வைக்கிறார்.
பிரதமரின் பயணம் இரு தரப்பு நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை.
- அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்கிறது.
பாட்னா:
பீகாரில் 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில். நவம்பர் 11 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், பீகாரின் கட்டிஹார் நகரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை.
ஒருபக்கம் அவர் அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம் நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார்.
ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது.
நாங்கள் உங்கள் உரிமைகளுக்காக, உண்மைக்காக, ஒரு பேரரசுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அதுதான் நரேந்திர மோடி பேரரசு.
மக்களை அடக்குவதன் மூலம் அவர் நாட்டை வழிநடத்துகிறார். அவரது கட்சி வதந்திகளைப் பரப்புகிறது.
மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை. அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்கிறது. அவர்கள் வாக்குரிமையைத் திருடத் தொடங்கிவிட்டார்கள்.
அரசியலமைப்பையும் நாட்டையும் காட்டிக் கொடுத்தவர்களை மக்கள் மறக்க வேண்டுமா அல்லது நினைவில் கொள்ள வேண்டுமா? என தெரிவித்தார்.
- ரதாலா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- தீ மளமளவௌ அப்பகுதி முழுவதும் பரவியதால் ஒரே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
புதுடெல்லி:
டெல்லி ரதாலா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவௌ அப்பகுதி முழுவதும் பரவியதால் ஒரே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்களும் வெடித்துச் சிதறியது. இதனால் உயிருக்கு பயந்து பொதுமக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர்.
தகவல் அறிந்ததும் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ஒருவர் இறந்தார். ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது. அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிபத்தில் குடிசைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன.
- வைரலான வீடியோவில், உள்ளூர்வாசிகள் VVPAT சீட்டுகளை எடுத்து சரிபார்ப்பதைக் காணலாம்.
பீகாரின் சமஸ்திபூரில் சாலையில் பறக்கும் VVPAT சீட்டுகளின் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை சரிபார்க்க கூடிய VVPAT சீட்டுகள் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன. வைரலான வீடியோவில், உள்ளூர்வாசிகள் VVPAT சீட்டுகளை எடுத்து சரிபார்ப்பதைக் காணலாம்.
இந்த சீட்டுகள் வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து வந்தவை என்று ஆர்ஜேடி குற்றம் சாட்டியது.
இருப்பினும், இந்த சீட்டுகள் கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனை வாக்குப்பதிவிலிருந்து வந்தவை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீட்டுகள் கிடந்த இடத்தில் ஆய்வு செய்த சமஸ்திபூர் மாவட்ட நீதிபதி ரோஷன் குஷ்வாஹா, "நாங்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, இந்த சீட்டுகள் மாதிரி வாக்குப்பதிவில் இருந்து வந்தவை என்பதைக் கண்டறிந்தோம்.
அவை சரியாக அழிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதற்கு பொறுப்பான வாக்குச் சாவடி ஊழியர்களை அந்த சீட்டுகளில் உள்ள EVM எண்களைப் பயன்படுத்தி அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடமை தவறியதற்காக உதவி தேர்தல் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவுத்துள்ளது.
- ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த்து பவார்.
இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.
இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், "இந்த ரூ.300 கோடி பரிவர்த்தனை குறித்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரித்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இந்த பரிவர்த்தனை தொடர்பான பதிவு ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டு, தொடர்புடைய ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு ரூபாய் கூட கைமாறவில்லை. அந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானது, அதை விற்க முடியாது. அது அரசு நிலம் என்ற விஷயம் எனது மகன் பார்த்து மற்றும் அவரது கூட்டாளி திக்விஜய் பாட்டீல் ஆகியோருக்கு தெரியாது" என்று கூறினார்.
இதற்கிடையே இந்த நிலமோசடி தொடர்பாக போலீசார் பதிந்த வழக்கு வழக்கில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை. நிலத்தை வாங்கிய நிறுவனத்தில் 1 சதவீதம் மட்டும் பங்கு வைத்துள்ள திக்விஜய் பாட்டீலின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து சிவசேனா(உத்தவ்) நிர்வாகி அம்பாதாஸ் தன்வே கூறுகையில்,"நிலத்தை வாங்கிய கம்பெனியில் அஜித் பவார் மகனுக்கு 99 சதவீத பங்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு சதவீத பங்கு இருப்பவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.
- இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.
- ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாரணாசியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இ
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பாடல் பாடப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் வெறுப்பு மற்றும் வகுப்புவாத சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பின் பாடலைச் சேர்ப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது.
இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.
அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஆபத்தான செயலை எதிர்க்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- பல பிரபலமான பிராண்டுகள் மற்றும் தளங்கள் டிஜிட்டல் தங்கத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
- செபி அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வராது.
