என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honor Killing"

    • சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை.
    • சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் கவின் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.

    சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை. இந்த வழக்கில் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நிகழ்ந்த அன்று பணியில் தான் இருந்தார். மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில், மனுதாரர் சம்பவ இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. கவினின் தாயார் தரப்பில், கூடுதல் வாதங்களை முன் வைக்க கூடுதல் கால அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கை நவம்பர் 27-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

    சென்னை:

    "ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும்" என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது:-

    கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கெல்லாம் மிகத்தெளிவாக, துல்லியாக பதிலளித்து நம்முடைய நிதி அமைச்சர் சிறப்பாக இங்கே பேசியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், நேற்றைய விவாதத்தில் உறுப்பினர்கள் சிலர், ஆணவப் படுகொலை குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்கு நான் இப்பேரவைக்குத் தங்கள் வாயிலாக பதிலளிக்க விரும்புகிறேன்.

    'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண், இந்தத் தமிழ் மண்!

    'சாதி யிரண்டொழிய வேறில்லை, இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்' என்கிறார் அவ்வை மூதாட்டி.

    இதுதான் தமிழர் தம் நெறியாகும். தமிழர் போற்றி வந்த பண்பாடு! இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது; சாதி வேற்றுமையாக மாற்றப்பட்டது; உயர்வு-தாழ்வு கற்பிக்கப்பட்டது; மேல்-கீழ் என்ற வேற்றுமை விதைக்கப்பட்டது. வேற்றுமை விதைக்கப்பட்ட உடனேயே ஒற்றுமைக்கான குரல்களும் தமிழ் மண்ணில் உரக்க ஒலித்ததைக் காண்கிறோம். பல சீர்திருத்தக் கருத்துகள் இயக்கமாகவே உருவெடுத்து உள்ளன. அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இந்தச் சீர்திருத்தச் சிந்தனைகளை தமிழ் மண்ணில் விதைத்தார்கள்.

    கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள், அனைவருக்கும் சமவாய்ப்பு, சம அதிகாரம் ஆகியவற்றை தருவதன் மூலமாக யாவரும் ஒருவரே என்பதை உருவாக்கவே இந்த இயக்கங்கள் போராடின; வாதாடின; மன மாற்றங்களை செய்தன. சாதிக்கு, மதத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கங்கள் விதைத்தன. இனமும், மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியது இதன் சாதனைகள்.

    சீர்திருத்தக் கருத்துகளை பரப்புரை செய்து வந்த அதே காலக்கட்டத்தில் அதற்கான சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்து, சமூக சீர்திருத்த ஆட்சியை தமிழினத் தலைவர் கலைஞர் நடத்தினார்கள். அதன் வழித்தடத்தில் 'திராவிட மாடல்' ஆட்சியை நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வருகிறோம்.

    அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறோம். பெரியார் பிறந்தநாளிலும், அம்பேத்கர் பிறந்தநாளிலும் இந்த நாடே உறுதிமொழி எடுக்கிறது. இவர்கள் பிறந்த நாளில் அனைவரும் சமூகநீதி, சமநீதி உறுதிமொழி எடுப்பது சாதாரணமான சாதனையல்ல. தமிழ்நாடு சட்டப் பேரவை, இதே அவையில் 29-4-2025 அன்று உரையாற்றியபோது, ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் இருக்கும் "காலனி" என்ற சொல்லை நீக்குவோம் என்று அறிவித்தேன். பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக, அவற்றை "சமூக நீதி" விடுதிகளாகப் பெயர் மாற்றியிருக்கிறோம்.

    பிரதமர் சமீபத்தில் நேரில் சந்தித்து, முக்கியமான ஒரு கோரிக்கையை வைத்தேன். "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதிப் பெயரில், இறுதி எழுத்தில் முடிவடையும் 'இன்' என்பதற்குப் பதிலாக 'இர்' என விகுதி மாற்றம் செய்து, அந்தச் சமூக மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழி செய்யும் வண்ணம் ஒன்றிய அரசு உரிய சட்டம் இயற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்பது தான் அந்தக் கோரிக்கை.

    சமூகநீதி-சமத்துவம்-சகோதரத்துவம்-பொதுவுடமை-பொது உரிமை-கல்வி உரிமை-அதிகார உரிமை ஆகிய கொள்கைகள்தான் வேற்றுமையை, பகைமையை விரட்டும். அதனைத் தான் நாங்கள் செய்து வருகிறோம். இதன் மூலமாகத் தான் சமத்தும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.

