என் மலர்
இந்தியா
- தேசிய புலனாய்வு முகமை பி.எப்.ஐ. அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
- பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 28 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), பி.எப்.ஐ. அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
மேலும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த வழக்கில் இதுவரை பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 28 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அத்துடன் ரூ.62 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கி இருந்தது.
இந்நிலையில், பி.எப்.ஐ. மற்றும் அதன் அரசியல் கட்சியுடன் (எஸ்.டி.பி.ஐ.) தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு சொந்தமான மேலும் ரூ.67 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலான சொத்துகள் கேரளாவில் உள்ளன. இத்துடன் இந்த வழக்கில் முடக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ.129 கோடியாக அதிகரித்துள்ளது.
- முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- பீகார் தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது.
இதனால், கட்சி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.
மீதிமுள்ள 122 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது.
- இதில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
புதுடெல்லி:
இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ கடந்த 2019-ம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. இதில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்து வருகிறது.
இந்நிலையில், நிலவில் உள்ள நீர், பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை சந்திரயான்-2 ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் சேகரித்து அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்ததில் நிலவில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம் நிலவில் நீர் இருக்கும் இடம் பற்றிய வரைபடத்தை இஸ்ரோ தயாரித்திருக்கிறது.
அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் இந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (டி.எப்.எஸ்.ஏ.ஆர்) என்ற உயர் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1,400 ரேடார் தரவுத்தொகுப்புகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
- பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம்
- பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து வாக்குத் திருட்டை நிறுத்த வேண்டும்.
பீகாரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நிலையில் கிஷன்கஞ்ச் தொகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
அவர் கூறியதாவது, "எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது.
பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.
பீகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை.
பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் இந்தியா கூட்டணி 100 சதவீதம் ஆட்சியமைப்பது நிச்சயம்" என்று தெரிவித்தார்.
பீகாரில் வரும் 11 ஆம் தேதி 112 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. . 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
- இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
- மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் போலீசில் புகார் அளித்தனர்.
குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேர்ந்த தீரஜ் ரபாரி பல பெட்ரோல் பங்களை நடத்தி தொழிலதிபராக இருந்து வந்தார். இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை தனது மகள்களை காரில் அழைத்துக்கொண்டு ஆதார் கார்டு பதிய தீரஜ் ரபாரி வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.
மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தீரஜ் தனது நண்பருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
- ரூ.9.1 லட்சம் கோடி சொத்துடன் உலகின் 17வது பணக்காரராக உள்ளார். .
- முன்னதாக இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி வழிபாடு செய்தார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சுமார் ரூ.9.1 லட்சம் கோடி சொத்துடன் உலகின் 17வது பணக்காரராக உள்ளார். ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில், இன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்த முகேஷ் அம்பானி, கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட உள்ள மருத்துவமனைக்காக 15 கோடி ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார்.
தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் அதனை பெற்றுக்கொண்டார். முன்னதாக இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி வழிபாடு செய்த நிலையில் குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்தி உள்ளார்.
- போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மர்ஜா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகார்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சனூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.
செப்டம்பர் 2 அன்று அரியானாவில் உறவினர் உறவினர் வீட்டில் இருந்த ஹர்மீத் சிங்கை கைது செய்ய சென்ற போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்து காரில் தப்பிச் சென்ற ஹர்மீத் சிங்கை போலீசார் தேடி வந்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதற்கிடையே அவருக்கு போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில் ஹர்மீத் சிங் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.
அந்த பேட்டியில், தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் சதி என்றும் தனக்கு ஜாமீன் கிடைத்ததும் நாடு திரும்புவேன் என்றும் பேசியுள்ளார். மேலும் தனது சொந்த கட்சியினர் குறித்தும் அந்த பேட்டியில் அவர் குறை கூறியுள்ளார்.
- 2 கட்டங்களில் மாநிலம் முழுவதும் 200 பேரணிகளில் உரையாற்றி தேஜஸ்வி முதலிடத்தில் உள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி 16 தேர்தல் பேரணிகளையும், ஒரு ரோடு ஷோவும் நடத்தியுள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் 65.08 என்ற சாதனை சதவீத வாக்குகள் பதிவாகின.
நேபாளம், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை ஒட்டியுள்ள 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் நிதிஷ் அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.
