என் மலர்
இந்தியா
- SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- மருத்துவமனையில் 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பதற்றம் காரணமாக தினசரி 4 முதல் 5 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மருத்துவமனையில் 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தனை வருங்களுக்குப் பிறகு, நாம் நாட்டின் குடிமக்களா? என நிரூபிக்க வேண்டியுள்ளது.
சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட திட்டக்குழுவை, மத்தியிலுள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக நிதி ஆயோக்கை கொண்டு வந்துவிட்டது. போஸின் பிறந்தநாள் இன்னும் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளை இந்தியா இரண்டு முறை நிராகரித்தது.
- அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது
அதானி குழுமப் பங்குகள் இன்று 10% வீழ்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் 10% வரை சரிவைக் கண்டுள்ளன. கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு மின்னஞ்சல் வாயிலாக நேரடியாக சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை அந்நாட்டின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கோரியுள்ள நிலையில் அதானி குழும பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.
சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளை இந்தியா இரண்டு முறை நிராகரித்ததால், அவை தோல்வியடைந்ததாக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அறிவிப்புகளை வழங்க அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் முயற்சித்து வருகிறது. அமெரிக்காவில் இந்தியப் பெருநிறுவனம் ஒன்று தொடர்புடைய மிக முக்கியமான சட்ட வழக்காக இது கருதப்படுகிறது.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, அதானி கிரீன் நிறுவனத்தின் பங்குகள் 10% சரிந்து ஒருநாள் வர்த்தகத்தில் குறைந்தபட்ச விலையான ரூ. 823-ஐ எட்டின. அதே சமயம் குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி என்டர்பிரைசஸின் பங்குகள் 8% சரிந்து ரூ. 1,936-ஐத் தொட்டன. மேலும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு 5% சரிந்து ரூ. 1,343-க்கும், அதானி எனர்ஜி நிறுவனத்தின் பங்கு 8% சரிந்து ஒரு பங்கின் விலை ரூ. 852-க்கும் சரிந்தது.
முன்னதாக அதானி கிரீன் எனர்ஜி தயாரிக்கும் மின்சாரத்திற்கான கொள்முதல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தில் அதானி குழுமத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுகள் எழுந்தது. அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது. மேலும், தனது நிலைப்பாட்டைத் தக்கவைக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது.
- குஜராத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி ஒரு நகரத்தில் இருந்துதான் தொடங்கியது.
- கேரளாவில் பா.ஜ.க. அரசாங்கத்திற்கான அடித்தளத்தை திருவனந்தபுரம் அமைத்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள புத்திரிக்கண்டம் மைதான திடலில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். லட்சக்கணக்கான தொண்டர்களின் கடின உழைப்பு பலனளித்துள்ளது. எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு, திருவனந்தபுரம் மக்களுக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் மரியாதையுடன் தலைவணங்க விரும்புகிறேன்.
இன்று இங்கு ஒரு புதிய ஆற்றலையும், ஒரு புதிய நம்பிக்கையையும் நான் காண்கிறேன். உங்கள் ஆற்றல் கேரளாவில் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது.
1987-ம் ஆண்டுக்கு முன்பு, குஜராத்தில் பா.ஜ.க. ஒரு சிறிய கட்சியாக இருந்தது. 1987-ம் ஆண்டில் முதல் முறையாக பா.ஜ.க. அகமதாபாத் மாநகராட்சியில் வெற்றி பெற்றது.
குஜராத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி ஒரு நகரத்தில் இருந்துதான் தொடங்கியது. அதேபோல திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க. பெற்ற வெற்றியால் குஜராத்தில் ஆட்சியை பிடித்ததைபோல கேரளாவிலும் நடக்கும். திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றி சாதாரணமானதல்ல. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது.
கேரளாவில் பா.ஜ.க. அரசாங்கத்திற்கான அடித்தளத்தை திருவனந்தபுரம் அமைத்துள்ளது. இந்த வெற்றி 'வளர்ச்சியடைந்த கேரளா'வை உருவாக்கு வதற்கானது. இது இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஊழல் ஆட்சியில் இருந்து கேரளாவை விடுவிப்பதற்கான உறுதிமொழியின் வெற்றியாகும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க திருட்டு வழக்கில் குற்றவாளிகள் மீது நிச்சயமாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்கள் தப்ப முடியாது. கேரளாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால், சபரிமலை தங்க இழப்பு குறித்து விசாரிக்கப்படும். குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது எனது உத்தரவாதம்.
இவ்வாறு மோடி பேசினார்.
- பிரியாணி சாப்பிட்ட சிவநாகராஜு மயக்கமடைந்ததும், மாதுரி தனது காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
- கொலைக்குப் பிறகு மாதுரி சடலத்தின் அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்ததாக வெளியான சில செய்திகள் பொய்யானவை.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலுவுரு கிராமத்தை சேர்ந்தவர் லோகம் சிவநாகராஜு.
சிவநாகராஜுவின் மனைவி லட்சுமி மாதுரி, கோபி என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார்.