    ஆனால், இத்தகைய சூழலில் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் நமது மனதை வேதனையடைய வைத்துள்ளன. இதற்காகவா நமது தலைவர்கள் போராடினார்கள், நாம் போராடி வருகிறோம் என்ற வேதனை ஏற்படுகிறது. உலகம் அறிவு மயமாகி வருகிறது. "ஆனால் அன்புமயம் ஆவதை எது தடுக்கிறது?" என்பதுதான் இன்று சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களை வாட்டி வருகிறது. உலகம் முழுக்க பரவி, அறிவினால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ்ச் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக்கொள்வது என்ன நியாயம்? என்பதுதான் நம்மை வருத்தும் கேள்வியாக அமைந்திருக்கிறது.

    எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்க இயலாது. கொல்வதை மட்டுமல்ல-பகைப்பதை, சண்டை போட்டுக்கொள்வதை, அவமானப்படுத்துவதை என எதையும் பண்பட்ட, வளர்ச்சியுற்ற ஒரு சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது.

    அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் ஒரு துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கி விடுகிறது. நம் சமுதாயத்தையே தலைகுனியச் செய்து விடுகிறது. பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கமும் இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.

    இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த வேதனையைத்தான் நேற்றைய தினம் நமது உறுப்பி னர்கள் பலரும் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறீர்கள். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வேண்டும், எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.

    சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தீர்மானமாக நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இந்த அநீதியைத் தடுக்க வேண்டும் என்பது நம் அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.

    ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படுகொலைகளுக்குச் சாதி மட்டுமே காரணமல்ல, இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. எதன்பொருட்டு நடந்தாலும், கொலை-கொலை தான். அதற்கான தண்டனைகள் மிகமிகக் கடுமையாகவே தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

    யாரும் எவரும்-எதன்பொருட்டும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக் கூடாது என்பதை காவல் துறைக்கு உத்தரவாகப் போட்டுள்ளோம். எனவே, சட்டம் அதன் கடமையைச் செய்கிறது.

    அதே நேரத்தில், இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல; அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னு டைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

    நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூகச் சிந்தனையில் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் சாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை; அனைவரும் சமம்; பாலின சமத்துவமும், வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திற்கு ஒரு அடையாளம் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

    அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும்-சமத்துவ சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும்-அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை! சீர்திருத்தப் பரப்புரையும்-குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

    இதுகுறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.

    இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • பள்ளி கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என சமூக நீதி விடுதி என மாற்றம் செய்யப்பட்டது.
    • ஆணாதிக்கமும் குற்ற செயல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது.

    ஆணவப்படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாதி இல்லை என்பதே தமிழனின் அடிப்படையாக இருந்தது.

    * இடைக்காலத்தில் புகுந்தவர்களால் சாதி வேறுபாடு வந்தது.

    * பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறிய வள்ளுவர் பிறந்த மண் இது.

    * வள்ளுவன் பிறந்த தமிழக மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது.

    * சாதி, மதத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை தமிழிற்கு கொடுக்க வைத்தது திராவிட இயக்கம்.

    * சமூக சீர்திருத்த ஆட்சியை நடத்தியவர் கலைஞர் கருணாநிதி.

    * அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை உருவாக்கவே பல இயக்கங்கள் போராடி மாற்றம் கொண்டு வந்தன.

    * அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம்.

    * சாதி இரண்டொழிய வேறில்லை என்ற அவ்வை மொழியே தமிழ்நாட்டின் கொள்கையாக இருந்தது.

    * பலர் போராடிக்கிடைத்தது தான் இனமும் மொழியும் தான் நமது அடையாளம் என்ற நிலை.

    * திராவிட இயக்கங்களின் முயற்சியில் தான் இனமும் மொழியும் தான் நமது அடையாளம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    * சீர்திருத்த சிந்தனை தமிழ் மண்ணில் அதிகம் விதைக்கப்பட்டது.

    * சாதிய பெயரில் இருந்த 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    * பள்ளி கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என சமூக நீதி விடுதி என மாற்றம் செய்யப்பட்டது.

    * உலகம் அறிவு மயமாகி வருகிறது. அது அன்புமயமாவதை தடுக்கிறது. இது நம்மை வாட்டுகிறது.

    * நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் மனதை வேதனைக்குள்ளாக்கி வருகின்றன.

    * ஆணவ படுகொலைகளுக்கு சாதியை தாண்டியும் பல காரணங்கள் உள்ளன.

    * எதன் காரணமாகவும் ஒருவர் மற்றொருவரை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    * ஆணாதிக்கமும் குற்ற செயல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது.

    * ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் மருமகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பால் கறவை தொழிலும் செய்து வந்தார்.