முதற்கட்டத்தை போல் இரண்டாம் கட்டத்திலும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் 2ஆம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
ஒட்டுமொத்தமாக 2 கட்டங்களில் மாநிலம் முழுவதும் 200 பேரணிகளில் உரையாற்றி தேஜஸ்வி முதலிடத்தில் உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 16 பேரணிகளையும், பிரியங்கா காந்தி 13 பேரணிகளையும், மல்லிகார்ஜுன கார்கே நான்கு பேரணிகளையும் நடத்தினர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், பிரதமர் நரேந்திர மோடி 16 தேர்தல் பேரணிகளையும், ஒரு ரோடு ஷோவும் நடத்தியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 36 பேரணிகளில் உரையாற்றி, ஒரு ரோடு ஷோவும் நடத்தினார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 21 பேரணிகளையும், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா 15 பேரணிகளையும் நடத்தினர். முதல்வர் நிதிஷ் குமார் 71 தேர்தல் பேரணிகளை நடத்தினார்.
- காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.
- மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீது புகார் அளித்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக உள்ள ஹன்ஸ்ராஜ் இமாச்சலப் பிரதேச சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகரும் ஆவார்.
ஹன்ஸ்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த ஆண்டு தன்னை சிறு வயதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார். காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட அப்பெண், எம்எல்ஏ தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மீண்டும் புகார் அளிக்காமல் இருக்கும்படியும் அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் நெருங்கிய கூட்டாளி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீதே போக்ஸோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பெண் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.
- சாலையோரத்தில் பாட்டியுடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
- கால்வாயில் சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று அதிகாலை,மேற்கு வங்கத்தின் தாராகேஷ்வரர் ரெயில் நிலையத்தின் அருகே சாலையோரத்தில் கொசு வலைக்குள் பாட்டியுடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வலையை அறுத்து சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அருகில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என அருகிலிருந்தவர்கள் தேடியுள்ளனர். அப்போது அருகேயிருந்த வாய்க்காலில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது.
அங்கு சென்று பார்த்தபோது சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார். சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது.
சிறுமியின் கன்னத்தில் கடித்த காயங்கள் காணப்பட்டது. ரத்தப் போக்கு தொடர்ந்த நிலையில் சிறுமி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போக்ஸோ வழக்குப்பதிந்த போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் சிறுமியின் தாத்தாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கோர பண்டாவை சேர்ந்தவர் பிரமைய்யா (வயது 51). இவரது மனைவி அஞ்சலி (48). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இளைய மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.
இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.
கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் தம்பதியினர் விழிப்பிதுங்கினர்.
அப்போது பிரமைய்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி தனது செல்போனில் உள்ள யூடியூபில் செயின் பறிப்பது எப்படி என்ற தொழில்நுட்பத்தை கணவன், மனைவி இருவரும் கற்றுக் கொண்டனர்.
பின்னர், ஐதராபாத் வந்த இருவரும் தனியாக செல்லும் வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். பறிக்கப்பட்ட நகைகளை அஞ்சலி சித்தர் பள்ளியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து கடன் வாங்கினார். கடன் வாங்கிய பணத்தில் தங்களது கடன்களை அடைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சிக்கட் பள்ளி அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஷாப்பிங் சென்றுவிட்டு லிப்டில் வந்தார். லிப்ட் அருகே மறைந்திருந்த பிரமைய்யா மூதாட்டியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்தார். இதில் மூதாட்டியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மூதாட்டி சிக்கட் பள்ளி போலீசில் புகார் செய்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
நேற்று அசோக் நகரில் சுற்றி திரிந்த பிரமய்யாவையும் அவரது மனைவி அஞ்சலியையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் இளைய மகளின் திருமண கடன்களை அடைக்க யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
- பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள்.
- நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது.
வாக்கு திருட்டு குறித்து பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பலமுறை குற்றம்சாட்டி இருந்தார்.
மக்களவை தேர்தல் மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக கூறி இருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியானா சட்டசபை தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்ததாக தெரிவித்தார்.
இந்தநிலையில் அரியானாவை போல மத்தியபிரதேசம், சத்தீஸ்கரிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக ராகுல்காந்தி இன்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அவர் நேற்று மத்தியபிரதேசம் சென்றார்.
இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சில நாட்களுக்கு முன்பு நான் அரியானா குறித்து ஒரு விளக்க காட்சியை வழங்கினேன். வாக்கு திருட்டு நடப்பதை நான் தெளிவாக கண்டேன். 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. 8 வாக்குகளில் ஒரு ஓட்டு திருடப்பட்டது.
அதைத்தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்தியபிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக நான் நம்புகிறேன்.
பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பாக எங்களிடம் கூடுதல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக வழங்குவோம். இப்போது கொஞ்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் கூட்டு கூட்டாண்மையை உருவாக்கி இதை நேரடியாக செய்கிறார்கள்.
இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது. பாரத மாதாவுக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறது.
வாக்கு திருட்டு என்பது முக்கிய பிரச்சினை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துடன் (எஸ்.ஐ.ஆர்) இணைத்து மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.






