என் மலர்tooltip icon

    இந்தியா

    குழப்பத்தை விளைவிக்கும் குறைபாடுள்ள செயல்முறை SIR - பாஜக மீது நேதாஜி பேரன் குற்றச்சாட்டு
    X

    குழப்பத்தை விளைவிக்கும் குறைபாடுள்ள செயல்முறை SIR - பாஜக மீது நேதாஜி பேரன் குற்றச்சாட்டு

    • வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    • பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடந்து வருகிறது.

    இந்நிலையில் SIR ஒரு குறைபாடுள்ள ஒரு செயல்முறை என்றும், இது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் அவதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியலில் தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன் ஆஜரான பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருக்கு முன்னதாக விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    விசாரணைக்கு பின் அவர் கூறுகையில், இந்தத் திருத்தப் பணி மிகவும் அவசரமாகவும், முறையான திட்டமிடல் இல்லாமலும் செயல்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்கப்படாததால், இது ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளது.

    என்னை விசாரணைக்கு அழைத்ததில் எனக்குப் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    மேலும், பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இது மேற்கு வங்க மக்களுக்குக் கடும் இன்னல்களைத் தருவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தானும் ஆதரிப்பதாகச் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

    சந்திர குமார் போஸ் மட்டுமல்லாது, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், நடிகர் தேவ், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தொழிலதிபர் ஸ்வபன் சாதன் பாசு மற்றும் எழுத்தாளர் ஜாய் கோஸ்வாமி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிறிது காலம் பாஜகவோடு பயணித்த சந்திர குமார் போஸ், கடந்த 2023 இல் அக்கட்சியை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×