    இவர் பால் கறக்கும் தொழிலுக்கு செல்லும் போது வீடு அருகே உள்ள கணபதிபட்டியைச் சேர்ந்த சந்திரன் (49) என்பவரின் மகளான ஆர்த்தி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆர்த்தி கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர்கள் காதல் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    குறிப்பாக ஆர்த்தியின் தந்தை சந்திரன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என அச்சமடைந்த காதலர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன் குடும்பத்தினர் சம்மத்துடன் காதல் தம்பதி ராமநாயக்கன்பட்டியில் தனியாக வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகு ஆர்த்தியின் குடும்பத்தினர் அவ்வப்போது ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் பேசி வந்த போதிலும் மாமனார் சந்திரன் பேசாமல் இருந்து வந்தார். மேலும் மாப்பிள்ளை வீட்டாருக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனிடையே திருமணம் முடிந்து தலைதீபாவளியை கொண்டாட காதல் தம்பதியினர் தயாராகி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ராமச்சந்திரன் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிப்பட்டிக்கு பால் கறப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். கூட்டாத்து அய்யம்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தின் வழியாக ராமச்சந்திரன் வந்தபோது அங்கு ஏற்கனவே நின்று கொண்டு இருந்த மாமனார் சந்திரன் அவரை வழிமறித்து தகராறு செய்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டினார். இதனை எதிர்பார்க்காத ராமச்சந்திரன் பைக்கை விட்டு இறங்கி ஓட முயன்றார். இருந்தபோது துரத்திச் சென்று வெட்டியதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பின்னர் சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சந்திரனை வலை வீசி தேடிய நிலையில் அவர் உறவினர் வீட்டில் இருந்தது தெரிய வரவே அங்கு சென்று கைது செய்தனர்.

    வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததால் மருமகனையே மாமனார் வெட்டிக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தலை தீபாவளியை கொண்டாட ஆவலுடன் காத்திருந்த ஆர்த்தி தனது காதல் கணவர் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    • மாணவியின் தந்தை செண்டாபாய் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது தராட் போலீஸ் நலையம். இங்கு கடந்த 6-ந்தேதி ஹரேஷ் சவுதாரி என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், 'தன்னுடன் பழகி வந்த 18 வயதான பெண், அவரது தந்தை செண்டாபாய் படேல் மற்றும் அவர்களது உறவினர்கள் 2 பேரால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக" புகாரில் கூறி இருந்தார். கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து மாணவியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தச் சென்றபோது, மாணவி கடந்த ஜூன்-24-ந்தேதி இறந்துவிட்ட தகவலும், அதை போலீசுக்கு தெரிவிக்காமல் இறுதிச் சடங்கு நடத்திய தகவலும் வெளிவந்தது. மேலும் மாணவியின் தந்தை தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் மாணவியின் மரணம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன.

    நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அந்த மாணவி, கடந்த மே மாதத்தில் தேர்வை எழுதி இருந்தார். நீட் தேர்வு முடிவு வெளியானதில் கொலையான மாணவி நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். மருத்துவ படிப்பில் சேர தயாராகி வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே மாணவி, ஹரேசுடன் பழகி, சேர்ந்து வாழ்ந்து வந்தது அவரது பெற்றோருக்கு தெரியவந்ததால், அவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

    மாணவி பழகிய ஆண் நண்பரான ஹரேஷ் சவுதாரி ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மாணவி தராட் நகரில் இருந்து பலான்பூருக்கு படிக்க செல்லும்போது, மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி இறக்கிவிடும்போது ஹரேசுடன் பழக்கம் செய்யப்பட்டு உள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியது.

    மாணவியிடம் ஹரேஷ் தனக்கு திருமணமான விவரத்தை கூறிவிட்டாரா? என்பது பற்றி இதுவரை தெரியவில்லை என்று போலீசார் கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் கடந்த மே மாதம் ஆமதாபாத் சென்று சேர்ந்து வாழ்வது பற்றி தங்களுக்குள் முடிவு செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அடிக்கடி ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

    ராஜஸ்தானில் அவர்களை ஒரு ஓட்டலில் பார்த்த போலீஸ் குழு, மாணவியை அவரது உறவினர் சிவராம்பாயிடம் ஒப்படைத்து உள்ளனர். மாணவியின் உறவினர்கள், அதன்பிறகு மாணவியை கண்டித்து உள்ளனர். ஹரேஷ் மற்றொரு வழக்கிற்காக கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டார்.

