என் மலர்
இந்தியா
- திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேம்பாட்டு வரைபடத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
- பிரதமர் மோடி நாளை திருவனந்தபுரம் வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
திருவனந்தபுரம்:
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தனது வளர்ச்சியை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக அந்த கட்சியின் தலைவர்கள் தமிழகம் மற்றும் கேரளத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இதன் வளர்ச்சியாக கேரளாவில் பாரதிய ஜனதா முதன் முறையாக எம்.பி. தேர்தலில் ஒரு இடத்தை கைப்பற்றியது.
திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ்கோபி, தற்போது மத்திய மந்திரியாக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியது. இந்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் பெற பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கட்சியினரை ஊக்கப்படுத்தும் வகையில், கட்சியின் முக்கிய தலைவர்கள் கேரளாவை குறிவைத்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கேரள மாநிலம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (23-ந்தேதி) கேரளா வருகிறார். மாநில தலைநகர் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கும் அவர், புதிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
நாகர்கோவில்-மங்களூர், திருவனந்தபுரம்- தாம்பரம், திருவனந்தபுரம் -ஐதராபாத் வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்- திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர், புதுமை, தொழில் நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேம்பாட்டு வரைபடத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை பகல் அவர் திருவனந்தபுரம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து அவர் 'ரோடு ஷோ'வாக விழா நடைபெற புத்திரிக்கண்டம் மைதானத்திற்கு காரில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
புத்திரிக்கண்டம் திடலில் பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்த கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு கட்சியினருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணம் மூலம், கேரள சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை பாரதிய ஜனதா தொடங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் மோடி நாளை திருவனந்தபுரம் வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவரது விமானம் வரும் சங்குமுகம் விமான நிலையம் மற்றும் புத்திரிக்கண்டம் கிழக்கு கோட்டை பகுதிகள் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் டிரோன்கள், டிரோன் கேமராக்கள், பறக்கும் பட்டங்கள், பலூன்கள் மற்றும் லேசர் கற்றை விளக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
- ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் ஐ.ஐ.டி-யில் மட்டுமே நடந்துள்ளது
- 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் நேற்று முன் தினம் கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்த மாணவர் அங்கு புவி அறிவியலில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வந்த ராஜஸ்தானை சேர்ந்த ராமஸ்வரூப் இஷ்வாராம் (25) என அடையாளம் காணப்பட்டார்.
அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாகக் காவல் துறை தெரிவித்தது.
முன்னதாக இதே வளாகத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பி டெக் மாணவர் ஜே சிங் மீனா கடந்த டிசம்பர் 29 அன்று தற்கொலை செய்த நிலையில் தற்போது மற்றோரு மாணவர் தற்கொலை செய்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டிகளில் 65 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 முதல் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் ஐ.ஐ.டி-யில் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய குற்றவியல் ஆவண காப்பக தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
அதாவது, ஒரு நாளைக்குச் சராசரியாக 36 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மன அழுத்தம், கல்விக் கட்டண சுமை, சாதி பாகுபாடு ஆகியவை தற்கொலைக்கான காரணங்களாக உள்ளன.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவங்களில் கடந்த 5 ஆண்டுகளில் சாதி பாகுபாடு புகார்கள் 118% அதிகரித்துள்ளதாக UGC அண்மையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2016-ஆம் ஆண்டு சாதிய பாகுபாட்டால் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் UGC இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்தது.
- பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியது.
- பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.
ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நந்தியால் மாவட்டத்தில் ஸ்ரீவெல்லாமெட்டா அருகே தனியார் பேருந்து அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் உயிருடன் எரிந்தனர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
- குடியரசு தின விழா அணிவகுப்பில் சி.ஆர்.பி.எப். ஆண்கள் படை பங்கேற்கிறது.
- அதிகாரி சிம்ரன் பாலா, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி கடந்த 2023-ம் ஆண்டு இந்த பணிக்கு சேர்ந்தார்.