இதற்கு தடையாக இருந்த கணவனை கொல்ல திட்டமிட்ட மாதுரி கடந்த ஜனவரி 18 இரவு உணவாகப் பிரியாணியைத் தயார் செய்து, அதில் 20 தூக்க மாத்திரைகளைப் பொடித்துக் கலந்து தனது கணவருக்குக் கொடுத்துள்ளார்.
பிரியாணி சாப்பிட்ட சிவநாகராஜு மயக்கமடைந்ததும், மாதுரி தனது காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
இருவரும் சேர்ந்து தலையணையால் சிவநாகராஜுவின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து அவரைக் கொலை செய்தனர்.
கொலையைச் செய்த பிறகு, தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் மாதுரி நாடகமாடியுள்ளார்.
சிவநாகராஜுவின் உடலில் காயங்கள் மற்றும் இரத்தக் கறைகளைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு போலீசில் புகார் அளித்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத்திணறச் செய்து கொல்லப்பட்டது உறுதியானது.
கொலைக்குப் பிறகு மாதுரி சடலத்தின் அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்ததாக வெளியான சில செய்திகள் வெளியான நிலையில் அவற்றை மாவட்ட எஸ்.பி மறுத்துள்ளார்.
மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது காதலன் கோபி ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற ரெயில்வே விழாவில் பங்கேற்றார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் சமீபத்தில் நடந்த நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. முதன் முறையாக கைப்பற்றியது. அந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து 45 நாட்களுக்குள் பிரதமர் மோடி கேரளா வருவார் என்று பா.ஜ.க. கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பிரதமர் நரேந்திரமோடி இன்று கேரளாவுக்கு வந்தார். அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை திருவனந்தபுரத்திற்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்பு பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அவர் எம்.ஜி.சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை வரை ரோடு-ஷோ சென்றார். அப்போது அவரை சாலையிலும் இருபுறங்களிலும் திரண்டு நின்ற பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.
அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசத்தபடி ரோடு-ஷோ சென்றார். பின்பு திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற ரெயில்வே விழாவில் பங்கேற்றார்.
அந்த விழாவில் நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-ஐதராபாத் ஆகிய 3 வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் என 4 புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
- குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியாவின் தூய்மையான நகரம் எனப் பெயர் பெற்ற இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்ததால் ஒரே பகுதியில் 22 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தூரின் மௌ பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இவர்களில் நிலைமை மோசமாக இருந்த 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்தார்.
குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே சில வாரங்கள் முன் இந்தூரின் பாகீரத்புரா பகுதியில் இதேபோல அசுத்தமான குடிநீரால் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- 2027 இல் என்று கணக்கெடுப்பு தொடங்கும்
- வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட கேள்விகள் உள்ளன.
இந்தியாவில் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, இரண்டு கட்டங்களாக இந்தக் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் வரை வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
இதைத்தொடர்ந்து 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணியை முன்னிட்டு வீடு வீடாக குடும்பங்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் பாலினம், வீட்டின் தரம் மற்றும் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்கள், வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி குறித்த விவரங்கள், வீட்டில் உள்ள மின்னணு சாதனங்கள், பயன்படுத்தப்படும் வாகனங்கள், அதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் உள்ளிட்டவை இந்த 33 கேள்விகளில் அடங்கும்.
மேலும், இந்த முறை கணக்கெடுப்பு பணிகளில் நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஜலின் 3 சகோதரர்கள் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- அர்மான் மற்றும் தங்கை காஜலின் கைகால்களைக் கட்டி வைத்து, அவர்களை வெட்டிக்கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் மதம் கடந்து காதலித்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் இந்து காதலி கைகால்கள் கட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அர்மான் (27) சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவிட்டு 3 மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரும் அதே ஊரை சேர்ந்த காஜல் (22) என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஜலின் 3 சகோதரர்கள் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களாக இருவரையும் காணவில்லை என்று அர்மானின் தந்தை புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் காஜலின் சகோதரர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கொலையை ஒப்புக்கொண்டனர்.
அர்மான் மற்றும் தங்கை காஜலின் கைகால்களைக் கட்டி வைத்து, அவர்களை வெட்டிக்கொலை செய்ததாகவும், உடல்களை நதிக்கரையில் குழிதோண்டிப் புதைத்துள்ளதாகவும்அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
அவர்கள் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து போலீசார் புதன்கிழமை மாலை, உடல்களைத் தோண்டி எடுத்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
காஜலின் 3 சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் மத ரீதியான பதற்றம் ஏற்படாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மஞ்சூர் ஆலம் ஒரு வங்கதேசத்தவர் என முத்திரை குத்தி இந்துத்துவா கும்பல் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளதாக அவரது சகோதரர் குற்றம்சாட்டினார்.
- பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை பெங்காலி தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகின்றனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி மஞ்சூர் ஆலம் லஷ்கர் (32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் வேலை செய்து வந்தார்.
பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோமரோலு பகுதியில் வேலை செய்து வந்த அவரை வங்கதேசத்தவர் என்று கூறி அங்கிருந்த கும்பல் மிரட்டி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மஞ்சூர் ஆலத்தை அந்த கும்பல் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தியுள்ளது. அவரது குடும்பத்தினரை அழைத்து மஞ்சூரை விடுவிக்க ரூ.25,000 பணம் கேட்டுள்ளது.