    ஜூன் 21-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்த ஹரேஷ், மாணவிக்கு செல்போன் மற்றும் சமூக வலைத்தளத்தில் மெஸேஜ் அனுப்பி உள்ளார். ஆனால் பதில் வரவில்லை. இதையடுத்து மாணவியின் நிலை குறித்து அச்சம் அடைந்த ஹரேஷ், தனது வக்கீல் உதவியுடன் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    இதற்கிடையே மாணவி ஆணவக் கொலை செய்யப்பட்டு, இறுதிச் சடங்கு நடக்கும் செய்தி ஜூன் 25-ந்தேதி அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

    கொலை நடப்பதற்கு முன்பு, தாண்டியா கிராமத்தில் சிவராம்பாய் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவி ஜூன் 24 அன்று பாலில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சிவராம்பாய் மற்றும் நரன்படேல் ஆகியோரை கைது செய்து உள்ளனர். நரேன் படேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மாணவியின் தந்தை செண்டாபாய் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.

    • சட்டமன்றத்தில் கூறியது போல அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க வேண்டும்.
    • மக்கள், விவசாயிகள் பிரச்சனையில் தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமாக செல்லவில்லை.

    மதுரை:

    மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் வேறு விவசாயத்திற்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தில் கூறியது போல அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதே ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தான். மக்கள், விவசாயிகள் பிரச்சனையில் தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமாக செல்லவில்லை.

    சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக தனி சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. சட்டமன்றத்தில் சாதி ஆணவக்கொலைகள் குறித்து விவாதித்த பொழுது தற்போதுள்ள சட்டங்களை போதுமானது. புதிய சட்டங்கள் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்,

    ஆனால், தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறக் கூடிய சாதி ஆணவக் கொலைகள் தமிழகத்திற்கு தனி சட்டம் தேவை என்பதை தான் வலிறுத்துகிறது. சாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் வண்ணம் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வற்புறுத்தி விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளோம்" என கூறினார்.

    • கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
    • ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவினும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இதனையறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். அதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின் விபத்தில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலியில் சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவினின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர்.

    சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவினின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான்.

    பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக தெரியவருகிறது.

    இந்த கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையில் பணியாற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர்களை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மேலும் அவர்கள் காவல்துறையில் பணியாற்றுவதால் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க சாதி வெறிக் கொலைகள், சாதிவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனையளிக்கிறது. ஆதிக்க சாதிவெறியாட்டத்தைத் தடுப்பதற்கு காவல்துறையில் ஒரு தனி நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறோம்.

    ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    கவின் செல்வகணேஷை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.
    • சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

    நவீனமும், அறிவியல் தொழில்நுட்பமும் உச்சப்பட்ச வளர்ச்சி பெற்றிருக்கும் தற்காலத்தில் நடந்தேறும் இத்தகைய ஆணவப் படுகொலைகள் நாகரீகச் சமுதாயத்தையே முற்றுமுழுதாகக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழினத்தின் ஓர்மையைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களும், கொடுங்கோல் செயல்பாடுகளும் ஒருநாளும் ஏற்புடையதல்ல. சக மனிதரின் உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல்கள் மனிதத்தன்மையே அற்றவை என்பதைத் தாண்டி, சாதியின் பெயரால் அவை நிகழ்த்தப்படுவது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கின்றன.

    ஒரு ஆணும், பெண்ணும் மனமொத்து விரும்பி, வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எதிராக சாதியை நிறுத்துவதும், அந்த சாதிக்காகப் பச்சைப்படுகொலைகளை செய்வதும் மிருகத்தனத்தின் உச்சமாகும். சமத்துவத்திற்கும், சமூக அமைதிக்கும் எதிரான இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகள் நம்மைக் கற்காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. ஆகவே, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் முற்றாக நிறுத்தப்பட ஆளும் ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. அந்தவகையில், சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றவும், மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.

    ஆகவே, தம்பி கவின்குமார் அவர்கள் ஆணவப் படுகொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அதற்குத் துணைபோன பெற்றோரையும் சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர்.
    • கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பி.இ பட்டதாரி ஆவார்.

    இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த காதல் திருமணம் குறித்து கண்ணகியின் பெற்றோருக்கு தெரியவர, கண்ணகியை மூங்கில் துறைப்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் முருகேசன் மறைத்து வைத்தார். ஆனால், பெண்ணின் செயலால் கவுரவம் கெட்டு விட்டது என்று 2003-ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி காதல் திருமணம் செய்து கொண்ட கண்ணகி மற்றும் முருகேசனை விருத்தாசலம் வண்ணாங் குடிகாட்டில் உள்ள மயானத்திற்கு இழுத்து சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றி கொலை செய்து, பின்னர் இருவரின் உடலையும் தனி தனியாக எரித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் முருகேசனின் உறவினர்கள் விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் வழக்கை பதிவு செய்ய காலம் தாழ்த்திய போலீசார் பின்னர் இரு குடும்பத்தினரும் சாதி மறுப்பு திருமணம் செய்த தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்த நிலையில், 2003-ல் முருகேசனின் உறவினர்கள் புகார் அளித்த போது விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

    பின்னர் பல ஆண்டு களாக கடலூர் கோர்ட்டில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளி கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது.