புதுடெல்லி:
டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆயுதப்படைகளின் அணிவகுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அணிவகுப்பில் இந்த ஆண்டு ஒரு பெண் அதிகாரி அனைவரது கவனத்தையும் ஈர்க்கப்போகிறார். அவரது பெயர் சிம்ரன் பாலா. 26 வயதே ஆன இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உதவி கமாண்டன்டராக இருக்கிறார். இவர் ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா கிராமத்தைச் சேர்ந்தவர்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் சி.ஆர்.பி.எப். ஆண்கள் படை பங்கேற்கிறது. 140 வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த படையின் தளபதியாக சிம்ரன் பாலா, கம்பீர நடை போட இருக்கிறார்.
முதல்முறையாக ஆண்கள் படையை தலைமை தாங்கி இவர் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண நாடே காத்திருக்கிறது. இது பெண்களுக்கான அங்கீகாரம் என்றும் அதிகாரிகள் பெருமைப்பட்டு உள்ளனர். அதிகாரி சிம்ரன் பாலா, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி கடந்த 2023-ம் ஆண்டு இந்த பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சமூக வலைதளங்களில் பக்தர்கள் அவரை விமர்சனம் செய்தனர்.
சம்மக்கா சாரலம்மா ஜாதாரா அல்லது மேடாரம் ஜாதாரா என்பது தெலுங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் பெண் தெய்வங்களை கவுரவிக்கும் ஒரு பழங்குடி திருவிழாவாகும்.
அந்த மாநிலத்தின் முலுகு மாவட்டத்தின் அடர்ந்த காடுகளின் மையத்தில் உள்ள தத்வாய் மண்டலத்தின் மேடாரம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேடாரம் ஜாதாரா திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான சம்மக்கா சாரலம்மா ஜாத்திரை திருவிழா அங்குள்ள கோவிலில் இம்மாதம் 28-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் எடைக்கு எடையான வெல்லத்தை துலாபாரத்தில் அமர்ந்து காணிக்கையாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், கமிட்டி குர்ரால்லு, 'தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோ' உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை டீனா ஸ்ராவ்யா, சம்மக்கா சாரலம்மா தரிசனத்திற்காக நேற்று முன்தினம் மேடாரம் கிராமத்துக்கு வந்தார்.
அப்போது அவர் செலுத்திய காணிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு துலாபாரம் தராசில் நடிகை தனது வளர்ப்பு நாயை அமர்த்தி, மறுபுறம் வெல்லத்தை வைத்து காணிக்கை செலுத்தியவாறு காட்சி பதிவாகியுள்ளது.
இந்த செயல் மூலம் பழங்குடியின மக்கள் தேவதைகளாக வழிபடும் சம்மக்கா சாரலம்மாவை நடிகை டீனா ஸ்ராவ்யா, அவமதித்து விட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பக்தர்கள் அவரை விமர்சனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஸ்ராவ்யா விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது செல்ல நாய் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டதால், அதன் உடல்நிலை மோசமடைந்தால் துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக்கொண்டேன். பக்தியின் காரணமாக அந்த வேண்டுதலை நிறைவேற்றியதாகவும், பழங்குடி மரபுகளை அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை. எனினும் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் தன்னை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் டாவோஸில் பிக்னிக்கில் கலந்து கொள்கின்றனர்.
- இந்தியக் கண்ணோட்டத்தில் டாவோஸ் மாநாடு அபத்தமானது- சஞ்சய் ராவத்.
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சென்றுள்ளார். அவரது பயணத்தை சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்திருந்தார்.
இதற்கு பட்நாவிஸ் மனைவி அம்ருதா பட்நாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அம்ருதா பட்நாவிஸ் தெரிவித்திருப்பதாவது:-
சஞ்சய் ராவத்தின் மொழியை ஒருபோதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், பிக்னிக் செல்லும் ஒருவர், பத்திரிகையார்களை சந்திக்கமாட்டார். இந்தியா மற்றும் மகாராஷ்டிராவிற்கு முதலீட்டை கொண்டுவந்து, வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்பதை மட்டுமே சொல்வேன்.