மஞ்சூரின் குடும்பத்தினர் பயந்துபோய் ஆன்லைன் மூலம் ரூ.6,000 செலுத்தியுள்ளனர். ஆனால், புதன்கிழமை இரவு மஞ்சூர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
மஞ்சூர் ஆலம் மீது திருட்டுப் பட்டம் கட்டி, அவர் ஒரு வங்கதேசத்தவர் என முத்திரை குத்தி இந்துத்துவா கும்பல் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளதாக அவரது சகோதரரும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான கியாசுதீன் லஷ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை பெங்காலி தொழிலாளர்கள் குறிவைக்கப்படுவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசு தலையிட்டு முறையான விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மஞ்சூர் ஆலம் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
- ரிஷிகாந்தா, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சிங்னு ஹாவோகிப் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
- வன்முறையில் 258 பேர் வரை கொல்லப்பட்டனர். 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்த வருகின்றனர்.
கடந்த 2023 இல் மணிப்பூரில் மெய்தி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் இரு இனத்தவருக்கும் மோதல் ஏற்பட்ட வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 258 பேர் வரை கொல்லப்பட்டனர். 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்த வருகின்றனர்.
2023 மே மாதம் அங்கு பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்லவம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பல பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். அதில் ஒருவர் அண்மையில் உடல் நலம் மோசமடைந்து உயிரிழந்தார்.
அவரை வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, 2 வருடங்கள் கடந்தும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
மறுபுறம் இரு இனத்தவர் இடையேயும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அவ்வபோது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகப் பெண்ணைத் திருமணம் செய்த மெய்தி இன நபர் கடத்திக் கொலை செய்யப்ட்டுள்ளார்.
கொல்லப்பட்ட 38 வயதான மெய்தி இன இளைஞர் ரிஷிகாந்தா, மெய்தி மூகத்தினர் அதிகம் வாழும் கக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
ரிஷிகாந்தா, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சிங்னு ஹாவோகிப் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, குக்கி சமூகத்தினர் அதிகம் வாழும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இனக்கலவரத்தின் முன் நேபாள் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற அவர் இந்த வாரம் ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை, 'யுனைடெட் குக்கி நேஷனல் ஆர்மி' என்ற அமைப்பைச் சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல், துய்புவாங் என்ற இடத்திலிருந்து ரிஷிகாந்தாவை கடத்திச் சென்றுள்ளது.
கடத்தப்பட்ட ரிஷிகாந்தாவை நட்ஜங் என்ற இடத்திற்குக் கொண்டு சென்று அந்தக் கும்பல் சுட்டுக்கொலை செய்துள்ளது. இதை அந்த கும்பல் வீடியோ பதிவு செய்துள்ளது. அந்த வீடியோவில் ரிஷிகாந்த்தா, தன்னை கொல்ல வேண்டாம் என கெஞ்சுவது பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிந்த போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- இந்த ஆண்டு டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு அலங்கார வாகன ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் இடம்பெறுகிறது.
- வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டுவிழாவை குறிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் டெல்லி கடமைப்பாதையில் மிக தீவிரமாக நடந்து வருகிறது. பார்வையாளர்கள் அமருவதற்கான கேலரிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டன. தற்போது அங்கு தினமும் ஒத்திகை நடந்து வருகிறது. இதில் முழு ஒத்திகை இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடமைப்பாதையைச் சுற்றிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு அலங்கார வாகன ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் இடம்பெறுகிறது. இது தவிர பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த ஆண்டு விழாவில் இடம்பெறுகின்றன.
குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இதில் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் குடியரசு தினவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டுவிழாவை குறிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறுகிறது.
மேலும் ஒரு சிறப்பு அம்சமாக ரோபோ நாய்கள் (மியூல்) படைப்பிரிவும் இந்த ஆண்டு இடம்பெறுகிறது. இந்திய ராணுவம் சமீபத்தில் 100 ரோபோ நாய்களை ஆயுதப்படையில் சேர்த்துள்ளது. இந்த ரோபோக்களில் துப்பாக்கியும் பொருத்தப்பட்டு உள்ளது.
படிகள் மற்றும் மலைப்பகுதிகளில் ஏறவும், தடைகளை கடக்கவும் இவை வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை மைனஸ் 55 டிகிரி குளிரிலும் ரிமோட் மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் 15 கிலோ எடையை இது சுமந்து செல்லும்.
இவை, கடமைப்பாதை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையிலும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- எம்.ஜி. சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் கிழக்கு கோட்டை வரை ரோடு ஷோ நடத்துகிறார்.
- பிரதமர் மோடி புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பா.ஜ.க. வரலாறு படைத்தது. அப்போது அந்த வெற்றியை பற்றி கருத்து தெரிவித்த போது, விரைவில் திருவனந்தபுரம் வர உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அதன்படி பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். பிறகு எம்.ஜி. சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் கிழக்கு கோட்டை வரை ரோடு ஷோ நடத்துகிறார்.
பிறகு புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-ஐதராபாத் ஆகிய வழித்தடங்களில் 3 அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் சென்னை மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.