    இதில் அய்யாச்சாமியும், குணசேகரனும் குற்றவாளி இல்லை என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத போலீசாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.

    ஆனால் கடலூர் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்தனர். சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடத்தி, 2022-ல் தீர்ப்பு வழங்கியது. அதில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

    கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    இதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கண்ணகியின் உறவினரான கோ.கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மேலும் குற்றவாளிகள் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல் முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    • ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்றுங்கள்.
    • தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அதை மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.

    அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளான இன்று சமத்துவ நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கலந்துகொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், "ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்றுங்கள். தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அதை மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.

    நாடு முழுவதும் சாதி ரீதியாக ஆணவக் கொலை நடக்கிறது; பல உயிர்களை இழந்துள்ளோம்; அனைத்து சமூகமும் ஆணவக் கொலையை தவறாகக் கருதாதது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்தார்.

    • கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் வித்யா (வயது 22). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 30-ந்தேதி வீட்டில் உள்ள பீரோ சரிந்து விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வித்யா பிணமாக கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.

    இந்த நிலையில் வித்யாவின் காதலன் திருப்பூரை சேர்ந்த வெண்மணி (22), காதலி மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காம நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வித்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. வேறு சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான வெண்மணியை, வித்யா காதலித்து வந்ததால் அவரது சகோதரர் சரவணகுமார்(24) தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனது தங்கை வித்யா கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அந்த கல்லூரியில் படிக்கும் திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இது எங்களுக்கு தெரியவரவே நாங்கள் வித்யாவை கண்டித்தோம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினோம்.

    இருப்பினும் காதலை கைவிடாமல் வெண்மணியுடன் பேசி வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே வெண்மணியின் வீட்டினர் எனது தங்கையை பெண் கேட்டு எங்களது வீட்டிற்கு வந்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வது பற்றி பேசிக்கொள்வோம் என்று எச்சரித்து அனுப்பினோம். இந்த சம்பவத்திற்கு பிறகு வித்யாவை கடுமையாக எச்சரித்தேன். ஒழுங்காக படிக்க வேண்டுமென்றால் கல்லூரிக்கு செல்... இல்லையென்றால் வீட்டிலேயே இருக்குமாறு மிகவும் கண்டிப்புடன் கூறினேன்.

    இதனால் கடந்த 2 மாதங்களாக என்னிடம் எனது தங்கை பேசாமல் இருந்து வந்தார். கடந்த 30-ந்தேதி எனது பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டனர். வித்யா மட்டும் தனியாக இருந்தார். அவருடன் பேச முயற்சித்த போது அவள் பேசமறுத்து விட்டாள். இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வித்யாவின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் இறந்து விட்டாள். இதனால் என்னசெய்தென்று தெரியாமல் தவித்தேன்.

    கொலையை மறைக்க வீட்டில் இருந்த பீரோவை இறந்து கிடந்த வித்யா உடலின் மீது தள்ளி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தேன்.அவர்களிடம் வித்யா மீது பீரோ சரிந்து விழுந்ததில் இறந்து விட்டாள் என்று நாடகமாடினேன். வெளியில் சென்றிருந்த எனது பெற்றோரும் வந்தனர். அவர்களிடம் நடந்த விவரத்தை கூறினேன்.

    பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மயானத்தில் உடலை புதைத்து விட்டோம். இனிமேல் யாருக்கும் சந்தேகம் வராது என்று எண்ணியிருந்தேன். இந்த நிலையில் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தொடர்ந்து வித்யாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் பிரச்சினையில் தங்கையை கொன்று சகோதரர் நாடக மாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 30-ந் தேதி தூங்கி கொண்டிருந்த வித்யா என்ற பெண் தலையில் பீரோ விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். அதில் இருந்த மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து போலீசாருக்கு எந்த தகவலும் அளிக்காமல் அந்த பெண்ணை உறவினர்களே அடக்கம் செய்துள்ளனர்.

    முன்னதாக மரணமடைந்த வித்யா என்ற பெண்ணும் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர் பெண் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வெவ்வேறு ஜாதி காரணங்களாலோ, அல்லது தனிப்பட்ட காரணங்களாலோ திருமணம் முடித்து கொடுக்க பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பெண் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. அந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்த நிலையில் காதலி பலியானதால் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது. மேலும் ஆணவக்கொலையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×