என் மலர்
இந்தியா

பாம்பின் விஷம் இத்தனை கோடியா? கடத்தி வந்த 7 பேர் கைது
- குஜராத்தில் அதிக மதிப்புள்ள பாம்பு விஷம் பிடிபடுவது இதுதான் முதல் முறை.
- வெறித்தன போதை பார்ட்டிகள் உள்ளிட்ட பல ரகசிய தேவைகளுக்கு இந்த விஷம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் சிறப்பு போலீஸ் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சிறிய டப்பாவில் பாம்பு விஷம் இருந்தது தெரிய வந்தது. அது கொடிய பாம்பு விஷம் என்றும், ரகசிய சந்தையில் பல கோடிக்கு விற்பனை ஆவதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 6.5 மில்லி லிட்டர் பாம்பு விஷம் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ 5.85 கோடி என்று தெரிய வந்தது.
பாம்பு விஷத்தை விற்க வந்தவரின் பெயர் சோனி என்றும், அவர் கூடுதல் தொகைக்கு அதை விற்க இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருடன் ரகசிய வர்த்தகத்தில் ஈடுபடும் கும்பலையும் பிடிக்க போலீசார் திட்டமிட்டனர், அதன்படி அவரை வாடிக்கையாளரிடம் பேச வைத்து பாம்பு விஷத்தை வாங்குபவர்களுக்கு வலைவிரித்தனர். அப்போது பாம்பு விஷத்தை ரூ.8 கோடிக்கு வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து சிலர் வந்தனர். அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் பாம்பு விஷம் வாங்க வந்த மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் மத்திய பிரதேசத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் சூரத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
குஜராத்தில் அதிக மதிப்புள்ள பாம்பு விஷம் பிடிபடுவது இதுதான் முதல் முறை என்று போலீசார் தெரிவித்தனர். கொடிய பாம்பு விஷமானது விஷமுறிவு மருந்து தயாரிப்பு மற்றும் வெறித்தன போதை பார்ட்டிகள் உள்ளிட்ட பல ரகசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.