Digital Gold, E-Gold தங்கத்தை வாங்குவோருக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை என்பதால் எச்சரிக்கையாக இருக்க SEBI அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
பத்திரங்கள் அல்லது சரக்கு (Commodity) வர்த்தகப் பொருட்களின் கீழ், டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் ஆதலால் அவை செபி அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வராது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்க ஒப்பந்தங்கள் (commodity derivatives), Gold ETFs, Electronic Gold Receipts (EGRs) வழியாக தங்கத்தில் சட்டபூர்வமாக முதலீடு செய்யலாம் என்று செபி அறிவுரை வழங்கியுள்ளது.
செபி அமைப்பு எச்சரிக்கை விடுத்த போதிலும் பல பிரபலமான பிராண்டுகள் மற்றும் தளங்கள் டிஜிட்டல் தங்கத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
குறிப்பாக தனிஷ்க், ஆதித்யா பிர்லா கேபிடல், காரட்லேன், ஜோஸ் அலுக்காஸ், போன்பே மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை டிஜிட்டல் தங்கத்தை ஊக்குவிக்கிறது.
- இளம்பெண்ணுக்கு சில மாந்திரீக பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்.
- இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் கொரட்டி குன்னல் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது55). இவரது மகன் அகில்(26). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து அகில் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் அகிலின் மனைவிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் தீயசக்திகள் புகுந்துவிட்டதாக அகிலின் குடும்பத்தினர் கருதினர். ஆகவே அவர்கள் பத்தினம்திட்டா பெரும்துருத்தி மடச்சிரா பகுதியை சேர்ந்த சிவதாஸ் (54) என்ற மந்திரவாதியை நாடினர்.
அப்போது அவர் இளம்பெண்ணுக்கு சில மாந்திரீக பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து மாந்திரீக பூஜை செய்வதற்கான எற்பாடுகளை அகிலின் குடும்பத்தினர் செய்தனர். பின்பு அவர்களது வீட்டுக்கு வந்த மந்திரவாதி சிவதாஸ் மாந்திரீக பூஜை செய்தார்.
இளம்பெண்ணை ஒரு இடத்தில் அமரவைத்து தொடர்ந்து 10 மணி நேரம் பூஜை செய்துள்ளார். அந்த பூஜையின் போது இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து குடிக்க செய்துள்ளனர். மேலும் பீடி சாம்பலை விழுங்கச் செய்திருக்கின்றனர்.
அது மட்டுமின்றி இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்தநிலையில் இளம்பெண்ணை பார்க்க அவரது தந்தை வந்துள்ளார். அவரிடம் தன்னை கணவர் குடும்பத்தினர் மாந்திரீக பூஜை என்ற பெயரில் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய விவரத்தை தெரிவித்தார்.
அவர் அதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி இளம்பெண்ணின் கணவர் அகில், மாமனார் தாஸ், மந்திரவாதி சிவதாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் அகிலின் தாய்க்கும் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந் துள்ளது. தலைமறைவாகி விட்ட அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
- மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உத்தரபப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த முகமது அன் (21) இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
நீட் பயிற்சிக்காக நான்கு நாட்களுக்கு முன்பு கான்பூர் ராவத்பூரில் உள்ள ஒரு விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவரது அறைத் தோழர் இம்தாத் ஹசன், முகமதுவை பிரார்த்தனைக்குச் செல்ல அழைத்தார். ஆனால் முகமது மறுத்துவிட்டார். இம்தாத் திரும்பி வந்தபோது, அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். முகமதுவை அழைத்தும் எந்த பதிலும் இல்லாததால் இம்தாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, முகமது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அங்கிருந்து 2 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் மீட்டனர். அதில் "அம்மா, அப்பா, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாது. அதனால்தான் நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இதற்கு நான்தான் பொறுப்பு" என்று முகமது எழுதியுள்ளார்.
அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார்.
- இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரெயில் ஏசி கோச்சில் போர்வை கேட்டதற்கு ராணுவ வீரரை கோச் உதவியாளர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராணுவ வீரர் ஜிகர் சவுத்ரி விடுப்பில் வீடு செல்வதற்காக இந்த மாதம் 2 ஆம் தேதி, ஜம்மு தாவி-சபர்மதி எக்ஸ்பிரஸின் 2nd ஏசி கோச்சில் சொந்தமாநிலமான குஜராத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.
பயணத்தின் நடுவில், அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார். படுக்கை விரிப்பு கொடுத்த சுபைர், போர்வை கொடுக்க மறுத்துவிட்டார்.
இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுபைர், தன்னிடம் இருந்த கத்தியால் ஜிகர் சவுத்ரியைத் சரமாரியாக குத்தினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டிக்கெட் பரிசோதகரின் புகாரின் அடிப்படையில், ரெயில்வே போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து பிகானர் ரெயில் நிலையத்தில் வைத்து கோச் உதவியாளர் சுபைரை கைது செய்தனர். சுபைர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்றும் அவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இதுபற்றிய பற்றிய புகாரைப் பெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், ரெயில்வே வாரியத் தலைவர் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.