அதனால் சஞ்சய் ராவத்தின் கருத்து மற்றும் இதுபோன்ற மற்றவர்களின் கருத்துகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. இந்த மாநாட்டிற்கு செல்வது ஒவ்வொரு மாநில தலைவர்களின் பணி என நம்புகிறேன்.
இவ்வாறு அம்ருதா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் டாவோஸில் பிக்னிக்கில் கலந்து கொள்கின்றனர். இந்தியக் கண்ணோட்டத்தில் டாவோஸ் மாநாடு அபத்தமானது என சஞ்சய் ராவத் விமர்சனம் செய்திருந்தார்.
- இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாம் மற்றொரு நடைபயணத்தை தொடங்க இருக்கிறோம்.
- மக்களின் பிரச்சினைகளுக்கான நான் தொடர்ந்து போராடுவேன்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய நடைபயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தடேபல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எலுரு சட்டசபை தொகுதியில் இருந்து வந்திருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:-
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாம் மற்றொரு நடைபயணத்தை தொடங்க இருக்கிறோம். மக்களின் பிரச்சினைகளுக்கான நான் தொடர்ந்து போராடுவேன். எலுரு தொகுதியில் கட்சியை வலுப்படுத்த தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் வலியுறுத்த வேண்டும்.
தேசிய ஜனநாயக ஆட்சியில் அனைத்து அமைப்புகளும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. என்டிஏ கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு எந்தவொரு உண்மையான நன்மைகளையும் வழங்கத் தவறிவிட்டது.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டி 2027 மத்தியில் நடைபயணத்தை தொடங்கலாம் எனத் தெரிகிறது.
- பினராய் விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், அது புரட்சிக்கரமான நடவடிக்கையாக இருக்கும்.
- அதன்மூலம் நிச்சயமாக கேரளா மாநிலத்திற்கு அதிக நிதி வரும்.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநிலம் கூடுதல் நிதி பெறும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-
பினராய் விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், அது புரட்சிக்கரமான நடவடிக்கையாக இருக்கும். அதன்மூலம் நிச்சயமாக கேரளா மாநிலத்திற்கு அதிக நிதி வரும். இந்த நிதியை கொண்டு கேரளா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு மேலும் பெரிய பேக்கேஜ் கொடுப்பார். பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும். அதன்மூலம் மீண்டும் அவர் முதலமைச்சராக முடியும். சோசலிச தலைவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடியும் என்றால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏன் இணைய முடியாது?.
இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
- அப்துல்காதர் அப்துல்ரஹ்மான் முஜாவர் என்பவர் போலீசில் புகார் செய்தார்.
- தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா இதேபோன்ற சர்ச்சையில் சிக்கினார்.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில் மசூதிமீது அம்பு எய்வது போல் சைகை செய்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்துத்துவா பெண் ஆர்வலர் ஹர்ஷிதா தாக்கூர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பெலகாவியில் நடைபெற்ற 'அகண்ட இந்து சம்மேளனம்' ஊர்வலத்தின் போது, ஹர்ஷிதா தாக்கூர் ஒரு வாகனத்தில் நின்றபடி, அங்கிருந்த சையத் அன்சாரி தர்காவை நோக்கி மீண்டும் மீண்டும் அம்பு விடுவது போன்ற சைகைகளைச் செய்தார்.
அதனை கீழே இருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தும் ஊக்குவித்தனர். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக, பீரன்வாடியைச் சேர்ந்த அப்துல்காதர் அப்துல்ரஹ்மான் முஜாவர் என்பவர் போலீசில் புகார் செய்தார்.
அவர் புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் ஹர்ஷிதா தாக்கூர் மற்றும் ஊர்வல அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏழு பேர் மீது பெலகாவி ஊரகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா இதேபோன்ற சர்ச்சையில் சிக்கினார். ராம் நவமி ஊர்வலத்தின் போது அவர் ஒரு மசூதியை நோக்கி அம்பு விடுவது போல் சைகை செய்ததாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- தனக்கு இன்னும் வழங்கப்படாத அனைத்துப் பங்கு விருப்பத்தேர்வுகளையும் நிறுவனத்தின் பொதுவான ESOP தொகுப்பிற்கே திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
- CEO பதவியிலிருந்து விலகினாலும், நிறுவனத்தின் துணைத் தலைவராக தொடர்ந்து செயல்படுவார்.
சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடர்னல் குழும சிஇஓ பதவியில் இருந்து தீபிந்தர் கோயல் விலகியுள்ளார். பிளிங்கிட்-ன் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான அல்பிந்தர் சிங் திண்ட்ஸா Eternal-ன் புதிய குழும தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினாலும், நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், இயக்குநராகவும் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எடர்னல் எப்போதும் எனது வாழ்நாள் பணியாகவே இருக்கும்" என்றும், இந்த மாற்றம் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்காது என்றும் அவர் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ அல்பின்டர் திண்ட்சா பிப்ரவரி 1 முதல் எடர்னல் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாகப் பொறுப்பேற்பார்.
எடர்னல் போன்ற ஒரு பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் சட்டப்பூர்வ எதிர்பார்ப்புகளுக்கு முழுமையான கவனம் தேவைப்படுகிறது. ஆனால் தான் தற்போது அதிக ரிஸ்க் மற்றும் சோதனைகள் நிறைந்த புதிய யோசனைகளை ஆராய விரும்புவதால், அந்த முயற்சிகளை நிறுவனத்திற்கு வெளியே மேற்கொள்வது சிறந்தது என தோன்றுகிறது என தனது விலகல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார்
- வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்துவீடியோ வெளியிட்ட பெண் தலைமறையாகியுள்ளதாகவும் போலீசார் அவரை வலைவீசி தேடி வருவதாகவும் தகவல் வெளியாகினது.
இந்நிலையில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் இன்று கைது செய்தனர். முன்னதாக முன்ஜாமீன் கோரி ஷிம்ஜிதா கோழிக்கோடு மாநாட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.
- உடலில் இருநத அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபக்(வயது35). கோழிக்கோட்டில் உள்ள துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 9-ந்தேதி கண்ணூருக்கு ஒரு பஸ்சில் சென்றார்.
அப்போது அவர் அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்தாக கூறப்படுகிறது. ஓடும் பஸ்சில் தனக்கு நேர்ந்த அந்த நிகழ்வு தொடர்பான வீடியோவை, அந்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதனை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.
இதனால் அவமானம் தாங்காமல் வாலிபர் தீபக் தற்கொலை செய்து கொண்டார். இளம் பெண் வெளியிட்ட வீடியோ காரணமாக தீபக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடும் விவாதத்தை உருவாக்கியது.
தீபக்கின் சாவுக்கு காரணமான இளம்பெண்ணின் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ வைரல் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் தனது மகன் மீது அபாண்டமாப பழி சுமத்தி தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக தீபக்கின் தாய் கன்யகா குற்றம்சாட்டினார்.
அவர் சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் சமூகவலை தளத்தில் வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.
தனது வீடியோ பதிவு மற்றும் தன்னுடைய செயல்பாட்டுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதால், வீடியோவை வெளியிட்ட இளம்பெண் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் கேரளாவில் சில ஆண்கள், தங்களின் உடலை அட்டைப்பெட்டியால் மறைத்தபடி பஸ்களில் பயணம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதில் ஒரு வீடியோவில் பயணி ஒருவர் கூண்டு போன்று இருக்கும் அட்டை பெட்டிக்குள் நின்ற படி பஸ்சில் பயணிப்பது போன்று இருக்கறது.
மற்றொரு வீடியோவில் பஸ் கண்டக்டர் ஒருவர், தனது உடலில் நெஞ்சு மற்றும் கைகள் உள்ளிட்ட இடங்களில் அட்டை பெட்டிகளை கட்டிக்கொண்டு வந்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கிறார். அவர் உடலில் இருநத அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.
ஆண்களின் இந்த வித்தியாசமான நடவடிக்கையை, அந்த பஸ்களில் பயணித்த மற்ற பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. அதே நேரத்தில் அட்டை பெட்டியால் உடலை மறைத்து பஸ்சில் ஆண்கள் பயணிக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






